Sunday 31 March 2024

நபி (ஸல்) அவர்கள் பாராட்டிய நபித்தோழர்கள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

நபி (ஸல்) அவர்கள் பாராட்டிய  நபித்தோழர்கள்

                                  (1)

அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறுதி தூதராக அல்லாஹ் தேர்ந்தெடுத்தான். அவர்களை இறுதி தூதராக தேர்ந்தெடுத்ததற்கு முன்னரே அவர்களின் குணம், பழக்க வழக்கங்கள் அனைத்தும் மற்றவர்கள் பாராட்டி கூறும் அளவிற்கு தான் அவர்கள் நடந்து கொண்டார்கள்.

நபிகள் நாயகத்தின் மனைவி கதீஜாவே நபிகள் நாயகம் அவர்களுக்கு வியாபாரத்தில் இருந்த விசுவாசம், நியாயமான கட்டமைப்பு, வாக்குறுதியில் நேர்மை என அனைத்தும் பார்த்து தான் மணமுடித்து கொண்டார்கள். அதேப் போன்று நபிகள் நாயகம் வாழ்ந்த காலத்திலே வாழ்ந்த பல நபித்தோழர்களை நபி (ஸல்) அவர்கள் பாராட்டி இருக்கிறார்கள். அந்த இனிமையான தருணங்களை பார்போம்..

உமர் (ரலி) கண்டு சைத்தான் விரண்டோடுதல்

ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள், தனது மனைவி மற்றும் மனைவியின் சகத் தோழிகள் சகஜமாக பேசி சிரித்துக் கொண்டிருக்க உமர் (ரலி) அவர்கள் முகமன் கூறி உள்ளே வர அனைத்து பெண்களும் அலறியபடி ஓடிவிட்டனர். உடனே உமர் (ரலி) அவர்கள் என்னவென்று கேட்க உங்களைப் பார்த்துதான் அனைவரும் பயந்தபடி ஓடிவிட்டனர். என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக, நீர் ஒரு தெருவில் நடந்து வந்தால் சைத்தான் அடுத்த தெருவில் ஓடி விடுவான் என்று தனக்கு கொடுக்காத மரியாதையை உமர் (ரலி) அவர்களுக்கு கொடுத்தார்கள்.

(ஒருமுறை) அல்லாஹ்வின் தூதரிடம் (அவர்களின் மனைவிமார்களான) குறைஷிப் பெண்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்கள் நபி (ஸல்) அவர்களிடம் (ஜீவனாம்சத் தொகையை) அதிகமாகத் தரும்படி தம் குரல்களை உயர்த்தி கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது உமர் (ரலி) வந்து (உள்ளே வர) அனுமதி கேட்டார்கள். உமர் (ரலி) அனுமதி கேட்டபோது அப்பெண்கள் அவரச அவசரமாகத் தங்கள் பர்தாக்களை அணிந்தபடி எழுந்தனர். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தபடியே உமர் (ரலி) அவர்களுக்கு (உள்ளே வர) அனுமதி கொடுத்தார்கள்.

உமர் (ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! தங்களை ஆயுள் முழுதும் அல்லாஹ் சிரித்தபடி (மகிழ்ச்சியாக) இருக்கச் செய்வானாக’ என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘என்னிடமிருந்த இந்தப் பெண்களைக் கண்டு நான் வியப்படைகிறேன்.

(என்னிடம் சகஜமாக அமர்ந்திருந்தவர்கள்) உங்கள் குரலைக் கேட்டவுடன் அவரச அவசரமாகப் பர்தா அணிந்தார்களே’ என்றார்கள். உமர் (ரலி), ‘எனக்கு அஞ்சுவதை விட அதிகமாக அஞ்சத் தாங்கள் தாம் தகுதியுடையவர்கள் இறைத்தூதர் அவர்களே!’ என்று கூறிவிட்டு, (அப்பெண்களை நோக்கி) ‘தமக்குத் தாமே பகைவர்களாகிவிட்ட பெண்களே! அல்லாஹ்வின் தூதருக்கு அஞ்சாமல் எனக்கா நீங்கள் அஞ்சுகிறீர்கள்?’ என்று கேட்டார்கள்.

அதற்கு அந்தப் பெண்கள், ‘ஆம், அல்லாஹ்வின் தூதருடன் ஒப்பிடும்போது நீங்கள் கடின சித்தமுடையவராகவும், அதிகக் கடுமை காட்டக் கூடியவராகவும் இருக்கிறீர்கள்’ என்று பதிலளித்தார்கள். (அப்போது) இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! (உமரே!) நீங்கள் ஒரு பாதையில் சென்று கொண்டிருக்கையில் உங்களை ஷைத்தான் கண்டால் உங்களுடைய பாதையல்லாத வேறொரு பாதையில் தான் அவன் செல்வான்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி)
நூல் : புகாரி-3294 

அபூஉபைதா பின் ஜர்ராஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் சிறப்புகள்

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வொரு சமுதாயத்திற்கும் (அதன்) நம்பிக்கைக்குரியவர் ஒருவர் உண்டு. சமுதாயமே!, நம்முடைய நம்பிக்கைக்குரியவர் அபூஉபைதா இப்னு ஜர்ராஹ் அவர்கள் தாம்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : புகாரி-3744 

நபி (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்த நம்பிக்கையாளர் அபூஉபைதா (ரலி)

நபி (ஸல்) அவர்கள் நஜ்ரான் வாசிகளிடம், ‘நம்பகத்தன்மையில் முறையோடு நடந்து கொள்ளும் நம்பிக்கையாளர் (அமீன்) ஒருவரை உங்களுக்கு நிச்சயம் நான் அனுப்புவேன்’ என்று கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள் (பலர் அந்த ‘அமீன்’ என்னும் சிறப்பு தமக்கு கிட்டாதா என) பேராவல் கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அபூஉபைதா (ரலி) அவர்களை அனுப்பி வைத்தார்கள்.

அறிவிப்பவர் : ஹுதைஃபா (ரலி)
நூல் : புகாரி-3745 


No comments:

Post a Comment