Friday, 15 March 2024

உயர் பண்பு நலன்களுடன் ஆட்சி செய்தவர் உமர் (ரலி)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

மதினா நகரமே உறக்கத்தில் ஆழ்ந்து கொண்டிருந்த நள்ளிரவு நேரம். எங்குமே பேரமைதி. வானிலே ஆங்காங்கே கண்சிமிட்டும் நட்சத்திரங்கள். இவ்வேளையில் ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் வீதியிலே இறங்கி நகர்வலம் வந்தார். நகரின் எல்லையைக் கடந்து செல்கையில், தன்னந்தனியே இருந்த சின்னஞ்சிறு கூடாரம் ஒன்றில் சிறு விளக்கொளியைக் கண்டு அதனை நோக்கி நடந்தார். அருகில் சென்று பார்த்தபோது, அங்கே ஒரு மனிதர் தலை குனிந்து அமர்ந்திருந்தார்.

அவரை நோக்கி உமர் (ரலி) இரண்டுமுறை ஸலாம் கூறியும் அவர் பதில் ஏதும் கூறாததால், மூன்றாவது முறையும் ஸலாம் சொன்னார். அம்மனிதர் ஆவேசப்பட்டு, பக்கத்தில் கிடந்த வாளை எடுத்துக் கொண்டு, “நீ போக மாட்டாயா? உன்னைப் பார்த்தால் பிச்சைக்காரனாகக் கூடத் தெரியவில்லையே? வழிப்பறி கொள்ளையனாகவல்லவா தோன்றுகிறது?’ எனக் கத்தினார்.

உமரோ அமைதியாக, “நண்பரே! நீர் நினைப்பதுபோல் நான் பிச்சைக்காரனுமல்ல, வழிப்பறி கொள்ளையனுமல்ல. உம்மைப் பார்த்தால் வெளியூர்க்காரர்போல் தோன்றுகிறது. அதனால்தான் உம்மோடு பேச நினைத்தேன்’ என்று சொல்லிக் கொண்டிருக்கையில் கூடாரத்திலிருந்து பெண்ணின் கூக்குரல் கேட்டது. திடுக்கிட்ட உமர் (ரலி) அவர்கள், “அங்கே கூக்குரலிடுவது, யார்?’ என வினவ, “அவள் என் மனைவி’ என அம்மனிதர் கூற, “அவர் ஏன் கூச்சலிட வேண்டும்?” என்று உமர் கேட்டார்.

“பிழைப்பைத் தேடி, இந்நாட்டிற்கு வந்தோம். வந்த இடத்தில் பிரசவ வேதனை தொடங்கிவிட்டது. என்ன செய்வதெனத் தெரியாமல் நான் இங்கு கவலையோடு உட்கார்ந்திருக்கிறேன்’ என்று பதிலளித்தார் அந்த மனிதர்.

“மருத்துவச்சியை அழைத்து வருகிறேன்’ என உமர் (ரலி) எழுந்ததும், “வேண்டாம், வேண்டாம்’ எனப் பதறினார் அம்மனிதர். “ஏன் மருத்துவச்சியை வேண்டாம் என்கிறீர்?’ என உமர் வினவியதும், “மருத்துவச்சிக்குக் கொடுக்க என்னிடம் பணமில்லை’ என்றார் சோகமுடன். “நான் அழைத்து வரும் மருத்துவச்சி, பணம் வாங்க மாட்டாள்; கவலைப்படாதீர்கள்’ என்று சொல்லிக் கொண்டே வேகமாக வெளி நடந்தார் உமர்.

வீட்டை அடைந்ததும் தன்னுடைய மனைவியை அழைத்து உடனே புறப்படுமாறு உத்தரவிட்டார். “நீங்கள் சாப்பிடவில்லையா?’ என மனைவி கேட்க, “இல்லை. அந்தச் சாப்பாடு வேறொருவருக்குத் தேவை’ என்றார். “கொஞ்சம் பாலாவது அருந்துங்களேன்’ என்றதும், “வேண்டாம். பிரசவ வேதனையிலிருக்கும் அந்தப் பெண்மணிக்கு அது தேவைப்படலாம். உடனே அவற்றை எடுத்துக் கொண்டு புறப்படு. நான் ஒட்டகத்தை ஓட்டி வருகிறேன்’ என்று புறப்பட்டார் உமர்.

சிறிது நேரத்தில் உமரும், அவருடைய மனைவியும் கூடாரத்தை அணுகியதும், மனைவியை கூடாரத்திற்குள் அனுப்பிவிட்டு உமர் அவர்களும், அம்மனிதரும் வெளியில் இருந்து உரையாடிக் கொண்டிருந்தனர்.

“இந்நாட்டிற்கு உமர்தானே இப்போது தலைவர்?’

“ஆமாம்.’

“அவர் மிகவும் கடினமானவர் என்கிறார்களே!’

“அது அவரவர் கருத்தைப் பொறுத்தது.’

“நீர் உமரை பார்த்திருக்கிறீரா?’

“பார்த்திருக்கிறேன்.’

“அவரிடம் நிறையப் பணம் இருக்குமே?’

“அவரிடம் ஏது பணம்?’

“என்ன வேடிக்கை, ஒரு அரசாங்கத் தலைவர் பணம் சேர்த்து வைக்காமலா இருப்பார்?’

“அப்படி பணம் சேர்க்கும் யாரையும் நாங்கள் தலைவராகத் தேர்ந்தெடுப்பதில்லை.’

இச்சமயத்தில் கூடாரத்திலிருந்து மருத்துவச்சியின் குரல் ஒலித்தது. “ஜனாதிபதி அவர்களே! உங்கள் நண்பருக்கு வாழ்த்துக் கூறுங்கள். அவருக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.’

“ஜனாதிபதி’ என்ற சொல்லைக் கேட்டவுடன் அந்த மனிதர் உடல் நடுங்கி, உமரின் காலில் விழச் சென்றார். அம்மனிதரை அணைத்துக் கொண்டு, “நண்பரே! ஏன் இப்படிப் பயப்படுகிறீர்கள்? என்ன நடந்துவிட்டது?’ என அன்போடு கேட்டார் ஜனாதிபதி உமர் அவர்கள்.

“அப்படியானால் மருத்துவம் பார்த்த அந்தப் பெண்மணி யார்?’ என அம்மனிதர் வினவ, “அவர் எனது மனைவி’ என உமர் கூறவும், ஆச்சரியத்தால் திகைத்துப்போன அந்த மனிதர், நன்றி கலந்த குரலில் கேட்டார், “இந்த நாட்டின் தலைவரான தாங்களா இவ்வளவு ஊழியம் எனக்குச் செய்தீர்கள்?’

“இதில் வியப்படைய என்ன இருக்கிறது நண்பரே? ஒரு நாட்டின் தலைவன் என்பவன், அந்நாட்டு மக்களின் ஊழியன்தானே! நாளை பள்ளிவாசலுக்கு வாருங்கள். உங்கள் வேலைவாய்ப்புக்கு ஏற்பாடு செய்வோம்’ எனக்கூறி புறப்பட்டார் உத்தமர் உமர் (ரலி) அவர்கள்.

இத்தகைய உயர் பண்பு நலன்களுடன் ஆட்சி செய்தவர் உமர் (ரலி) அவர்கள்.❤

No comments:

Post a Comment