கடுமையாக நடந்து தர்மம் கேட்டவரிடம்
தர்மம் கேட்கும் போது நபிகளாரை முள்மரத்தில் தள்ளிவிட்டு அவர்களின் சால்வை முள்ளில் சிக்கிக் கொண்டது. இப்படி முரட்டுத்தனமாக நடந்தவர்களிடம் கூட நபிகளார் கடுமையாக நடந்து கொள்ளவில்லை. மேலும் சிலர் நேர்மையாக பங்கிடவில்லை என்று கடுமையான வாசகத்தை கூறியபோது கோபப்பட்ட நபிகளார் நபி மூஸா (அலை) அவர்களின் சமூகத்தை நினைத்துப்பார்த்து பொறுமையாக இருந்து கொண்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள், “ஹுனைன்’ போரிலிருந்து திரும்பி வந்த போது நான் அவர்களுடன் சென்று கொண்டிருந்தேன். மக்களும் உடன் இருந்தனர். அப்போது (கிராம) மக்கள் நபியவர்களைச் சூழ்ந்து கொண்டு (தர்மம்) கேட்கலானார்கள்; “சமுரா’ என்னும் (கருவேல) முள் மரம் வரை நபி (ஸல்) அவர்களை நெருக்கித் தள்ளி விட்டார்கள். நபியவர்களின் சால்வை முள்மரத்தில் சிக்கிக் கொண்டது.
ஆகவே நபி (ஸல்) அவர்கள் சற்று நின்று, “என் சால்வையை என்னிடம் கொடுங்கள். என்னிடம் இந்த முள்மரங்களின் எண்ணிக்கையில் ஒட்டகங்கள் இருந்திருந்தாலும் கூட அவற்றை உங்களிடையே பங்கிட்டு விட்டிருப்பேன். பிறகு என்னை நீங்கள் கருமியாகவும் காணமாட்டீர்கள்; பொய்யனாகவும் காணமாட்டீர்கள்; கோழையாகவும் காணமாட்டீர்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜுபைர் பின் முத்இம் (ரலி)
நூல் : புகாரி-2821
நபிகளாரின் நீதத்தை சந்தேகித்த போது
நபி (ஸல்) அவர்கள் (ஹுனைன் போரில் கிடைத்த செல்வங்களை) வழக்கமாகப் பங்கிடுவதைப் போன்று பங்கிட்டுக்கொண்டிருந்தார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், “அல்லாஹ்வின் மீதாணையாக! இது அல்லாஹ்வின் திருப்தி நாடப்படாத பங்கீடாகும்” என்று (அதிருப்தியுடன்) கூறினார்.
நான், “நிச்சயம் (இதைப் பற்றி) நபி (ஸல்) அவர்களிடம் சொல்வேன்” என்று கூறிவிட்டு நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடையே இருந்தார்கள். நபி (ஸல்) அவர்களிடம் அதை இரகசியமாகச் சொன்னேன். அது நபி (ஸல்) அவர்களுக்கு மனவருத்தத்தை அளித்தது. அவர்களுடைய முகமே (நிறம்) மாறிவிட்டது. (அந்த அளவிற்கு) அவர்கள் கோபமடைந்தார்கள். இதையடுத்து நான் அவர்களிடம் (அது பற்றித்) தெரிவிக்காமல் இருந்திருக்கலாமே என்று நினைத்தேன்.
பிறகு நபி (ஸல்) அவர்கள் “(இறைத்தூதர்) மூசா இதைவிட அதிகமாக மன வேதனைக்கு ஆளாக்கப்பட்டார். இருப்பினும் (பொறுமையுடன்) அவர் சகித்துக்கொண்டார்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி)
நூல் : புகாரி-6100
No comments:
Post a Comment