Monday, 24 June 2024

செய்திகளின் வகைகள். 1.4 செய்தி வகைகள்

செய்திகளின் வகைகள். 

1.4 செய்தி வகைகள்

செய்திகளை அவற்றின் தன்மையைக் கருதிப் பலவகைகளாகப் பகுக்கலாம். அவற்றின் முக்கியமான வகைகளை இங்குக் காணலாம்.

1.4.1 குற்றச் செய்திகள் (Crime News)

குற்றச் செய்திகள் இடம் பெறாத செய்தித்தாள்களே இல்லை என்று கூறும் அளவுக்குக் குற்றச் செய்திகள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. குற்றச் செய்திகள் கதைகளைப் போல் அமைவதால் அவற்றைப் படிப்பதில் வாசகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். இதழ்கள் பொறுப்போடும் கவனத்தோடும் வெளியிட வேண்டிய செய்திகள் குற்றச் செய்திகளாகும்.

* குற்றச் செய்திகள் என்றால் என்ன?

பொதுவாக, சட்டத்திற்கு எதிராகவோ, மீறியோ, புறம்பாகவோ செய்யும் எந்தச் செயலையும் குற்றம் என்கிறோம். சட்டப்படி தண்டனைக்குரிய எந்தச் செயலும் குற்றமாகிறது. திருட்டு, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, விபத்து, ஏமாற்றுவது, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது, அடிதடி, இலஞ்சம் வாங்குவது போன்றவை எல்லாம் குற்றங்களாகின்றன. இவைகள் பற்றிய விவரங்களைச் செய்தித்தாள்களில் வெளியிடும் போது அவை குற்றச் செய்தியாகின்றன.

குற்றச் செய்திகளை வெளியிடும் போது தக்க ஆதாரத்துடன் வெளியிட வேண்டும். ஐயப்பாட்டிற்குரிய எதனையும் செய்தியாக வெளியிடக்கூடாது. தீர விசாரித்து அறிந்தவற்றை, உண்மையானவற்றை எழுத வேண்டும். ஊகங்களுக்குக் குற்றச் செய்தியில் இடம் இல்லை. கற்பனை கலக்காத நாடகப் பாங்கில் குற்றச் செய்தியைக் கூறலாம். நீதிமன்றங்கள், காவல் நிலையங்கள், மருத்துவ நிலையங்கள், தீயணைப்பு நிலையங்கள் ஆகியவற்றோடு தொடர்பு கொண்டு குற்றச் செய்திகளை விசாரித்து அறிவார்கள்.

சட்டம், பண்பாடு, அறம், மரபு, நாகரிகம் ஆகிய உணர்வுகளோடு குற்றச் செய்திகளை எழுதுவதும் வெளியிடுவதும் தேவையாகும்.

1.4.2 அரசுச் செய்திகள் (Government News)

அரசின் கொள்கைகளும், நடைமுறைகளும், செயல்திட்டங்களும் மக்களின் வாழ்க்கையில் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. அரசுக்கும் மக்களுக்கும் இடையே இணைப்புப் பாலமாக இருந்து அரசின் நடவடிக்கைகளை மக்களுக்கும், மக்களின் எதிர்பார்ப்புகளை அரசுக்கும் எடுத்துக் கூறும் பணியைச் செய்தித்தாள்கள் செய்துவருகின்றன.

பொதுவாக, தகவல் - மக்கள் தொடர்புத் துறை, அமைச்சகங்களின் செய்திக் கூட்டங்கள்; செயலர்கள், துறைத் தலைவர்கள் கொடுக்கும் பேட்டிகள்; அரசு நடத்தும் இதழ்கள், அரசிடம் செல்லும் தூதுக் குழுக்கள், செய்திக் கசிவுகள் (Leakage) ஆகியவற்றின் மூலம் அரசின் செய்திகள் பத்திரிகைகளுக்குக் கிடைக்கின்றன.

ஒவ்வொரு அமைச்சகமும் தேவையை ஒட்டிச் செய்தியாளர் கூட்டங்களை நடத்தி, தங்களது கொள்கைகளை அறிவிக்கின்றது. தலைமை அமைச்சரும், பிற அமைச்சர்களும் தேவைப்படும்போது செய்தியாளர்களை அழைத்துச் செய்திகளைத் தருகின்றனர்.

பொதுவாக அரசுச் செய்திகளை வழங்க மூன்று வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அவை பத்திரிகைக் கடிதம் (Press Communique), பத்திரிகைக் குறிப்பு (Press Note), பத்திரிகை வெளியீடு (Press Release) என்ற மூன்று ஆகும்.

அரசின் முக்கியமான கொள்கைத் தீர்மானங்களை மட்டுமே பத்திரிகைகளுக்குத் தெரிவிப்பது பத்திரிகைக் கடிதம் ஆகும். இது மிகவும் முக்கியமானதாகும்.

அரசுத் துறைகளின் தீர்மானங்கள், சில விவகாரங்களைப் பற்றிய அரசின் நிலை ஆகியவற்றைக் கூறுவது பத்திரிகைக் குறிப்பு ஆகும்.

அன்றாட நிர்வாகச் செய்திகளையும், அமைச்சகங்களின் நடவடிக்கைகளையும் நாள்தோறும் அரசு செய்தித்தாள்களுக்குத் தருகின்றது. அது பத்திரிகை வெளியீடு ஆகும்.

1.4.3 நீதிமன்றச் செய்திகள் (Court News)

மனித ஆர்வத்தைத் (Human Interest) தூண்டுகின்ற வகையில் நீதிமன்றங்களில் வழக்குகள் அன்றாடம் நடைபெறுகின்றன. அப்படிப்பட்ட வழக்குகளின் விவரங்களையும் தீர்ப்புகளையும் அறிய மக்கள் ஆர்வமாக இருக்கின்றனர். அதனால் செய்தித்தாள்கள் அவற்றைச் செய்திகளாக வெளியிடுகின்றன. மேலும் சுவையான வழக்குகள் நல்ல வர்ணனையுடன் கட்டுரையாக இடம்பெறும் பொழுது வாசகர்களுக்கு அவை நல்ல தீனியாக அமைகின்றன.

நீதிமன்ற வழக்குகளைப் பற்றிச் செய்தித்தாள்களில் எழுதும் பொழுது மிகக் கவனமாக எழுத வேண்டும். நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாகாமலும் (Contempt of Court), வழக்கின் போக்கினையோ, வழக்கோடு தொடர்புகொண்டவர்களையோ எந்த வகையிலும் பாதிக்காமலும் செய்திகளை எழுத வேண்டும்.

சட்டக் கலைச் சொற்களை அப்படியே பயன்படுத்தக்கூடாது. வேண்டிய விளக்கங்களுடன் சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் சொற்களைப் பயன்படுத்தி வழக்கு மன்றச் செய்திகளை எழுத வேண்டும்.

வழக்கின் நடைமுறை பற்றிச் செய்தியாளர் தனது சொந்தக் கருத்துகளைக் கூறக் கூடாது. வழக்கு நடந்த முறையை நடுநிலையில் இருந்து விளக்க வேண்டும்.

சில நீதிமன்ற வழக்குகள் சுவை மிக்கதாக இருக்கும். எடுத்துக்காட்டாக, கணவன் - மனைவி மணவிலக்கு வழக்கு, கற்பழிப்பு வழக்கு, வழுக்கி விழுந்த பெண்களின் வழக்கு ஆகியவற்றைக் கூறலாம். ஆனால் சமுதாய நலன் கருதி அவற்றை அப்படியே வெளியிடுவதை இதழ்களின் பத்திரிகை தர்மம் தடுக்கின்றது.

1.4.4 சட்டமன்ற, நாடாளு மன்றச் செய்திகள் (Legislative Assembly and Parliamentary News)

மக்களாட்சி செம்மையாக நடைபெற, சட்டப் பேரவையிலும், நாடாளுமன்றத்திலும் என்ன நடைபெறுகின்றன என்பதை மக்கள் தெரிந்து கொள்ளவேண்டும். அதனால் இவற்றின் செய்திகளை வெளியிடுவது இதழ்களின் முக்கியக் கடமையாகின்றது. சட்டப் பேரவை, நாடாளுமன்றச் செய்திகளைத் திரட்டுகின்ற செய்தியாளர்கள் அவைகளின் அமைப்பு முறைகளையும், நடைமுறைகளையும் நன்கு அறிந்து செயல்பட வேண்டும்.

தீர்மானங்களின் மீதும், மசோதாக்களின் மீதும் நடைபெறக் கூடிய விவாதங்களையும், அமைச்சர்களின் பதில் உரைகளையும்; தீர்மானங்கள், மசோதாக்கள் நிறைவேற்றுவதனையும் செய்தியாளர் நன்கு கவனித்துச் செய்திகளாக மக்களுக்கு வழங்க வேண்டும்.

சட்டமன்ற, நாடாளுமன்றச் செய்திகளை எழுதும் பொழுது அவைகளின் நடைமுறைகளையும், சட்டங்களையும் அறிந்து எழுத வேண்டும். அவைத் தலைவர் பதிவேட்டிலிருந்து நீக்கிய நிகழ்ச்சியைச் செய்தியாக வெளியிடக் கூடாது. மீறி வெளியிட்டால் தண்டனைக்கு ஆட்பட நேரிடும்.

பேரவையின் உரிமை மீறலுக்கு ஆட்படாமல் செய்திகளைத் தர வேண்டும். பேரவையினை அவமதிக்கும் வகையில் செய்திகளைத் தரக் கூடாது. செய்தியாளர்கள் தவறு செய்தால் சட்ட மன்றம் நீதிமன்றமாக மாறித் தண்டனை வழங்கவும் செய்யும்.

தமிழ்நாட்டில் தமிழ் வார இதழ் ஆனந்த விகடனில் உரிமை மீறல் தன்மையுள்ள கேலிச் சித்திரத்தைப் போட்டுத் தமிழக அமைச்சர்களைக் கேலி செய்ததாக, அதன் ஆசிரியர் திரு. பாலசுப்பிரமணியன் கைதாகி விடுதலையான செய்தி பத்திரிகை உலகில் பெரிதாகப் பேசப்பட்டது.

அண்மையில் தமிழ்நாட்டில் தி இந்து (THE HINDU), முரசொலி ஆகிய இரு பத்திரிகைகள் மீது உரிமை மீறல் குற்றம் சுமத்தி, அவற்றின் துணை ஆசிரியர்களை கைது செய்தமை பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

எனவே சட்ட மன்ற, நாடாளுமன்றச் செய்திகளை வெளியிடும் போது கவனமாகச் செயல்பட வேண்டும்.

1.4.5 பொருளாதாரச் செய்திகள் (Economics News)

மக்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய நிலையில் செய்தித்தாள்களில் இடம்பெறும் செய்திகளில் பொருளாதாரச் செய்தியும் ஒன்றாகும். நாட்டின் முன்னேற்றச் செய்திகளோடு சேர்ந்தவைகளாக, பொருளாதாரம் தொடர்பான புள்ளி விவரங்களும், அவற்றின் விளக்கங்களும் அமைகின்றன.

பொருளாதாரச் செய்திகள் குறுகிய வட்டத்திற்குள் அடங்காமல். விரிந்து பரந்து கிடக்கின்றன. வேளாண்மை, தொழில், போக்குவரத்து, வாணிபம், வேலை வாய்ப்புகள், மின்சாரம், உணவு நிலை, நிதி தொடர்பானவை, வரி விதிப்பு, விலைவாசிகள், பணப் புழக்கம், கிராம வளர்ச்சி ஆகியவை எல்லாம் பொருளாதாரச் செய்தியில் இடம்பெறும்.

அரசு தீட்டுகின்ற பொருளாதார வளர்ச்சித் திட்டங்கள், குறியீட்டளவுகள், செயல்பாடுகள், சாதனைகள் போன்றவற்றைப் பொதுமக்கள் அறிந்து கொள்வது நாட்டின் வளர்ச்சிக்குத் துணை புரியும்.

பொருளாதாரச் செய்திகளையும், புள்ளி விவரங்களையும் சாதாரண மக்களும் புரிந்து கொள்கின்ற வகையில் எளிமைப்படுத்தி விளக்கங்களுடன் வெளியிட வேண்டும். புள்ளி விவரங்களை மிகுதியாகக் கூறி வாசகர்களைக் குழப்பக் கூடாது.

பொருளாதாரச் செய்திகளை எழுதுகின்ற செய்தியாளர்களுக்குப் பொருளியல் பற்றிய அடிப்படை அறிவு தேவை. பொதுவாக நாட்டு வருவாய், வேளாண்மை, தொழில் ஏற்றுமதி, இறக்குமதி, வங்கி வைப்புகள் ஆகியவற்றின் வளர்ச்சி விகிதங்கள், விலைவாசிக் குறியீட்டு எண்கள், அந்நியச் செலாவணி செலுத்தும் நிலை, பல்வேறு வகையான வரிகள் ஆகியவை பற்றி அறிந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் கோட்பாடுகளின் அடிப்படையில் செய்திகளை எளிமைப்படுத்தி விளக்கி எழுத முடியும்.

பொருளாதாரச் செய்திகளைப் பல செய்தித்தாள்கள் தனிப் பக்கச் செய்திகளாக வெளியிடுவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். கட்டுரை வடிவத்திலும், வினா-விடை வடிவிலும் இச்செய்திகள் வருகின்றன.

1.4.6 விளையாட்டுச் செய்திகள் (Sports News)

காலையில் எழுந்தவுடன் பத்திரிகைப் படிப்பு என்று கூறும் அளவிற்குப் பத்திரிகை வாசிக்கும் பழக்கம் மக்களிடையே அதிகமாக வளர்ந்திருக்கிறது. சிற்றுண்டிச் சாலைக்குச் சென்று நாக்கு நாடும் ருசிக்கு ஏற்றாற்போலப் பண்டங்களை வாங்கி உண்பதைப் போல, செய்தித்தாள்கள் வாசகர்களின் ருசிக்கு ஏற்றாற் போலப் பல வகைச் செய்திகளைத் தீனியாகக் கொடுக்கின்றன.

அவற்றில் ஆசிரியர் முதல் மாணவர்கள் வரையிலும், பெரியோர் முதல் சிறியவர் வரையிலும், விரும்பிப் படிக்கும் செய்தியாக விளையாட்டுச் செய்திகள் விளங்குகின்றன. காலையில் வீட்டில் செய்தித்தாள் வந்து விழுந்தவுடன் அதன் கடைசி இரண்டு பக்கங்களை முதலில் பார்க்கும் அளவிற்கு விளையாட்டுச் செய்திகள் வாசகர்களைக் கவர்ந்திழுக்கின்றன.

இப்பொழுது தமிழ், ஆங்கிலம் மற்றும் எல்லா மொழிப் பத்திரிகைகளும் விளையாட்டுச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகின்றன. முதன்மையான பல ஆங்கிலப் பத்திரிகைகள் ஒவ்வொரு விளையாட்டிற்கும் அதில் பயிற்சியும், தெளிவும், அனுபவமும் கொண்ட (நிருபர்களை) செய்தியாளர்களைப் பணியில் அமர்த்தியுள்ளன.

வெளிநாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள் 95 விழுக்காடு வாசகர்கள் விளையாட்டுச் செய்திகளை மிகவும் ஆர்வமாகப் படிக்கின்றனர் என்று கூறுகின்றன. நமது நாட்டிலும் விளையாட்டுச் செய்திகளைப் படிக்கும் வாசகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்றது. வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றிலும் விளையாட்டிற்குத் தனிஇடம் தருகின்றனர். வானொலியில் நேர்முக வர்ணனைகளைக் கேட்பதிலும், தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பைப் பார்ப்பதிலும் மக்கள் ஈடுபடுவதைப் பார்த்து, எந்த அளவிற்கு மக்களுக்கு விளையாட்டுப் போட்டியில் ஆர்வம் இருக்கிறது என்பதை அறியலாம்.

விளையாட்டுச் செய்திகளை எழுதுகின்ற செய்தியாளர்கள் பல்வேறு விளையாட்டுகளைப் பற்றியும், அவற்றின் விதிமுறைகளைப் பற்றியும், பயன்படுத்தப்படும் கலைச்சொற்களைப் பற்றியும் நன்கு தெரிந்திருக்க வேண்டும். விளையாட்டுச் செய்திகளைச் சராசரி வாசகரும் புரிந்து கொள்ளும் வகையில் விளக்க வேண்டும்.

செய்தியாளர் விளையாட்டுகளின் பழைய புள்ளி விவரங்களைத் திரட்டி வைத்திருக்க வேண்டும். நிகழ்காலச் சாதனைகளோடு முன் நாளைய சாதனைகளை ஒப்பிட்டு எழுதுதல் வேண்டும். செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரவேண்டும். ஏதாவது ஒரு பக்க ஆட்டக்காரர்களை ஆதரித்து எழுதக் கூடாது. செய்தியாளரின் விருப்பு வெறுப்புகள் வெளிப்படாமல் விளையாட்டுச் செய்திகளைத் தருவது நல்ல பணியாகும்.

விளையாட்டுச் செய்திகளை எழுதுவதற்கு உரிய நடை தனி வகையானது. வாசகர்கள் விளையாட்டை நேரில் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படும் வகையில் தக்க அடைச்சொற்களையும், தனது விமர்சனத்தையும் இணைத்துச் செய்திகளைக் கூற வேண்டும். ஒரு வகையில் விளையாட்டுச் செய்தி நாடக விமர்சனம் போல் இருக்க வேண்டும்.

இந்திய விளையாட்டு வீரர்கள் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் 2002ஆம் ஆண்டு பங்கு பெற்று வெற்றியடைந்து நமது நாட்டிற்குப் புகழையும் பெருமையையும் சேர்த்துள்ளனர். இச்செய்திகளை நமது செய்தித்தாள்கள் படத்துடன் முதற்பக்கச் செய்திகளாக வெளியிட்டன.

இந்தியக் கிரிக்கெட் அணியினர் 22 ஆண்டுகளுக்குப்பின்பு, உலக சாம்பியன் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை அவர்கள் நாட்டிலேயே, அடிலெய்டு ஓவல் மைதானத்தில் 4 விக்கட் வித்தியாசத்தில் 2ஆவது டெஸ்ட் போட்டியில் வென்று வாகை சூடிய வரலாற்று நிகழ்ச்சியை அனைத்துப் பத்திரிகைகளும் சிறப்புச் செய்தியாக வெளியிட்டு இந்திய அணிக்குப் பாராட்டைத் தெரிவித்தன.

ஒவ்வொரு செய்தித்தாளும் வருடத்தின் கடைசி நாளான டிசம்பர் 31ஆம் நாள் அந்த ஆண்டின் முக்கிய நிகழ்ச்சிகளைத் தொகுத்து வெளியிடுவது மரபு. அதன்படி தி இந்து (THE HINDU) நாளிதழ் இந்திய விளையாட்டு வீரர்கள் 2003ஆம் ஆண்டு நிகழ்த்திய சாதனைகளைப் படத்துடன் வெளியிட்டிருக்கிறது. சில செய்திகள் கீழே குறிக்கப்பட்டுள்ளன:

1) கோலாலம்பூரில் (KUALALUMPUR) நடைபெற்ற ஆசியக் கோப்பைக்கான ஹாக்கிப் போட்டியில் இந்திய அணியினர் பங்கு பெற்றுக் கோப்பையைக் கைப்பற்றினர்.

2) உலக ஸ்நூக்கர் சாம்பியன் போட்டி சீனாவில் ஜெய்ன்மென் (JAINMEN) என்ற இடத்தில் நடைபெற்றது. அதில் இந்தியாவின் சார்பில் பங்கு பெற்று வாகை சூடி சாம்பியன் பட்டம் பெற்ற இந்திய வீரர் பங்கஜ்அத்வானி இந்தியாவுக்கு உலக அரங்கில் பெருமை சேர்த்தார்.

3) பாரிஸ் (PARIS) நகரில் நடைபெற்ற உலக மகளிர் தடகளப் போட்டியில் (Athletics) நீளம் தாண்டுதல் (LONG JUMP) பிரிவில் இந்தியாவின் சார்பில் பங்குபெற்று வெண்கலப் பதக்கம் (BRONZE) வென்று இந்தியாவுக்குப் புகழ் தேடித்தந்தவர் அஞ்சு பாப்பிஜார்ஜ் (ANJU B GEORGE).

இவ்வாறு செய்தித்தாள்கள் விளையாட்டுச் செய்திகளை முக்கியத்துவம் கொடுத்து, கவனித்து வெளியிடுகின்றன. மேலும் விளையாட்டிற்காகத் தனியாக இதழ்கள் இருப்பதும் சிறப்பு அம்சமாகும்.

1.4.7 பிற செய்தி வகைகள்

மேலும், எதிர்பார்க்கும் செய்திகள், எதிர்பாராத செய்திகள், நேரடிச் செய்திகள், விளக்கச் செய்திகள், கடினமான செய்திகள், மென்மையான செய்திகள், அறிவியல் செய்திகள் எனச் செய்திகள் பலவகைப்படும்.

* எதிர்பார்க்கும் செய்திகள் (Predictable News)

நிகழ்ச்சி ஒன்று இப்பொழுது நடைபெறும் என்பதை முன்கூட்டியே அறிந்திருப்போம். அது நடைபெறும் போது எதிர்பார்த்த செய்தியாகிறது. அதனால் இச்செய்தியை எதிர்பார்த்த செய்தி என்ற வகையில் சேர்க்கிறோம். இந்திய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுத் தேர்தல் நடைபெறுவது; தமிழ்நாட்டிற்குக் குடியரசுத் தலைவர் வருகை; பாரதப் பிரதமர் வருகை; கடலில் புயல் உருவாகி இருப்பதால் சென்னையில் பலத்த மழை பெய்வது; பலத்த மழைக்குப் பிறகு வெள்ளம் வருவது போன்றவை எதிர்பார்த்த செய்திகளாகும்.

* எதிர்பாராத செய்திகள் (Unpredictable News)

யாரும் சிறிதும் எதிர்பாராத நிலையில் நடைபெறும் நிகழ்ச்சிகள் எதிர்பாராத செய்திகளாகும். இரயில் விபத்து, புயல் வீசுவது; பூகம்பம் (நில நடுக்கம்), குண்டு வெடிப்பு, அரசியல் தலைவர்கள் கொலை போன்ற நிகழ்ச்சிகள் இச்செய்திகள் மலரக் காரணமாகின்றன. இந்திய நாடாளுமன்றக் கட்டிடத்தில் கூட்டம் நடைபெறுகின்ற பொழுது, வளாகத்தில் தீவிரவாதிகள் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வீசிய நிகழ்ச்சியையும் முக்கிய உதாரணமாகக் காட்டலாம்.

மேலும் 10-02-2004 அன்று இரேனியன் கிஷ் நிறுவன வான ஊர்தி (IRANIAN KISH AIRLINE) சார்ஜா (SHARJAH) விமான நிலையத்தில் தரை இறங்கும் போது மோதி விபத்துக்கு உள்ளானது. அந்த விபத்தில் 12 இந்தியர்கள் உட்பட 44 பேர் பலியான சோக நிகழ்ச்சியும் எதிர்பாராத செய்திக்கு உதாரணமாகும்.

* நேரடிச் செய்தி; விளக்கச் செய்தி (Straight News; Explanatory News)

ஒரு நிகழ்ச்சி எப்படி நடைபெற்றதோ அதனை அப்படியே படம் பிடித்துக் காட்டுவது போல வெளியிடுவது நேரடிச் செய்தியாகும். சட்டமன்றத் தலைவர் சில உறுப்பினர்களைப் பதவி விலகும்படி கூறியதை, அப்படியே நடந்தது நடந்தபடி கூறினால் நேரடிச் செய்தியாகும். ஆனால் நடந்ததை விளக்கும் பொழுது, என்ன காரணம் கருதிச் சட்ட மன்ற அவைத் தலைவர் அந்த நடவடிக்கை எடுத்தார் என்றும் விளக்க வேண்டும். மேலும் நடவடிக்கை எடுக்க அவருக்கு, அதிகாரம் இருக்கிறதா என்ற விளக்கத்தையும் சேர்த்து வெளியிடுவது விளக்கச் செய்தியாகும்.

* கடினமான செய்திகள்; மென்மையான செய்திகள் (Hard News; Soft News)

தமிழக அரசின் நிதி அமைச்சர் அவர்கள் 11-02-2004 அன்று சட்டப் பேரவையில் 2004-2005ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட அறிக்கையை அறிவித்தார். இது கடினமான செய்திக்கு உதாரணமாகும். அறிவியல் அறிஞர்கள் அறிவியல் மாநாடுகளில் வெளியிடும் செய்திகளும், தமிழ் அறிஞர்கள் தமிழ் இலக்கிய மாநாடுகளில் கூறும் செய்திகளும் கடினமான செய்திகளுக்கு எடுத்துக்காட்டாகும்.

உடனடியாகப் பாமர வாசகர்கள் எளிதில் புரிந்துகொள்ளக் கூடியவை மென்மையான செய்திகளாகும். திரைப்பட வெளியீடு, தேர்தல் முடிவுகள், கிரிக்கெட் போட்டியின் முடிவுகள் ஆகியவற்றை மென்மையான செய்திகளாகக் கருதலாம். ஆனால் இவற்றைச் சூடான செய்திகள் (Hot News) என்று கூறுவதும் உண்டு. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியா அணியிடம் இறுதிப் போட்டியில் வெற்றியை இழந்தது என்ற சூடான செய்தி கேட்டவுடன் உயிரை விட்ட ஒருவரின் பரிதாபச் செய்தி நமது பத்திரிகைகளில் இடம் பெற்றதை மறக்க முடியுமா?

அமெரிக்காவில் செய்திகளை, கடினமான செய்திகள் என்றும் மென்மையான செய்திகள் என்றும் பிரிக்கின்றனர்.

* அறிவியல் செய்திகள் (Science News)

இன்றைய உலகம் அறிவியல் உலகமாகத் திகழ்கிறது. அறிவியலும், தொழில்நுட்பமும் போட்டி போட்டுக் கொண்டு வளர்கின்றன. அவை தொடர்பாகப் புதுப்புதுச் செய்திகள் வியக்கத் தக்க வகையில் நாள்தோறும் வந்த வண்ணம் இருக்கின்றன. அவற்றை அறிவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆகவே அறிவியல் தொழில் நுட்பச் செய்திகளைப் பத்திரிகைகள் தினமும் வெளியிடுவது தேவையாகின்றது.

அறிவியல், தொழில்நுட்பச் செய்திகள் மற்ற செய்திகளிலிருந்து வேறுபடுகின்றன. மற்ற செய்திகளைப் புரிந்து கொள்வது போல் அறிவியல் செய்திகளை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள மாட்டார்கள். ஏனெனில் பெரும்பான்மையினர் போதுமான அளவு அறிவியல் அறிவு பெற்றிருப்பதில்லை. எனவே தக்க விளக்கத்தோடு எளிமைப்படுத்தி அறிவியல் செய்திகளைத் தர வேண்டியது தேவையாகின்றது.

அடிப்படை அறிவியல் அறிவு பெற்றவர்கள்தான் இச்செய்திகளைத் தவறில்லாமல் வெளியிட முடியும். செய்தி அறிவியலின் எந்தப் பிரிவு சார்ந்தது என்பதையும், அதன் பின்புலத்தையும், தன்மையையும் புரிந்து கொண்டு அறிவியல் செய்திகளை எழுத வேண்டும்.

அறிவியல் இதழ்களும், தொழில்நுட்ப இதழ்களும் இன்று வெளிவருகின்றன. அவற்றில் அறிவியல் கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி தொடர்பான கட்டுரைகள் வெளிவருகின்றன.

அறிவியல் செய்திகளை எழுதும் பொழுது பயன்படுத்துகின்ற கலைச்சொற்களுக்கு விளக்கம் தரவேண்டும். பொதுமக்கள் புரிந்து கொள்ளும் வகையில் எளிமைப்படுத்திச் செய்திகளை வெளியிட வேண்டும்.

No comments:

Post a Comment