Showing posts with label இஸ்லாம். Show all posts
Showing posts with label இஸ்லாம். Show all posts

Wednesday 1 May 2024

இஸ்லாத்தின் இறையியல் கோட்பாடு - - பேராசிரியர் அருணன்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

இஸ்லாத்தின் இறையியல் கோட்பாடு

 

மார்க்சியர்களாகிய நாங்கள் அடிப்படையில் நாத்திகர்களே! ஆனால் முரட்டு நாத்திகர்கள் அல்ல. மாறாகக் கடவுள் நம்பிக்கை மக்கள் நெஞ்சில் எப்படி உருவானது, ஏன் நீடிக்கிறது என்பதைப் புரிந்து கொண்டிருப்பவர்கள், இந்த நோக்கிலிருந்து நான் எழுதியதுதான் ‘கடவுளின் கதை’ எனும் ஐந்து பாகங்களைக் கொண்ட பெரு நூல், அது உலக மதங்களின், மதம்பற்றிய சிந்தனைகளின் வரலாறு.

அதை எழுதுவதற்காக இஸ்லாத்தையும் கற்கத் தொடங்கினேன். என்னை வியப்பூட்டிய விஷயம் உலகின் பெருமதங்களில் இஸ்லாம்தான் ஏகக் கடவுள் வணக்கத்தையும் உருவ வழிபாட்டு மறுப்பையும் உறுதியாகப் பற்றியிருக்கிறது. கிறித்தவம், இஸ்லாம், இந்துமதம், பவுத்தம் என்பவையே மக்கள் மத்தியில் இன்று பரவலாக உள்ள மதங்கள். இந்த நான்கில் இஸ்லாமே அந்த இரு விஷயங்களையும் தனது அடிப்படை இறையியல் கோட்பாடாகக் கொண்டிருக்கின்றது.

கத்தோலிக்கக் கிறித்தவத்தில் கர்த்தர், அவரது குமாரர் இயேசு, பரிசுத்த ஆவி என்று மும்மை வழிபாடு உண்டு. புராடஸ்டண்ட் பிரிவுகள் பலவற்றில் மும்மை வழிபாடு இல்லை என்றாலும் சிலுவை வழிபாடு உண்டு. பவுத்தம் வினோதமானது. கடவுள் மறுப்புப் பேசிய புத்தரையே கடவுளாக்கிக் கொண்டது மட்டுமல்லாது அவரது உருவத்தை வணங்கவும் தொடங்கியது. இந்து மதம் பற்றிச் சொல்ல வேண்டியதே யில்லை. அதில் ஏகப்பட்ட தெய்வங்கள். ஒவ்வொன்றையும் வேறுபடுத்திக் காட்ட அந்த ஆண் பெண் உருவங்களில் சிற்சில மாற்றங்கள்.

இஸ்லாம் ஏகத்துவத்தை அழுத்தமாகப் பேசியது மட்டுமல்லாது அதற்காகவே சிலை வணக்கத்தையும் நிராகரித்தது. இரண்டுக்குமிடையே ஆழ்ந்த தொடர்பு உண்டு. பல கடவுள் வணக்கம் என்றாலே வேறுபடுத்திக்காட்ட பல்வேறு சிலைகள் தேவைப்படும். சிலை வணக்கம் என்று கிளம்பினாலே அது பல சிலைகள் வணக்கத்தில், பல கடவுள் வணக்கத்தில் முடியும் அபாயம் இருந்தது. எனவே இரண்டையும் கறாராக நிராகரித்தது இஸ்லாம். ஏகக்கடவுள் வணக்கமும் உருவ வழிபாட்டு மறுப்பும் ஏற்கனவே இருந்தவை என்றாலும் அவற்றை மக்கள் உறுதியாகப் பற்றியிருக்கவில்லை என்பது தான் அதன் வருத்தமாக இருந்தது.

பைபிளின் பழைய ஏற்பாட்டில் வரும் ஆபிரகாமே அதைச் சொல்லியிருந்தார். நபிகள் நாயகத்திற்கு அருளப்பட்ட குர்ஆன் அதை மிகுந்த இலக்கிய அழகோடு இப்படி வருணிக்கிறது:

‘எனவே, இரவு அவரைச் சூழ்ந்தபோது அவர் ஒரு நட்சத்திரத்தைக் கண்டு இதுதான் என்னுடைய இறைவன் என்று கூறினார். ஆனால் அது மறைந்துவிட்டபோது, மறைந்து போகின்றவற்றை நான் நேசிப்பவனல்லன் என்று உரைத்தார். பின்னர் ஒளிரும் சந்திரனைக் கண்ட அவர் இதுதான் என்னுடைய இறைவன் என்று கூறினார். ஆனால் அதுவும் மறைந்தபோது என்னுடைய இறைவன் எனக்கு வழிகாட்டவில்லையெனில் வழிதவறிய கூட்டத்தாருள் நிச்சயமாக நானும் சேர்ந்திருப்பேன் என்று கூறினார்.

பின்னர் ஒளிரும் சூரியனைக் கண்டபோது இதுதான் என்னுடைய இறைவன்; இது எல்லாவற்றையும் விட மிகப் பெரியது என்று கூறினார். ஆனால் அதுவும் மறைந்து போகவே, என் சமூகத்தவரே! நீங்கள் இறைவனுக்கு இணைவைக்கும் அனைத்தை விட்டும் திண்ணமாக நான் விலகி விட்டேன். வானங்களையும், பூமியையும் படைத்தவனின் பக்கம் ஒருமனத்துடன் என் முகத்தை நான் திருப்பிவிட்டேன்; மேலும், ஒருபோதும் நான் இணைவைப்பவர்களில் உள்ளவனல்லன்’ என்று கூறினார் (திருக்குர்ஆன் 6:76-79)

ஆபிரகாம் இப்படியாக ஆதிகாலந்தொட்டு மனிதர்கள் வணங்கி வந்த சந்திர சூரியர்களை, நட்சத்திரக் கூட்டத்தை வரலாற்றில் மீண்டும் ஒருமுறை வன்மையாக நிராகரித்தார். அவற்றின் கடவுள் அந்தஸ்தைச் சர்வ சாதாரணமாகப் பறித்தார். ஏகக்கடவுளை ‘அல்லாஹ்’ என அழைத்தவர் அவருக்குக் கூட்டாளிகளைச் சேர்க்கக் கூடாது என்றார். எல்லாம் வல்ல கடவுளுக்குக் கூட்டாளி தேவை, குடும்பம் தேவை என்றால் அவர் எப்படி எல்லாம் வல்லவர் ஆவார் என்று கேட்காமல் கேட்டார்.

பல கடவுள் வணக்கத்தையும் உருவ வழிபாட்டையும் ஆங்காங்கே குர்ஆன் மறுத்துக் கொண்டே வந்தாலும் அத்தியாயம் 22 இதற்காகவே ஒதுக்கப்பட்டது போல உள்ளது. இந்த வசனங்களை (17-18) நோக்குங்கள்
‘இறைநம்பிக்கை கொண்டவர்கள், மேலும், யூதர்கள், ஸாபிகள், கிறிஸ்தவர்கள், நெருப்பை வழிபடுகின்றவர்கள் மற்றும் இறைவனுக்கு இணை வைத்தவர்கள் ஆகிய அனைவரிடையேயும் மறுமை நாளில் திண்ணமாக, அல்லாஹ் தீர்ப்பு வழங்குவான்! நிச்சயமாக யாவுமே அல்லாஹ்வின் பார்வையிலுள்ளது. வானங்களில் உள்ளவர்களும், பூமியில் உள்ளவர்களும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், பிராணிகளும் மற்றும் மனிதர்களில் பெரும்பாலோரும் ஏன், அல்லாஹ்வின் வேதனைக்கு இலக்காகிய பலரும் அல்லாஹ்வின் திருமுன் ஸஜ்தா செய்து சிரம்பணிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நீர் காண வில்லையா? ’ (திருக்குர்ஆன் 22 : 17,18)

பல கடவுள் வணக்கத்தை மட்டுமல்ல உருவ வழிபாட்டையும் இங்கே குர்ஆன் திட்டவட்டமாக மறுத்திருக்கிறது. இந்து மதத்தை நினைத்துப் பாருங்கள். அங்கே சகல வஸ்துக்களும் சில மாமனிதர்களும் கடவுள்களாக வணங்கப்படுகிறார்கள். ஒருபுறம் உபநிஷத்துகளில் ஏகக்கடவுள் பற்றிய சிந்தனை வெளிப்பட்டாலும், பிந்திய அதன் தத்துவ நூல்களிலும் ஏக பரமாத்மா சிந்தனை வெளிப்பட்டாலும் நடைமுறையில் என்னவோ பலகடவுள் வழிபாடும் சிலைகள் வணக்கமும்தான் அங்கே கோலோச்சுகிறது.

இத்தகைய மதங்கள் பற்றி குர்ஆன் அறிந்திருந்து அவற்றை நிராகரித்தது, கூடவே உருவமற்ற ஒரே கடவுளை வணங்கச் சொன்னது இது இறையியல் நோக்கில் ஒரு முக்கியமான வளர்நிலை. இந்து மத ஆன்மிகவாதிகள் பலரும்கூட பல கடவுள் வணக்கமும் உருவ வழிபாடும் பாமரர்களுக்காக வடிவமைக்கப்பட்டவையே, ஞானிகளைப் பொறுத்தவரை அவர்கள் ஏகப் பரம்பொருளை மானசீகமாக வணங்குவார்கள் என்று கூறியிருக்கிறார்கள். இஸ்லாமோ அதை சகலருக்குமாக ஆக்கி வைத்துள்ளது. இது ஆன்மிக நோக்கில் அபாரம் அன்றோ!

கறாரான ஏகக் கடவுள் வழிபாடு, சிலை வணக்கத்தைத் தவிர்த்தது என்றால் சிலை வணக்கத் தவிர்ப்பு பூசாரித் தனத்தை தவிர்த்தது. கடவுளுக்கும் மனிதர்களுக்கும் மத்தியில் இடைத்தரகர்கள் தேவையில்லை, மானசீகமான நேரடி வழிபாடு போதும் என்றது இஸ்லாம். தனி, கூட்டுத் தொழுகையே அதன் அஸ்திவாரமான சம்பிரதாயமானது. இதற்கு மசூதி எனும் சிறிதும் பெரிதான கட்டடங்கள் எழுந்தன. அவை வழிபாட்டுத் தலங்களே என்றாலும் அங்கே பிற மதங்களைப் போல வழிபடு சிலையோ சின்னமோ புத்தகமோ ஏதுமில்லை. எனவே பூசாரிக்கோ, அலங்காரத்திற்கோ, பூசைக்கோ ஆர்ப்பாட்டத்திற்கோ வேலையில்லை. ஏகக் கடவுளோடு தொழுகையின் மூலம் ஒன்றுவது எனும் ஞானமார்க்கம் சகலருக்கும் பரிந்துரைக்கப்பட்டது.

பூசாரிகள் இல்லாதது மனிதர்களிடையே மதரீதியாக பேதம் காட்டாத போக்கிற்கு வழிவகுத்தது என்றால், சமூக ரீதியாகப் பேதம் காட்டாத போக்கிற்கும் அடித்தளம் அமைத்தது. ஏழை பணக்காரன் எனும் வர்க்கரீதியான பேதம் உருவாவதை இது தடுக்கவில்லை என்றாலும் சித்தாந்த ரீதியாக மனித சமத்துவத்தை ஒப்புக்கொள்ள வைக்க இது உதவியது. அரேபியாவில் தொடங்கி உலகின் பல பகுதிகளிலும் பரவிய இஸ்லாம் அந்தந்த நாடுகளில் ஏற்கெனவே இருந்த மதங்களின் தாக்கத்திற்கு இயல்பாகவே ஆளானது. அதையும் தாண்டி அது தனது இந்த அடிப்படைக் கூறுகளை எந்த அளவு காப்பாற்றிக் கொண்டது என்பது தனித்த ஆய்வுக்குரியது.

இந்திய அனுபவம் இருக்கிறது இந்துமதத்தின் சாதிய ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்ட அடித்தட்டு மக்கள் இஸ்லாத்தின் மதரீதியான சமத்துவத்தால் பார்க்கப்பட்டார்கள். இலட்சக்கணக்கில். டில்லியை மையமாகக் கொண்டு சுல்தான்கள், முகலாயர்கள் ஆட்சி பல நூறு ஆண்டுகள் தொடர்ந்து நடந்தது அதற்கான மறைமுக ஊக்கமாக இருந்தது என்றாலும் மனமாற்றமே மத மாற்றத்திற்கு மூலகாரணமாக இருந்தது. இதை டில்லி அல்லாது மேற்குக் கோடியில் பஞ்சாபிலும் கிழக்குக் கோடியில் வங்காளத்திலும் பெருமளவிலான மதமாற்றம் நடந்தது உணர்த்தி நிற்கிறது.

அப்படி வந்த மக்கள் தங்களோடு பலகடவுள் வழிபாடு, சிலைவணக்கம், சாமியார்களைப் பூசிப்பது, சாதியம், இத்யாதிகளையும் நெஞ்சில் ஏந்தி வந்தார்கள். அவற்றிலிருந்து அவர்களை விடுவிக்கும் போராட்டம் ஒருபுறம் நடந்தது என்றாலும் மறுபுறம் அவற்றின் மிச்சசொச்சங்கள் இஸ்லாத்தில் தங்கிப்போனதும் நிகழ்ந்தது. வியப்பான விஷயம் என்னவென்றால், இவ்வளவிற்குப் பிறகும் இஸ்லாத்தின் அந்த அடிப்படைக் கூறுகளாகிய ஏகக் கடவுள் வணக்கம், உருவ வழிபாடு மறுப்பு, பூசாரித்தனம் இன்மை என்பவை அனேகமாக இன்னும் அங்கே கட்டிக் காக்கப்படுவது அதன் சித்தாந்த வலிமையை, அதற்கான ஈர்ப்பைக் காட்டுகிறது.

இஸ்லாத்தின் இந்த இறையியல் கோட்பாட்டைப் புரிந்து கொண்டால் முஸ்லிம்கள் ஏன் மனிதர்களைப் பார்த்து வணங்குவது இல்லை. அவர்கள் ஏன் ‘பாரத் மாதாகி ஜே’ என்றோ ‘தாய் மண்ணே வணக்கம்’ என்றோ சொல்லுவதில்லை. தொழுகையின்போது ஆரவார சத்தத்தை விரும்புவதில்லை போன் றவை இந்துக்களுக்கும் புரிந்து போகும் விஷயம். சகமனித மரியாதை பற்றியதோ தேசபக்தி பற்றியதோ அல்ல மாறாக அவர்களது இறையியல் கோட்பாடு பற்றியது.

பிற மதங்கள் பற்றிய புரிதல் இருந்தால் மதமாச்சரியங்கள் எழ வாய்ப்பில்லை. சிக்கல் என்னவென்றால் அந்தப் புரிதல் இல்லாததுதான் அல்லது அந்தப் புரிதல் வந்து விடக் கூடாது என்று சில சுயநல சக்திகள் வேலை பார்ப்பதுதான். அதையும் மீறி நல்ல புரிதலை நோக்கி நாடு நடைபயிலும் என நம்புவோம்.
 
# பேரா. அருணன் 
   ஒருங்கிணைப்பாளர் , 
   தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை .

வாழ்வில் நாம் சிலரை சந்திப்போம். நட்பு கொள்வோம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

வாழ்வில் நாம் சிலரை சந்திப்போம். நட்பு கொள்வோம். அவரது நற்பண்புகளால் ஈர்க்கப்பட்டு ஏன் இவரை இவ்வளவு தாமதமாகி சந்தித்தோம் என்று கவலைப்படுவோம். இன்னும் சிலரை சந்திப்போம் சிறிது காலம் கழித்து ஏன் தான் என் வாழ்வில் இவரை சந்தித்தேனோ என்று கவலைப்படுவோம். முதலாமவராக இருப்பதுதான் ஓர் இறைவிசுவாசிக்கு அழகு. 

உலகில் காசு பணத்தை எப்படியும் எங்கும் தேடிக் கொள்ளலாம். ஆனால் நல்ல ஒரு நட்பு, உறவு கிடைப்பதென்பது விலைமதிப்பற்ற அல்லாஹ்வின் மிகப்பெரும் ஓர் அருள். ஈமான் பலவீனமடையும் போது அல்லாஹ்வை ஞாபகமூட்டக்கூடிய, கவலைகளின் போது ஆறுதலாக, துக்கத்திற்கு மன அமைதியாக, பிரச்சினைகளுக்கு தீர்வாக, ஆன்மீக வறுமைக்கு ஈமானிய சொத்தாக, அறியாமைக்கு சிறந்த ஞானமாக, தீமை செய்யும் போது தடுத்து நிறுத்தி நன்மைக்கு வழிகாட்டும் ஒளியாக, மொத்தத்தில் வாழ்வு இருண்டு போகும் போது தட்டிக் கொடுத்து பாதையை திறந்து கொடுக்கின்ற வழிகாட்டியாக, இறையச்சத்தை உள்ளத்தில் விதைக்கின்ற ஒரு நட்பு கிடைத்தால் ஒரு போதும் அந்த நட்பை இழந்துவிடாதீர்கள். பல கோடிகள் செலவு செய்தாலும் தூய்மையான ஒரு நட்பை ஒரு போதும் உங்களால் வாங்க முடியாது. 

தூய்மையான நட்பை, நல்ல உறவை பொய்களால் , வாக்கு மீறுதலால், ஏமாற்றத்தால் மோசடியால் உடைத்து சின்னாபின்னமாக்கிவிடாதீர்கள். உள்ளத்தை உடைத்து விட்டால் மீண்டும் அதை சரி செய்வது மிகவும் கடினமானது. அல்லாஹ்வால் வழங்கப்பட்ட அருளுக்கு நீங்கள் நன்றி செலுத்தாவிட்டால் கொடுத்து அழகுபார்த்த அதே ரப்புல் ஆலமீன் அதனை பறித்து உங்களை தண்டிப்பான் என்பதை மறந்துவிடாதீர்கள். அப்போது அந்த வலி மிக கொடூரமானதாக இருக்கும். ஆறுதல் சொல்ல அருகில் இருந்த நண்பனை தேடுவீர்கள் அவன் முகவரி தெரியாத இடத்தில் தன் ரப்போடு உரையாடிக்கொண்டிருப்பான். நீங்கள் செய்வதறியாது கதறிக்கொண்டிருப்பீர்கள். 

இருக்கும் போது உணராவிட்டால் இல்லாத போது அதன் பெறுமதியை அறிந்து கொள்வீர்கள். அதை நினைத்து நினைத்து வாழ்நாள் முழுக்க நிம்மதியற்று புலம்பிக் கொண்டிருப்பீர்கள்.

முபாரிஸ் இப்னு தாஜுதீன் ரஷாதி

Monday 15 April 2024

நேசத்திற்குரியவர் யார் ?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

நபிகளாரின் நற் போதனைகள்

நேசத்திற்குரியவர் யார் ?

தன் தந்தை, பிள்ளை மற்றும் ஏனைய அனைத்து மக்களை விடவும் நான் நேசத்திற்குரியவனாக ஆகாத வரை உங்களில் எவரும் இறை நம்பிக்கையுடையவராக ஆக முடியாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்கள்: புகாரி 15, முஸ்லிம் 69′

விளக்கம்:

இஸ்லாத்தின் முக்கியமான ஒரு அடிப்படை விஷயத்தைத் தெளிவுபடுத்தும் நபிமொழி இது இந்த நபிமொழியை சரியாகப் புரிந்து கொண்டால் இன்று இஸ்லாத்தின் அடிப்படையை முஸ்லிம்களிடம் விளக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.

மார்க்கச்சட்டங்கள் என்று வழக்கத்தில் இருப்பவை திருக்குர் ஆனுக்கும் நபிமொழிக்கும் முரணாக இருந்தால் திருக்குர்ஆனுக்கும் நபிமொழிக்கும் முக்கியத்துவம் கொடுத்து நடைமுறையில் உள்ள சட்டங்களை தூக்கி எறிந்திருக்க வேண்டும்.

ஆனால் அதற்கு மாற்றமாக நபிமொழியை நிராகரித்து விட்டு, ‘எங்கள் முன்னோர்கள் சொன்னார்கள், என் தந்தை சொன்னார், என் தாய் இப்படி செய்யச் சொல்கிறார்’ என்று வாதிடுகிறார்கள்.

இவர்கள் இந்த நபிமொழியை கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால், உலகத்தில் உள்ள எவரையும் விட இறைத்தூதரின் சொல்லுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டு நபிமொழியின் அடிப்படையில் தங்கள் அமல்களை அமைத்துக் கொள்வார்கள்.

குடும்பச் செலவும் தர்மமே!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

நபிகளாரின் நற்போதனைகள்

குடும்பச் செலவும் தர்மமே!

ஒரு மனிதர் (அல்லாஹ்விடம்) நன்மையை எதிர்பார்த்தவராகத் தம் குடும்பத்தாருக்குச் செலவு செய்தால் அதுவும் அவர் செய்த தர்மமாகிவிடும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமஸ்வூத் (ரலி)
நூல்கள்: புகாரி 55, முஸ்லிம் 192

விளக்கம்: தம் குடும்பத்தைக் கவனிப்பதும், அவர்களுக்காக உழைப்பதும் ஒரு குடும்பத் தலைவரின் கடமையாகும். இவ்வாறு அவர் தம் குடும்பத்திற்காக உழைத்து, குடும்பத்தினருக்கே செலவு செய்தாலும் அதையும் அல்லாஹ் அவர் செய்த தர்மமாகக் கணக்கிடுகின்றான் குடும்பத்தினருக்கு உழைப்பதும், அவருக்குச் செலவிடுவதும் நன்மையைப் பெற்றுத் தரும் என்ற எண்ணத்திலும், இது படைத்தவனின் கட்டளை என்ற எண்ணத்திலும் அவர் தம் குடும்பத்திற்குச் செய்யும் செலவைக் கூட தர்மமாக அல்லாஹ் பதிவு செய்து மறுமை நாளில் நன்மையைத் தருவான்.

புகாரியின் 2742 அறிவிப்பில், “நீர் (நல்லதில்) எதை செலவு செய்தாலும் அது தர்மமாகும். நீர் உம் மனைவியின் வாயில் ஊட்டுகின்ற ஒரு கவள உணவும் கூட தர்மமாகும்” என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது. பெரிதாக இருந்தாலும் சரி, சிறிதாக இருந்தாலும் சரி இறை திருப்தியை எதிர்பார்த்து நாம் செய்யும் குடும்பச் செலவும் நன்மையைத் தரும் என்பதை எண்ணி, குடும்பத்தினருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அவர்களின் நியாயமான செலவுகளைச் செய்திட வேண்டும்.

நபி அவர்கள் பாவமன்னிப்பு கேட்கும் போது இறங்கிய இறைவசனம்"

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

நபி அவர்கள் பாவமன்னிப்பு கேட்கும் போது இறங்கிய இறைவசனம்"

நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ருத் தொழுகையில் கடைசி ரக்அத்தின்போது தம் தலையை ருகூஉவிலிருந்து உயர்த்தி, ‘அல்லாஹும்ம ரப்பனா வலக்கல் ஹம்து’ (இறைவா! எங்கள் அதிபதியே! உனக்கே புகழனைத்தும்) என்று சொல்லிவிட்டுப் பிறகு, ‘இறைவா! இன்னாரையும் இன்னாரையும் உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவாயாக!’ என்று பிரார்த்தித்தார்கள்.

உடனே கண்ணியமும் மகத்துவமும் பொருந்திய அல்லாஹ், ‘அவர்களை அல்லாஹ் மன்னிக்கும் வரை, அல்லது அவர்கள் அக்கிரமக்காரர்களாக இருப்பதால் அவனே அவர்களை வேதனை செய்யும்வரை (அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு கூற, நபியே!) உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை’ (அல்குர்ஆன்: 03:128) எனும் கீழ்க்கண்ட வசனத்தை அருளினான்.

(முஹம்மதே!) அதிகாரத்தில் உமக்கு ஏதுமில்லை. அவன் அவர்களை மன்னிக்கலாம். அல்லது அவர்களைத் தண்டிக்கலாம். ஏனெனில் அவர்கள் அநீதி இழைத்தவர்கள். (அல்குர்ஆன்: 3:128)

அறிவிப்பவர் : இப்னு உமர்(ரலி)
நூல் : புகாரி-7346 

தானாக செத்தவை அருந்த தடைவிதித்த இறைவசனம்

நபி (ஸல்) வர்களின் இறுதி காலத்தில் இறங்கிய இறை வசனம்.

அல்லாஹ் அல்லாதவறுக்காகவும், அல்லாஹ் பெயர் சொல்லி அறுக்காதவை பற்றி வசனம் அப்போதுதான் இறங்கியது.

யூதர்கள் நபி (ஸல்) அவைகளிடம் வந்து கேட்டார்கள்: நாங்கள் கொலை செய்யப்பட்டதையும், சாப்பிடுகின்றோம். அல்லாஹ் (வால் தானாக) கொலை செய்யப்பட்டதையும் சாப்பிடுகின்றோம் என்றவுடன் (அல்குர்ஆன்: 6:121) என்ற கீழ்கண்ட வசனம் இறங்கியது.

அல்லாஹ்வின் பெயர் கூறப்படாததை உண்ணாதீர்கள்! அது குற்றமாகும். உங்களுடன் தர்க்கம் செய்யுமாறு ஷைத்தான்கள் தமது தோழர்களுக்குக் கூறுகின்றனர். நீங்கள் அவர்களுக்குக் கட்டுப்பட்டால் நீங்கள் இணை கற்பிப்பவர்களே. (அல்குர்ஆன்: 6:121)

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: அபூதாவூத்-2819 

உஹதுப் போரில் நபியை கண்டித்து அல்லாஹ் இறக்கிய வசனம்

நபியவர்கள் உஹதுப்போரில் காயம்பட்டதை இரத்தம் சிந்தியபடி நபியை காயப்படுத்திவிட்டீர்கள். நீங்கள் உறுப்புடுவீர்களா என்றார்கள். அதற்கு அல்ஹவிடமிருந்து கண்டித்து வசனம் இறங்குகிறது.

உஹுதுப் போர் நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய முன்வாய்ப் பற்களில் (கீழ் வரிசையில் வலப்புறப் பல்) ஒன்று உடைக்கப்பட்டது. அவர்களது முகம் காயப்படுத்தப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காயத்திலிருந்து வழிந்த இரத்தத்தைத் துடைத்தபடியே, “தங்களுடைய நபியைக் காயப்படுத்தி, அவரது பல்லை உடைத்த ஒரு சமுதாயம் எப்படி உருப்படும்? அவரோ அவர்களை அல்லாஹ்வின் பக்கம் அழைத்துக்கொண்டிக்கிறார்” என்று கூறலானார்கள். அப்போதுதான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “(நபியே!) அதிகாரத்தில் உமக்கு எந்தப் பங்கும் இல்லை” (அல்குர்ஆன்: 3:128) எனும் கீழ்க்கண்ட வசனத்தை அருளினான்.

(முஹம்மதே!) அதிகாரத்தில் உமக்கு ஏதுமில்லை. அவன் அவர்களை மன்னிக்கலாம். அல்லது அவர்களைத் தண்டிக்கலாம். ஏனெனில் அவர்கள் அநீதி இழைத்தவர்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல்: முஸ்லிம்-3667 


Tuesday 2 April 2024

கருணையாளனே ! பரக்கத் நிறைந்த ரமளான்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அல்ஹம்துலில்லாஹ் ! வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ் !

கருணையாளனே ! பரக்கத் நிறைந்த ரமளான் மாதத்தில் உன்னை வணங்கவும் நோன்பு நோற்கவும் வாய்ப்பளித்த வல்லோனே ! உன்னைப்  போற்றுகின்றேன். புகழ்கின்றேன். துதிக்கின்றேன். உனது திருத்தூதர் நபிகளார் முஹம்மத் (ஸல்) அவர்கள்மீது ஸலவாத்தும் சொல்கின்றேன்.

இறைவா !
வருங்காலத்திலும் நாங்கள் ஐங்காலத் தொழுகைகளை தொழுது வணங்கிட எங்களுக்கு அருள்புரிவாயாக !
மகிழ்ச்சிகரமான இந்நந்நாளில் உன் அருள் வளங்களை எங்களுக்கு வழங்குவாயாக ! மகிழ்ச்சியைத் தருவாயாக !

யா அல்லாஹ் ! 
எங்கள் இல்லத்தை நலன்களும், வளங்களும்
நிறைந்த இல்லமாக 
ஆக்குவாயாக !
யா அல்லாஹ் !
எங்கள் இல்லத்தை
நேர்வழியும், இறைஅச்சமும்
நிறைந்த இல்லமாக 
ஆக்குவாயாக !

யா அல்லாஹ் !
எங்கள் இல்லத்தை
ஆரோக்கியமும் பாதுகாப்பும்
நிறைந்த இல்லமாக 
ஆக்குவாயாக !
யா அல்லாஹ் !
எங்கள் இல்லத்தை
மகிழ்ச்சியும், குதூகலமும்
நிறைந்த இல்லமாக
ஆக்குவாயாக !

யா அல்லாஹ் !
எங்கள் இல்லத்தை
உன் கருணையும், மன்னிப்பும்
நிறைந்த இல்லமாக
ஆக்குவாயாக !
யா அல்லாஹ் !
எங்கள் இல்லத்தை
தஸ்பீஹும், இஸ்திஃபாரும்
நிறைந்த இல்லமாக 
ஆக்குவாயாக !

யா அல்லாஹ் !
எங்கள் இல்லத்தை
அமைதியும், நிம்மதியும்
நிறைந்த இல்லமாக
ஆக்குவாயாக !
யா அல்லாஹ் !  எங்களின் துஆவை ஏற்று கபுல் செய்வாயாக ! எங்கள் மனங்களுக்கு அமைதியை நல்குவாயாக ! ஆமீன் ! ஆமீன் ! யாரப்பல் ஆலமீன் !

முபாரக்கான லைத்துல்கத்ர் இரவாக இருக்க வாய்ப்பு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


அல்ஹம்துலில்லாஹ் ! வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ் !

யா அல்லாஹ் !
முபாரக்கான லைத்துல்கத்ர் இரவாக இருக்க வாய்ப்புள்ள ஒற்றப்படையுள்ள நாள் ஸஹர்  நேரத்தில் கேட்கிறோம்.

" அல்லாஹும்ம இன்னக்க அஃபுவுன் துஹிப்புல் அஃப்வ ஃப’ஃபு அன்னீ "

அல்லாஹ்வே !
நீ மன்னிப்பவன். 
மன்னிப்பதையே
விரும்புபவன். 
எனவே என்னுடைய பாவங்களை
மன்னித்தருள்வாயாக !

அல்லாஹ்வே !
நீ மன்னிப்பவன். மன்னிப்பதையே விரும்புபவன். 
எனவே என்னுடைய
மனைவி, என் சந்ததியினரின் பாவங்களை
மன்னித்தருள்வாயாக !

அல்லாஹ்வே !
நீ மன்னிப்பவன். மன்னிப்பதையே விரும்புபவன். 
எனவே என்னுடைய
பெற்றோர்களின் பாவங்களையும் அவர்களின் பெற்றோர்களின் பாவங்களையும்
மன்னித்தருள்வாயாக !

அல்லாஹ்வே !
நீ மன்னிப்பவன். மன்னிப்பதையே விரும்புபவன்.
எனவே என்னுடைய 
சகோதர, சகோதரிகளின்
பாவங்களையும்
அவர்கள் சந்ததியினரின் பாவங்களையும்
மன்னித்தருள்வாயாக !

அல்லாஹ்வே !
நீ மன்னிப்பவன். மன்னிப்பதையே விரும்புபவன்.
எனவே என்னுடைய
பெற்றோர்களுடன் பிறந்த சகோதர சகோதரிகளின் பாவங்களையும்
அவர்களின் சந்ததியினரின் பாவங்களையும்
மன்னித்தருள்வாயாக !

அல்லாஹ்வே !
நீ மன்னிப்பவன்
மன்னிப்பதையே
விரும்புபவன். 
எங்களுடைய பாவங்களை மன்னிப்பாயாக ! ஆமீன் ! யாரப்பல் ஆலமீன் !

என் தற்போதைய நிலை என்ன? என் பழைய காலத்தின் நிலை என்ன,?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

உடலில் இரத்த ஓட்டம் வேகமாக இருக்கும் காலமெல்லாம் மனிதனின் வேகமும் அதிகரிக்கும்.

அதன் வேகம் குறைந்து, நாடி நரம்புகள் தளர்ந்து விட்டால், மனிதன் அப்போது தான் யோசிக்கின்றான்.. 

என் தற்போதைய நிலை என்ன? என் பழைய காலத்தின் நிலை என்ன,?

என்னவெல்லாம் ஆட்டம் போட்டேன்.? எப்படியெல்லாமோ வாழ்ந்தேனே..? 

எவ்வளவு பேர்களின் உபதேசங்களை புறந்தள்ளியுள்ளேன்.?

யாரின் பேச்சிக்கும் முகம் கொடுக்க வில்லையே,..! என கவலையில் உளருவான்.. கண்ணீர் மல்க மருகுவான்..

ஆம்... மனிதா. அந்நேரம் நீ கவலைப்படுகையில்
 உன் வாழ்வின் இறுதி நேரமும் இறைவனால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டிருக்கும்..!

உன்னோடு உள்ளவர்களும் உன்னை விட்டு போயிருப்பர்..!!

அப்போது உனக்கு அருகில் உன்னை தேற்றவோ, ஆறுதல் அளிக்கவோ, உபதேசிப்பவரோ எவரும் இருக்க மாட்டார்..,

இது தான் சரியான நேரம். நாம் திருந்துவதற்கு. என்று அப்போது முடிவெடுக்காதே..

இப்பொழுதே... இந்த புனிதமிகு மாதத்தின் இறுதிக் கட்டத்திலே... நான் மாறப் போகின்றேன்.. 

என்னை என் இறைவன் பால் முழுமையாக ஓப்படைக்க போகின்றேன். என்ற முடிவை எடு..

கருணையாளனின் மன்னிப்பை பெற ஓடு... 

அழுது கண்ணீர் துளிகளை சிந்திவிடு. பாவமன்னிப்பை கேளு..

யா! அல்லாஹ்!  நீ மன்னிக்கக் கூடியவன். மன்னிப்பை விரும்புபவன்.  என்னை நீ மன்னிப்பாயாக!

சிறிது நேர மாற்றம் வேண்டாம் இறைவா..

என்னுள் முழுமையான மாற்றத்தைத் தா.. என மனமுறுகி பிரார்த்திப்போம்.
அவன் அனைத்துப் பாவங்களையும் மன்னிப்பவன். மகத்தான கருணையாளன்..

பெற்றோர்களே...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

பெற்றோர்களே...

இறைவனது செல்வ வளங்களையும் பேரருள் பொக்கிஷங்களையும் எளிதாகப் பெற்றுத்தரும் கருணை மிகுந்த கடைசி 10 நாட்களின் துஆக்களில் உங்கள் பிள்ளைகளுக்காக இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 

என் இறைவனே... என் பிள்ளைகளின் அறிவையும்  உள்ளத்தையும் உணவையும் ஹலாலாக்கி வைப்பாயாக.  

என் இறைவனே... உன் தீனுக்காக,இந்த உம்மத்துக்காக, உழைத்த, தியாகம் செய்த, முன்னோர்கள் அனைவரின் மீதும் மிகுந்த மரியாதையை என் பிள்ளைகளின் மனதில் விதைப்பாயாக.

என் இறைவனே.... எந்த ஒரு மனிதனுடைய மானத்துக்கும் உயிருக்கும் பொருளுக்கும் சிறு தீங்கு கூட செய்துவிடாமல் என் பிள்ளைகளை வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பாயாக.    

என் இறைவனே... எங்களுடன் வாழும் அனைத்து சமூக மக்களின் மத நம்பிக்கைகளை வழிபாட்டுத் தளங்களை கண்ணியமாக கருதும் மனப்பாங்கை என் பிள்ளைகளின் மனதில் விதைப்பாயாக.

என் இறைவனே... உன் நினைவிலும் உன் நிழலிலும் என் பிள்ளைகளின் அறிவை பேராற்றல் படுத்துவாயாக.    

என் இறைவனே... கல்வியைத் தாண்டி அறிவைத் தாண்டி மகத்துவமிக்க ஞானத்தின் வாயிலை என் பிள்ளைகளுக்கு திறந்து விடுவாயாக.    

என் இறைவனே... என் பிள்ளைகளுக்கு, உன் படைப்புகளின் மீது ஈர்ப்பை ஏற்படுத்தி அதன் இரகசியங்களை ஆராய்ச்சி செய்யும் ஸாலிஹான பிள்ளைகளாக ஆக்குவாயாக. 

என் இறைவனே.... உன்னுடைய தீனிலும்,உன்னுடைய படைப்புகள் குறித்த அறிவிலும் இதுவரை எந்த மனிதனுக்கும் வழங்கிடாத ஞானத்தை என் பிள்ளைகளுக்கு வழங்குவாயாக.  

என் இறைவனே... பெருகிவரும் நீரழிவுநோய் புற்றுநோய் சிறுநீரக செயலிழப்பு போன்ற நோய்களுக்கான எளிமையான இயற்கை மருந்தை கண்டறியும் ஞானத்தை என் பிள்ளைகளுக்குத் தருவாயாக.

மறுமையில் இழப்பை ஏற்படுத்தும் காரியம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

மறுமையில் இழப்பை ஏற்படுத்தும் காரியம்

நபி (ஸல்) அவர்கள் மூன்று நபர்களிடம் மறுமையில் அல்லாஹ் பேசவுமாட்டான்; பார்க்கவுமாட்டான்; தூய்மைப்படுத்தவுமாட்டான் அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு” என்று மூன்று முறை கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! நஷ்டத்திற்கும் இழப்புக்கும் உரிய அவர்கள் யார் என்று கேட்டேன் தமது ஆடையை (கணுக்காலுக்குக் கீழே இறக்கிக் கட்டியவர் (செய்த உதவியை) சொல்லிக் காட்டுபவர், (அவர் எதை வழங்கினாலும் அதைச் சொல்லிக் காட்டாமல் இருக்க மாட்டார் பொய்ச் சத்தியம் செய்து விற்பன செய்பவர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)

நூல்: முஸ்லிம்-171

சீர் வரிசையும் வரதட்சணையே

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

இறைச்செய்தி மட்டுமே இறை மார்க்கம்

                                  (460)

வரதட்சணை

சீர் வரிசையும் வரதட்சணையே

பெண் வீட்டாரிடமிருந்து பணம் வாங்குவது மட்டுமே வரதட்சணை என்றும் டிவி ஃபிரிட்ஜ் பாத்திர பண்டங்கள் என பொருளாக வாங்கினால் இது வரதட்சணை இல்லை என்றும் பலர் கருதுகின்றனர். இது தவறாகும்.

பெண்வீட்டாரிடமிருந்து பணமாக வாங்கினாலும் பொருளாக வாங்கினாலும் வாங்கப்படும் அனைத்தும் வரதட்சணையாகும். பெண்வீட்டார் கடைகளில் பணத்தை கொடுத்துத் தான் இந்தப் பொருட்களை வாங்குகின்றனர்.

திருமணம் முடிந்து பெண்ணை கணவனின் வீட்டுக்கு அனுப்பும் போது வீட்டுக்குத் தேவையான பொருட்களை பெண்வீட்டார் கொடுத்து அனுப்புகின்றனர். இது நடைமுறையில் சீர்வரிசை என்று சொல்லப்படுகின்றது. மணப்பெண் வசதியாக வாழ வேண்டும் என்பதற்காகத் தான் சீர்வரிசை வழங்கப்படுகின்றது. இதில் என்ன தவறு உள்ளது? என்று சிலர் கேட்கின்றனர்.

தன் வீட்டுக்கும் தன் மனைவிக்கும் தேவையான பொருளை வாங்கித் தருவது கணவனின் கடமை. இது பெண்ணின் கடமையல்ல. கணவன் சம்பாத்தியத்தில் அவன் வாங்கித் தந்தப் பொருட்களை பாதுகாப்பது தான் மனைவியின் கடமை. மேலும் இந்த சீர்வரிசைப் பொருட்களை மனைவி மட்டுமின்றி இவனும் பயன்படுத்துகிறான். எனவே இது தெளிவான வரதட்சணையாகும்.

சிந்திக்க தூண்டும் ஹதீஸ்கள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

சிந்திக்க தூண்டும் ஹதீஸ்கள்

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு செய்திகளை காலத்திற்கேற்ப கூறியிருக்கிறார்கள். அவ்வாறு சொல்லப்பட்ட செய்திகளில் சிலவை நம்மை சிந்திக்க வைக்கின்றது. அவற்றை காண்போம்.

நெகிழ்வூட்டும் அறவுரைகள்

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட் செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர்.

1. ஆரோக்கியம்.

2. ஓய்வு

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி-6412 

மனிதன் இந்த இரண்டு விஷயங்களில் அலட்சியம் செய்து தன்னை மிகுந்த இழப்பீட்டுக்கு உள்ளாக்குகின்றான். அவ்வாறு செய்வதால் தனது உடல் நிலை மிகவும் பாதிக்கப்படுவதாக ஆய்வு அறிக்கை சொல்கிறது. இப்பேற்பட்ட செய்தியை 1400 வருடங்களுக்கு முன் அல்லாஹ்வின் தூதர் தங்களது உம்மத்தார்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

பல் துலக்குதல் பற்றிய அறிவுரைகள்

நான் உங்களுக்கு அதிகமாக அறிவுறுத்துகிற விஷயம் என்னவெனில் பல் துலக்குதல் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘என் சமுதாயத்திற்குச் சிரமமாகி விடும் என்று இல்லாவிட்டால் ஒவ்வொரு தொழுகைக்கும் பல் துலக்குமாறு நான் கட்டளையிட்டிருப்பேன்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி-887 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பல்துலக்குவது பற்றி நான் உங்களிடம் (திரும்பத் திரும்ப) பல முறை வலியுறுத்தியுள்ளேன்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : புகாரி-888 

நபி (ஸல்) அவர்கள் இரவில் (உறங்கி) எழுந்ததும் பல் துலக்குவார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : புகாரி-889

நடைபாதைகளிலும் நிழல்(உள்ள இடங்)களிலும் மலம் கழிப்பதற்கு வந்துள்ள தடை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், சாபத்திற்குரிய இரு செயல்களைத் தவிர்த்து விடுங்கள் என்று கூறினார்கள். மக்கள், சாபத்திற்குரிய அவ்விரு செயல்கள் என்ன, அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்டார்கள். அதற்கு, மக்களின் நடைபாதையில், அல்லது அவர்களின் (ஓய்விடங்களான) நிழல்களில் மலம் கழிப்பதுதான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம்-448 

அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி-5678 

தாடி வளர்ப்பதால் ஏற்படும் பயன்

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள். தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : புகாரி-5892 

முஃமினான ஆண்கள் தங்கள் தாடிகளை வளர்த்து இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மிகவும் வலியுறுத்தி கூறியிருக்கிறார்கள். தாடி வளர்ப்பதனால் பெறக்கூடிய நன்மைகள் ஏராளம் என இன்றைய விஞ்ஞானம் கூறுகிறது.

உறங்கியெழுந்ததும் மூக்கை கழுவுதல்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் உறங்கியெழுந்ததும் (தமது மூக்கிற்குள் நீர் செலுத்தி) மூன்று முறை மூக்குச் சிந்தட்டும். ஏனெனில், இரவில் ஷைத்தான் அவரது உள்மூக்கில் தங்குகிறான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம்-403

நாய்களை கொள்ளுமாறு வந்த உத்தரவு

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஆரம்பத்தில்) நாய்களைக் கொல்லுமாறு உத்தரவிட்டார்கள். பின்னர் மக்களுக்கும், நாய்களுக்கும் என்ன நேர்ந்தது (அவர்கள் நாய்களை ஏன் கொல்ல வேண்டும்)? என்று கேட்டார்கள். பின்னர் வேட்டை நாய்களுக்கும், கால்நடைகளின் பாதுகாப்பிற்காக வைத்திருக்கும் நாய்களுக்கும் அனுமதியளித்தார்கள். மேலும் பாத்திரத்தில் நாய் வாய் வைத்துவிட்டால் ஏழு தடவை (தண்ணீரால்) கழுவிக் கொள்ளுங்கள். எட்டாவது தடவை மண்ணிட்டுக் கழுவுங்கள் என்று கூறினார்கள்.

யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் கால்நடைகளின் பாதுகாப்பிற்காக,வேட்டையாடுவதற்காக, விவசாயப் பண்ணைகளைப் பாதுகாப்பதற்காக வைத்திருக்கும் நாய்களுக்கு அனுமதியளித்தார்கள் என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அல்முகஃப்பல் (ரலி)
நூல் : முஸ்லிம்-473 

ஒரு மனிதன் இவ்வுலகில் சுயமரியாதையோடும், சுகாதாரத்தோடும், மக்களுக்கு என்றென்றும் நன்மை தரக்கூடிய ஏராளமான செய்திகளை அல்லாஹ்வின் தூதர் அவர்கள் நல்லுபதேசங்களாக நமக்கு அறிவுரை கூறியுள்ளார். அதனை நம் வாழ்வில் தவறாது கடைபிடிக்க வேண்டும்.

இதுப்போன்ற இன்னும் ஏராளமான நபிகளாரின் பொன்மொழிகள் நம்மை சிந்திக்க தூண்டுகின்றன. அவை யாவும் இன்றளவும் நமக்கு நன்மை பயக்கவும் செய்கின்றன. அது போன்ற நன்மைகளை செய்யும் நன்மக்களாக நாம் மாற வேண்டும் என்று அல்லாஹ்விடத்தில் பிரார்த்தித்து என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன்.

வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்

நோன்பில் மூன்று படித்தரங்கள் உள்ளள :

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


இப்னு குதாமாஹ் அல்மக்திஸீ ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள் :

நோன்பில் மூன்று படித்தரங்கள் உள்ளள :

1. பொதுவான நோன்பு
2. குறிப்பான நோன்பு
3. குறிப்பிலும் குறிப்பான நோன்பு 

• பொதுவான நோன்பை பொறுத்தவரையில்!

அது வயிறு மற்றும் மர்மஸ்தானததை இச்சையை நிறைவேற்றுவதிலிருந்து தடுத்துக் கொள்வதாகும்.

• குறிப்பான நோன்பை பொறுத்தவரையில்!

அது பார்த்தல், நாவு, கை, கால், செவி, பார்வை மற்றும் ஏனைய (அனைத்து) உறுப்புகளையும் பாவங்களிலிருந்து தடுத்துக் கொள்வதாகும்.

• குறிப்பிலும் குறிப்பான நோன்பை பொறுத்தவரையில்!

அது அற்பமான நோக்கங்கள் மற்றும் அல்லாஹ்வை விட்டும் தூரப்படுத்துகின்ற சிந்தனைகளை விட்டும் உள்ளத்தை தடுத்துக் கொள்வதாகும். 

மேலும் அல்லாஹ்வையன்றி மற்ற அனைத்தைவிட்டும் முழுவதுமாக தடுத்துக் கொள்வதாகும்.

 📚 مُختَصَر مِنهاجِ القاصِدِين 1/44

சிறந்த தர்மம் எது?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

சிறந்த தர்மம் எது? 

'தர்மத்தில் சிறந்தது எது?' என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'அது ரமலானில் செய்யும் தர்மம் ஆகும்' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர்: அனஸ் (ரலி)

நூல்: திர்மிதி

Monday 1 April 2024

#இறந்து_கிடந்த_உடல்_மீட்பு...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

#இறந்து_கிடந்த_உடல்_மீட்பு...

இராமநாதபுரம் மாவட்டம் காரேந்தன் ஊரைச் சேர்ந்த #பாண்டி வயது 45 என்பவர்  இடையார் வலசை NH சாலையில்  மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.

தகவல் அறிந்து
இரவு 11.30 மணிக்கு காவல்துறை உதவியிடன் உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு
#தமுமுக_ஆம்புலன்ஸ் மூலம் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  இறந்த உடலைக் கொண்டு  சேர்க்கப்பட்டது.

தகவல்...
தமுமுக மருத்துவ சேவை அணி,

இராமநாதபுரம் மத்திய மாவட்டம்.

Sunday 31 March 2024

நபி (ஸல்) அவர்கள் பாராட்டிய நபித்தோழர்கள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

நபி (ஸல்) அவர்கள் பாராட்டிய  நபித்தோழர்கள்

                                  (1)

அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறுதி தூதராக அல்லாஹ் தேர்ந்தெடுத்தான். அவர்களை இறுதி தூதராக தேர்ந்தெடுத்ததற்கு முன்னரே அவர்களின் குணம், பழக்க வழக்கங்கள் அனைத்தும் மற்றவர்கள் பாராட்டி கூறும் அளவிற்கு தான் அவர்கள் நடந்து கொண்டார்கள்.

நபிகள் நாயகத்தின் மனைவி கதீஜாவே நபிகள் நாயகம் அவர்களுக்கு வியாபாரத்தில் இருந்த விசுவாசம், நியாயமான கட்டமைப்பு, வாக்குறுதியில் நேர்மை என அனைத்தும் பார்த்து தான் மணமுடித்து கொண்டார்கள். அதேப் போன்று நபிகள் நாயகம் வாழ்ந்த காலத்திலே வாழ்ந்த பல நபித்தோழர்களை நபி (ஸல்) அவர்கள் பாராட்டி இருக்கிறார்கள். அந்த இனிமையான தருணங்களை பார்போம்..

உமர் (ரலி) கண்டு சைத்தான் விரண்டோடுதல்

ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள், தனது மனைவி மற்றும் மனைவியின் சகத் தோழிகள் சகஜமாக பேசி சிரித்துக் கொண்டிருக்க உமர் (ரலி) அவர்கள் முகமன் கூறி உள்ளே வர அனைத்து பெண்களும் அலறியபடி ஓடிவிட்டனர். உடனே உமர் (ரலி) அவர்கள் என்னவென்று கேட்க உங்களைப் பார்த்துதான் அனைவரும் பயந்தபடி ஓடிவிட்டனர். என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக, நீர் ஒரு தெருவில் நடந்து வந்தால் சைத்தான் அடுத்த தெருவில் ஓடி விடுவான் என்று தனக்கு கொடுக்காத மரியாதையை உமர் (ரலி) அவர்களுக்கு கொடுத்தார்கள்.

(ஒருமுறை) அல்லாஹ்வின் தூதரிடம் (அவர்களின் மனைவிமார்களான) குறைஷிப் பெண்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்கள் நபி (ஸல்) அவர்களிடம் (ஜீவனாம்சத் தொகையை) அதிகமாகத் தரும்படி தம் குரல்களை உயர்த்தி கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது உமர் (ரலி) வந்து (உள்ளே வர) அனுமதி கேட்டார்கள். உமர் (ரலி) அனுமதி கேட்டபோது அப்பெண்கள் அவரச அவசரமாகத் தங்கள் பர்தாக்களை அணிந்தபடி எழுந்தனர். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தபடியே உமர் (ரலி) அவர்களுக்கு (உள்ளே வர) அனுமதி கொடுத்தார்கள்.

உமர் (ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! தங்களை ஆயுள் முழுதும் அல்லாஹ் சிரித்தபடி (மகிழ்ச்சியாக) இருக்கச் செய்வானாக’ என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘என்னிடமிருந்த இந்தப் பெண்களைக் கண்டு நான் வியப்படைகிறேன்.

(என்னிடம் சகஜமாக அமர்ந்திருந்தவர்கள்) உங்கள் குரலைக் கேட்டவுடன் அவரச அவசரமாகப் பர்தா அணிந்தார்களே’ என்றார்கள். உமர் (ரலி), ‘எனக்கு அஞ்சுவதை விட அதிகமாக அஞ்சத் தாங்கள் தாம் தகுதியுடையவர்கள் இறைத்தூதர் அவர்களே!’ என்று கூறிவிட்டு, (அப்பெண்களை நோக்கி) ‘தமக்குத் தாமே பகைவர்களாகிவிட்ட பெண்களே! அல்லாஹ்வின் தூதருக்கு அஞ்சாமல் எனக்கா நீங்கள் அஞ்சுகிறீர்கள்?’ என்று கேட்டார்கள்.

அதற்கு அந்தப் பெண்கள், ‘ஆம், அல்லாஹ்வின் தூதருடன் ஒப்பிடும்போது நீங்கள் கடின சித்தமுடையவராகவும், அதிகக் கடுமை காட்டக் கூடியவராகவும் இருக்கிறீர்கள்’ என்று பதிலளித்தார்கள். (அப்போது) இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! (உமரே!) நீங்கள் ஒரு பாதையில் சென்று கொண்டிருக்கையில் உங்களை ஷைத்தான் கண்டால் உங்களுடைய பாதையல்லாத வேறொரு பாதையில் தான் அவன் செல்வான்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி)
நூல் : புகாரி-3294 

அபூஉபைதா பின் ஜர்ராஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் சிறப்புகள்

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வொரு சமுதாயத்திற்கும் (அதன்) நம்பிக்கைக்குரியவர் ஒருவர் உண்டு. சமுதாயமே!, நம்முடைய நம்பிக்கைக்குரியவர் அபூஉபைதா இப்னு ஜர்ராஹ் அவர்கள் தாம்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : புகாரி-3744 

நபி (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்த நம்பிக்கையாளர் அபூஉபைதா (ரலி)

நபி (ஸல்) அவர்கள் நஜ்ரான் வாசிகளிடம், ‘நம்பகத்தன்மையில் முறையோடு நடந்து கொள்ளும் நம்பிக்கையாளர் (அமீன்) ஒருவரை உங்களுக்கு நிச்சயம் நான் அனுப்புவேன்’ என்று கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள் (பலர் அந்த ‘அமீன்’ என்னும் சிறப்பு தமக்கு கிட்டாதா என) பேராவல் கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அபூஉபைதா (ரலி) அவர்களை அனுப்பி வைத்தார்கள்.

அறிவிப்பவர் : ஹுதைஃபா (ரலி)
நூல் : புகாரி-3745 


Thursday 28 March 2024

குர்ஆனில் துஆக்கள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

குர்ஆனில் துஆக்கள்
தொடர் 17

رَّبِّ زِدْنِىْ عِلْمًا‏ 

“இறைவா! 
கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!”

அல்குர்ஆன் : 20:114

 رَبِّ انْصُرْنِىْ بِمَا كَذَّبُوْنِ‏ 

“என் இறைவா! 
என்னை இவர்கள் பொய்ப்படுத்துகின்ற காரணத்தினால் எனக்கு நீ உதவி புரிவாயாக!” 

அல்குர்ஆன் : 23:39

رَبِّ فَلَا تَجْعَلْنِىْ فِى الْقَوْمِ الظّٰلِمِيْنَ

“என் இறைவனே! 
என்னை அநியாயக்காரர்களின் சமூகத்துடன் என்னைச் சேர்த்து வைக்காதிருப்பாயாக”.

அல்குர்ஆன் : 23:94

நாளும் ஓர் நல்லதொரு துஆ (பிரார்த்தனை)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

நாளும் ஓர் நல்லதொரு துஆ (பிரார்த்தனை)
             
ஹிஜ்ரி 1445 , ரமலான்  பிறை 18
      
(29-03-2024 , வெள்ளிக்கிழ‌மை)

    அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.                                                     
                               அல்லாஹும்ம சல்லி அலா முஹம்மதின், வ அலா ஆலி முஹம்மதின்,
கமா சல்லைத்த அலா இப்ராஹீம, வ அலா ஆலி இப்ராஹீம
இன்னக்க ஹமீதுன் மஜீத்.

அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின், வ அலா ஆலி முஹம்மதின்
கமா பாரக்த்த அலா இப்ராஹீம வ அலா ஆலி இப்ராஹீம
இன்னக்க ஹமீதுன் மஜீத்.

லா இலாஹ இல்லா அன்த்த சுப்ஹானக்க இன்னீ குன்த்து மினழ் ழாலிமீன் ...
 
அல்ஹம்து லில்லாஹி ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி ...

பிஸ்மில்லாஹில்லதீ லா யளுர்ரு மஅஸ்மிஹி ஷைஉன்ஃபில் அர்ளி வலா ஃபஸ்ஸமாஇ வஹீவஸ்ஸமீஉல்அலீம்.

யா முகல்லியல் குலூப் தப்பித் கல்பி அலா தீனிக்.  

(யா அல்லாஹ் உள்ளங்களை புரட்டுபவனே
உன்னுடைய தீனின் மீது என் உள்ளத்தை உறுதிப்படுத்துவாயாக )

யா அவ்வலல் அவ்வலீன்
யா ஆகிரல் ஆகிரீன்
யா தல் குவ்வதின் மதீன்
யா ராஹிமல் மஸாகீன்
யா அர்ஹமர்  ராஹிமின்...

அல்லாஹும்ம மர்ஹம்னீ பி ரஹ்மத்திகா அர்ஹமர்ராஹிமீன்.

(யா அல்லாஹ் உன் பேரருளைக்கொண்டு என் மீது கிருபை செய்வாயாக)

ரப்பானா ஆத்தினா fபித்துன்யா ஹஸனத்தன் வfபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகீனா அதாபந் நார்

யா அல்லாஹ், இவ்வுலகிலும் மறுமையிலும் எங்களுக்கு நல்லதையே அருள்பாலிப்பாயாக, நரக நெருப்பின் தண்டனையை விட்டும் காத்தருள்வாயாக.

வகீனா அதாபல் கப்ர்

யா அல்லாஹ்!
மண்ணறையின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

வகீனா அதாபுல் ஹஸ்ர்

யா அல்லாஹ்!
இறுதிநாளின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

வகீனா அதாபுல் fபக்ர்

யா அல்லாஹ்!
வறுமையின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

வகீனா அதாபுல் மீஸான்

யா அல்லாஹ்!
மீஸான் தராஸின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

வகீனா அதாபுல் கர்ழ்

யா அல்லாஹ்!
"கடன் தொல்லையின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

வகீனா அதாபுல் மர்ழ்

யா அல்லாஹ்!
நோய்களின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

வகீனா அதாபுல் ஆfபாத்

யா அல்லாஹ்!
பேராபத்துகளின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

வகீனா அதாபுல் சக்ராத்

யா அல்லாஹ்!
மரண அவஸ்தையின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

வகீனா அதாபல் மௌத்

யா அல்லாஹ்!
மௌத்தின்போதான தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

வகீனா அதாபுல் fபித்னத்துல் மஸீஹித் தஜ்ஜால்

யா அல்லாஹ்!
தஜ்ஜாலின் வழிகெட்ட தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

வகீனா அதாபந் நார்

யா அல்லாஹ்!
நரக நெருப்பின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக...

யா அல்லாஹ்! 
மீண்டும் உயிர் தந்து அதிகாலை தொழுகையை நிறைவேற்ற வாய்ப்பளித்த அல்லாஹ்வே உன்னைப் போற்றிப் புகழ்கின்றோம்

இரட்சகனே எங்கள் தலைவரான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களுடையகுடும்பத்தாரின் மீதும் ஸலவாத்தும் சலாமும் அருள்வாயாக!

ஏக இறைவனே! இந்தக் காலை நேரத்தை எங்களுக்கு அருள்வளமிக்க காலைநேரமாகஆக்கிஅருள்வாயாக!

யா அல்லாஹ்! 
 நன்மையின் பால் நெருக்கமானதாகவும்,  தீங்குகளை விட்டு தூரமானதாகவும்,  நஷ்டமற்ற,கைசேதப்படாத,நலன்கள் தடுக்கப்படாத காலை நேரமாக எங்களுக்கு ஆக்குவாயாக! 

யா அல்லாஹ்! 
இறைவனே எங்களுக்கு இன்றைய தினத்தின் ஆரம்பத்தை இணக்கமானதாகவும் மத்தியத்தை வெற்றியாகவும் இறுதியை லாபகரமானதாகவும்,வெற்றிகரமானதாகவும் ஆக்குவாயாக!

யா அல்லாஹ்! 
 இறைவனே எங்களுடைய காலை நேரத்தை உன்னிடமிருந்து திருப்தியான காலை நேரமாக்கி வைப்பாயாக!

யா அல்லாஹ்! 
 விதிகளின் தீங்கை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக! 

யா அல்லாஹ்! 
குற்றங்களைக் கொண்டு எங்களைத் தண்டிக்காதிருப்பாயாக! 

யா அல்லாஹ்! 
 சிறப்பு மிக்கவனே! அருள் மிகுந்தவனே! இரட்சகனே! எங்களுக்கு இக்காலை நேரத்தை நல்லடியார்களின் காலை நேரமாக்கியருள்வாயாக!

யா அல்லாஹ்! 
 மாலை நேரத்தை எங்களுக்கு தியானிப்பவர்களின் மாலை நேரமாக்கியருள்வாயாக!

யா அல்லாஹ்! 
எங்கள் உள்ளங்களை அச்சமுள்ள உள்ளங்களாக ஆக்குவாயாக!

யா அல்லாஹ்! 
 எங்கள் உடல்களை  வழிப்படுபவர்களின் உடல்களாக ஆக்குவாயாக!

யா அல்லாஹ்! 
 எங்கள் அனுஷ்டானங்களை பயபக்தியுடையவர்களின் அனுஷ்டானங்களாக்குவாயாக!

யா அல்லாஹ்! 
 எங்களுடைய நாவுகளை தியானிப்பவர்களின் நாவுகளாக ஆக்குவாயாக!

யா அல்லாஹ்! 
கவனமின்றி இருப்போரின்  தூக்கத்திலிருந்து எங்களை எழுப்புவாயாக!

யா அல்லாஹ்! 
 நல்லடியார்களின் பிரார்த்தனையில் எங்களையும் சேர்த்து வைப்பாயாக!

யா அல்லாஹ்! 
சர்வலோகங்களின் இரட்சகனே!
 சுவர்க்கத்தை எங்களுக்கு அருள்வாயாக!

யா அல்லாஹ்! 
 சலாத்தும் சலாமும் எங்கள் தலைவரான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களின் வமிசத்தினர் மீதும், அவர்களின் தோழர்கள் அனைவர் மீதும் உண்டாகட்டுமாக!

யா அல்லாஹ்! 
 சகல புகழுரையும் சர்வலோக இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானதாகும்.

யா அல்லாஹ்! 
எங்கள் கண்மணி நாயகம் முஹம்மது ﷺ அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தாரின் மீதும் அனைத்து நபித்தோழர்களின் மீதும் உன் அருளை புரிவாயாக!

 யா அல்லாஹ்! 
எங்கள் துஆவை ஏற்றுக் கொண்டு எங்களை நரகிலிருந்து பாதுகாத்து உயர்ந்த சொர்க்கத்தை அருள்வாயாக..

யா அல்லாஹ்! 
உன் கருணையினால் எங்களின் துஆக்களை ஏற்றுக்கொள்வாயாக!

யா அல்லாஹ்!
இன்றைய நாளை எங்களுக்குப் பலன் உள்ள நாளாக ஆக்குவாயாக ...

யா அல்லாஹ்! 
உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியையும் கேட்கிறோம்.

யா அல்லாஹ்! 
எங்களது ஹலாலான துஆக்களை கபூல் செய்வாயாக...!!!!

ஸல்லல்லாஹு அலா முஹம்மதின் வஅலா  ஆலி முஹம்மதின் வபாரிக் வஸல்லிம் அலைஹி

வல் ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.....

Monday 25 March 2024

20 ரக்அத்தும் நபித்தோழர்களும்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும், 25.03.2024 

20 ரக்அத்தும் நபித்தோழர்களும்

20 ரக்அத்களுக்கு நபிவழியில் ஒரு ஆதாரமும் இல்லை எனும் போது அதை விட்டொழிப்பதற்குப் பதிலாக எப்படியாவது நியாயப்படுத்த சிலர் முயற்சிக்கிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 20 ரக்அத்கள் தொழவில்லை என்பது உண்மையே! ஆனால் நபித்தோழர்கள் குறிப்பாக உமர் (ரலி) அவர்கள் 20 ரக்அத்கள் தொழுதுள்ளனரே!’ என்று வாதிடுகின்றனர்.

உமர் (ரலி) உள்ளிட்ட நபித்தோழர்கள் 20 ரக்அத்களை உருவாக்கினார்களா? என்பதைப் பின்னர் நாம் தெளிவுபடுத்தியுள்ளோம்.

ஒரு வாதத்துக்காக சில நபித்தோழர்கள் 20 ரக்அத்கள் தொழுததாகவே வைத்துக் கொள்வோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைத் தான் செய்துள்ளார்கள் என்று தெரிந்து, அதற்கு மாற்றமாக நபித் தோழர்கள் சிலர் செய்ததாகத் தெரியும் போது இரண்டில் எது சிறந்தது?

உமர் (ரலி) அவர்கள் சிறந்தவர்கள் என்பதற்கு இவர்கள் காட்டும் ஆதாரத்தை விட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறந்தவர்கள் என்பதற்கு ஆதாரம் தேவையா?

நபியா? நபித்தோழரா? என்று கேள்வி வரும் போது நபியைப் புறக்கணித்து விட்டு நபித் தோழரைத் தூக்கிப் பிடிப்பது இஸ்லாத்தை விட்டும் நம்மை அப்புறப்படுத்தாதா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தான் வஹீ வரும். நபித்தோழருக்கு வஹீ வராது என்பதைக் கூட அறிய வேண்டாமா?

நன்மை செய்வதில் நபித் தோழர்கள் நபிகள் நாயகத்தையும் மிஞ்சியவர்களா?

நபியவர்கள் மூலம் மார்க்கத்தை அல்லாஹ் முழுமையாக்கியிருக்கும் போது அவர்கள் கற்றுத் தராததை நபித் தோழர்கள் கண்டுபிடித்தார்கள் என்றால் மார்க்கத்தை நபிகள் நாயகம் முழுமையாக்கவில்லை என்ற கருத்து வருமே! இது சரி என்கிறார்களா?

அல்லது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சில விஷயங்களை மறைத்து விட்டார்கள்; அதை நபித் தோழர்கள் அம்பலமாக்கி விட்டார்கள் என்பது இவர்களின் எண்ணமா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் தேர்வு செய்து தன் தூதராக நியமித்தான். முஸ்லிம்கள் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் எதனையும் கூட்டாமல் குறைக்காமல் அவர்கள் மூலம் இறைவன் கற்றுத் தந்தான் என்ற இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை நம்பக் கூடியவர்களுக்கு நபிவழியே போதுமாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய வழி போதாது; அது சரியில்லை; அதற்கு முரணாக நபித் தோழர்கள் காட்டியது தான் சரியானது என்று நம்புவதை விட்டும் அல்லாஹ் நம்மைக் காக்க வேண்டும்.

உமர் (ரலி) 20 ரக்அத் தொழுதார்களா?

நபித் தோழர்கள் 20 ரக்அத் தொழுதது நிரூபணமானால் கூட நபிவழி அதற்கு மாற்றமாக இருந்தால் நபிவழியைத் தான் ஏற்க வேண்டும்.

ஆனால் உண்மை என்னவென்றால், உமர் (ரலி) அவர்கள் 20 ரக்அத்களை உருவாக்கித் தந்தார்கள் என்ற இவர்களது வாதம் முற்றிலும் தவறானதாகும். உமர் (ரலி) அவர்கள் தொடர்பான செய்திகளை முழுமையான கவனத்துடன் ஆய்வு செய்யத் தவறியதால் இத்தகைய முடிவுக்குச் சிலர் வந்து விட்டனர். எனவே உமர் (ரலி) அவர்கள் தொடர்பான 20 ரக்அத்கள் பற்றிய அறிவிப்புக்களை ஆய்வு செய்வோம்.

அறிவிப்பு 1

மக்களுக்கு இருபது ரக்அத் தொழுகை நடத்துமாறு உமர் (ரலி) அவர்கள் ஒரு மனிதருக்குக் கட்டளையிட்டார்கள்.

நூல்: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-7682 .

உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு கட்டளையிட்டதாக அறிவிப்பவர் யஹ்யா பின் ஸயீத் அல்அன்ஸாரியாவார். இவர் உமர் (ரலி) அவர்கள் காலத்தில் வாழ்ந்தவர் அல்ல!

உமர் (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 23ஆம் ஆண்டு மரணித்தார்கள். யஹ்யா பின் ஸயீத் அன்ஸாரி அவர்கள் ஹிஜ்ரி 139 அல்லது 144வது ஆண்டு மரணித்தார்கள்.

உமர் (ரலி) அவர்கள் மரணித்து 120 வருடங்களுக்குப் பின்னால் மரணித்தவர் உமர் (ரலி) அவர்கள் காலத்தில் பிறந்திருக்க முடியாது.

உமர் (ரலி) 20 ரக்அத் தொழுமாறு கட்டளையிட்டதை அவரது காலத்தில் வாழ்ந்தவர் தான் அறிய முடியும். எனவே இந்தச் செய்தி ஆதாரமாகக் கொள்ளத்தக்கதல்ல என்று ஹதீஸ் கலை வல்லுனர்கள் முடிவு செய்துள்ளனர்.

ஆனால் உமர் (ரலி) அவர்கள் இதற்கு மாற்றமாகக் கட்டளையிட்டதாக ஆதாரப்பூர்வமான செய்தி உள்ளது.

நூல்: மஃரிஃபதுஸ் ஸுனன் வல் ஆஸார் – பைஹகீ, பைஹகீ, ஷரஹ் மஆனில் ஆஸார், முஅத்தா, அஸ்ஸுனனுல் குப்ரா – நஸாயீ

மக்களுக்குப் பதினொரு ரக்அத்துகள் தொழுவிக்குமாறு உபை பின் கஅப், தமீமுத்தாரி ஆகிய இருவருக்கும் உமர் (ரலி) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

நூல்கள்: அஸ்ஸுனனுல் குப்ரா – நஸாயீ, முஅத்தா, ஷரஹ் மஆனில் ஆஸார், பைஹகீ, மஃரிஃபதுஸ் ஸுனன் வல் ஆஸார்

உமர் (ரலி) அவர்கள் பதினொரு ரக்அத்கள் தொழுவிக்குமாறு கட்டளையிட்டது ஆதாரப்பூர்வமானதாக இருப்பதுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலுக்கு ஏற்பவும் அமைந்துள்ளது.

அறிவிப்பு 2

உமர் (ரலி) அவர்களின் காலத்தில் நாங்கள் இருபது ரக்அத்கள் தொழுது வந்தோம் என்று ஸாயிப் பின் யஸீத் கூறுகிறார்.

நூல்: பைஹகீ ஸகீர்-821 .

இந்த அறிவிப்பில் அபூ உஸ்மான் அல் பஸரீ என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரது இயற்பெயர் அம்ரு பின் அப்துல்லாஹ். இவரது நம்பகத் தன்மையைக் குறித்து ஹதீஸ் கலை வல்லுனர்கள் யாரும் உறுதிப்படுத்தவில்லை. யாரென்று அறியப்படாதவர் என்ற நிலையில் இவர் இருக்கிறார். இதன் காரணமாக இச்செய்தி பலவீனமடைகிறது.

மேலும் இந்தச் செய்தியில் உமர் (ரலி) அவர்களுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை. அவர்களின் காலத்தில் மக்கள் இவ்வாறு செய்ததாக இந்த அறிவிப்பு கூறுகிறது ஆனால் மேலே நாம் எடுத்துக் காட்டிய அறிவிப்பில் உமர் (ரலி) நேரடியாகச் சம்பந்தப்பட்டுள்ளனர்.

ஒருவர் எதைக் கட்டளையிடுகிறாரோ அதில் தான் அவருக்குச் சம்பந்தம் இருக்கும். அவரது காலத்தில் நடந்தவைகளில் அவருக்குச் சம்பந்தம் இருப்பது சந்தேகத்திற்கிடமானது.

மேலும் இதே ஸாயிப் பின் யஸீத் அவர்கள் உமர் (ரலி) அவர்கள் பதினொரு ரக்அத்துகள் தொழுவிக்குமாறு கட்டளையிட்டதாக அறிவிக்கிறார்.

மக்களுக்குப் பதினொரு ரக்அத்துகள் தொழுவிக்குமாறு உபை பின் கஅப், தமீமுத்தாரி ஆகிய இருவருக்கும் உமர் (ரலி) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
நூல்: முஅத்தா

ரக்அத்களின் எண்ணிக்கை குறித்து ஸாயிப் பின் யஸீத் முரண்பட்டு அறிவித்துள்ளதால் 20 ரக்அத் தொழுதோம் என்ற அறிவிப்பு மேலும் பலவீனப்படுகிறது.

அறிவிப்பு 3

உமர் (ரலி) அவர்கள் காலத்தில் ரமளான் மாதத்தில் மக்கள் இருபத்து மூன்று ரக்அத்கள் தொழுது வந்தனர் என்று யஸீத் பின் ரூமான் அறிவிக்கிறார்.

நூல்: முஅத்தா மாலிக்-303 ,பைஹகீ 

இதை அறிவிக்கும் யஸீத் பின் ரூமான் உமர் (ரலி) காலத்தவர் அல்ல! உமர் (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 23ல் மரணித்தார்கள். யஸீத் பின் ரூமான் ஹிஜ்ரி 130ல் மரணித்தார்கள். அதாவது உமர் (ரலி) அவர்கள் மரணித்து 107 ஆண்டுகளுக்குப் பின் இவர் மரணித்துள்ளார். இவர் நூறு வயதில் மரணித்திருந்தால் கூட உமர் (ரலி) அவர்கள் காலத்தில் பிறந்திருக்க மாட்டார்.

உமர் (ரலி) அவர்கள் காலத்தில் பிறக்காத யஸீத் பின் ரூமான் உமர் (ரலி) அவர்கள் காலத்தில் நடந்ததை அறிவிப்பதால் இதை ஹதீஸ் கலை வல்லுனர்கள் ஆதாரமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.

உமர் (ரலி) அவர்களின் வழிமுறையைத் தான் ஏற்போம் என்று கூறுவதில் இவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் பதினொரு ரக்அத் தான் தொழ வேண்டும்.

அலீ (ரலி) அவர்கள் பெயரால்…

உமர் (ரலி) அவர்கள் பெயரால் இருபது ரக்அத்களை நியாயப்படுத்துவதுடன் அலீ (ரலி) அவர்கள் பெயரைப் பயன்படுத்தியும் நியாயப்படுத்துகின்றனர்.

ஐந்து இடைவெளியுடன் இருபது ரக்அத்கள் தொழுவிக்குமாறு அலீ (ரலி) அவர்கள் ஒருவருக்குக் கட்டளையிட்டார்கள் என்ற செய்தி அபுல் ஹஸனா என்பார் வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நூல்கள்: குப்ரா பைஹகீ-4292 .

அபுல் ஹஸனா என்பவர் யாரென்று அறியப்படாதவர் என்று இப்னு ஹஜர், தஹபீ உள்ளிட்ட அறிஞர்கள் முடிவு செய்துள்ளார்கள். இவரது நம்பகத் தன்மையை எந்த அறிஞரும் உறுதிப்படுத்தவில்லை. எனவே இந்தச் செய்தியை ஆதாரமாகக் கொள்ளக் கூடாது

ரமளான் மாதத்தில் அலீ (ரலி) அவர்கள் அறிஞர்களை அழைத்து, அவர்களில் ஒருவரை 20 ரக்அத் தொழுவிக்குமாறு கட்டளையிட்டார்கள். வித்ரு தொழுகையை அலீ (ரலி) அவர்கள் தாமே தொழுவிப்பார்கள். 

அறிவிப்பவர்: அபூ அப்துர்ரஹ்மான் அஸ்ஸுலமி, நூல்: குப்ரா பைஹகீ-4291 ,

இதன் அறிவிப்பாளரான அபூ அப்துர்ரஹ்மானிடமிருந்து அறிவிப்பவர் அதா பின் ஸாயிப் ஆவார்.

அதா பின் ஸாயிப் இவ்வாறு கூறியதாக அறிவிப்பவர் ஹம்மாத் பின் ஷுஐபு ஆவார்.

தஹபீ, இப்னு மயீன், புகாரி, நஸாயீ, இப்னு அதீ உள்ளிட்ட அறிஞர்கள் இவரை (ஹம்மாத் பின் ஷுஐபை) பலவீனமானவர் எனக் கூறியுள்ளனர்.

எனவே அலீ (ரலி) அவர்கள் 20 ரக்அத் என்ற நடைமுறையை உருவாக்கினார்கள் என்ற வாதம் அடிபட்டுப் போகிறது.

Sunday 24 March 2024

வட்டி ஷைத்தானின் பிடியாகும்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

வட்டி ஷைத்தானின் பிடியாகும் 

 அல்லாஹ்வின் பெயரால் 

மக்கள் கஷ்டத்தில், பண உதவி என்ற பெயரில் நாள் வட்டியாகவோ, வார வட்டியாகவோ, மாத வட்டியாகவோ இன்னும் பல முறையில்
உதவி செய்வதைப் போல செய்து, கொடுத்த தொகையை மொத்தமாக  திருப்பி வாங்கும் வரை,
 கடன் வாங்கியவருக்கு அபராதமாக, கடன் கொடுத்தவருக்கு  ஆதாயமாக ஒரு சிறு தொகையை வாங்கி வாழ்கின்ற ஒவ்வொருவரும் ஷைத்தானின் பிடியில் அகப்பட்டுக் கொண்டனர் .

ஆதாரம்: அல்குர்ஆன் இது இறைவாக்கு 2 : 275 

"வட்டி வாங்கி சாப்பிடுபவர்கள், 
வாழும் காலத்தில் ஷைத்தானின் பிடியில் அகப்பட்டுக் கொண்டவரைப் போலவே அல்லாமல் வாழவில்லை. ஏனென்றால் நிச்சயமாக வட்டி வாங்கி சாப்பிடுவதும், வியாபாரம் செய்து சாப்பிடுவதைப் போன்றதுதான் என்று இவர்கள் சொன்னார்கள்.

 அல்லாஹ் வியாபாரத்தின் மூலமாக சாப்பிடுவதைத் தான் ஹலாலாக ( ஏற்றுக் கொள்ளப்பட்டதாக) ஆக்கி விட்டான் ஆனால் வட்டி வாங்கி சாப்பிடுவதை ஹராமாக ( விலக்கப்பட்டதாக) ஆக்கி விட்டான்.
இது இறைவனிடமிருந்துள்ள உபதேசமாகும். இதை யார் ஏற்று வட்டித் தொழிலை விட்டு விட்டாரோ, அவர் கொடுத்த மொத்த தொகையை மட்டும், கொடுத்தவரிடமிருந்து வாங்கிக் கொள்ளவும் இவ்வாறாக இவருடைய விஷயம் அல்லாஹ்விடம் ஒப்படைக்கப்படுகிறது.
ஆனால் யார் மீண்டும் வட்டித் தொழிலை விடாது செய்வாரோ அவர்கள் நரகவாசிகள். அவர்கள் அதிலேயே நிரந்தரமாக வாழப் போகிறவர்கள்".

 அல்லாஹ் நம் அனைவரையும் நரக நெருப்பிற்குள் வாழ்வதிலிருந்து பாதுகாப்பானாக! ஆமீன் யா ரப்பல் ஆலமீன் .

 அல்லாஹ் 
நம் அனைவரையும் இன்று காற்றுக்குள் நிம்மதியாக வாழ வைப்பது போலவே சுவன வாழ்வில், பூஞ்சோலையில், நீர் வீழ்ச்சிக்கு அருகில் மகிழ்ச்சியாக  நிரந்தரமாக வாழ வைப்பானாக! ஆமீன்
 யா ரப்பல் ஆலமீன். 


இது இறைவாக்கு, மனித குலத்தின் வாழ்க்கைக்கான நிறைவாக்கு.