Saturday 15 October 2011

கோபத்தை கட்டுப் படுத்துபவனே சிறந்த வீரன்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,
ஏகஇறைவனின் திருப்பெயரால்....

وَذَا النُّونِ إِذ ذَّهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَى فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي  كُنتُ مِنَ الظَّالِمِينَ

மீனுடையவர் (யூனுஸ்) கோபித்துக் கொண்டு சென்றார். ''அவர் மீது நாம் சக்தி பெற மாட்டோம்'' என்று நினைத்தார். ''உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன்'' என்று இருள்களிரிருந்து அவர் அழைத்தார். திருக்குர்ஆன். 21:87.


கோபத்தை கட்டுப் படுத்துபவனே சிறந்த வீரன்

கோபத்தை கட்டுப் படுத்துபவர்களை சிறந்த வீரன் என்று பெருமானார்(ஸல்) அவர்கள் கூறினார்கள் 

மக்களைத் தன்னுடைய பலத்தால் அதிகமாக அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன்; உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின் போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான். என்று இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்தார்கள். நூல்:புகாரி 6114.

இன்றுக் கோபத்தைக் காட்டுவதே வீரத்தின் வெளிப்பாடு என்று மாற்றப்பட்டு விட்டது. காட்டுக் கூச்சல் இடுவதும் கை,கால்களை உதறுவதும் கோபம் வரவில்லை என்றாலும் வரவழைக்க முயற்சி செய்வதும்  இன்றைய மக்களிடத்தில் சகஜமாகி விட்டது,

இவ்வாறு செய்வது அவரது அமலையும், ஆரோக்கியத்தையும் சீர்குலைப்பதை அவரகள்; அறிவதில்லை அறிந்தால் அடக்கத்துடன் நடந்து கொள்ளத் தவற மாட்டாரகள்;. 

கோபத்தில் எடுக்கக் கூடிய சில முடிவுகள் வாழ்வையே தலை கீழகாப் புரட்டி எடுத்து விடும் அல்லது வாழ்ந்த சுவடுத் தெரியாமல் அழித்தும் விடும்.  
  
பாதிக்கும் ஆரோக்கியம்.
ஒவ்வொரு முறையும் கோபம் கொள்ளும் பொழுது நரம்பு மண்டலம் விரிவடைந்து கோபம் தனிந்தப் பின் நரம்புகள் சுருங்கத் தொடங்குகின்றன சுருங்கிய நரம்புகள் பழைய நிலையை அடையாமல் தளர்ந்து விடுவதுண்டு அவ்வாறுத் தளர்ந்து விட்ட நரம்புகளில் ஓடும் இரத்தம் பழைய படி மிதமாக ஓடாமல் வேகமாக ஓடத் தொடங்கும். இதன் மூலமாகவே இரத்த அழுத்த நோய், நீரிழிவு நோய், கொழுப்புச் சத்துப் போன்ற உடலை ஆக்ரமித்துக் கொண்டு அகலாத நோய்கள் உருவாகின்றன. 

இரத்தத்தில் கலக்கக் கூடிய, இரத்த வேகத்தை அதிகரிக்கக் கூடிய இரத்த அழுத்தம், நீரிழிவு, கொழுப்புப் போன்ற  நோய்களை கட்டுப்படுத்த மருத்துவர்கள் ஹெவிடோஸ் கொடுக்கின்றனர் இந்த ஹெவிடோஸ்கள் சிறுநீரகத்தை செயலிழக்கச் செய்து வெகுவிரைவில் மரணத்திற்கு இழுத்துச் செல்கின்றதை அவர்கள் அறிவதில்லை அறிந்தால் அடக்கத்துடன் நடந்து கொள்ளத் தவற மாட்டார்கள். 

பாதிக்கும் அமல். 
கோபத்தின் வாயிலாககத் தான் ஷைத்தான் மனிதனை நெருங்குகிறான் கோபம் வரும்பொழுது வார்த்தைகள் வரைமுறை இல்லாமல் வந்து எதிரில் இருப்பவர்களை திட்டும் பொழுது அவர்களை கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாக்கி விடுகிறது எதிரில் இருப்பவர் சிறியவரா ? பெரியவரா ? மரியாதைக்குரியவரா ? என்றெல்லாம் பார்க்க விடாது. 

திட்டித் தீர்த்து விட்டு கோபம் தனிந்தப்பின் சிலர் வருந்தி வருத்தம் தெரிவிப்பார்கள், பலர் வருந்தவும் மாட்டார்கள் வருத்தம் தெரிவிக்க மாட்டார்கள். 

வருந்தி வருத்தம் தெரிவித்தாலும் அது சிலருக்கு (சிறிய வயதுக் காரருக்கு)ப் பொருந்தும், பலருக்கு (மூத்த வயதை உடையவர்களுக்கு, கட்டாயம் மரியாதை செலுத்தப் பட வேண்டியவர்களுக்கு)ப் பொருந்தாமல் உறவே முறிந்து விடும்.  

வரைமுறை இல்லாமல் திட்டியவர் மன்னிப்புக் கேட்பதற்கு முன் அவர் இறந்து விட்டாலோ அல்லது இவர் இறந்து விட்டாலோ மறுமையில் அவர் இவரிடமுள்ள நன்மைகளைப் பறித்துக் கொள்வார். 

காரணம் அங்குப் பணமோ, தங்கக் காசுகளோப் பயன் தராமல் நன்மைகள் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும் என்பதால் நன்மைகளைப் பறித்துக் கொள்வார்.  

கோபம் ஏற்படுவதால் அமலும் பாதிக்கிறது, ஆரோக்கியமும் பாதிக்கிறது என்பதால் மனித சமுதாயத்தின் நலவுக்காக இறக்கி அருளப்பட்ட இஸ்லாம் மனித சமுதாயத்திற்கு கோபம் கொள்வதை தடை செய்கிறது. இஸ்லாம் தடை செய்த ஒவ்வொன்றின் மீதும் கவர்ச்சி கொள்ளச் செய்து அதன் பால் ஈர்ப்புக் கொள்ளச் செய்வது ஷைத்தானின் வேலை. 

உலகம் முடியும் காலம் வரை பிறக்கும் ஒவ்வொரு மனிதனையும் ஷைத்தான் விட்டு வைக்க மாட்டான் இணைவைப்பு, விபச்சாரம், வட்டிப் போன்றக் கொடியப் பாவங்களிலிருந்து விலகி இருப்பவர்களில் கூடப் பலர் ஷைத்தான் விரிக்கும் இந்த கோப வலையில் வீழ்ந்து அமல்களைப் பாழாக்கிக் கொள்வதிலிருந்து  தடுத்துக் கொள்ள முடிவதில்லை. 
  
படிப்பினைத் தரும் யூனுஸ்(அலை) அவர்களின் கோபம்
கோபம் என்றதும் திருக்குர்ஆனைப் புரட்டக் கூடியவர்களுக்கு யூனுஸ்(அலை)அவர்களின் சம்பவம் நினைவுக்கு வரும். யூனுஸ்(அலை) அவர்களுடைய சமுதாயத்து மக்கள் சத்தியத்தை ஏற்க மறுத்து இறுதியாக அவர்கள் அழிக்கப்படும் நேரம் நெருங்கியதும் அவர்களை விட்டு யூனுஸ்(அலை) அவர்கள் விலகிச் சென்று விடுகிறார்கள்;. 

சிறிது நாட்கள் கழிந்து நகருக்குள் திரும்பிவந்து பார்த்தபொழுது அவர்களில் யாரும் அழிக்கப்படாததுக் கண்டு இறைவன் மீது கோபம் ஏற்பட்டுவிடுகிறது யூனுஸ்(அலை)அவர்களுக்கு. இறைவன் நல்லதொரு முடிவையே மேற்கொண்டிருப்பான் என்று அவர்களை நிதானமாக சிந்திக்க விடாமல் கோபம் தடுக்கிறது.  

கோபம் கொப்பளிக்க நடையைக் கட்டுகிறார்கள் கடல் குறுக்கிடுகிறது கடலைக் கண்டப் பிறகுக் கூட ஊரை நோக்கித் திரும்ப விடாமல் கோபம் தடுக்கிறது.  

இனி இந்த மக்களுடைய முகத்தில் விழிப்பதை விட இவர்களின் கண் காணாத திசைக்கு சென்று விடலாம் என்ற எண்ணத்தையே கோபம் மேலோங்கச் செய்கிறது.

எதிரில் கப்பல் ஒன்று தென்பட கால்களை கோபம் தண்ணீரில் இறக்கி விடுகிறது. தண்ணீரில் இறங்கி நின்று கொண்டிருந்த யூனுஸ்(அலை) அவர்கள் நீந்திச் சென்று எதிரில் நின்று கொண்டிருந்த கப்பலைப் பிடிக்கிறார்கள் ஆனால் கப்பலில் இருந்தவர்களோ அவரை ஏறவிடாமல் தடுக்கின்றனர்.

இவரை ஏற்றிக் கொள்ளலாமா ? வேண்டாமா ? எனும் எண்ணத்தை அல்லாஹ் அவர்களுடைய உள்ளத்தில் விதைத்து விடுகிறான் இறைவனின் மீது கோபம் கொண்ட இறைத்தூதரின் பயணம் இது என்பதால் இறையருள் தடுக்கப்பட்டு விடுகிறது.

குழப்பத்தில் ஆழந்த பயணக் காரர்கள் இறுதியாக சீட்டுக் குலுக்கிப் போட்டு அனுமதி கிடைத்தால்  ஏற்றிக்கொள்வோம் எனும் முடிவுக்கு வர சீட்டும் குலுக்கப்படுகிறது அனுமதி மறுக்கப்பட்டு ஏற்ற வேண்டாம் என்ற முடிவு வரவே அவர்களால் யூனுஸ்(அலை) அவர்கள் கடலில் தள்ளி விடப்படுகிறார்கள் மீன் விழுங்கி விடுகிறது.

நிரப்பப்பட்ட கப்பலை நோக்கி அவர் ஒளிந்தோடிய போது அவர்கள் சீட்டுக்குலுக்கினர். தோற்றவர்களில் அவர் ஆகி விட்டார். இழிந்தவராக இருக்கும் நிலையில் அவரை மீன் விழுங்கியது. திருக்குர்ஆன். 37: 140, 141 142.  

ஒரு வழியாக மீன் அவரை விழுங்கியப் பிறகு யூனுஸ்(அலை) அவர்களின் கோபம் முற்றுப் பெறுகிறது தவறை நினைத்து யூனுஸ்(அலை)அவர்கள் வருந்துகிறார்கள். 

''உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன்'' என்று இருள்களிரிருந்து அவர் அழைத்தார். திருக்குர்ஆன். 21:78

இவ்வாறுத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு  சர்வ சக்தி வாய்ந்த ஏகஇறைவனின் வல்லமையைப் புகழ்ந்தும் தொடர்ந்து துதித்துக்கொண்டே இருந்தக் காரணத்தால் தடுக்;கப்பட்ட இறையருள் யூனுஸ்(அலை) அவர்களுக்கு மீண்டும் இறைவனால் திருப்பப்படுகிறது மீனுடைய வயிற்றில் அவரை அல்லாஹ் பாதுகாப்பாக தங்கச்செய்து விடுகிறான்;. கப்பலில் ஏறுவதற்கு கிடைக்காத இறையருள் மீன் வயிற்றில் இருக்கும் போது கிடைத்து விடுகிறது.

அவரது இறைவனிடமிருந்து அவருக்கு அருள் கிடைத்திருக்காவிட்டால் அவர் இழிந்தவராக வெட்ட வெளியில் எறியப்பட்டிருப்பார். திருக்குர்ஆன். 68:49.

யூனுஸ்(அலை) அவர்கள் கோபத்தால் எடுத்த முடிவை அல்லாஹ் மன்னித்து மீன் வயிற்றிலிருந்து அவர்களை வெளியேற்றி விடுகிறான். 

அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். கவலையிரிருந்து அவரைக் காப்பாற்றினோம்... திருக்குர்ஆன்.21:88.

ஒரு வெட்ட வெளியில் கொதிக்கும் மணலில் அவர்கள் வீசப்படுகிறார்கள் எழுந்து நடக்க முடியாத பலஹீனமான நிலையில் அவர்கள் இருந்ததால் உடனடியாக அவர்களின் அருகில் சுரைச் செடி ஒன்றை முளைக்கச் செய்து அவர்கள் மீது நிழல் படரச் செய்து விடுகிறான் கருணையாளன் அல்லாஹ் அதில் அவர்கள் இளைப்பாறி எழுந்து நடக்கத் தொடங்கினார்கள். 

அவரை நோயுற்றவராக வெட்ட வெளியில் எறிந்தோம். அவர் மீது (நிழல் தருவதற்காக) சுரைக் கொடியை முளைக்கச் செய்தோம். திருக்குர்ஆன். 37: 145. 146.

யார் தனது தவறை நினைத்து தவ்பா செய்து விட்டாலும் அவர்களது கடந்த காலத் தவறை பட்டியலிட்டுப் பார்த்துக் கொண்டிருக்காமல் மொத்தத் தவறையும் அப்பொழுதேக் கழுவித் தூய்மையாக்கி விட்டு அவரை தனது சிறந்த அடியார்களில் ஒருவராக ஆக்கி விடுவதுடன் அவர் கேட்டதையும் கொடுப்பான் கேட்காததையும் கொடுப்பான் கொடையாளன் அல்லாஹ்.

இருள் சூழ்ந்த மீன் வயிற்றிலிருந்து பலஹீனமான நிலையில் கொதிக்கும் சுடுமணலில் வீசப்பட்டதும் யூனுஸ்(அலை)அவர்கள் இறைவனிடம் நிழல் கேட்க வில்லை. ஆனால் அவருக்கு இப்பொழுது நிழல் அவசியம் தேவை என்பதை அறிந்து அவனாகவே அந்த இடத்தில் சுரைச் செடியை முளைக்கச் செய்து நிழல் கொடுத்தான் கருணையாளன் அல்லாஹ்.

கோபத்திற்கு காரணம் என்ன ?
யூனுஸ்(அலை)அவர்களுடைய சமுதாயத்து மக்கள் அழிக்கப்படவேண்டும் என்பது இறைவனின் வாக்காக அமைந்து அதற்கான நேரமும் யூனுஸ்(அலை) அவர்களுக்கு இறைவனால் அறிவிக்கப்பட்டக் காரணத்தால் தான் அங்கிருந்து அவர்கள் வெளியேறினார்கள் வெறியேறிய உடன் அந்த மக்கள் இறைவனிடம் தவ்பா செய்து இறையருளை அடைந்து கொண்டனர் இது அவர்களுக்குத் தெரியாது.

என்ன நடந்தது என்பதை அல்லாஹ்விடம் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியாத அளவுக்கு கோபம் மிகைத்து விட்டது இது தான் நடந்தது.

அல்லாஹ்விடமிருந்து நேரடியாக செய்தியை பெறக்கூடிய வாய்ப்பிருந்ததால் யூனுஸ்(அலை) அவர்கள்  அல்லாஹ்விடம் கேட்டிருந்தால் அல்லாஹ் பதிலளித்திருப்பான். ஏற்கனவே நூஹ் (அலை) அவர்களின் மகனை அலை இழுத்துச் சென்ற பொழுது அவர்களுக்கும் இறைவன் மீது கோபம் ஏற்பட்டது ஆனால் இவர்களைப் போன்று அவர்கள் கோபத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அவசர முடிவை மேற்கொள்ளாமல் தனது வருத்தத்தை இறைவனிடம் அடக்கத்துடன் தெரிவித்தார்கள் அதற்கு இறைவனும் பதில் கொடுத்தான் அந்த பதிலில் திருப்தி கொண்டு இறைவனின் வாக்குறுதியின் மீது அவநம்பிக்கைக் கொண்டதற்காக இறைவனிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்கள். 

இனிமேல் யூனுஸ்(அலை)அவர்களுடைய வாழ்நாளிலும் இதுப்போன்ற கோபம் வரக்கூடாது என்பதற்காகவும், இனி வரக்கூடிய நபிமார்களுக்கும் இதுப்போன்றக் கோபம் வரக்கூடாது என்பதற்காகவும் சில நெருக்கடியை இறைவன் அவர்களுக்கு ஏற்;படுத்திக்கொடுத்து விட்டு அந்த சம்பவத்தை இறுதி நபிக்கு வழங்கிய திருக்குர்ஆனிலும் இடம் பெறச்செய்ததுடன் மீன் வயிற்றில் இருந்தவரைப்போன்று நீரும் ஆகிவிடாதீர் என்று அவ்வப்பொழுது முஹம்மது(ஸல்) அவர்களையும் எச்சரிக்கை செய்து கொண்டே இருந்தான் நீதியாளன் இறைவன்.

உமது இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திருப்பீராக! மீனுடையவர்(யூனுஸ்) போல் நீர் ஆகி விடாதீர்! அவர் துக்கம் நிறைந்தவராக (இறைவனை) அழைத்தார். திருக்குர்ஆன். 68:48.

நமக்குள்ளப் படிப்பினைகள்
திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ள யூனுஸ்(அலை)அவர்கள் கோபத்தில் எடுத்த முடிவினால் அவர்கள் அடைந்த துயரத்தை நினைத்துப் படிப்பினைப் பெற வேண்டிய நம்முடைய சமுதாயத்து மக்களிலும் கூடப் பலர் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று சிலக் காரியங்கள் செய்வதற்கு முன் கோபம் முக்கியப் பங்கு வகிக்கிறது.   

கோபத்தின் மூலமாக எடுக்கும் எந்த அவசர முடிவிலும் இறையருள் அறவே இருக்காது மாறாக இறைவனின் கோபமே நிறைந்திருக்கும் என்பதற்கு யூனுஸ்(அலை) அவர்களின் நிகழ்வு சிறந்த எடுத்துக் காட்டாகும்.   

யூனுஸ்(அலை) அவர்களின் நிகழ்வு நபி மார்களுக்கு மட்டும் உள்ளதல்ல மாறாக ஏகஇறைவனை நம்பிக்கைக் கொண்ட அனைத்து மக்களுக்கும் உள்ளதாகும்.

அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். கவலையிரிருந்து அவரைக் காப்பாற்றினோம். இவ்வாறே நம்பிக்கை கொண்டோரைக் காப்பாற்றுவோம். திருக்குர்ஆன். 21:88.

எதற்கெடுத்தாலும் கோபம் கொள்பவர்களாக இருந்தால் கோபம் கொள்வதை தவிர்த்துக் கொண்டு அல்லாஹ்விடம் தவ்பா செய்து விட்டால் வல்ல ரஹ்மான் யூனுஸ்(அலை) அவர்களுக்கு செய்த உதவியைப் போல் நமக்கும் செய்வதாக வாக்களிக்கிறான்.

அடிக்கடி கோபப் பட்டு அதனால் நற்செயல்களின் நன்மைகளையும், ஆரோக்கியத்தையும் கெடுத்துக் கொண்டு மறுமையில் தோல்வியாளர்களின் வரிசையில் நிற்காமல் நிதானத்துடனும், அடக்கத்துடனும் நடந்து கொண்டு கேட்க வேண்டியவர்களிடம் முறையாக் கேட்டறிந்து நிதானமாக ஒரு முடிவை மேற்கொண்டு நமக்கும் எதிராளிக்கும் யாதொரு பாதிப்பும் ஏற்படாமல் நடந்து கொண்டால் ஆரோக்கியத்திந்கும் சிறந்தது அமல்களினால் கிடைக்கும் நன்மைகளும் வீண் போகால் மறுமையில் வேறெவருடைய நன்மையும் தேவையில்லாத அளவுக்கு நம்முடைய நன்மைகளைக் கொண்டு வெற்றியாளர்களின் வரிசையில் அணிவகுக்க வல்ல அல்லாஹ் உங்களையும் என்னையும் ஆக்கி ஆருள் புரிவானாக ! 


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

இளம் சிட்டுகளின் தடம் புரண்ட வாழ்க்கை!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

(
டாக்டர் ஏ.பீ. முகமது அலி,ஐ.பீ.எஸ்(ஓ)
நான் 1.10.2010 அன்று இளையங்குடியிக்கு சென்டிருந்தபோது பேஷ் இமாம் அவர்கள், 'சார், நீங்கள் பல கட்டுரைகள் எழுகிறீர்கள், ஆனால் சமீப காலமாக நமது சமுதாயத்தில் இளம் பெண்கள் வழி தவறிப் போகிரதினை தடுக்க கட்டுரைகள் எழுதுங்கள் என்றார்'. அவர் கூறிய சொற்கள் என் காதுகளில் ரீங்காரம் இட்டபோது உண்மையில் நடந்த நிகழ்ச்சியினை உதாரணமாக வைத்து இந்தக் கட்டுரையினை வடித்துள்ளேன்!
சமீப கால செய்திகளில் அதிகமாக அடிபடுவது காதல் மற்றும் காமம் பற்றிய செய்திகள் தான். ஆண், பெண் பழகும் இடங்களான கல்வி நிலையங்கள், வேலைபார்க்கும் அலுவலகங்கள், குடும்பத்தினைப் பிரிந்து வாழும் விடுதிகள் இளம் சிட்டுகள், தங்களுக்குக் கிடைக்கும் இனக்கவர்ச்சியில் ஈர்க்கப்பட்டு, வரட்டுத் துணிச்சலுடன் திருமணத்திற்கு முன்போ அல்லது திருமணத்திற்குப் பின்போ கற்பினை இழக்கும் சோகக் கதையினை நாள் தோறும் வந்த வண்ணம் இருகின்றது. ஆரம்பத்தில் காதலில் ஊஞ்சலாடும் உள்ளம் காதல் தடம் புரண்டு  மானம் கப்பலேறுவது   அவர்களோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. மாறாக அவர்கள் குடும்பத்திற்கும் இழுக்கு ஏற்படுத்துகிறது   என்று அவர்கள் ஆரம்பத்தில் உணருவதில்லை. வெள்ளம் தலைக்கு மேல் போனபின்பு தான் கண்ணை மறைத்திருந்த காதல் பித்து தெளிவடைகிறது.
2011
செப்டம்பர் கடைசி வாரத்தில் செய்திகளில் பரபரப்பான வந்த தகவல் கேரளா மாநிலம் மூணாறில் விடுதியில் மூன்று நாட்கள் தங்கியிருந்த இளம் ஜோடிகளில் பெண் கழுத்தினை அறுத்து கொலை செய்யப் பட்டு இறந்தது தெரிய வந்ததும், அந்தப் பெண்ணோடு தங்கி இருந்த ஆண் தலை மறைவான செய்தியும் வந்தன. போலீஸ் விசாரணையில் அந்தப் பெண் சென்னை கால் சென்டரில் வேலை பார்த்த ஷமிலா என்றும் அவருடன் தங்கி இருந்தவர் அவருடைய காதல் கணவர் மகேஷ் தலை மறைவாகி விட்டதாகவும் மறு தகவல் வந்தது. சிறிது நாள் கழித்து மகேஷும் தனது சொந்த ஊரான ஈரோடு மாவட்டம் மணியக்காரன் பட்டியில் மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இதெல்லாம் செய்திகள். ஆனால் அதில் என்ன சுவாரிஸ்யமான விஷயம் என்ன வென்றால் அவர் தனது காதல் மனைவி பற்றி எழுதி வைத்திருந்த கடிதம் தான்.
தான் கைபிடித்தவளுக்காக தன் பெற்றோர்களை புறக்கணித்தார் அந்த மகேஷ். அப்படிப் பட்டவருக்கு கிடைத்த பரிசு தன் காதல் மனைவி செய்த நம்பிக்கை மோசம். மகேஷ் தான் இறக்குமுன் போலிசுக்கு எழுதி வைத்திருந்த கடிதத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்:
படித்த பெண்கள் தங்களை முழுமையாக வெளி நாட்டுக் கலாச்சாரத்திற்கு தங்களை மாற்றிகொள்கிறார்கள். வாழ்கையே வெறும் இன்பத்திற்காகத் தான் என நினைக்கின்றார்கள். அவர்களுக்கு உண்மையான, உணர்வுப் பூர்வமான உணர்வு தேவையில்லை. அவர்களுக்கு கலாச்சாரம், கணவர், சமூகம், குடும்பம் என்ற கவலையே கிடையாது. படிப்பு, பணம், கொஞ்சம் அழகு இருந்தால் போதும் எதுவும் அவர்களை தடுத்து நிறுத்த முடியாது. எல்ல பந்த பாசத்தினையும் மறந்து குறுகிய காலத்தில் தங்கள் வாழ்க்கையினை அவர்களே தேடிக் கொள்கிறார்கள். அந்த காதல் கணவரை விட்டுவிட்டு பத்துப் பேர்களுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக சொல்லி அவர்கள் பெயர்களையும் சொல்லி அதற்கு ஆதாரமாக தன் மனைவியின் செல் போனுக்கு வந்த அழைப்புகளையும் பேஸ்புக் இணைய தளத்தில் வந்த தகவல் பரிமாற்றங்களையும் ஆதாரமாக காட்டியுள்ளார். இதனை நான் எதற்கு இங்கே குறுப்பிடுகிறேன் என்றால் பெண்கள் வெகு சீக்கிரத்தில் தங்கள் உணர்வுகளுக்கு அடிமை ஆகி விடுகிறார்கள்.
அடிப்படை  கோளாறு: நான் மேலே குறிப்பிட்ட செய்தி ஒரு சம்பவமாக பார்க்காது இன்றைய வெளிநாட்டு மோகத்தால் ஏற்படும் தப்பு தாளங்கள் என்று எடுத்துக் கொண்டு அதனை களைய அனைவரும் முயற்ச்சி செய்ய வேண்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தங்களுடைய தேவைகளை எல்லாம்  சுருக்கிக் கொண்டு, சிறு துன்பமும் இல்லாது செல்லமாக வளர்க்கின்றார்கள். அனால் அந்தக் குழந்தைகள் பெரியவ்ரானதுடன் தங்களுடைய பாரம்பரியம் என்னவென்று அறியாமல் வாழ்க்கை முடிவுகளை சுயமாக அவர்களே எடுத்துக் கொள்கிறார்கள். அப்படிப் பட்ட இளசுகளுக்கு அருகில் உள்ளது கள்ளிச்செடி என்று தெரிவதில்லை. மாறாக அவைகள் தாங்கள் சுற்றிக்கொள்ள விரும்பும் துணையாக எண்ணுகிறார்கள். அனால் அவைகளைத் தெரியாத பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மேலை நாட்டு நாகரியத்திற்கு தெரிந்தோ தெரியாமலோ தூபம் போடுகிறார்கள்.
 
ஒரு உண்மை நிகழ்ச்சியினை சொல்ல ஆசைப்படுகிறேன். பத்தாவது படிக்கும் ஜரினா என்ற சிறுமி அவள் பெற்றோருக்குச் செல்லப்பிள்ளை. அவளுடைய பிறந்த தின விழா முன்னிட்டு தனக்கு தன தோழிகளெல்லாம் வைத்திருப்பது போல ஒரு செல் போன் வேண்டும் என்று தன் பெற்றோரை நச்சரித்திருக்கிறாள். தன் செல்ல மகள் விருப்பப் பட்டுக் கேட்கின்றாலே என்று அந்த அப்பாவி பெற்றோரும் ஒரு செல் போன் வாங்கிக் கொடுகின்றார்கள். அனால் போன் வாங்கியதும் அவளுடைய நடை உடை பாவனை பேச்சு அதனையும் மாறிவிட்டது. அன்பான பெற்றோர்களிடம் கூட பேசுவதினைக் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி விட்டாள். பெரும்பாலான நேரங்களில் அவள் படுக்கை அறையுலும் பாத் ரூமிலுமே அவள் காலத்தினை கழித்தால். அவள் படிப்பின் பிடிப்பும், பாசப் பிடிப்பும் பாழாகி விட்டது. அதற்கான காரணத்தினை அறியும் பொருட்டு அவளை ஒரு மனோதுத்துவ டாக்டரிடம் அழைத்துச்சென்றார்கள். அந்த டாக்டர் முதலில் செய்த காரியம் அவள் செல் போனை வாங்கி சோதனை செய்தபோது ஜரினா ஒரு ஆண் நண்பருடன் தொடர்பு வைத்து பள்ளிக்குச் செல்லாமல் அவனுடன் ஊர் சுற்றியது தெரிந்தது. அதன் பின்பு அந்த டாக்டரும் பெற்றோரும் நல் அறிவுரைகளை எடுத்துச் சொல்லியும் அந்த பையனை கண்டித்து அவனுடன் உள்ள தொடர்பையும் துண்டித்ததால் இன்று அவள் தன் படிப்பினை நல்ல முறையில் பின்பற்றுகிறாள், பெற்றோரிடமும் பாசத்துடன் பழகுகிறாள்.
இதுபோன்ற சம்பவம் தனிப் பட்டதா என்றால் இல்லையே! சென்னையிலுள்ள ஸ்கூல் ஆப் ஒர்க்ஸ் என்ற கல்லூரியில் ஒரு சர்வே சமீபத்தில் நடத்தி அதற்கான ஆய்வு அறிக்கையினை வெளியிட்டுள்ளார்கள். அதில் பெரும்பாலான செல் போன் அதிக நேரம் உபயோஹிக்கும் பையன்களும் சிறுமிகளும் மனோதுத்துவ பிரச்சனைகளுக்கு ஆளாகி விடுவதாக கூறுகிறார்கள். அதில் 33 விழுக்காடு சிறுமிகள் தங்களுடைய பெற்றோர்களிடம் அதிக நேரத்தினை செலவிடுவதில்லை என்றும், செல் போனிலே காலம் கழிப்பதாக சொல்கிறார்கள். 40 விழுக்காடு குழைந்தைகள் தங்கள் செல் போனை அரைமணிக்கு ஒரு தடவை செக் செய்வதாக சொல்கிறார்கள். ஒரு மனோதத்துவ டாக்டர் நம்பி கூறும்போது பதிமூன்று வயதிற்க்குக் குறைவான சிறுவர் சிறுமியர் கூட செல் போன் தொடர்பால் பாதிக்கப் பட்டவர்கள் வருவதினை பார்க்க பாவமாகவும், பரிதாபமாகவும் இருப்பதாக சொல்லுகிறார்.
சென்னை மண்ணடியில் வாழும் சிலர் கோட்டை எதிரில் உள்ள பூங்காவிற்கு அதிகாலை நடைப்பயிர்ச்சிக்கு செல்லவது வழக்கம். ஒருநாள் ஒரு புர்கா அணிந்த மாணவி தன் பள்ளி பையுடன் வேற்று மத வாலிபரோடு அந்தப் பார்க்குக்கு வந்து புர்கவை களைந்து வைத்து விட்டு அந்த வாலிபரின் கரங்களில் தஞ்சம் புகுந்து சல்லாபத்தில் திளைத்திருந்தால் . அதனை அறிந்த எங்களின் நண்பர் ஆறுமுகம் அந்த மாணவியிடம் சென்று கடிந்து விரட்டிவிட்டார். இதனை நான் எதற்காக சொல்கிறேனென்றால் பெற்றோர் தன் பிள்ளைகள் மேல் கல்வி படிக்க வேண்டும் என்று வாயை கட்டி வயித்தைக் கட்டி படிக்க வைக்கிறார்கள். ஆனால் அந்த குழந்தைகள் ஒழுங்காக பள்ளி செல்கின்றார்களா என்று கவனிக்க தவறி விடுகிறார்கள்.
2)
பிள்ளைகள் நவீன கல்வி பெற இன்டர்நெட் வசதியுடன் கூடிய அதிக திறன் வாய்ந்த கணினியினை வாங்கிக் கொடுக்கிறார்கள் ஆனால் தங்கள் பிள்ளைகள் அந்த கணினிதான் உலகம் என்று முடங்கிக் கிடக்கும்போது கண்டிக்க தவறி விடுகிறார்கள். அந்த கணினியில் தன் செல்லக் குழந்தைகள் என்ன அப்படி செய்கிறார்கள் என்று அறியாமையினால் அந்தக் குழந்தைகள் தடம் மாறும்போது தெரிவதில்லை. பெற்றோர்களும் கணினியின் ஆரம்பக் கல்வி கற்க வேண்டும்.
3)
பிள்ளைகள் உலகக் கல்வி பெற்றால் போதும் மர்க்க கல்வி தேவையில்லை என்ற ஒரு தவறான நிலைப்பாடு சில பணக்காரர்களிடம் இருப்பதினால் பல குழந்தைகள் வெளிநாட்டுக் கலாச்சாரத்தில் சீரழிந்து விடுகின்றனர். ஆகவே உலகக் கல்வியோடு மார்க்க கல்வியும், நல் ஒழுக்க போதனைகளும் வீட்டிலுள்ள பெரியோர் போதிக்க வேண்டும்.
4)
பல மத குடும்பங்கள் ஒரு இடத்தில் வாழும் இந்த உலகத்தில் ஆண்களுடன் பெண்கள் சகசமாக குடும்ப நண்பர் என்ற போர்வையில் பழக விடக் கூடாது.
5)
பிறந்த நாள் விழா மற்றும் குடும்ப விழாக்களில் வயது வந்த பெண்களை அழைத்துச் செல்லக்கூடாது.
6)
டிவி மற்றும் கம்ப்யுட்டரினை பிள்ளைகள் படுக்கை அறைகளில் வைக்காது பொது அறையில் வைக்க வேண்டும். கணினியில் ஆடல் பாடல் ஆடம் பாட்டம் கொண்டாட்டம் என்ற போர்வையில் டிவியில் ஒளி பரப்பப் படும் ஆபாச காட்ச்சிகளை கண்டிப்பாக பிள்ளைகளுடன் அமர்ந்து பார்க்ககூடாது.
7)
குழந்தைகள் தங்கம் போன்ற பெற்றோர்களுக்கு பாசமானவர்கள் தான், மறுக்கவில்லை, ஆனால் தங்கக் கம்பியினை நம் கண்ணில் குத்த விடலாமா? ஆகவே பாசம் உள்ள தாய்மார்களும், அரவணைப்புகொண்ட தந்தைமார்களும், அன்புடைய உடன் பிறப்புகளும், கண்ணியம் காக்கும் சமுதாய இயக்கங்களும் ஈமானை இழந்து, பண்பாடுகளுக்கு விடைகொடுத்து காதல் மோகத்தில் அற்ப சுகம் கிடைக்கும் என்று பக்குவமில்லாத பருவத்தில் வாழ்வினைத் துளைக்கும் வருங்கால சிறுவர்கள், சிறுமிகளை மனம் போன போக்கில் சீரழிய விடலாமா?

Friday 14 October 2011

மன்னிக்கப்படாத பாவம்!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அனைத்துப் புகழும் அகிலங்கள் அனைத்தையும் படைத்து இரட்ச்சித்து வருபவனான அல்லாஹ்வுக்கே உரித்தானது. அவனிடமே நாம் உதவி தேடுகிறோம்; அவனிடமே நாம் மன்னிப்பு கோருகிறோம்; அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டுகிறானோ அவரை யாராலும் வழி தவறச் செய்ய இயலாது; மேலும் யாரை அவன் வழி தவறச்செய்கிறானோ அவருக்கு நேர்வழி காட்டுபவர் யாருமில்லை.
வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வுத்தஆலாவைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன்; மேலும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்தஆலாவின் உண்மை அடியாரும் இறுதி தூதரும் ஆவார்கள் எனவும் சாட்சி கூறுகிறேன். அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் நபிகள் நாயம் (ஸல்) அவர்களின் மீதும், அவர்களின் குடும்பத்தார்கள், தோழர்கள் மீதும், நம் மீதும் மற்றும் கியாம நாள் வரை அல்லாஹ்வின் தூதரைப் பின்பற்றக் கூடிய முஸ்லிம்கள் அனைவரின் மீதும் உண்டாவதாக. ஆமீன்.
அன்பான சகோதர சகோதரிகளே, அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்: -
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவேமாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத்தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான் (அல்குர்ஆன் 4:116)
இந்த வசனத்தில் அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே மாட்டான் என்று கூறியிருப்பதை சற்று கவனத்துடன் ஆராயவேண்டும். ஏனென்றால் இறைவனின் மன்னிப்பே கிடைக்காத இணைவைப்பது என்றால் என்ன என்பதை நாம் அறிந்து கொண்டு அவற்றிலிருந்து முற்றிலுமாக தவிர்ந்து இருக்க வேண்டியது மிக மிக அவசியமாகிறது.
இணைவைக்கும் ஒருவருக்கு அல்லாஹ்வின் மன்னிப்பு கிடைக்காததோடு மட்டுமில்லாமல் அவர் தம்முடைய வாழ்நாளில் செய்த அனைத்து நல்லறங்களும் அழிந்து நிரந்தர நரகத்திற்கு வழிவகுக்கும்.
1) இணைவைத்தலின் தீமைகள்: -
  1. ஒருவர் தம் வாழ்நாளில் செய்த அனைத்து நல்லறங்களும் பாழாகிவிடும்
  2. இறைவன் இணைவைத்தலைத் தவிர ஏனைய பாவங்களைத் தான் நாடியோருக்கு மன்னிப்பான்
  3. இணை வைத்தவனின் கதி மிகவும் மோசமானது
  4. இறைவனுக்கு இணை கற்பித்தால் நிரந்தர நரகம்.
நல்லமல்களை அழித்துவிடும் ஷிர்க்: -
அல்லாஹ் கூறுகிறான்: -
இதுவே அல்லாஹ்வின் நேர் வழியாகும், தன் அடியார்களில் அவன் யாரை விரும்புகிறானோ, அவர்களுக்கு இதன்மூலம் நேர்வழி காட்டுகிறான்; (பின்னர்) அவர்கள் இணைவைப்பார்களானால், அவர்கள் செய்து வந்ததெல்லாம், அவர்களை விட்டு அழிந்துவிடும். (அல்குர்ஆன் 6:88)
அன்றியும், உமக்கும், உமக்கு முன் இருந்தவர்களுக்கும், வஹீ மூலம் நிச்சயமாக அறிவிக்கப்பட்டது என்னவென்றால், ‘நீவிர் (இறைவனுக்கு) இணை வைத்தால், உம் நன்மைகள் (யாவும்) அழிந்து, நஷ்டமடைபவர்களாகி விடுவீர்கள்’ (என்பதுவேயாகும்). ஆகவே, நீர் அல்லாஹ்வையே வணங்குவீராக! மேலும், அவனுக்கு நன்றி செலுத்துபவர்களில் நின்றும் இருப்பீராக! (அல்குர்ஆன் 39:65 & 66)
இணைவைத்தலைத் தவிர ஏனைய பாவங்களைத் தான் நாடியோருக்கு மன்னிப்பான்: -
அல்லாஹ் கூறுகிறான்: -
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள். (அல்குர்ஆன் 4:48 )
இணை வைத்தவனின் கதி: -
அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காது அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக இருங்கள்; இன்னும் எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறானோ, அவன் வானத்திலிருந்து விழுந்து பறவைகள் அவனை வாரி எடுத்துச் சென்றது போலும் அல்லது பெருங் காற்றடித்து, அவனை வெகு தொலைவிலுள்ள ஓரிடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றது போலும் ஆகிவிடுவான். (அல்குர்ஆன் 22:31)
இறைவனுக்கு இணை கற்பித்தால் நிரந்தர நரகம்.
அல்லாஹ் கூறுகிறான்: -
“…எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை. (அல்குர்ஆன் 5:72 )
இந்த அளவிற்கு படுபயங்கரமான இணைவைத்தல் என்பது பற்றி நாம் முழுவதுமாக அறிந்திருக்க வில்லையானால் அவற்றிலிருந்நு பரிபூரணமாக தவிர்திருப்பது என்பது இயலாத காரியம். எனவே ஷிர்க் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை என்பவை பற்றி இந்த சிறிய ஆய்வுக் கட்டுரையில் ஆராய்வோம்.
இன்று நமது சமுதாயத்தில் இணைவைப்பது (ஷிர்க்) என்றால் என்ன என்று கேட்டால் மிக எளிதாக கிடைக்கும் பதில் சிலைகளை வணங்குவதுஎன்றே நம்மில் பெரும்பாலோர் கூறுவர். இவ்வாறு இவர்கள் கூறுவதற்கு காரணம் இணை வைப்பது என்றால் என்ன என்பதைப் பற்றிய அறியாமையே ஆகும்.
2) ஷிர்க் என்றால் என்ன?
ஷிர்க் என்பது தவ்ஹீத் (அல்லாஹ்வை ஒருமைப்படுத்துதல்) என்பதற்கு நேர்மாற்றமான அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தலாகும்.
அதாவது ஷிர்க் என்பது,
- அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளை அல்லாஹ் அல்லாத பிறருக்கு செய்வது
- அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய ஆற்றல்களில் சிலவற்றை அல்லாஹ் அல்லாத பிறருக்கும் இருப்பதாக கருதுவது
ஆகியவையாகும்.
ஷிர்கின் வகைகள்: -
ஷிர்கில் மூன்று வகைகள் உள்ளன. அவைகளாவன: -
  1. பெரிய ஷிர்க்
  2. சிறிய ஷிர்க்
  3. மறைமுக ஷிர்க்
பெரிய ஷிர்க் என்றால் என்ன?
அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்யப்படவேண்டிய வணக்க வழிபாடுகளை அல்லாஹ் அல்லாதவைகளுக்கு செய்வது பெரிய ஷிர்க் ஆகும்.
சிறிய ஷிர்க் என்றால் என்ன?
அல்லாஹ்வுக்காக செய்யவேண்டும் என்ற நோக்கமில்லாமல் பிறர் பார்த்து பாராட்ட வேண்டும் என்று கருதி வணங்குவது அல்லது
பிறர் தம்மை தவறாக நினைத்து விடக் கூடாது என்பதற்காகவோ அல்லாஹ்வை வணங்குவது
இவ்வாறு வணக்கம் புரிவது சிறிய ஷிர்க் ஆகும்.
நபி (ஸல்) அவர்கள் சிறிய ஷிர்க் குறித்து மக்களை எச்சரித்துள்ளார்கள்.
மறைவான ஷிர்க் என்றால் என்ன?
மறைவான ஷிர்க் என்பது அல்லாஹ் நம்மீது விதித்துள்ள கட்டளைகளை ஏற்று அதன் மீது திருப்தி கொண்டு அதன்படி செயல்படாமல் அவற்றை அலட்சியம் செய்வதாகும்.
3) ஷிர்குல் அக்பர் ஒரு விளக்கம்: -
இந்த சிறிய ஆய்வுக்கட்டுரையில் ஷிர்குல் அக்பர் என்று சொல்லப்படக்கூடிய மாபெரும் இணைவைத்தல் பற்றி குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் அடிப்படையில் ஆராய்வோம்.
ஷிர்குல் அக்பர் என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்யப்படவேண்டிய வணக்க வழிபாடுகளை அல்லாஹ்வுக்கு அல்லாதவர்களுக்கு செய்வதும், அல்லாஹ்வுடைய பண்புகளை ஆற்றல்களை பிறருக்கு இருப்பதாக கருதுவதும் என பார்த்தோம்.
நம்முடைய சமுதாயத்தில் உள்ளவர்களில் பலர் இஸ்லாத்தின் மூல மந்திரமான லாயிலாஹ இல்லல்லாஹ்என்பதன் பொருள் அறியாமல் தான் இந்த ஷிர்க் என்ற கொடிய பாவத்தில் சிக்கி உழல்கின்றனர். வணக்கம் என்றால் என்ன என்று கேட்டால் அவர்கள் கூறுவது தொழுகை, நோன்பு, ஜக்காத் மற்றும் ஹஜ் என்பார்கள். வணக்கம் என்பது இவைகள் மட்டுமன்று. அல்லாஹ்வும் அவனது தூதரும் (ஸல்) எவைகளையெல்லாம் அல்லாஹ்வுக்கு மாத்திரம் செய்ய வேண்டுமென்று கட்டளையிட்டு இருக்கிறார்களோ அவைகள் அனைத்தும் வணக்கமாகும். அவற்றை அல்லாஹ்வை விடுத்து மற்றவருக்கு செய்தால் அவைகளும் ஷிர்கின் வகையைச் சேர்ந்ததாகும்.
உதாரணமாக பின்வரும் அனைத்தும் வணக்கத்தின் வகைகளாகும். அவைகளை அல்லாஹ்வுக்கு மட்டுமே நாம் செய்ய வேண்டும்.
  • துஆ (பிரார்த்தனை) செய்தல்
  • ருகூவு / சஜ்தா செய்தல்
  • அழைத்து உதவி தேடுதல்
  • பாதுகாவல் தேடுதல்
  • நேர்ச்சை செய்தல்
  • தவாபு செய்தல்
  • சத்தியம் செய்தல்
  • குர்பானி கொடுத்தல்
  • ஆதரவு / தவக்குல் வைத்தல்
  • அல்லாஹ்வைப் போல் பிறரை நேசித்தல்
ஒருவர் மேற்கண்ட அனைத்து செயல்களுமே வணக்கத்தின் வகைகள் என்று அறிந்துக் கொள்வாராயின் இன்ஷா அல்லாஹ் அவர் இந்த வணக்க முறைகளை அல்லாஹ் அல்லாதவர்களுக்கு செய்வதிலிருந்தும் தவிர்ந்துக் கொள்வார். ஆனால் இவைகளும் வணக்கமே என்று புரிந்துக் கொள்வதில் தான் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விடுகின்றனர்.
மேலும் ஒருவர் அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக்கூடிய பண்புகள் மற்றும் ஆற்றல்கள் யாவை என அறிந்துக் கொள்வராயின் அவற்றில் இணை வைப்பதிலிருந்தும் தவிர்ந்துக் கொள்வார் இன்ஷா அல்லாஹ்.
இந்த சிறிய ஆய்வுக் கட்டுரையில் ஒரு உதாரணம் மூலம் எவ்வாறெல்லாம் மக்கள் அல்லாஹ்வுக்கு அறிந்தோ அல்லது அறியாமையினாலோ இணை கற்பிக்கின்றார்கள் என்பதைப் பார்ப்போம்.
உதாரணம் -
ஒருவர் சிங்கப்பூரிலிருந்து கொண்டு அல்லது உலகின் வேறு எந்த மூலையில் இருந்துக் கொண்டோ நாகூரில் அடக்கமாகியிருப்பதாக் கூறப்படும் ஷாகுல் ஹமீது வலியுல்லாஹ்விடம் யா ஷாகுல் ஹமீது பாதுஷாவே என்னுடைய இன்ன தேவையை நீங்கள் நிறைவேற்றித் தந்தால் நான் தங்களின் இடத்திற்கு வருகை தந்து தங்களுக்கு காணிக்கை செலுத்துகிறேன் என நேர்ச்சை செய்வதாக வைத்துக் கொள்வோம்.
இந்த இடத்தில் நாம் இவருடைய வேண்டுதலை ஆய்வு செய்தோமேயானால் இவர் பல வகைகளில் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தவராகிறார். அவைகளாளாவன: -
1) வணக்க வழிபாடுகளில் இணை வைப்பது: -
அல்லாஹ்விடம் மாத்திரமே செய்ய வேண்டிய பிரார்த்தனையை, துஆவை ஷாகுல் ஹமீது அவுலியாவிடம் செய்தல்
அல்லாஹ்வுக்கு மாத்திரமே செய்ய வேண்டிய நேர்ச்சையை ஷாகுல் ஹமீது அவுலியாவுக்கு செய்தல்
2) அல்லாஹ்வுடைய பண்புகளில், ஆற்றல்களில் இணை வைப்பது: -
அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய பண்புகளாகிய எங்கிருந்துக் கொண்டு கேட்டாலும் கேட்கும் சக்தி உடையவன் (அஸ் ஸமீவுன்) மற்றும் ஒரே நேரத்தில் அனைத்தையும் பார்ப்பவன் (பஷீரன்) என்ற பண்புகள், ஆற்றல்கள் ஷாகுல் ஹமீது பாதுஷாவுக்கும் இருப்பதாகக் கருதுவது
அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய பண்பாகிய ஒருவரின் இதயத்தில் உள்ள இரகசியத்தை அறியும் சக்தி உடையவன் என்ற பண்பை, ஆற்றலை ஷாகுல் ஹமீது பாதுஷாவுக்கும் இருப்பதாகக் கருதி அவரும் மனிதர்களின் இதயங்களிலுள்ளவற்றையெல்லாம் அறிகிறார் என நம்புவது
அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய பண்பாகிய பிரார்த்தனையை செவிமெடுத்து அதை நிறைவேற்றித் தரும் ஆற்றல் ஷாகுல் ஹமீது அவுலியாவுக்கும் இருப்பதாக கருதுவது.
சகோதர, சகோதரிகளே இங்கு நாம் கவனமாக சிந்திக்க வேண்டும். ஏனெனில் அறிந்தோ அல்லது அறியாமலோ சர்வ சாதாரணமாக நம்மில் சிலர் செய்கின்ற இந்த வேண்டுதலில் இத்தனை வகையான ஷிர்க் நிறைந்துள்ளது. ஒருவர் மேற்கண்ட உதாரணத்தில் உள்ள பிரார்த்தனை (துஆ) செய்தல் மற்றும் நேர்ச்சை செய்தல் போன்ற வணக்கங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்யப்பட வேண்டியவை என்றும், மேற்கண்ட உதாரணத்தில் கூறப்பட்ட பண்புகள் அல்லாஹ்வுக்கு மற்றுமே உரித்தானது என்றும் உணர்ந்துக் கொண்டால் அவர் இன்ஷா அல்லாஹ் இத்தகைய இணை வைத்தல்களிலிருந்து தவிர்ந்துக் கொள்வார். இவற்றை குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் ஒளியில் ஆராய்வோம்.
துஆ (பிரார்த்தனை) செய்வதும் ஒரு வணக்கமே!: -
அல்லாஹ் கூறுகிறான்: -
(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; ‘நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்என்று கூறுவீராக (அல் குர்ஆன் 2:186)
உங்கள் இறைவன் கூறுகிறான்: என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள். (அல் குர்ஆன் 40:60)
மேலும் அல் குர்ஆனின் வசனங்கள் 2:286, 7:55, 18:28, 35:14, 72:18 அனைத்தும் அல்லாஹ்விடமே பிரார்த்தனை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
பிரார்த்தனை (துஆ) ஓர் வணக்கமாகும். என்னை அழையுங்கள். நான் உங்களுக்குப் பதிலளிக்கிறேன் என்று உங்கள் இறைவன் கூறுகிறான். (அறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர் -ரலி, நூல்:அபூதாவூத், திர்மிதி)
மேற்கண்ட வசனங்கள் மற்றும் நபி மொழியில் இருந்து நாம் பெறும் தெளிவுகள் யாவை எனில்: -
  • துஆ ஒரு வணக்கமாகும்.
  • அல்லாஹ் சமீபமாக இருக்கிறான்.
  • பிரார்த்தனைக்கு விடையளிக்கிறான்.
  • அல்லாஹ்விடமே பிரார்த்திக்க (துஆ) செய்ய வேண்டும்
எனவே மேற்கண்ட குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் நமது தேவைகளை அல்லாஹ்விடமே பிரார்த்திக்க வேண்டும். ஷாகுல் ஹமீது அவுலியாவிடமோ அல்லது வேறு எந்த வலியிடமோ, நபியிடமோ பிரார்த்தித்தால் அது ஷிர்க் எனப்படும் மன்னிக்கபடாத மாபெரும் பாவமாகும்.
நேர்ச்சை செய்வதும் ஒரு வணக்கமேயாகும்: -
நேர்ச்சை செய்வது ஒரு வணக்கம் என்பதற்கு பின்வரும் குர்ஆன் வசனங்கள் சான்றுகளாகும்.
அல்லாஹ் கூறுகிறான்: -
இன்னும், செலவு வகையிலிருந்து நீங்கள் என்ன செலவு செய்தாலும், அல்லது நேர்ச்சைகளில் எந்த நேர்ச்சை செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை நன்கறிவான்; அன்றியும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இலர். (அல் குர்ஆன் 2:270)
அவர்கள் தாம் (தங்கள்) நேர்ச்சைகளை நிறை வேற்றி வந்தார்கள்; (கியாம) நாளை அவர்கள் அஞ்சி வந்தார்கள். அதன் தீங்கு (எங்கும்) பரவியிருக்கும். (அல் குர்ஆன் 76:7)
எனவே மேற்கண்ட வசனங்களின் அடிப்படையில் நேர்ச்சை என்பதுவும் ஒரு வணக்கமே. அதை அல்லஹ்வுக்கு மாத்திரமே செய்ய வேண்டும். அதைவிடுத்து ஷாகுல் ஹமீது அவுலியா மற்றும் இன்னும் பிற அவுலியாவுக்குச் செய்தோமேயானால் அது ஷிர்க் என்னும் இணை வைத்தலைச் சேரும்.
எங்கிருந்துக் கொண்டு கேட்டாலும் கேட்கும் சக்தி உடையவன் அல்லாஹ் மட்டுமே: -ஒரே நேரத்தில் அனைத்தையும் பார்ப்பவன் அல்லாஹ் மட்டுமே: -
திருக்குர்ஆனில் அல்லாஹ் தன்னுடைய பண்புகளில் ஒன்றாக அஸ் ஸமீவுன் என கூறுகிறான். இதற்கு ஒருவர் எங்கிருந்துக் கொண்டு கேட்டாலும், எத்தகையை சூழலில் இருந்துக் கொண்டு கேட்டாலும் கேட்கும் வல்லமை, ஆற்றல் பெற்றவன் என பொருள்படும். மேலும் ஒரே நேரத்தில் பல கோடி நபர்கள் அழைத்தாலும் அவர்களின் அழைப்பையும் கேட்கக் கூடியவன் எனவும் பொருள்படும். இந்த பண்பு, ஆற்றல் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரிடமும் இல்லை.
மேலும் திருக்குர்ஆனில் அல்லாஹ் தன்னுடைய பண்புகளில் ஒன்றாக பஷீரன் என கூறுகிறான். இதற்கு அல்லாஹ் அனைத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கக் கூடியவன் என பொருள்படும். அதாவது ஒருவர் எங்கிருந்துக் கொண்டும் மேலும் எத்தகைய சூழலில் இருந்துக் கொண்டும் அழைத்தாலும் அவரைப் பார்க்கக் கூடியவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே. அதுமட்டுமல்லாமல் அவன் அவனுடைய படைப்பினங்கள் அனைத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கக் கூடிய ஆற்றல் உள்ளவனாகவும் இருக்கிறான். இந்த ஆற்றல் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருக்கும் இல்லை.
யாராவது ஒருவர் தாம் சிங்கப்பூரிலிருந்து ஷாகுல் ஹமீது வலியுல்லாஹ்வை அழைக்கும் போதும், அதே நேரத்தில் உலகில் வேறு எந்த இடத்திலிருந்துக் கொண்டும் அழைக்கக் கூடிய பல்லாயிரக்கணக்காணோர்களைப் பார்த்து அவர்களின் அழைப்பைச் செவிமெடுக்கிறார் என நம்புவது அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய அஸ் ஸமீவுன் மற்றும் பஷீரன் என்ற நாமங்களை, பண்புகளை இறைவனல்லாத ஷாகுல் ஹமீது அவுலியாக்கு இணை கற்பிப்பது போலாகும்.
அவர் அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் கேட்கும் தன்மையையும் (அஸ் ஸமீவுன்) மற்றும் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் பார்க்கக்கூடியவன் (பஷீரன்) என்ற தன்மையையும் அல்லாஹ்வுக்கு மட்டுமல்லாமல் ஷாகுல் ஹமீது அவுலியாவுக்கும் இருப்பதாக நம்மி அல்லாஹ்வின் அந்தப் பண்புகளில், ஆற்றல்களில் இணை வைத்தவராவார்.
அல்லாஹ் கூறுகிறான்: -
வரேனும் இவ்வுலகின் பலனை(மட்டும்) அடைய விரும்பினால், “அல்லாஹ்விடம் இவ்வுலகப்பலனும், மறுவுலகப்பலனும் உள்ளன. அல்லாஹ் கேட்பவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கின்றான். (அல் குர்ஆன் 4:134)
இதய இரகசியங்களை அறிபவன் அல்லாஹ்வே: -
அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்: -
மேலும், உங்கள் சொல்லை நீங்கள் இரகசியமாக்குங்கள், அல்லது அதை பகிரங்கமாக்குங்கள் நிச்சயமாக அவன் இதயங்களிலுள்ளவற்றையும் மிக அறிந்தவன் (அல்குர்ஆன் 67:13)
நம் மனதில் உள்ள நம்முடைய தேவைகளை அல்லது எண்ணங்களை நாம் வெளியே சொன்னால் தவிர மற்றவர்களால் அறிந்து கொள்ள இயலாது என்பது அனைவரும் அறிந்த விஷயம். ஆனால் நம்மைப் படைத்த ரப்புல் ஆலமீன் அல்லாஹ் மட்டும் நாம் மனதிற்குள் நினைப்பதையும் வெளிப்படையாகப் பேசுவதையும் அறிகிறான்.
அல்லாஹ் கூறுகிறான்: -
அன்றியும், அல்லாஹ் நீங்கள் மறைத்து வைத்திருப்பதையும், நீங்கள் பகிரங்கப்படுத்துவதையும் அறிகிறான். (அல் குர்ஆன் 16:19)
வெளிப்படையாக (நீங்கள் பேசும்) பேச்சையும் அவன் நிச்சயமாக அறிகிறான்; நீங்கள் (இதயத்தில்) மறைத்து வைப்பதையும் அவன் (நிச்சயமாக) அறிகிறான் (அல் குர்ஆன் 21:110)
மேற்கண்ட வசனங்களின் அடிப்படையில்: -
  • உள்ளங்களில் மறைத்து வைப்பதை அறிபவனும்,
  • இதயங்களிலுள்ள இரகசியத்தை அறிபவனும்,
  • மனிதர்களின் மனதில் உள்ள தேவைகளை அறிபவனும்
அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்பது உறுதியாகிறது. ஆனால் ஒருவர் இந்தப் பண்புகள், ஆற்றல்கள் ஷாகுல் ஹமீது அவுலியாவிற்கும் உண்டு அதனால் அவர் சிங்ப்பூரிலிந்து கேட்கும் அவரது தேவைகளை அல்லது அவருடைய மனதில் எண்ணியிருக்கும் நாட்டங்களை ஷாகுல் ஹமீது அவுலியா நிறைவேற்றித் தருகிறார் என நம்பிக்கை கொண்டு அதன்படி செயல்படுவாராயின் நிச்சயமாக அவர் அல்லாஹ், தனக்கு மட்டுமே இருக்கக் கூடியதாக கூறும் அந்தப் பண்புகளை, ஆற்றல்களை அவர் ஷாகுல் ஹமீது அவுலியாவுக்கும் பங்கிடுவதன் மூலம் அல்லாஹ்வுக்கு இணை வைத்தவராக கருதப்படுவார்.
இவ்வாறு அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்களைப் பார்த்து அல்லாஹ் கூறுகிறான்: -
நிச்சயமாக அல்லாஹ்வையன்றி அவர்கள் எதை (நாயனென) அழைக்கிறார்களோ, அதை அவன் அறிகிறான் இன்னும் அவன் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன். (அல் குர்ஆன் 29:42)
மேலும், இதய இரகசியங்களை அறிந்தவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று பல வசனங்கள் கூறுகின்றன. இது பற்றிய விளக்கத்தை இதய இரகசியத்தை அறிபவன் அல்லாஹ்வேஎன்ற தலைப்பில் பார்க்கவும்.
பிரார்த்தனைக்கு பதிலளிப்பவன் அல்லாஹ் மட்டுமே: -
நாம் எங்கிருந்துக் கொண்டு துஆ (பிரார்த்தனை) கேட்டாலும், எத்தகைய சூழ்நிலைகளில் இருந்துக் கொண்டு அழைத்தாலும் நம்முடைய அழைப்பச் செவியேற்று அதற்கு பதிலளிப்பவன், அந்த தேவைகளை நிறைவேற்றுபவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை.
அல்லாஹ் கூறுகிறான்: -
உங்கள் இறைவன் கூறுகிறான்: என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.(அல் குர்ஆன் 40:60)
(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; ‘நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்என்று கூறுவீராக. (அல் குர்ஆன் 2:186)
உங்கள் இணை (தெய்வங்)களை அழையுங்கள்என்று (அவர்களுக்குச்) சொல்லப்படும். அவர்களை இவர்கள் அழைப்பார்கள்; ஆனால் அவர்கள் இவர்களுக்கு பதிலளிக்கமாட்டார்கள்; மேலும், அவர்கள் வேதனையைக் காண்பார்கள். அவர்கள் நேர்வழியில் சென்றிருந்தால் (இந்நிலைக்கு ஆளாகியிருக்க மாட்டார்கள்). (அல் குர்ஆன் 28:64)
நீங்கள் அவர்களைப் பிரார்த்தி(த்து அழை)த்தாலும், அவர்கள் உங்கள் பிரார்த்தனையை (அழைப்பை)ச் செவியோற்கார்; செவியேற்றாலும் கூட உங்களுக்கு பதில் அளிக்கமாட்டார்கள்; கியாம நாளில் நீங்கள் இணைவைத்ததையும் அவர்கள் நிராகரித்து விடுவார்கள்; யாவற்றையும் நன்கு அறிபவனைப் போன்று (அவர்கள்) எவருமே உங்களுக்கு அறிவிக்க மாட்டார்கள். (அல் குர்ஆன் 35:14)
உண்மையான அழைப்பு (பிரார்த்தனை) அவனுக்கே உரியதாகும்; எவர் அவனை அன்றி (மற்றவர்களை) அழைக்கின்றார்களோ, அவர்கள் இவர்களுக்கு எவ்வித பதிலும் தர மாட்டார்கள்; (அல்லாஹ் அல்லாதவர்களைப் பிரார்த்திப் போரின் உதாரணம்;) தண்ணீர் தன் வாய்க்கு(த் தானாக) வந்தடைய வேண்டுமென்று, தன் இருகைகளையும் விரித்து ஏந்திக் கொண்டு இருப்பவனைப்போல் இருக்கிறது; (இவன் அள்ளாது) அது வாயை அடைந்து விடாது இன்னும் காஃபிர்களின் பிரார்த்தனை வழிகேட்டில் இருப்பதே தவிர வேறில்லை. (அல் குர்ஆன் 13:14)
எனக்கு இணையானவர்கள் என எவர்களை நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்களோ அவர்களை நீங்கள் அழையுங்கள்என்று அவன் கூறக்கூடிய நாளில் இவர்கள் அவர்களை அழைப்பார்கள். ஆனால் அவர்கள் இவர்களுக்கு பதிலளிக்க மாட்டார்கள்; இன்னும் அவர்களுக்கிடையே நாசத்தை நாம் ஏற்படுத்துவோம். (அல் குர்ஆன் 18:52)
எனவே எனதருமை சகோதர சகோதரிகளே மேற்காணும் வசனங்களின் மூலம் நாம் பெறும் படிப்பினைகளப் பற்றி சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இந்த வசனங்களின் மூலம் நாம் பெறும் தெளிவுகள் யாவை எனில்: -
  • பிரார்த்திப்பவரின் பிரார்த்தனைக்கு பதிலளிப்பவன் அல்லாஹ் மட்டுமே
  • அல்லாஹ்விடம் மாத்திரமே பிரார்த்தனை செய்யவேண்டும்
  • அல்லாஹ்வைத்தவிர மற்றவர்களிடம் பிரார்த்தனை செய்தால் அவர்களால் அந்தப் பிரார்த்தனையைச் செவியேற்க இயலாது.
  • கியாம நாள் வரை அவர்களை அழைத்தாலும் அவர்களால் பதிலளிக்க இயலாது
  • கியாம நானில் அல்லாஹ்வுக்கு இணை வைத்ததை அவர்கள் நிராகரித்து விடுவார்கள்.
  • ல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்பவருக்குத்தான் அல்லாஹ் நேர்வழி காட்டுவான்.
எனவே மேற்கண்ட வசனங்களின் அடிப்படையில் ஒருவர் பிரார்த்தனைக்கு பதிலளிப்பவன் அல்லாஹ் மட்டுமே என நம்பிக்கை கொண்டு அவனிடமே பிரார்த்தனை செய்ய வேண்டும். ஆனால் ஷாகுல் ஹமீது அவுலியாவும் நம்முடைய பிரார்த்தனையைச் செவிமெடுத்து நமக்கு பதிலளித்து நம்முடைய தேவைகளைப் பெற்றுத்தருகிறார் என நம்பிக்கைக் கொண்டால் அது ஷிர்க் என்னும் இணை வைத்தலைத் தவிர வேறொன்றுமில்லை.

 
Thanks and regards
 

Mohamed Subuhan Sultan


--
Indeed in theMessenger of Allah you have an excellent example to follow for who ever hopes in Allah and the Last Day and remembers Allah much.
Al Quran (33:21)
இன்னும் வரப் போகும் அந்நாளிலிருந்து, உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.  அன்று  ஓர் ஆத்மா  மற்றொரு ஆத்மாவுக்கு உதவி செய்ய இயலாது.  அதனிடமிருந்து அதன் பாவங்களுக்காக  பரிகாரமாக எந்த  நஷ்ட  ஈடும் பெறப்படாது.  யாருடைய  பரிந்துரையும்  அதற்கு பலனளிக்காது. அவர்கள் எவர் மூலமாகவும் எந்த உதவியும் செய்யப்பட மாட்டார்கள்.
அல் குர்ஆன் (02-123
But, who ever turns away from the Quran he will have a hard life, and We will raise him up blind on the Day of Judgment. 
 Al Quran (20:124)
மேலும் அவர்கள் இந்தக் குரானை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்களின் இருதயங்களின் மீது பூட்டுக்கள் போடப்பட்டு விட்டனவா?
Al Quran (47:24)



Trichy - Yusuf.