*இப்படி ஒரு உரையாற்ற முடியாத காலக்கொடுமையில்நம்ம சட்டமன்றம்! மெய் சிலிர்க்க வைக்கும் பேச்சு..!*
•
_*வரலாற்றை மறப்பவர்களை வரலாறு தண்டிக்கும்..!*_
*எம்.ஸ்வராஜ் MLA.,*
_CPIM, கேரளா சட்டமன்றத்தில்..._
•
ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக ஆகியவை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மதச்சார்பற்ற தன்மையை ஒழிக்க முயல்கின்றன. குடியுரிமைச் சட்டம் குறித்த பொய்யான வதந்திகளை, சங்க பரிவார் இப்போது இந்தியா முழுவதும் திட்டமிட்டு பரப்புகிறது.
இன்றைய இந்தியாவில் சங்க பரிவார் அமைப்புகள் அப்பட்டமான பொய்களின் உதவியின்றி தாக்குப்பிடித்து நிற்க முடியாது என்பது இந்திய மக்கள் யாவரும் அறிந்த உண்மை. குடியுரிமைச் சட்டத்தையும் (CAA) குடியுரிமைப் பதிவேட்டையும் (NRC) ஒன்றாக இணைத்து பார்க்கும் போதுதான் முழுமையான உண்மை வெளிவருகிறது.
இந்திய மண்ணில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும், இந்தியாவின் முதல் குடிமகனான ஃபக்ருதீன் அலி அகமது அவர்களின் குடும்பத்தினர், எப்படி இந்தியர் அல்லாதவராக மாற முடியும்? கார்கில் எல்லையைப் பாதுகாத்து நின்றதற்கு ஜனாதிபதியின் பதக்கத்தைப் பெற்ற முகமது சனாவுல்லா கான் எவ்வாறு இந்திய குடிமகன் அல்லாதவர் ஆனார்?
இந்திய ராணுவத்தில் உன்னத சேவை ஆற்றிய முகமது அஸ்மல் ஹக் எப்படி இந்தியர் அல்லாதவர் ஆனார்? இதற்கெல்லாம் நீங்கள் பதிலளிக்க வேண்டும். நாட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதி மக்கள் திரளை வேண்டுமென்றே தடுப்பு முகாம்களுக்கு கொண்டு செல்ல, திட்டமிட்டு இயற்றப்பட்ட சட்டம் இது.
மரியாதைக்குரிய, பாஜக (நேமம் தொகுதி) சட்ட மன்ற உறுப்பினர் ராஜகோபால் அவர்கள், தனது 90 வயதில் கூட, மனிதகுலத்தின் மீது அன்பு செலுத்தத் தகுந்த ஒரு வார்த்தையை உச்சரிக்க முடியாவிட்டால், உங்கள் அரசியல், எவ்வளவு இழிவானதும் வன்முறையானதும் என்பதை அடையாளம் கண்டுபிடித்து, அதைக் கண்டு அச்சமடைகிறோம்.
இங்கு வசிக்கும் மக்களிடம் ஆதாரங்களை கேட்கிறார்கள். இந்த மண்ணில் பல ஆண்டுகளாக தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருபவர்களிடம், அவர்களின் குடியுரிமை பற்றி சந்தேகம் கொண்டு கேள்வி கேட்கிறார்கள். எல்லா மதப் பிரிவினர்களிலும் எத்தனை எத்தனை தீரம் மிக்க தியாகிகள் உள்ளனர்? கேரளாவில் எத்தனை அனுபவங்கள் உள்ளன?
முஸ்லீம் சமூகத்தை அழித்து ஒழிக்கும் நோக்கில் உள்ள இந்தச் சட்டத்தை நீங்கள் உருவாக்கும்போது, கேரளாவின் மலபாரில் நடந்த சுதந்திர போராட்டத்தின் வரலாற்றை ஆராய்ந்தீர்களா? எத்தனை எத்தனை அனுபவங்கள் அங்கே உள்ளன?
1852 இல் பிரிட்டனுக்கு நாடுகடத்தப்பட்ட சையத் ஃபசல் பூக்கோயா தங்கள் அவர்களின் பெயரை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? மாம்பறம் என்ற இடத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? வாழக்காடு அருகே கொந்நாரா என்ற கிராமம் உள்ளது. அந்த கொந்நாரா மக்காம் இன்றும் கூட ஒரு வரலாற்று அடையாளமாக நிற்கிறது. அது அக்காலத்தில் மசூதியாக இருந்தது. அந்த மசூதி ஆங்கிலேயர்களால் வெடி வைத்து தகர்க்கப்பட்டது ஆகும்.
அது அக்காலத்தில் சுதந்திரப் போராட்டத்தின் மையமாக இருந்தது. இன்றும், அந்த பாதையில் கடந்து செல்லும்போது, ஆங்கிலேயர்கள் சுட்ட போது, பாய்ந்து பதிந்த தோட்டாக்கள், அகற்றப்படாமல் கொந்நாரா மக்காமின், சுற்று சுவற்றில் இருப்பதை நம்மால் பார்க்க முடியும்.
அங்கிருந்து பலப்பிரயோகம் செய்து சையத் முகமது கோயா, ஆங்கிலேயர்களால் வலுக்கட்டாயமாக கோயம்புத்தூருக்கு அழைத்துச் செல்லப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.
வாரியங்குந்நத்து குஞ்சஹம்மது ஹாஜி என்ற பெயரை நீங்கள் கேள்வி பட்டிருக்கிறீர்களா? பிரிட்டனின் இராணுவ ஆதிக்கத்திற்கு எதிராக சவால் விடுத்து, அந்த மண்ணின் மைந்தர்களின் சொந்த தேசத்தை நிறுவியர் அவர். அவர் தனது குடியரசிற்கு 'மலையாள தேசம்' என்று பெயரிட்டார்.
ஆங்கிலேயர்கள் அவரை அடக்குமுறையை ஏவி ஒடுக்கினர். மிருகத்தனமான அடக்குமுறைக்கு ஆளாக்கி தண்டித்தனர். மீசையின் ரோமங்கள் ஒவ்வொன்றும் இழுத்து பிடுங்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்திய பிறகு, இறுதியாக அவருக்கு சலுகை ஒன்றை ஆங்கிலேயர்கள் முன்வைத்தார்கள்.
சுதந்திரப் போராட்டத்திலிருந்து விலகி, மன்னிப்புக்கடிதம் ஒன்றை எழுதித் தருவதானால், உங்களுக்கு மன்னிப்பு வழங்கப்படும். அதன் மூலம், நீங்கள் மக்காவில் நிம்மதியாக வாழ அனுமதிக்கப்படுவீர்கள். அதற்கான ஏற்பாடுகளை அரசு செய்து தரும் என்று ஆங்கிலேய இராணுவ தளபதி கூறினார்.
இந்த சலுகையை கேட்டதும், சித்திரவதையால் உடல் தளர்ந்து போன நிலையிலும், புன்னகை மாறாத முகத்துடன் வாரியம்குந்நத்து குஞ்ஞகமது ஹாஜி எவ்வாறு பதிலளித்தார் தெரியுமா?
"எனக்கு மக்காவை ரொம்பப் பிடிக்கும், ஆனால் நான் மக்காவில் பிறக்கவில்லை, போராட்ட வரலாறுகள் நிறைந்த ஏறநாடு என்ற இந்த மண்ணில்தான் பிறந்தேன் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். நான் இந்த மண்ணில் இறந்து வீழ்வேன். இந்த மண்ணுடன் இரண்டறக்கலந்து போவேன்" என்று தான் அவர் வீரத்துடன் கூறினார்.
அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. "நான் பிறந்த இந்த நாட்டிற்காக தியாகியாகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது" என்று கூறினார். அவரது விருப்பப்படி, பின்னாலிருந்து சுட்டு கொள்வதற்குப் பதிலாக, முன்னால் இருந்து துப்பாக்கியால் மார்பில் சுடப்பட்டு, கொல்லப்பட்டார்.
அக்காலத்தில், தண்டனை பெற்றவர்களின் கண்கள் கட்டப்பட்டு, பின்னாலிருந்து சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால், வாரியம்குந்நத்து குஞ்ஞகமது ஹாஜியின் இறுதி ஆசை என்ன என்று கேட்ட போது, "நீங்கள் என் கண்களை கட்டக்கூடாது. என்னை முன்னால் இருந்து சுட வேண்டும்." என்று வீரத்துடன் கூறிய துணிச்சலான மனிதர்களின் நிலம் தான் நமது நாடு.
இது ஆலிமுஸ்லியார் போன்ற வீரர்களின் மண். சுதந்திரப் போராட்டத்தின் எல்லா காலகட்டத்திலும், பிரிட்டிஷ் இராணுவத்துடன் சாதாரண பொதுமக்கள் நேருக்கு நேர் மோதிய வரலாறு, ஒன்றே ஓன்று மட்டுமே உள்ளது. அது இன்றைய மலப்புறம் மாவட்டத்தில் உள்ள பூக்கோட்டூர் என்ற இடத்தில் நடந்தது. அந்த போரை நினைவு கூரும் நினைவிடம் இன்றும் அந்த ஊரில் உள்ளது.
பிரிட்டிஷ் இராணுவத்தை தோற்கடித்த பெருமைக்குரியவர்கள் தான் ஏறநாட்டின் மாப்பிளை வம்சத்தினர். அந்த கம்பீரமான கடந்த கால வரலாறு நிலவும் நமது சமூகத்தில் தான், அந்த வரலாற்றுக்கு சொந்தக்காரர்களான மக்களை சந்தேகத்தின் நிழலில் வைத்திருக்கும் அணுகுமுறையை நீங்கள் எடுக்கிறீர்கள்.
1935 இல் ஹிட்லர் யூதர்களைக் கொல்ல அழித்தொழிப்பு மையங்களை உருவாக்கி, இலட்சக்கணக்கான யூதர்களைக் கொன்று குவித்தான். சரியாக பத்தாவது வருடம் தற்கொலை செய்து கொண்டு சாகும் நிலைக்கு தள்ளப்பட்டான் என்பது கடந்த கால பாசிசத்தின் வரலாறு.
இலட்சக்கணக்கான மனிதர்களைக் கொன்ற ஆஷ்ச்விட்ஸில் உள்ள அக்கால வதை முகாம், பின்னர் போர் நினைவு அருங்காட்சியகமாக மாறியது. அதன் நுழைவாயிலில், "வரலாற்றை மறந்தவர்களை வரலாறு தண்டிக்கும்" என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது. அதையே தான் இன்றைய காலகட்டம், நரேந்திர மோடியிடம், வரலாற்றை மறப்பவர்களை வரலாறு தண்டிக்கும் என்று கடந்த கால வரலாற்றை நினைவு படுத்துகிறது. வரலாறு தண்டிக்கும் என்பதில் சந்தேகம் ஏதும் கொள்ளத் தேவை இல்லை.
அகதிகளை, மதத்தைக் கருத்தில் கொள்ளாமல், மனித நேயத்தைக் கணக்கில் கொண்டு ஏற்க வேண்டும். குடியுரிமை திருத்த சட்டம் உலக அரங்கில் இந்தியாவை அவமானப்படுத்தும். இந்தியா தனிமைப்படுத்தப்படும்.
முஸ்லிம்களை அழித்தொழிப்பதற்காக இந்த சட்டம் இப்போது வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது என்றாலும், இது முஸ்லிம்களை மட்டும் பாதிக்கும் பிரச்சினை அல்ல. இது ஒரு துவக்கம் மட்டுமே. நாளை சிறுபான்மையினர், தலித்துகள் மற்றும் எதிர்கருத்து பேசுபவர்களுக்கு எல்லாம் எதிராக, ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல்களின் ஒரு முன்னோட்டமாகும்.
இது முஸ்லிம்களை மட்டும் பாதிக்கும் பிரச்சினை அல்ல, ஒட்டுமொத்த இந்தியாவையும் பாதிக்கும் பிரச்சினை. மதச்சார்பின்மையை பாதிக்கும் பிரச்சினை. அந்த கண்ணோட்டத்தில் இந்த சட்டத்தை பார்க்க நாம் முயல வேண்டும்.
கோல்வால்கர் ஒரு இந்து மௌதூதி என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அது போலவே மௌதூதி ஒரு முஸ்லீம் கோல்வால்கர் என்பதும் மறுக்க முடியாத உண்மை. இவர்கள் இருவருமே மனிதநேயம், மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகத்திற்கு எதிரானவர்கள். அனைத்து மதச்சார்பற்ற மக்களும் ஒன்றிணைந்து மனிதநேயம் என்ற கருத்தை நிலைநிறுத்துவதன் மூலம், தீய பின்விளைவுகளை ஏற்படுத்தும் இந்த சட்டத்தை எதிர்க்க வேண்டும்.
இந்த நாட்டைக் சாகடிக்க முயலும் சக்திகளுக்கு எதிராக நாம் போராடுகிறோம். இந்தப் போராட்டம் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிராகச் செயல்படும் மத்திய அரசுக்கு எதிரானது. இந்தப் போராட்டத்தின்போது நாம் ஏந்த வேண்டிய கொடி, நமது தேசியக் கொடி ஆகும். நாம் ஒன்றுபட வேண்டும். இந்திய நாட்டைக் காப்பாற்ற வேண்டும்".
•
_[31.12.2019 அன்று கேரள சட்டமன்றத்தில் தேசிய குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, DYFI முன்னாள் கேரள மாநிலக்குழு செயலாளரும், CPIM கேரள மாநிலக்குழு உறுப்பினரும், CPIM திர்பூணித்துறை சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான தோழர் எம். ஸ்வராஜ் ஆற்றிய, அனைவரது கவனத்தையும் ஈர்த்த உரையின் தமிழாக்கம்._ 🌹 🌹 🌹 🌹
_(இந்த உரை இந்திய குடிமக்கள் என்ற முறையில் அனைவராலும் கேட்கப்பட வேண்டிய, படிக்கப் பட வேண்டிய, தலைமுறைகள் கடந்தும் நினைக்கப் படவேண்டிய உரை)]_
•
#Fight_Against_Fascism
No comments:
Post a Comment