இந்திய மக்களால் அதிகம் பேசப்படும் வார்த்தை CAA, NRC, NPR. இதை பற்றி பல தரப்பினரும் பல்வேறு விளக்கங்களை கொடுத்துள்ளனர். ஆதாரபூர்வமான தகவல்கள் மூலம் CAA, NRC, NPR பற்றி முழுமையாக அறிந்து கொள்வது தான் இந்த ஆக்கத்தின் நோக்கம்.
அரசு ஆவணங்கள் மற்றும் அரசின் அதிகாரபூர்வ இணையதளங்களில் உள்ள தகவல்களை கொண்டு தொகுக்கப்பட்ட செய்திகள் இவை. (ஆதாரங்கள் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது சரிபார்த்து கொள்ளவும்)
1955-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்திய குடியுரிமை சட்டம் (Citizenship Act, 1955) பலமுறை திருத்தப்பட்டது. 2003-ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான பி.ஜே.பி அரசு இந்த குடியுரிமை சட்டத்தில் NRC-யை உருவாக்க திருத்தம் கொண்டு வந்தது (The Citizenship (Amendment) Act, 2003).
அதில் இந்தியாவில் உள்ள அனைத்து இந்திய குடிமக்களை கணக்கெடுத்து பதிவு செய்து, அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படவேண்டும் என்றும், அதற்க்காக தேசிய இந்திய குடிமக்கள் பதிவேடு (National Register of Indian Citizen (NRIC)) உருவாக்கப்பட வேண்டும் என்ற (14A) விதி சேர்க்கப்பட்டது. (NRIC சுருக்கமாக NRC (National Register of Citizen) என அழைக்கப்படுகின்றது)
இந்த CAA திருத்த சட்டம் 2004 ஜனவரியில் அமலுக்கு வந்தது. 2004 நடந்த பொது தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. காங்கிரஸ் அரசு தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) உருவக்குவதற்க்கு முன் , NPR (National Population Register) என்ற தேசிய மக்கள் தொகை பதிவேட்டை உருவாக்கியது.
முதலில் NPR மூலம் மக்களிடம் இருந்து தகவல் திரட்டி அதிலிருந்து NRC பட்டியலை உருவாக்குவது தான் அரசின் நோக்கம். "The creation of the National Population Register (NPR) is the first step towards preparation of the NRIC" என்ற வாசகம் நான் கீழே கொடுத்துள்ள அரசின் இணையதளத்தில் உள்ளது.
இதன் அடிப்படையில் 2005-ஆம் ஆண்டு சோதனை முயற்சியாக NPR பதிவு செய்யப்பட்டது. பின்னர் 2009-ஆம் ஆண்டு கடலோர பகுதிகளில் NPR கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 2010-ஆம் ஆண்டு முதன் முறையாக மக்கள் தொகை கணக்கெடுப்புடன் (census) சேர்த்து NPR கணக்கெடுப்பும் நடத்தப்பட்டது. இதில் 118 கோடி மக்களின் விபரங்கள் NPR-ல் சேர்க்கப்பட்டது.
இதன் பின்னர் 2014-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பி.ஜே.பி ஆட்சியை பிடித்தது. ஆட்சியில் அமர்ந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் ஜூன் 2014-ல் NPR தகவல்கள் சரிபார்த்து சரி (update) செய்யப்படும் என அரசு அறிவித்தது. (அதற்க்கான அரசின் அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது)
பி.ஜே.பி அரசால் 2015-ஆம் NPR மீண்டும் புதுபிக்கப்பட்டது (NPR Updated), எனவே உங்களின் விபரங்கள் NPR-ல் ஏற்கனவே 2010-ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டு விட்டது. பின்னர் 2015-ல் மீண்டும் ஒரு முறை சரிபார்க்கப்பட்டது (Updated).
2010-ஆம் ஆண்டை போல் இந்த முறையும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து NPR சரிபார்ப்பும் (Updating NPR) நடத்தப்பட உள்ளது (இப்போது Digital முறையில்).
ஆனால் இந்த முறை NPR சரிபார்ப்பில் கூடுதலாக பாஸ்போர்ட் விபரமும், தாய், தந்தையின் பிறந்த தேதி, பிறந்த இடத்திற்க்கான விபரமும் கேட்க்கப்பட உள்ளது. (இது மக்களுக்கு சிரமத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது, ஏனென்றால் பெரும்பாலான இந்திய குடிமக்களிடம் பாஸ்போர்ட் இல்லை, தாய், தந்தை பிறந்த தேதி, பிறந்த இடத்திற்க்கான ஆவணங்கள் இல்லை)
அடுத்து NRC பற்றி பார்ப்போம். 2003-ல் NRC (அல்லது NRIC) உருவாக்கப்பட வேண்டும் என்று பி.ஜே.பி அரசு சட்டம் இயற்றியது. அதன் பின்னர் வந்த காங்கிரஸ் அரசு NRC-யை நேரடியாக உருவாக்காமல் NPR-யை உருவாக்கியது. NPR-ல் கிடைக்கும் தகவலை கொண்டு NRC பட்டியல் தயாரித்து குடியுரிமைக்கான அடையாள அட்டை வழங்க முடிவு செய்தது.
2010-ல் NPR விபரங்கள் சேகரிக்கப்பட்டதே தவிர NRC பட்டியல் தயாரிக்கப்படவில்லை. இந்த நிலையில் அஸ்ஸாமை சேர்ந்த சில அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது, உச்ச நீதிமன்றம் அஸ்ஸாமில் NRC பட்டியல் தயாரிக்க உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் டிசம்பர் 2013-ல் அஸ்ஸாமில் NRC அமல்படுத்தப்படும் என்ற உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது (அரசானை இணைக்கப்பட்டுள்ளது)
2016-ஆம் ஆண்டு அஸ்ஸாமில் பி.ஜே.பி ஆட்சியை பிடித்தது. அஸ்ஸாமிற்க்கான முதல் NRC பட்டியல் டிசம்பர் 2017-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டு இறுதி பட்டியல் வெளிடப்பட்டது. இதில் (அனைத்து மதத்தினரையும் சேர்த்து) 19 லட்சம் பேருக்கு குடியுரிமை மறுக்கப்பட்டது. இந்தியாவில் அஸ்ஸாமை தவிர வேறு எங்கும் NRC இது வரை அமல்படுத்தப்படவில்லை
CAA சட்டம் கடந்த ஆண்டு மீண்டும் திருத்தப்பட்டது. இதில் மூன்று நாடுகளை சேர்ந்த மக்கள் (மட்டும்) இந்தியாவில் தொடர்ந்து 5 ஆண்டுகள் தங்கி இருந்ததிற்க்கான முறையான ஆவணங்கள் சமர்பித்தால் இந்திய குடியுரிமை வழங்க திருத்தம் செய்யப்பட்டது. இதில் இஸ்லாமியர்கள், இலங்கை அகதிகள் சேர்க்கப்படவில்லை.
CAA, NRC, NPR சுருக்கமாக :
CAA மூலம் 2003-ல் பி.ஜே.பி அரசு, இந்திய குடிமக்கள் பதிவேட்டை (NRC) தயாரித்து, இந்திய குடிமக்கள் என உறுதி செய்யப்பட்டவர்களுக்கு அடையாள அட்டை வழங்க திட்டமிட்டது. அதன் பின்னர் வந்த காங்கிரஸ் அரசு NRC-க்கு பதிலாக NPR-யை உருவாக்கியது. NPR மூலம் NRC தயாரிக்கப்பட்டு அடையாள அட்டை வழங்கப்படும் என அறிவித்தது.
(NPR, NRC மூலம் அடையாள அட்டை வழங்குவதற்க்கான அரசின் செயல்திட்டம் 2011 சென்சஸ் விளம்பர அறிவிப்பில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது)
காங்கிரஸ் அரசு NPR தகவலை சேகரித்து வைத்து கொண்டதோடு நிறுத்தி கொண்டது. NRC பட்டியல் தயாரிக்கவோ, குடியுரிமை அடையாள அட்டை வழங்கவோ எந்த முனைப்பும் காட்டவில்லை. உச்சநீதி மன்ற உத்தரவால் அஸ்ஸாமில் NRC-யை காங்கிரஸ் அமல்படுத்தியது. அதிலும் பெரிய அளவிற்க்கு முனைப்பு காட்டவில்லை.
பின்னர் வந்த பி.ஜே.பி அரசு CAA, NRC, NPR விஷயங்களில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது. முதல் கட்டமாக அஸ்ஸாமில் NRC-யை முழுமைபடுத்தியுள்ளது. நாடு முழுவதும் NRC அமல்படுத்தப்படும் என உள்துறை அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மக்கள் போராட்டத்தினால் NRC-யை நாடு முழுவதும் அமல்படுத்தும் திட்டம் இல்லை பின்வாங்கியுள்ளனர்.
CAA, NRC, NPR என்ன தொடர்பு ?
CAA-ல் பல விதிகள் உள்ளது. அதில் உள்ள ஒரு விதிதான் NRC உருவாக்கி குடியுரிமைக்கான அடையாள அட்டை வழங்குவது. நேரடியாக NRC பட்டியலை தயாரிக்காமல், இந்தியாவில் வசிக்கும் மக்கள் அனைவரின் தகவல்களை திரட்டுவதுதான் NPR. இந்த NPR பட்டியலில் இருந்து குடியுரிமை பெற தகுதியானவர்கள் பிரிக்கப்பட்டு NRC-ல் சேர்க்கபடுவார்கள். அவர்களுக்கு குடியுரிமைக்கான அடையாள அட்டை வழங்கப்படும்.
(குடியுரிமை சட்டத்தை CA என்று தான் குறிபிடவேண்டும். இதில் வரும் திருத்தங்களை Amendment என்ற வார்த்தை சேர்த்து CAA என அழைப்பார்கள்)
CAA, NRC, NPR-ன் இலக்கு குடியுரிமைக்கான அடையாள அட்டை வழங்குவது. நீங்கள் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் இந்திய குடியுரிமைக்கான அடையாள அட்டையை பெறாதவரை இந்த CAA,NRC,NPR உங்களை துரத்தி கொண்டுதான் இருக்கும்.
அரசு ஆவணங்களில் உள்ள தகவலையே தொகுத்துள்ளேன். நான் குறிபிட்ட தகவல்களில் தவறு இருப்பதாக கருதினால் ஆதாரத்துடன் சுட்டி காட்டவும். ஆதாரங்களின் அடிப்படையில் பதிவை மாற்றி அமைக்கின்றேன்
ஆக்கம் : S.சித்தீக் M.Tech
ஆதாரங்கள் :
1. NRC கொண்டுவர 2003-ல் திருத்தப்பட்ட CAA சட்டம் அரசு கெஜெட்டில் உள்ளது (பக்கம் 6) http://egazette.nic.in/WriteReadData/2004/E_7_2011_119.pdf
2. NPR-ல் இருந்து NRC தயாரிக்கப்படும் என்ற விபரம் https://archive.india.gov.in/spotlight/spotlight_archive.php?id=96
3. 2011- ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அரசு விளம்பரம், NPR, NRC செயல்திட்டம் இதில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது http://censusindia.gov.in/Ad_Campaign/press/census2011.pdf
4. 2011 - ஆம் ஆண்டு NPR கையேடு http://censusindia.gov.in/2011-Documents/NPR%20English.pdf
5. 2014-ல் NPR புதுபிக்கப்படும் என்ற உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பு https://pib.gov.in/newsite/PrintRelease.aspx?relid=105709
6. NPR பற்றி : http://censusindia.gov.in/2011-Common/IntroductionToNpr.html
7. ஐ.நாவில் 2009 -ஆம் ஆண்டு NPR பற்றி மத்திய அரசு அளித்த அறிக்கை. ஐ.நாவின் இணையதளத்தில் உள்ளது பார்க்க https://unstats.un.org/unsd/censuskb20/KnowledgebaseArticle10646.aspx
8. 2013 டிசம்பரில் அஸ்ஸாமில் NRC அமல்படுத்தப்படும் என்ற அரசாணை http://www.nrcassam.nic.in/pdf/not11.pdf
9. https://www.financialexpress.com/opinion/npr-a-statistical-nightmare/1807957/
https://www.facebook.com/100005738678714/posts/1236016376599640/?d=n
No comments:
Post a Comment