Tuesday, 5 March 2024

பிள்ளைகளின் கடமை / பெற்றோர்களுக்கு பணிவிடை செய்வது

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

பிள்ளைகளின் கடமை

                               (1)

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே!

இஸ்லாமிய மார்க்கம் பெற்றோர்களுக்கு பணிவிடை செய்ய வேண்டும். அவர்களை அரவணைக்க வேண்டும் என்று பல்வேறு போதனைகளை செய்கிறது.. அப்படிப்பட்ட போதனைகளை  காண்போம்..

பிள்ளைகளின் கடமை

பெற்றோர்களுக்கு பணிவிடை செய்வது 

‘என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!’ என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி ‘சீ’ எனக் கூறாதே! அவ்விருவரையும் விரட்டாதே! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறு!

அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக! ‘சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள்புரிவாயாக!’ என்று கேட்பீராக!

(அல்குர்ஆன்: 17:23,24)

மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு.

(அல்குர்ஆன்: 31 : 14

தனது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தினோம். அவனை அவனது தாய் சிரமத்துடன் சுமந்தாள். சிரமத்துடனே ஈன்றெடுத்தாள். அவனைச் சுமந்ததும், பால் குடியை மறந்ததும் முப்பது மாதங்கள்.

அவன் தனது பருவ வயதையும் அடைந்து நாற்பது வயதை அடையும் போது ‘என் இறைவா! எனக்கும் என் பெற்றோருக்கும் நீ செய்த அருட்கொடைக்கு நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் நல்லறத்தை நான் செய்யவும் வாய்ப்பளிப்பாயாக! எனக்காக எனது சந்ததிகளைச் சீராக்குவாயாக! நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நான் முஸ்லிம்களில் ஒருவன்’ என்று கூறுகிறான்.

(அல்குர்ஆன்: 46:15)

அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
‘நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘அல்லாஹ்வின் நபியே நற்செயல்களில் சொர்க்கத்திற்கு மிகவும் நெருக்கமானது எது?’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றுவது?’ என்று கூறினார்கள். ‘அடுத்து எது? அல்லாஹ்வின் தூதரே! என்று கேட்டேன். அதற்கு ‘தாய் தந்தையருக்கு நன்மை புரிவது’ என்றார்கள். ‘அடுத்தது எது? அல்லாஹ்வின் தூதரே!’ என்று கேட்டபோது, ‘அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது’ என்றார்கள்.

நூல்: முஸ்லிம்-138 

அழகிய முறையில் நட்பு கொள்வதற்கு முதல் தகுதியானவர்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து ‘நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் தகுதியானவர் யார்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ‘உன் தாய்’ என்றார்கள். அவர் ‘பிறகு யார்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ‘உன் தாய்’ என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘பிறகு, உன் தந்தை’ என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி-5971 

மாபெரும் ஜிஹாத் (தியாகம்)

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அறப்போரில் கலந்து கொள்ள அனுமதி கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ‘உன் தாயும், தந்தையும் உயிருடன் இருக்கிறார்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர், ‘ஆம் (உயிருடனிருக்கின்றனர்)’ என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள் ‘அப்படியென்றால், அவ்விருவருக்கும் பணிவிடைசெய்து உதவி புரிவதற்காக ஜிஹாத் செய் (உழை)’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி)
நூல்: புகாரி-3004 

No comments:

Post a Comment