20 ரக்அத்தும் நபித்தோழர்களும்
20 ரக்அத்களுக்கு நபிவழியில் ஒரு ஆதாரமும் இல்லை எனும் போது அதை விட்டொழிப்பதற்குப் பதிலாக எப்படியாவது நியாயப்படுத்த சிலர் முயற்சிக்கிறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 20 ரக்அத்கள் தொழவில்லை என்பது உண்மையே! ஆனால் நபித்தோழர்கள் குறிப்பாக உமர் (ரலி) அவர்கள் 20 ரக்அத்கள் தொழுதுள்ளனரே!’ என்று வாதிடுகின்றனர்.
உமர் (ரலி) உள்ளிட்ட நபித்தோழர்கள் 20 ரக்அத்களை உருவாக்கினார்களா? என்பதைப் பின்னர் நாம் தெளிவுபடுத்தியுள்ளோம்.
ஒரு வாதத்துக்காக சில நபித்தோழர்கள் 20 ரக்அத்கள் தொழுததாகவே வைத்துக் கொள்வோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைத் தான் செய்துள்ளார்கள் என்று தெரிந்து, அதற்கு மாற்றமாக நபித் தோழர்கள் சிலர் செய்ததாகத் தெரியும் போது இரண்டில் எது சிறந்தது?
உமர் (ரலி) அவர்கள் சிறந்தவர்கள் என்பதற்கு இவர்கள் காட்டும் ஆதாரத்தை விட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறந்தவர்கள் என்பதற்கு ஆதாரம் தேவையா?
நபியா? நபித்தோழரா? என்று கேள்வி வரும் போது நபியைப் புறக்கணித்து விட்டு நபித் தோழரைத் தூக்கிப் பிடிப்பது இஸ்லாத்தை விட்டும் நம்மை அப்புறப்படுத்தாதா?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தான் வஹீ வரும். நபித்தோழருக்கு வஹீ வராது என்பதைக் கூட அறிய வேண்டாமா?
நன்மை செய்வதில் நபித் தோழர்கள் நபிகள் நாயகத்தையும் மிஞ்சியவர்களா?
நபியவர்கள் மூலம் மார்க்கத்தை அல்லாஹ் முழுமையாக்கியிருக்கும் போது அவர்கள் கற்றுத் தராததை நபித் தோழர்கள் கண்டுபிடித்தார்கள் என்றால் மார்க்கத்தை நபிகள் நாயகம் முழுமையாக்கவில்லை என்ற கருத்து வருமே! இது சரி என்கிறார்களா?
அல்லது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சில விஷயங்களை மறைத்து விட்டார்கள்; அதை நபித் தோழர்கள் அம்பலமாக்கி விட்டார்கள் என்பது இவர்களின் எண்ணமா?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் தேர்வு செய்து தன் தூதராக நியமித்தான். முஸ்லிம்கள் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் எதனையும் கூட்டாமல் குறைக்காமல் அவர்கள் மூலம் இறைவன் கற்றுத் தந்தான் என்ற இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை நம்பக் கூடியவர்களுக்கு நபிவழியே போதுமாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய வழி போதாது; அது சரியில்லை; அதற்கு முரணாக நபித் தோழர்கள் காட்டியது தான் சரியானது என்று நம்புவதை விட்டும் அல்லாஹ் நம்மைக் காக்க வேண்டும்.
உமர் (ரலி) 20 ரக்அத் தொழுதார்களா?
நபித் தோழர்கள் 20 ரக்அத் தொழுதது நிரூபணமானால் கூட நபிவழி அதற்கு மாற்றமாக இருந்தால் நபிவழியைத் தான் ஏற்க வேண்டும்.
ஆனால் உண்மை என்னவென்றால், உமர் (ரலி) அவர்கள் 20 ரக்அத்களை உருவாக்கித் தந்தார்கள் என்ற இவர்களது வாதம் முற்றிலும் தவறானதாகும். உமர் (ரலி) அவர்கள் தொடர்பான செய்திகளை முழுமையான கவனத்துடன் ஆய்வு செய்யத் தவறியதால் இத்தகைய முடிவுக்குச் சிலர் வந்து விட்டனர். எனவே உமர் (ரலி) அவர்கள் தொடர்பான 20 ரக்அத்கள் பற்றிய அறிவிப்புக்களை ஆய்வு செய்வோம்.
அறிவிப்பு 1
மக்களுக்கு இருபது ரக்அத் தொழுகை நடத்துமாறு உமர் (ரலி) அவர்கள் ஒரு மனிதருக்குக் கட்டளையிட்டார்கள்.
நூல்: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-7682 .
உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு கட்டளையிட்டதாக அறிவிப்பவர் யஹ்யா பின் ஸயீத் அல்அன்ஸாரியாவார். இவர் உமர் (ரலி) அவர்கள் காலத்தில் வாழ்ந்தவர் அல்ல!
உமர் (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 23ஆம் ஆண்டு மரணித்தார்கள். யஹ்யா பின் ஸயீத் அன்ஸாரி அவர்கள் ஹிஜ்ரி 139 அல்லது 144வது ஆண்டு மரணித்தார்கள்.
உமர் (ரலி) அவர்கள் மரணித்து 120 வருடங்களுக்குப் பின்னால் மரணித்தவர் உமர் (ரலி) அவர்கள் காலத்தில் பிறந்திருக்க முடியாது.
உமர் (ரலி) 20 ரக்அத் தொழுமாறு கட்டளையிட்டதை அவரது காலத்தில் வாழ்ந்தவர் தான் அறிய முடியும். எனவே இந்தச் செய்தி ஆதாரமாகக் கொள்ளத்தக்கதல்ல என்று ஹதீஸ் கலை வல்லுனர்கள் முடிவு செய்துள்ளனர்.
ஆனால் உமர் (ரலி) அவர்கள் இதற்கு மாற்றமாகக் கட்டளையிட்டதாக ஆதாரப்பூர்வமான செய்தி உள்ளது.
நூல்: மஃரிஃபதுஸ் ஸுனன் வல் ஆஸார் – பைஹகீ, பைஹகீ, ஷரஹ் மஆனில் ஆஸார், முஅத்தா, அஸ்ஸுனனுல் குப்ரா – நஸாயீ
மக்களுக்குப் பதினொரு ரக்அத்துகள் தொழுவிக்குமாறு உபை பின் கஅப், தமீமுத்தாரி ஆகிய இருவருக்கும் உமர் (ரலி) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
நூல்கள்: அஸ்ஸுனனுல் குப்ரா – நஸாயீ, முஅத்தா, ஷரஹ் மஆனில் ஆஸார், பைஹகீ, மஃரிஃபதுஸ் ஸுனன் வல் ஆஸார்
உமர் (ரலி) அவர்கள் பதினொரு ரக்அத்கள் தொழுவிக்குமாறு கட்டளையிட்டது ஆதாரப்பூர்வமானதாக இருப்பதுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலுக்கு ஏற்பவும் அமைந்துள்ளது.
அறிவிப்பு 2
உமர் (ரலி) அவர்களின் காலத்தில் நாங்கள் இருபது ரக்அத்கள் தொழுது வந்தோம் என்று ஸாயிப் பின் யஸீத் கூறுகிறார்.
நூல்: பைஹகீ ஸகீர்-821 .
இந்த அறிவிப்பில் அபூ உஸ்மான் அல் பஸரீ என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரது இயற்பெயர் அம்ரு பின் அப்துல்லாஹ். இவரது நம்பகத் தன்மையைக் குறித்து ஹதீஸ் கலை வல்லுனர்கள் யாரும் உறுதிப்படுத்தவில்லை. யாரென்று அறியப்படாதவர் என்ற நிலையில் இவர் இருக்கிறார். இதன் காரணமாக இச்செய்தி பலவீனமடைகிறது.
மேலும் இந்தச் செய்தியில் உமர் (ரலி) அவர்களுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை. அவர்களின் காலத்தில் மக்கள் இவ்வாறு செய்ததாக இந்த அறிவிப்பு கூறுகிறது ஆனால் மேலே நாம் எடுத்துக் காட்டிய அறிவிப்பில் உமர் (ரலி) நேரடியாகச் சம்பந்தப்பட்டுள்ளனர்.
ஒருவர் எதைக் கட்டளையிடுகிறாரோ அதில் தான் அவருக்குச் சம்பந்தம் இருக்கும். அவரது காலத்தில் நடந்தவைகளில் அவருக்குச் சம்பந்தம் இருப்பது சந்தேகத்திற்கிடமானது.
மேலும் இதே ஸாயிப் பின் யஸீத் அவர்கள் உமர் (ரலி) அவர்கள் பதினொரு ரக்அத்துகள் தொழுவிக்குமாறு கட்டளையிட்டதாக அறிவிக்கிறார்.
மக்களுக்குப் பதினொரு ரக்அத்துகள் தொழுவிக்குமாறு உபை பின் கஅப், தமீமுத்தாரி ஆகிய இருவருக்கும் உமர் (ரலி) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
நூல்: முஅத்தா
ரக்அத்களின் எண்ணிக்கை குறித்து ஸாயிப் பின் யஸீத் முரண்பட்டு அறிவித்துள்ளதால் 20 ரக்அத் தொழுதோம் என்ற அறிவிப்பு மேலும் பலவீனப்படுகிறது.
அறிவிப்பு 3
உமர் (ரலி) அவர்கள் காலத்தில் ரமளான் மாதத்தில் மக்கள் இருபத்து மூன்று ரக்அத்கள் தொழுது வந்தனர் என்று யஸீத் பின் ரூமான் அறிவிக்கிறார்.
நூல்: முஅத்தா மாலிக்-303 ,பைஹகீ
இதை அறிவிக்கும் யஸீத் பின் ரூமான் உமர் (ரலி) காலத்தவர் அல்ல! உமர் (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 23ல் மரணித்தார்கள். யஸீத் பின் ரூமான் ஹிஜ்ரி 130ல் மரணித்தார்கள். அதாவது உமர் (ரலி) அவர்கள் மரணித்து 107 ஆண்டுகளுக்குப் பின் இவர் மரணித்துள்ளார். இவர் நூறு வயதில் மரணித்திருந்தால் கூட உமர் (ரலி) அவர்கள் காலத்தில் பிறந்திருக்க மாட்டார்.
உமர் (ரலி) அவர்கள் காலத்தில் பிறக்காத யஸீத் பின் ரூமான் உமர் (ரலி) அவர்கள் காலத்தில் நடந்ததை அறிவிப்பதால் இதை ஹதீஸ் கலை வல்லுனர்கள் ஆதாரமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.
உமர் (ரலி) அவர்களின் வழிமுறையைத் தான் ஏற்போம் என்று கூறுவதில் இவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் பதினொரு ரக்அத் தான் தொழ வேண்டும்.
அலீ (ரலி) அவர்கள் பெயரால்…
உமர் (ரலி) அவர்கள் பெயரால் இருபது ரக்அத்களை நியாயப்படுத்துவதுடன் அலீ (ரலி) அவர்கள் பெயரைப் பயன்படுத்தியும் நியாயப்படுத்துகின்றனர்.
ஐந்து இடைவெளியுடன் இருபது ரக்அத்கள் தொழுவிக்குமாறு அலீ (ரலி) அவர்கள் ஒருவருக்குக் கட்டளையிட்டார்கள் என்ற செய்தி அபுல் ஹஸனா என்பார் வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நூல்கள்: குப்ரா பைஹகீ-4292 .
அபுல் ஹஸனா என்பவர் யாரென்று அறியப்படாதவர் என்று இப்னு ஹஜர், தஹபீ உள்ளிட்ட அறிஞர்கள் முடிவு செய்துள்ளார்கள். இவரது நம்பகத் தன்மையை எந்த அறிஞரும் உறுதிப்படுத்தவில்லை. எனவே இந்தச் செய்தியை ஆதாரமாகக் கொள்ளக் கூடாது
ரமளான் மாதத்தில் அலீ (ரலி) அவர்கள் அறிஞர்களை அழைத்து, அவர்களில் ஒருவரை 20 ரக்அத் தொழுவிக்குமாறு கட்டளையிட்டார்கள். வித்ரு தொழுகையை அலீ (ரலி) அவர்கள் தாமே தொழுவிப்பார்கள்.
அறிவிப்பவர்: அபூ அப்துர்ரஹ்மான் அஸ்ஸுலமி, நூல்: குப்ரா பைஹகீ-4291 ,
இதன் அறிவிப்பாளரான அபூ அப்துர்ரஹ்மானிடமிருந்து அறிவிப்பவர் அதா பின் ஸாயிப் ஆவார்.
அதா பின் ஸாயிப் இவ்வாறு கூறியதாக அறிவிப்பவர் ஹம்மாத் பின் ஷுஐபு ஆவார்.
தஹபீ, இப்னு மயீன், புகாரி, நஸாயீ, இப்னு அதீ உள்ளிட்ட அறிஞர்கள் இவரை (ஹம்மாத் பின் ஷுஐபை) பலவீனமானவர் எனக் கூறியுள்ளனர்.
எனவே அலீ (ரலி) அவர்கள் 20 ரக்அத் என்ற நடைமுறையை உருவாக்கினார்கள் என்ற வாதம் அடிபட்டுப் போகிறது.
No comments:
Post a Comment