Sunday 17 March 2024

நாடாளுமன்றத்தில் சிஏஏ சட்ட வடிவம் நிறைவேற்றப்பட்ட போது அதற்கு எதிராக 250க்கும் மேற்பட்ட வழக்குகள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

நாடாளுமன்றத்தில் சிஏஏ சட்ட வடிவம் நிறைவேற்றப்பட்ட போது அதற்கு எதிராக 250க்கும் மேற்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அவை கீழ்க்கண்ட வாதத்தை முன்வைத்து அதனை சாசன விரோதமாக அறிவிக்கக் கோரி நீதிமன்றத்தை நாடி இருந்தன:

'அரசியல் சாசனப்படி இந்தியா ஒரு செக்யூலர் தேசம்; எனவே குடியுரிமை சார்ந்து இந்தியாவில் எடுக்கப்படும் கொள்கை முடிவுகள் எதுவுமே மதத்தை முன்வைத்து இருக்க முடியாது,'
 
அப்போது அதற்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கேட்டதற்கு 'இந்த சட்ட வடிவம் இன்னமும் அமுலுக்கு வரவில்லை. இதனை அரசாணையில் இன்னமும் பதிப்பிக்கவில்லை; அதாவது சட்டம் இன்னமும் அமுலுக்கு வரவே இல்லை. எனவே இதனை தற்காலிகமாக நிறுத்துவது என்ற கேள்வியே இப்போது தேவையற்றது, என்று மத்திய அரசு நீதிமன்றத்திடம் விளக்கம் அளித்திருந்தது. 

அந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்டு நீதிமன்றம் வாளாவிருந்தது. 

இப்போது இது அரசாணையில் பதிப்பிக்கப்பட்டு விட்டது. ஆகவே இப்போது தாற்காலிகமாக நிறுத்துவது பற்றி நீதிமன்றம் பரிசீலிக்கலாம்தானே? அந்த 250 மனுக்களில் ஒரு மனுதாரரான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தற்போது அந்த வழக்கை தூசி தட்டி எடுத்திருக்கிறது. இந்த சட்டம் குறித்து நீதிமன்றம் ஒரு முடிவு சொல்லும் வரை, இதனை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை கொண்டு போய் மறுபடி உச்ச நீதிமன்றத்தை அணுகி இருக்கிறது.

அந்தக் கோரிக்கை வலுவானது என்று கருதுகிறேன். சிஏஏ அரசியல் சாசனதுக்கு எதிரானது என்பது மட்டுமல்ல; இந்தியா எனும் சிந்தனைக்கே எதிரானது. நவீன மானுட சமூகங்களுக்கு எதிரானது. நவீன மனித உரிமைகளுக்கு எதிரானது. அடிப்படை அறிவுக்கு எதிரானது. 18ம் நூற்றாண்டில் தேங்கி விட்ட மூடர்களால், 16ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் மூடர்களை திருப்திப்படுத்த கொண்டு வரப்பட்டது. 21ம் நூற்றாண்டுக்கு சற்றும் ஒவ்வாதது. 

எனவே IUMLன் கோரிக்கையை ஏற்று இறுதி விசாரணை முடியும் வரை இந்தக் கொடுங்கோல் சட்டத்தை நிறுத்தி வைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். 

- ஸ்ரீதர் சுப்ரமணியம்


No comments:

Post a Comment