Monday, 4 March 2024

முதியோர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

முதியோர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்

 கருத்துத் தெரிவிக்கும் போது முதலில் பெரியவர் பேச வேண்டும்

ஒரு கூட்டம் முக்கியமான நபரைப் பார்த்துப் பேசுவதற்காகச் சென்றால் அக்கூட்டத்தில் பெரியவர் முதலில் பேச வேண்டும். பெரியவர்களைப் பின் தள்ளி விட்டு இளையவர்கள் முந்திக் கொள்ளக் கூடாது.

அப்துர்ரஹ்மான் பின் சஹ்ல் அவ்களும் முஹய்யிஸா பின் மஸ்ஊத் அவர்களும் ஹுவைய்யிஸா பின் மஸ்ஊத் அவர்களும் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்துர்ரஹ்மான் பின் சஹ்ல் அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம்) பேசத் துவங்கினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘பெரியவர்களைப் பேச விடு! பெரியவர்களைப் பேச விடு!’ என்று கூறினார்கள். அந்த மூவரில் அப்துர்ரஹ்மான் பின் சஹ்ல் அவர்கள் வயதில் சிறியவராக இருந்தார்கள். உடனே அவர்கள் (வாய் மூடி) மௌனமாகி விட்டார்கள். பின்பு முஹய்யிஸா அவர்களும் ஹுவைய்யிஸா அவர்களும் (நபி (ஸல்) அவர்களிடம்) பேசினார்கள்.

அறிவிப்பவர்: சஹ்ல் பின் அபீ ஹஸ்மா (ரலி)
நூல்: புகாரி-3173

மூத்தவருக்கு முதலிடம்

சாப்பாடு, பானம் போன்று ஏதேனும் பொருட்களைக் கொடுக்கும் போது முதலில் வயதில் மூத்தவருக்கு வழங்க வேண்டும். பின்பு அவரை விட வயது குறைந்தவருக்கு வழங்க வேண்டும். பெரியவர்களுக்குக் கண்ணியம் கொடுப்பதற்காக இவ்வழிமுறையை இஸ்லாம் பேணச் சொல்கிறது. நமக்குத் தேனீர் வழங்கப்படும் போது முதலில் நம்மை விட மூத்தவருக்கு மரியாதைக்காகக் கொடுத்து விட்டு பின்பு நாம் குடிக்கின்றோம்.

நம்மை விட மூத்தவர்கள் வந்திருக்கும் போது அவர்களைக் காக்க வைத்து இளையவர்கள் உண்டால் அது மரியாதைக் குறைவாகக் கருதப்படும். ஆனால் மூத்தவர்கள் உண்ண இளையவர்கள் காத்திருந்தால் இதை மரியாதைக் குறைவு என்று யாரும் கூற மாட்டார்கள்.

மூத்தவரோடு இளையவர் சரிக்கு சமமாக ஏதேனும் ஒரு விஷயத்தில் போட்டி போட்டால், என்ன தான் இருந்தாலும் அவர் வயதில் மூத்தவரில்லையா? என்று நாம் கேட்கிறோம். பெரியவர் மீது தவறே இருந்தாலும் சிறியவன் நீ பணிந்து தான் போக வேண்டும் என்று உபதேசம் செய்கிறோம். பெரியவருக்கு மரியாதை செய்ய வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்கிறோம். இந்த ஒழுங்கு முறையைத் தான் நபி (ஸல்) அவர்கள் பின்வரும் ஹதீஸில் உணர்த்துகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் பல் துலக்கும் குச்சியால் பல் துலக்கிக் கொண்டிருந்தவாறு கனவு கண்டேன். அப்போது இரண்டு மனிதர்கள் (பல்துலக்கும் குச்சி வேண்டி) என்னிடத்தில் வந்தார்கள். அவர்களில் ஒருவர் மற்றொருவரை விடப் பெரியவர். அவர்களில் சிறியவருக்கு அக்குச்சியை நான் கொடுத்தேன். அப்போது ‘பெரியவருக்கு முதலில் கொடுங்கள்’ என்று என்னிடம் கூறப்பட்டது. எனவே அதை நான் பெரியவரிடத்தில் கொடுத்தேன்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி)
நூல்: முஸ்லிம்-5732 (5324)

நபி (ஸல்) அவர்களுக்கு ஏதேனும் பானம் கொண்டு வரப்பட்டால் அதை அருந்தி விட்டு மீதத்தை வலது புறத்தில் இருப்பவருக்குத் தருவார்கள். ஆனால் ஒரு முறை பெருமானாரிடத்தில் குவளையில் பானம் கொண்டு வரப்பட்டது. அப்போது அவர்களின் வலது புறம் சிறுவனும் இடது புறம் பெரியவர்களும் அமர்ந்திருந்தார்கள்.

பெரியவர்களுக்கு முதலில் தர வேண்டும் என்று எண்ணி அந்தச் சிறுவனிடத்தில், ‘இதை நான் இந்தப் பெரியவர்களுக்குத் தரட்டுமா?’ என்று அனுமதி வேண்டினார்கள். ஆனால் அந்த சிறுவன், ‘அல்லாஹ்வின் தூதரே! தங்களிடமிருந்து எனக்கு கிடைக்கக் கூடிய மீதத்தை நான் எவருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன்’ என்று கூறினார். எனவே நபி (ஸல்) அவர்கள் அதை அச்சிறுவனுடைய கையில் வைத்து விட்டார்கள்.

அறிவிப்பவர்: சஹ்ல் பின் சஅத் (ரலி)
நூல்: புகாரி-2351

வழமையாக நபி (ஸல்) அவர்கள் வலது புறத்தில் உள்ளவருக்குத் தான் தருவார்கள். ஆனால் இடது புறத்தில் பெரியவர்கள் இருந்ததால் அவர்களுக்குத் தர வேண்டும் என்று எண்ணினார்கள். ஆனால் அந்தச் சிறுவர் பெருமானாரின் மீது வைத்திருந்த அன்பினால் அவர்கள் வைத்த மீத பானத்தை நான் தான் குடிப்பேன் என்று கூறினார்.

இங்கே இன்னொரு முக்கியமான விஷயத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்கள் சிறுவர்களுக்கு இரக்கப்பட வேண்டும் என்று கூறியதால் விபரம் தெரியாத சிறு குழந்தைகளின் உள்ளம் உணவை எதிர்பார்த்து ஏங்காமல் இருப்பதற்காக முதலில் அக்குழந்தைகளுக்குக் கொடுப்பதில் குற்றம் இல்லை.

சில ஊர்களில் பெரியவர்கள் முதலில் உண்ட பின்பு தான் குழந்தைகள் உண்ண வேண்டும் என்ற ஒரு நிலையை ஏற்படுத்தியுள்ளார்கள். அவர்கள் பசியால் அழுது துடித்தாலும் அவர்கள் அதைக் கண்டு கொள்வதில்லை. இந்த இடத்தில் பெரியவர்களை விட சிறு குழந்தைகள் பலவீனர்களாக இருப்பதால் முதலில் சிறு குழந்தைகளுக்கு உணவைக் கொடுக்க வேண்டும். சிறியவர்களை விட பெரியவர்களை முற்படுத்த வேண்டும் என்ற ஒழுங்கு முறை சிறியவர்கள் குழந்தைப் பருவத்தைத் தாண்டி விபரம் தெரிந்தவர்களாக இருக்கும் போது தான். இன்னும் இந்தச் சட்டம் பெரியவர்களும் சிறியவர்களும் ஒரே நேரத்தில் இருக்கும் போது தான் பொருந்தும். பெரியவர்கள் விருந்திற்கு இன்னும் வரவில்லை என்ற போது சிறியவர்கள் காத்திருக்க வேண்டியதில்லை.

எனவே பெரியவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும், மரியாதைகளையும் முறையாகச் செய்து இம்மையிலும், மறுமையிலும் வெற்றி பெறுவோமாக! அப்படிப்பட்ட நன்மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள் புரிவானாக.!

No comments:

Post a Comment