Saturday 25 January 2020

இன்று நான்... நாளை நீ..

இன்று நான்... நாளை நீ..
---------------------------------------
குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA)
தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR)
தேசிய குடிமக்கள் பதிவேடு (NCR)

இவை வெவ்வேறு காலகட்டத்தில், வெவ்வேறு காரணத்துக்கானவை எனக் கூறி கொண்டு வரப்பட்டாலும் இந்த மூன்றுமே ஒரே செயலுக்கான மூன்று படிநிலைகள்.

தேசிய குடிமக்கள் பதிவேடு
---------------------------------------------
நம் நாடு பிரிக்கப்பட்டு இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகளாக்கப்பட்டு, இந்தியா தனி நாடான பின் 1951-ல் இந்த பதிவேடு துவங்கப்பட்டு பதிவுகள் செய்யப்பட்டன. அதன்பின் அதற்கான தேவை இருக்கவில்லை.

மீண்டும் 2013-ல் அஸ்ஸாம் மாநிலத்தில் கட்டுப்பாடுகள் ஏதுமின்றி வந்திறங்கும் பங்களாதேஷ் குடிமக்களைக் கட்டுப்படுத்தி முறைப்படுத்துவதற்காக உச்ச நீதிமன்றத்தின் ஆணைக்கிணங்க அஸ்ஸாமுக்காக மட்டுமே தொடங்கப்பட்டது.

இலட்சக் கணக்கான பங்களாதேஷ் அகதிகளின் வருகையால் அஸ்ஸாம் மாநில மக்கள் சந்தித்த பொருளாதார, கலாச்சார பாதிப்புகள் கனிசமானது. மேலும் அவர்கள் பல பத்து ஆண்டுகளாக அஸ்ஸாமில் வசிப்பதால் வாக்காளர் பட்டியலிலும் இடம் பெற்று அரசியலிலும் தீர்மானகரமான சக்திகளாக மாறியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட அஸ்ஸாம் மக்கள் நடத்திய போராட்டங்களில் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில்தான் காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அரசுக்கும், அஸ்ஸாமின் போராட்டக் குழுக்களுக்கும் இடையே 1985-ல் "அஸ்ஸாம் ஒப்பந்தம்" ஏற்படுத்தப்பட்டு மீண்டும் மாநிலத்தில் அமைதி திரும்பியது.

இந்த ஒப்பந்தத்தின்படி 25.03.1971-க்குப் பின் அஸ்ஸாமுக்குள் குடியேறியுள்ள பங்களாதேஷ் அகதிகள் அனைவரையும் அடையாளம் கண்டறிந்து அவர்களை வெளியேற்ற மத்திய அரசு ஒப்புக் கொண்டது. ஆனாலும் ஒப்பந்தத்தின்படி எந்த பணியும் முன்னெடுக்கப்படவில்லை. அதனால் ஒப்பந்தத்தின்படி அஸ்ஸாமில் இந்திய குடிமக்கள் பதிவு நடத்தப்பட வேண்டுமென பல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கலானது. பின்னர் 2013-ல் உச்ச நீதிமன்ற ஆணையின் பேரில் அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் பதிவுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

ஆனால் இப்பதிவேடு நாடு முழுவதும் அமுல்படுத்தப்படும் என்ற இந்துத்துவவாத ஆட்சியின் அறிவிப்புதான் நாம் எதிர் கொள்ளவிருக்கும் பயங்கரத்தை அறிவிக்கிறது.

குடியுரிமை திருத்த சட்டம்
------------------------------------------
கடந்த ஆண்டில் 31.08.2019-ல் வெளியிடப்பட்ட அஸ்ஸாம் மாநிலத்தின் தேசிய குடிமக்கள் பதிவேட்டின்படி 19,06,657 பேர் தங்களின் இந்தியக் குடியுரிமையை நிருபிக்க முடியாமல் பதிவேட்டில் இடம் பெற முடியாமல் போனவர்களாகும். இதில் 5 இலட்சம் பேர் வங்காள இந்துக்கள், 7 இலட்சம் பேர் முஸ்லிம்கள் மீதமுள்ள 7 இலட்சம் பேர் வட இந்திய இந்துக்கள். ஆக தங்களின் இந்தியக் குடியுரிமையை நிருபிக்கத் தவறிய 19 இலட்சம் பேரில் 12 இலட்சம் பேர் இந்துக்கள்.

இதுவரை பங்களாதேஷிலிருந்து சட்டவிரோதமாக வந்து குடியேறிய முஸ்லிம் அகதிகளால்தான் அஸ்ஸாம் மாநிலம் வெகுவாகப் பாதிக்கப்பட்டதாக பிரச்சாரம் செய்து வந்த சங்கிகளுக்கு இந்த புள்ளி விவரம் மிகப் பெரும் அதிர்ச்சியைத் தந்தது.

அஸ்ஸாம் ஒப்பந்தத்தில் 25.03.1971-க்கு பின்னர் அஸ்ஸாமில் குடியேறிய குடியுரிமை அற்ற அனைவரையுமே வெளியேற்றுவதாக கூறப்பட்டுள்ளதே ஒழிய முஸ்லிம்களை மட்டும் வெளியேற்றுவதாக கூறப்படவில்லை. எனவே குடியுரிமை அற்ற 12 இலட்சம் இந்துக்களைக் காப்பாற்ற இந்துத்துவ அரசால் கொண்டு வரப்பட்டதுதான் குடியுரிமை திருத்த சட்டம். அதிலும் அஸ்ஸாம் ஒப்பந்த விதிகளுக்கு முரணாக 1971 என்ற ஆண்டுக் கணக்கை 2014-வரை என இச்சட்டத் திருத்தம் மாற்றி 7 இலட்சம் முஸ்லிம்களை மட்டும் தவிர்த்து விட்டு மீதமுள்ள 12 இலட்சம் பேருக்கு குடியுரிமை அளிக்க வகை செய்கிறது.

ஆக அஸ்ஸாம் மக்களின் ஏற்கப்பட்ட கோரிக்கையான 1971-க்கு பிறகு அஸ்ஸாமுக்குள் குடியேறிய இந்தியக் குடியுரிமையற்ற அனைவரையும் வெளியேற்றுவோம் என்ற மத்திய அரசின் உடன்படிக்கையும், அதை அமுல்படுத்தக் கோரும் உச்ச நீதி மன்றத்தின் உத்தரவும் கூட அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் தொகை பதிவேடு
---------------------------------------------------------------
இது வழக்கமாக பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் கணக்கெடுப்பு. இம்முறை ஏன் இத்தனை விமர்சனங்களுக்கு உள்ளாகிறதெனில் அதன் உள் நோக்கம் விசமத்தனமானது என்பதால்தான். இதுவரை சேகரித்த விவரங்களோடு கூடுதலாக பெற்றோரின் பிறந்த இடம் உள்ளிட்ட இன்னும் பல விவரங்களை சேகரிப்பதன் உள்நோக்கம் வெளிப்படையாகவே தெரிகிறது.

நச்சுத் திட்டம்
----------------------
முதலில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். பின்னர் அதில் கூடுதலாக கேட்கப்பட்டு, சேகரிக்கப்பட்ட விவரங்களின் அடிப்படையில் தேசிய குடியுரிமைப் பதிவேட்டுக்கான தகுதியற்றவர்கள் என குடிமக்களில் ஒரு பிரிவினர் ஒதுக்கப்படுவார்கள். அப்படி ஒதுக்கப்பட்டவர்களில் முஸ்லிம்கள் தவிர மற்றவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்தின் உதவியோடு குடியுரிமை பெற வாய்ப்பு பெறுவார்கள். அதுவும் அரசின் விருப்பத்துக்கு உட்பட்டதாக இருக்கும். குறிப்பாக பெருவாரியான முஸ்லிம்கள் தங்களின் குடியுரிமையை இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டு தடுப்பு முகாம்களில் சிறை வைக்கப்படுவார்கள்.

இது பாசிச அரசின் திட்டம். இது அவர்களின் எழுபதாண்டு கனவுத் திட்டம்.

இது மேம்போக்காகப் பார்க்கும் போது முஸ்லிம்களுக்கு எதிரான அரசியல் திட்டமாகத் தெரிகிறது. ஆனால் இதன் நுண்ணரசியலை நோக்கினால் இது முஸ்லிம்களுகெதிரானது மட்டுமல்ல, இந்துத்துவ அரசியலுக்கு எதிராக நிற்கும் அனைத்துத் தரப்பினருக்குமே எதிரானது என்பதை உணரலாம்.

உதாரணத்துக்கு "குண்டர் தடுப்பு சட்டம்" அமுல்படுத்தப்பட்ட போது இது கடுமையான குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் குண்டர்களை தடுப்புக் காவலில் வைப்பதற்கான சட்டம் என்றுதான் சொல்லப்பட்டது. ஆனால் அரசு நடத்தும் சாராயக் கடைகளை மூட வேண்டும் எனப் பிரச்சாரம் செய்த சட்டக் கல்லூரி மாணவி "குண்டர்" என இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டார் என்பதை நாம் மறந்து விட முடியாது.

ஆதார் அட்டை அனைத்து பரிவர்த்தனைக்கும் கட்டாயமாக்கப்பட்டது போல் இனி தேசிய குடியுரிமைப் பதிவேட்டின் பதிவு கட்டாயமாக்கப்படும்.

தேசிய குடியுரிமைப் பதிவேட்டில் பதிவு செய்யும் அதிகாரிகள் ஒருவரின் ஆவணங்களை அரசியல் காரணங்களுக்காக நிராகரிக்கும் பட்சத்திலும் அவர் குடியுரிமை மறுக்கப்பட்ட அகதியாகக் கருதப்பட்டு தடுப்பு முகாமுக்குத்தான் அனுப்பப்படுவார். அவரின் மேல் முறையீட்டை தீர்ப்பாயம் விசாரித்து தீர்ப்பளிக்க பல ஆண்டுகள் ஆகும். அதுவரை அந்நபர் தடுப்பு முகாமில்தான் இருக்க வேண்டும்.

அரசு அதிகார நிர்வாகமும், தீர்ப்பாயமும் அரசுக்கு விசுவாசமானதே ஒழிய மக்களின் சேவைக்கானது அல்ல. எனவே எந்த ஒரு குடிமகனும் அரசியல் காரணங்களுக்காகவே குடியுரிமை மறுக்கப்பட்டு தடுப்பு முகாமில் சிறைப்படுத்தப்படும் அபாயம் உள்ளது.

தீப்பிடித்து எரிவது பக்கத்து வீடுதானே என்று சுகமாக உங்கள் பஞ்சணையில் உறங்கி வழியாதீர்கள். அடுத்து உங்கள் வீடுதான். எரிந்த சாம்பலில் தெரியப் போவதில்லை உங்கள் மத அடையாளம்.

இன்று நான்... நாளை நீ...

வழக்கறிஞர்
ஜீவ கிரிதரன்.

No comments:

Post a Comment