எளிமைப்படுத்தப்பட்ட வருமான வரி பற்றிய காணொளி...புரியாதோர் கண்டு தெளிவடையவும்😜😜
*2020 பட்ஜெட்: வரவேற்பும் எதிர்ப்பும்!*
2020-2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதற்கு பலத் தரப்பினரும் வரவேற்பும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். அதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
உள்கட்டமைப்பு, விவசாயம், பாசன வசதி மற்றும் ஊரக வளர்ச்சி மேம்பாட்டை மையமாக வைத்துத் தயாரிக்கப்பட்ட பட்ஜெட்டை வரவேற்கிறேன்.
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதிலும், குற்றச்சம்பவங்களைக் குறைப்பதிலும் நாட்டிற்கே முன்னோடியாக விளங்கும் தமிழகத்தில் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள தேசிய காவல் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஒன்றை அமைக்க வேண்டும்.
புதியதாக நூறு விமான நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்ட திட்டத்தின்படி, நெய்வேலி, ஓசூர், ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் விமான நிலையங்கள் அமைக்கவும், கோயம்புத்தூர், திருச்சி, மதுரை மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் உள்ள விமான நிலையங்களை விரிவாக்கம் செய்வதற்கும் உரிய நிதி ஒதுக்கவும் கேட்டுக்கொள்கிறேன். ஆதிச்சநல்லூர் போன்று கீழடியிலும் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்.
மேலும், மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றாமல் பல்வேறு தரப்பினருக்கும் பயனளிக்கக்கூடிய வகையில் இந்த பட்ஜெட் திறம்பட தயாரிக்கப்பட்டுள்ளது என்று வரவேற்புத் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின்
"மத்திய பா.ஜ.க. அரசின் 2020-21 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை ""பொருளாதார தேக்க நிலைமை", "கிராமப்புறப் பொருளாதார வீழ்ச்சி", "கிராமப்புற மக்களின் வருவாய்", "வேலைவாய்ப்பின்மை" உள்ளிட்ட மிக முக்கியப் பிரச்சினைகள் குறித்துக் கிஞ்சித்தும் கவலை இல்லாமல் - பா.ஜ.க. விரும்பும் கலாச்சாரத் திணிப்பைச் செய்யும் ஒரு நிதி நிலை அறிக்கையாக இருக்கிறது.
மிக நீண்ட பட்ஜெட் உரைக்கு திசையும் தெரியவில்லை; திட்டங்களும் கிடைக்கவில்லை! "ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி" தவிர வேறு எந்த ஒரு உருப்படியான அறிவிப்பும் தமிழ்நாட்டிற்கு கிடைக்கவில்லை.
ஏழை மக்களுக்கானதாக இல்லாமல் இந்த பட்ஜெட் கார்ப்பரேட்களின் மீதான அக்கறையை நேரடி ஒலிபரப்பு செய்திருக்கிறது. எங்கும் எதிலும் இந்துத்துவா திணிப்பு" என்பதில் தீவிரம் காட்டி வரும் மத்திய பா.ஜ.க. அரசு, இந்த நிதிநிலை அறிக்கையில் சிந்து சமவெளி நாகரீகத்தை "சரஸ்வதி சிந்து நாகரீகம்" என்று பெயர் சூட்டி- கீழடியில் கிடைத்த தமிழர் நாகரீகம் உள்ளிட்ட பல ஆய்வுகளின் முடிவுகளையும் மாற்றி, வரலாற்றைத் திருத்தவும் திரிக்கவும் முயலுவதை தமிழகம் சிறிதும் பொறுத்துக் கொள்ளாது.
ஆத்திச் சூடியை மேற்கோள் காட்டியிருக்கும் நிதி அமைச்சர், " சித்திரம் பேசேல்" (அதாவது உண்மை அல்லாததை மெய்யானது போலப் பேசாதே) என்ற ஆத்திச் சூடியையும் நிச்சயம் படித்திருப்பார். தமிழ், சமஸ்கிருதம், உருது மொழிகளின் இலக்கியங்களிலிருந்து, திட்டமிட்டு மேற்கோள்களைக் கையாண்டு, நாட்டைத் திசை திருப்பிவிட முடியாது. கிராமப் புறப் பொருளாதாரத்தை - வளர்ச்சியை- ஏன் தமிழகத்தை அடியோடு புறக்கணித்து - சமூக நீதிக்கு எதிரான "புதிய கல்விக் கொள்கையை விரைந்து செயல்படுத்துவோம்" என்ற அறிவிப்புடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த நிதி நிலை அறிக்கைக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மன நிறைவின்மையைத் தெரிவித்துக் கொள்கிறேன்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி
வரலாற்றிலேயே நீண்ட நேரமாக வாசிக்கப்பட்ட பட்ஜெட்டாக இருந்தாலும், அதில் ஒன்றும் இல்லை. இது ஒரு வெற்று பட்ஜெட். நாட்டின் மிகப் பெரிய சவாலாக இருக்கும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்து எந்த அறிவிப்பு இல்லை. எந்த ஒரு கொள்கை ரீதியான திட்டமும் அறிவிக்கப்படவில்லை. தந்திரம் மிக்கவையாக உள்ளதே தவிர நாட்டுக்கு பயனளிக்கும் எந்த திட்டமும் இல்லை.
உள் துறை அமைச்சர் அமித் ஷா
இந்த பட்ஜெட்டில், வரி முறையை பகுத்தறிவு செய்வதற்கும், அடிப்படை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், வங்கி முறையை வலுப்படுத்துவதற்கும், முதலீட்டை ஊக்குவிப்பதற்கும், வணிகத்தை எளிதாக்குவதற்கும் மோடி அரசு பயனுள்ள நடவடிக்கைகளை எடுத்துள்ளது, இது இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதற்கான மோடி அரசின் தீர்மானத்தை மேலும் அதிகரிக்கும் .
டெல்லி முதல்வர்
இந்த பட்ஜெட்டுக்காக டெல்லி மிகவும் எதிர்பார்ப்புடன் இருந்தது. ஆனால், மீண்டுமொருமுறை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தப்பட்டுள்ளோம். தேர்தலுக்கு முன்பு ஏமாற்றும் பாஜக, தேர்தலுக்கு பிறகு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுமா என்ன?
புதுச்சேரி முதல்வர்- நாராயணசாமி
பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான எந்த அம்சங்களும் இல்லை. ஏமாற்றம் தரும் வகையில் உள்ளது. இது பெரு முதலாளிகளுக்கான பட்ஜெட். ஏற்கனவே மத்திய அரசின் உதான் திட்டத்தில் 100 விமான நிலையங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்து 30 விமான நிலையங்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது மேலும் புதிய விமான நிலையங்கள் அமைப்பது எப்படி சாத்தியமாகும். இந்த பட்ஜெட்டில் புதுச்சேரி புறக்கணிக்கப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம்- கமல்ஹாசன்
அதிகாரிகளுக்கு அல்வாவுடன் ஆரம்பிக்கப்பட்ட பட்ஜெட், மக்களுக்கு அல்வாவுடன் முடிவடைந்தது. நீண்ட உரை, ஆனால் சரியான தீர்வுகள் இல்லை.
அமமுக – தினகரன்
விவசாயத்திற்கான 16 அம்ச திட்டம் உள்ளிட்ட ஒன்றிரண்டு வரவேற்கத்தக்க அறிவிப்புகள் இருந்தாலும்,பொருளாதாரத்தை மீட்டெடுத்தல்,வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாதது,எல்.ஐ.சியைத் தனியார்மயமாக்குதல் உள்ளிட்ட மத்திய பட்ஜெட் அறிவிப்புகள் கவலையளிக்கின்றன.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி
சிந்துவெளி நாகரிகத்தை பற்றி குறிப்பிடும்போது சரஸ்வதி பெயரை இணைத்து குறிப்பிட்டது அப்பட்டமான இந்துத்துவா கொள்கையின் வெளிப்பாடாகும். ஒட்டுமொத்தமாக வளர்ச்சியை நோக்கமாக இல்லாத வெறும் வார்த்தை ஜாலங்களால் சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட். பொருளாதார வளர்ச்சிக்கான எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை. விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடிக்கான அறிவிப்பு இல்லாத இந்த பட்ஜெட் ஏமாற்றமளிக்கிறது.
மதிமுக பொதுச் செயலாளர் – வைகோ
2020-21 நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 10 விழுக்காடு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், நடப்பு நிதி ஆண்டில் 4.8 விழுக்காடாக பொருளாதார வளர்ச்சி சரிந்துள்ள நிலையில், அதிலிருந்து மீள்வதற்கான சாத்தியக்கூறுகள் தெரியவில்லை.
வேளாண்துறை வளர்ச்சிக்காக 15 அம்சத் திட்டத்தைச் செயல்படுத்த மாநிலங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில், விவசாயிகள் தற்கொலைக்குக் காரணமான கடன் சுமைக்கு நிரந்தரத் தீர்வோ, வேளாண் கடன்கள் தள்ளுபடி அறிவிப்போ இல்லாதது ஏமாற்றம் தருகிறது.
இந்தியாவில் காப்பீட்டுத் துறையில் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியுள்ள ஆயுள் காப்பீட்டுக் கழக(LIC)த்தின் பங்குகளை தனியாருக்குத் தாரை வார்ப்பது என்ற முடிவு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
அதைப் போல லாபம் ஈட்டக்கூடிய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்கப்பட்டு 2.1 லட்சம் கோடி திரட்டப்படும் என்ற அறிவிப்பு பொதுத்துறை நிறுவனங்களைச் சீரழித்துவிடும்.
மாநில அரசுகளின் அதிகாரத்தின் கீழ் வரும் பொது சுகாதாரத் துறையை மத்திய அரசு தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முயற்சிப்பது மாநில உரிமைகளை நசுக்குவது ஆகும்.
தனிநபர் வருமான வரி விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டு இருப்பதும், ஆதிச்சநல்லூரில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்பதைத் தவிர மத்திய வரவு செலவுத் திட்டத்தில் வரவேற்கத்தக்கக் கூறுகள் எதுவும் இல்லை.
பாமக நிறுவனர் ராமதாஸ்
2020-21 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் வேளாண் வருமானத்தைப் பெருக்க 16 அம்ச திட்டம் அறிவிக்கப் பட்டிருப்பதும், நிபந்தனைகளுடன் வருமானவரிக் குறைப்பு அறிவிக்கப்பட்டிருப்பதும் மகிழ்ச்சியளிக்கின்றன. வளர்ச்சியை விரைவுபடுத்தும் நோக்கம் கொண்ட இந்த நிதிநிலை அறிக்கை வரவேற்கத்தக்கது.
கல்விக்கான ஒதுக்கீடு ரூ.99,300 கோடியாகவும், சுகாதாரத்துறைக்கான ஒதுக்கீடு ரூ.69,000 கோடியாகவும் உயர்த்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சென்னை & பெங்களூர் அதிவிரைவுச் சாலை அமைக்கும் பணிகள் நடப்பாண்டில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது, 27,000 கி.மீ நீளத்திற்குத் தொடர்வண்டிப் பாதைகள் மின் மயமாக்கப்படும் என்ற அறிவிப்பு, பெண்கள்& குழந்தைகள் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும். முதலீட்டை ஈர்க்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள வரிக்குறைப்புகள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையினருக்கு புதிய தளவாடக் கொள்கை, ரூ.5 கோடி வரை வருவாய் ஈட்டும் நிறுவனங்களுக்குத் தணிக்கைத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டிருப்பது, உட்கட்டமைப்பு வசதிகளை 5 ஆண்டுகளில் ரூ.100 லட்சம் கோடி செலவிடப்படும் என்ற அறிவிப்பு ஆகியவை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புப் பெருக்கத்திற்கு பெரும் உதவியாக இருக்கும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.
அதேநேரத்தில் எல்ஐசி எனப்படும் இந்திய ஆயுள்காப்பீட்டு நிறுவனத்தில் மத்திய அரசுக்கு உள்ள பங்குகளைப் பங்கு சந்தைகள் மூலம் தனியாருக்கு விற்கும் முடிவு மிகவும் ஆபத்தானது ஆகும். எல்ஐசி மூலம் மத்திய அரசுக்கு ஒவ்வொரு ஆண்டும் பெரிய அளவில் ஈவுத்தொகை கிடைத்து வருகிறது. பங்குகள் தனியாருக்கு விற்கப்பட்டால் அந்தத்தொகை குறைந்து விடும். பொதுத்துறை நிறுவனங்களை படிப்படியாகத் தனியாருக்கு விற்பனை செய்வது மத்திய அரசின் வரி இல்லாத வருவாயைக் குறைத்து விடும். இது நல்ல விஷயமல்ல என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment