விடுபட்ட நோன்பை களாச் செய்வது எப்பொழுது?
சலுகைகளைப் பெற்றவர்கள் விடுபட்ட நோன்பை எவ்வளவு நாட்களுக்குள் களாச் செய்ய வேண்டும்?
இதற்கு மார்க்கத்தில் எந்தக் காலக் கெடுவும் விதிக்கப்படவில்லை. வேறு நாட்களில் நோற்று விட வேண்டும் என்று மட்டுமே திருக்குர்ஆன் கூறுகிறது.
ரமளான் மாதத்தில் சில நோன்புகள் தவறி விடும். அதை ஷஅபான் மாதத்தில் தான் என்னால் நோற்க முடியும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளே இதற்குக் காரணம் என்று அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல்: புகாரி 1950
ஷஅபான் மாதம் என்பது ரமளானுக்கு முந்தைய மாதமாகும். ஒரு ரமளானில் விடுபட்ட நோன்பை மறு ரமளானுக்கு முந்தைய மாதம் வரை தாமதப்படுத்தி ஆயிஷா (ரலி) களாச் செய்துள்ளார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலேயே இது நடந்துள்ளதால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.
விடுபட்ட நோன்பைக் களாச் செய்வதற்கு குறிப்பிட்ட காலக் கெடு எதுவும் இல்லை என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
ஆயினும் மரணத்தை எதிர் நோக்கியவனாக மனிதன் இருக்கிறான். எந்த நேரத்திலும் மரணம் அவனை அடைந்து விடலாம். நோன்பை விட்டவர்களாக நாம் மரணித்தால் என்னவாகும் என்பதற்கு அஞ்சி, எவ்வளவு சீக்கிரம் நிறைவேற்ற முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நிறைவேற்றி விடுவது சிறந்ததாகும்.
No comments:
Post a Comment