Saturday, 1 February 2014

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டில் குளறுபடி - சட்டபேரவையில் பேச வாய்ப்பு மறுப்பு - மமக வெளிநடப்பு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

இன்று (1.02.2014) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் உரையின் போது பின் வரும் கருத்துகளை பதிவுச் செய்ய முயற்சித்த மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா கருத்துகளை அவை குறிப்பிலிருந்து நீக்கி பேச வாய்ப்பு மறுக்க பட்டதை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, அஸ்லம் பாஷா ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்
மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவரு

ம், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா இன்று சட்டமன்ற பேரவையில் பேச முற்பட்ட விஷயங்கள் கீழே குறிப்பிட்டுள்ளது
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே
மேதகு ஆளுநர் அவர்கள் தனது உரையில் வேலை தேடுபவர்களையும் வேலை வாய்ப்பு அளிப்பவர்களையும் இணைக்கும் தளமாக மாநில வேலை வாய்ப்பு இணைய தளம் ஒன்று அரசின் சார்பாக அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வேலை தேடும் இளைஞர்களுக்கு மிக்க பயனுள்ளதாக இருக்கும் என்ற வகையில் வரவேற்கிறேன்.

தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு கடந்த திமுக ஆட்சியின் அளிக்கப்பட்ட இடஒதுக்கீட்டை அதிகரித்து தர வேண்டும் என்ற கோரிக்கையை எங்கள் அமைப்பின் சார்பாக நாங்கள் நீண்ட காலமாக வைத்து வருகிறோம். சட்டமன்றத்தில் பல முறை இதனை வலியுறுத்தி பேசியிருக்கிறேன். பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிசீலனையில் இது இருப்பதாக ஒரு முறை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் அமைச்சர் கடந்த 2012ல் பட்ஜெட் கூட்டத்தொடரில் தெரிவித்தார். ஆனால் காலங்கள் உருண்டோடிய பிறகு கூட இந்த ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகளும் 8 மாதங்களும் கழிந்த பிறகும் கூட தேர்தல் நேரத்தில் அதிமுக அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட வில்லை. இந்த ஆட்சியில் பல்வேறு துறைகளில் பணியாளர்கள் நியமனத்தின் போது பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு உரிய பணியிடங்கள் அளிக்கப்படவில்லை என்பதையும் வருத்தத்துடன் பதிவுச் செய்ய விரும்புகிறேன். எடுத்துக் காட்டாக சொல்ல வேண்டுமெனில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பாக வெளியிடப்பட்ட அறிவிக்கை எண் 17-2013 தேதி 29.12.2013ல் தொகுதி 1 பணிகளுக்கான பணி நியமனங்கள் 33 காவல் துணை கண்காணிப்பாளர்கள் பதவிகளில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு ஒரு இடம் கூட ஒதுக்கப்படவில்லை. இதே 33 வணிக வரி உதவி ஆணையாளர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பில் 1 இடம் பிசிஎம்க்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துணை கண்காணிப்பாளர் பணியிடங்களில் மட்டும் ஏன் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்பதற்கான விளக்கத்தை இந்த அரசு அளிக்க வேண்டும். இதே போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதிலும் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். இந்த அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு அரசு பணிகளுக்கான நியமனத்தில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடு அடிப்படையில் எவ்வாறு பணியிடங்கள் நிரப்பபட்டன என்பது குறித்து தெளிவான அறிக்கை இந்த அவையில் வைக்கப்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

இந்த அரசு பள்ளிக் கல்வித் துறையில் செய்து வரும் சேவைகளை ஆளுநர் தனது உரையில் விவரித்துள்ளார். பள்ளியில் பயிலாதவர்கள் என கண்டறியப்பட்ட 51477 குழந்தைகளில் இந்த ஆண்டு43838 குழந்தைகள் முறையான பள்ளிக் கல்விமுறைத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார். இது ஒரு நல்ல நிகழ்வு தான். ஆனால் தொடர்ந்து இந்த அவையில் கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் போது கூட எங்கள் கட்சியின் சார்பாகவும் வேறு பல எதிர்கட்சிகளின் சார்பாகவும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வு டெட் தேர்வில் தமிழகத்ததில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண் தளர்வு அளிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.

ஆசிரியர் பதவிகளுக்காக தகுதித் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு National Council for Teacher Education 11.02.2011ல் எழுதிய கடிதத்தில் டெட் தேர்வில் வெற்றி பெற 60 விழுக்காடு மதிப்பெண்எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டாலும் மாநிலங்களில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடுகொள்கைக்கு ஏற்ப பிற்படுத்தப்பட்டோர் , பட்டியலினத்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்குதேர்வுக்கான குறைந்த பட்ச மதிப்பெண்ணில் சலுகை அளிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டி நான் இந்த அவையில் உரையாற்றியுள்ளேன். ஆனால் இந்த அரசு எங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை. பல்வேறு அரசியல் கட்சிகளும் சமூக இயக்கங்களும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தினார்கள்.

தமிழக ஆசிரியர்கள் தகுதிதேர்வு நடத்துவதற்கு தமிழக ஆசிரியர் தேர்வு வாரியத்தை நியமித்து 15.11.2011ல் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசு ஆணை 181லும், இட ஒதுக்கீடு பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு அளிக்க வழங்கிட வகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் 2012மற்றும் 2013 ஆண்டுகளில் நடைபெற்ற தகுதி தேர்வுகளில் இட ஒதுக்கீடு பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு வழங்கப்படவில்லை.

தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (NCTE) மிகச் சரியான வழிகாட்டுதலை அளித்துள்ளது. அதன்படி இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்குத் தகுதி மதிப்பெண்களில் தளர்வு காட்டப்பட வேண்டும்.ஆந்திரா, கேரளம், ஒரிசா, அஸ்லாம், பீகார் மாநிலங்களில் அத்தகு முறைபின்பற்றப்பட்டுள்ளது. குறிப்பாக ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் முன்னேறிய ஜாதியினருக்கு 60 மதிப்பெண்கள், பிற்படுத்தப்பட் டோருக்கு 50 மதிப்பெண்கள், தாழ்த்தப்பட்டோருக்கு 40 மதிப்பெண்கள் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இந்த சூழலில் இது குறித்து பொதுப் பள்ளிக்கான மாநில மேடை என்ற அமைப்பின் பொதுச் செயலாளர் திரு. பு.பா. பிரின்ஸ்கஜேந்திரபாபு அவர்களால் அனுப்பப்பட்ட புகார்களைத் தொடர்ந்து, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் (National Commission of Scheduled castes) தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை மற்றும் ஆசிரியர் தேர்வு ஆணையத்திற்கு அனுப்பியுள்ள 23.1.2014 நாளிட்ட கடிதத்தில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் மதிப்பெண் தளர்வு வழங்க வாய்ப்பு அளிக்கத் தவறியதைச் சுட்டிக் காட்டி, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்குஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வு வழங்கிட உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாடு தேர் வாணையத்தின் செயல்பாடு தன்னிச்சையானது - அநீதியானது - சட்ட விரோதமானது - இடஒதுக் கீடுக்கு எதிரானது (Arbitrary, Unjust, Unlawful and Against the Reservation Policy) என்று கடினமான பதங்களையும் பயன்படுத்தியுள்ளது. அத்தோடு தேசிய தாழ்த்தப்பட்டோருக்கான ஆணையம் நிறுத்திக் கொள்ளவில்லை; இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு வழங்கத் தவறியஅதிகாரிகள்மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு எண் 4இன் கீழ் நடவடிக்கை எடுக்கும்படியும் வலியுறுத்தியுள்ளது.

இந்த அடிப்படையில் இதற்கு மேலும் தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தாமல் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக் குரிய தளர்வு மதிப்பெண் அடிப்படையில் ஏற்கெனவே தேர்வு எழுதியவர்களைத் தேர்வு செய்யுமாறு வலியுறுத் துகிறேன். ஆசிரியர் தேர்வு ஆணையம் இனிநடத்தவிருக்கும் தேர்வுகளை இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தளர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை மேதகு ஆளுநர் தமது உரையில் முழுமையான மருத்துவ சேவைகளை அளிப்பதில் இந்தியாவிலேயே முன்மாதிரி மாநிலமாகத் தமிழகம் உருவெடுத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். ஓமாந்தூரர் அரசினர் பல் நோக்கு சிறப்பு உயர் மருத்துவமனையில் பேராசிரியர்கள் பணி நியமனம் தொடர்பான மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் (Medical Services Recruitment Board) 2013 டிசம்பர் 27 அன்று இணையதளத்தில் விளம்பரம் செய்திருந்தது. இந்தப் பணி நியமனங்கள் ஒப்பந்த அடிப்படையில் செய்யப்படும் என்றும் இடஒதுக்கீடு அறவே கிடையாது என்றும் இந்தியா முழுவதிலிருந்தும் விண்ணப்பிக்கலாம் என்றும், ஓய்வு பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம் என்றும் அந்த விளம்பரத்தில் குறிக்கப்பட்டு இருந்தது.
பல்நோக்கு சிறப்பு உயர் மருத்துவமணையில் மருத்துவத்துறை பேராசிரியர்கள் நியமனத்தில் இந்தியாவிலியே சமூக நீதிக்கு எடுத்துக்காட்டாக திகழும் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடு முறை கடைபிடிக்கப்பட மாட்டது என்று அறிவித்துள்ளது அதிர்ச்சியை அளித்துள்ளது.

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள பணி நியமன விளம்பர அறிக்கையை விலக்கிக் கொண்டு, தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்து வரும் 69 சதவிகித அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும் என்ற உத்தரவாதத்துடனும், சம்பள விகிதத்தில் பாரபட்சம் அற்ற தன்மையுடனும், புது விளம்பரத்தினை வெளியிட வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன். ஒப்பந்த முறை நியமனம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்தும் விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பும் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் மனிதநேய கட்சி சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.
ஏற்கெனவே சுப்ரீம்கோர்ட்டால் கொடுக்கப்பட்ட டில்லி AIIMS FACULTY -பேராசிரியர்கள் போட்ட வழக்கில் 18.7.2013 தீர்ப்பில் - மண்டல்கமிஷன் வழக்காகிய இந்திரா சஹானி வழக்கு என்ற வழக்கில் வெறும் கருத்துரையாக,OBSERVATION- (OBITER-DICTA) சொல்லப்பட்ட ஒன்றை நீதிமன்றம் சுட்டிக் காட்டியது. உயர் சிறப்பு மருத்துவத் துறைப் படிப்பு (Super Speciality) மருத்துவத்துறையில் இட ஒதுக்கீடு கொடுப்பது விரும்பத்தக்கதல்ல என்றும் கருதலாம் என்பதாகக் குறிப்பிட்ட அந்தப் பெரும்பான்மை தீர்ப்பில் பாரா 861இல்

“..... Be that as it may, we are of the opinion that in certain services and in respect of certain posts, application of the rule of reservation may not be advisable for the reason indicated hereinbefore
என்று குறிப்பிட்டுள்ளது.

இதன் தமிழாக்கம்: முக்கியமான உயர்நிலை பதவிகளில் சேருவதற்கான விதிமுறைகளை பின்பற்றி பணிக்கான நபர்களைத் தேர்ந்தெடுக்கும் போது இடஒதுக்கீட்டுக்கான சட்டதிட்டங்கள் கடைப்பிடிக்கப் படுவது உகந்ததாக இருக்காது என்று கூறப்பட்டது. இது தீர்ப்புரை அல்ல; வெறும் கருத்துரை - பொதுவாகச் சொல்லப்பட்ட கருத்து.

இதன்படி இது சட்டக்கட்டாயத்தன்மை (MANDATORY LAW) அல்ல. நீதிபதியின் ஆலோசனை போன்ற ஒரு கருத்து.

அரசமைப்புச் சட்டம் 16 ஆவது பிரிவு கூறுவது என்ன?

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தருவது பற்றிய 16 ஆவது பிரிவில், போதிய அளவு பிற்படுத் தப்பட்டவருக்குத் தருவது என்பதும், பிற்படுத்தப்பட்டவரை அடையாளம் கண்டறிந்து பட்டியலில் சேர்ப்பது என்பது பற்றியுமான உரிமையை அரசுக்குத்தான் அளித்துள்ளதே தவிர, நீதிமன்றங்களுக்கு அல்ல. In the opinion of the State என்றுதான் குறிப்பிடுகிறது.

நீதிமன்றங்கள் கருத்துக்கள் கூட கூற இயலாது என்பது இதன் மூலம் திட்டவட்டம்!

இந்திரா சஹானி (மண்டல்) வழக்கில் மேலே குறிப்பிட்ட பத்தியிலேயே இக்கருத்து முடிக்கப்பட்டு, வலியுறுத்தப்பட்டுள்ளது. “It is the Government of India to consider and specify the service and posts to which the rule of reservation shall not apply (but on that account the implementation in the impugned office Memorandum dated 13th August 1990 can not be stayed or with held)”

இதன் தமிழாக்கம்: இட ஒதுக்கீட்டிற்குப் பொருந்தாத சேவைகள் மற்றும் பணியிடங்கள் எவை என்பதை இந்திய அரசுதான் குறிப்பிட வேண்டும். (ஆனால் இந்த காரணங்களுக்காகவே குறிப்பிடப்பட்ட ஆகஸ்டு 13, 1990 நாளிட்ட அலுவலக குறிப்பினை நடைமுறைக்கு தடை விதிக்கவோ, நிறுத்தி வைக்கவோ முடியாது).

இதன்படி, - அண்மையில் அய்ந்து நீதிபதிகள் மறு சீராய்வில் குறிப்பிட்டபடி, பந்து மத்திய அரசின் கோர்ட்டுக்குள்ளே தான் இருக்கிறது. அதாவது டில்லி மத்திய அரசுக்குத்தான் எவை எவை தெளிவாக இடஒதுக்கீட்டில் சேர்க்கப்படலாம் என்று கூறவேண்டிய பொறுப்பு என்று கூறிவிட்டு கடைசியில் தேவையற்ற ஒரு கருத்துரையைப் போட்டு ஒரு புதுக் குழப்பத்தை தீர்ப்பின் மூலம் எடுத்துக்காட்ட முயன்றுள்ளார்கள்.

தேவையற்ற கருத்து
அரசியல் சட்டத்திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று கூறிய கருத்தே அது!

மத்திய அரசு குறிப்பிட்டுச் சொன்னாலே போதுமானது. அரசியல் சட்டத் திருத்தம் என்பது தேவையற்ற ஒன்று- இந்திரா சஹானி வழக்கின் பாரா 861 வாக்கியங்கள் அதை தெளிவாக்குகின்றன.

டில்லி எய்ம்ஸ் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் 18.7.2013 அன்று அளித்த தீர்ப்புரைக்குப்பிறகு, மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத், நாடாளுமன்றத்தில் தெளிவாகவே குறிப்பிட்டார்: We are ignoring the Judgement என்று கூறினார். அதனைத் தொடர்ந்து சீராய்வு மனுவை நீதிமன்றத்தில் தொடருவோம் - நீங்கள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி நியமனங்களைச் செய்யலாம் என்று மத்திய சுகாதார அமைச்சகம், எய்ம்ஸ் நிறுவனத்துக்கு தாக்கீது பிறப்பித்தது. அதன் அடிப் படையில் ரிஷிகேஷ் எய்ம்ஸ் நிறுவனம் ஒப்பந்த அடிப் படையில் பணி நியமனம் செய்யும் ஒரு விளம்பரத்தில் இட ஒதுக்கீடு உண்டு என்று தெளிவாகவே தெரிவித்திருந்தது. துவக்கத்திலிருந்தே இடஒதுக்கீட்டுக்கு எதிராக நீதிமன்றங்கள் முட்டுக்கட்டை போடுவதும், அதன்பிறகு புதிய சட்டத்திருத்தம், ஆணைகளை, அரசுகளும் சட்டமன்றங்களும், நாடாளுமன்றமும், ஆட்சி மன்றமும் கொண்டு வந்து செயல்படுத்துவதும் நமது சமூகநீதிப் போராட்டத்தில் பல்வேறு மைல்கற்கள் அல்லவா?

கூடங்குளம் அணுஉலை தென் தமிழக மக்களுக்கு ஆபத்தானது என்று கூறி கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக இடிந்தகரையில் போராடி வரும் மக்கள் தங்கள் போராட்டதின் 900வது நாள்முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஜனவரி 30 முதல் தொடங்கியுள்ளார்கள். உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்திலின் அடிப்படையில் இரண்டுலட்சத்து இருபத்தேழாயிரம் மக்கள் மீது போடப்பட்டிருக்கும் 360 பொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையில் அடங்கும். இதனை இந்த அரசு கனிவுடன் பரிசீலித்து அங்கு சுமூக நிலை ஏற்பட வழிவகைச் செய்ய வேண்டும். கூடங்குளத்தில்
கடந்த 2011 செப்டம்பர் மாதம் தமிழக முதல்வர் அவர்களை நேரில் சந்தித்து, மேற்கு வங்காள மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி ஹரிப்பூர் அணுமின் நிலையத்தை வேண்டாம் என்றுசொல்வது போல நீங்களும் சொல்லுங்களேன் என்று அணுஉலைக்கு எதிராக போராட்டம் நடத்துவோரின் பிரதிநிதிகள் கேட்டுக் கொண்டார்கள். அப்போது தமிழக முதல்வர் “அந்தத் திட்டம்துவக்க நிலையில் இருப்பதால் அவரால் அப்படி கேட்டுக் கொள்ள முடிகிறது; ஆனால் கூடங்குளம் திட்டம் முடியும் தருவாயில் இருக்கிறதே” என்று சொன்னார். கூடங்குளத்தில் 3 & 4 அணுஉலைகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கி, இடமும் தேர்ந்தெடுத்து விட்டோம் என்று அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் அறிவித்திருக்கிறது. ஆனால் தமிழக அரசு இதுவரை அந்தஅறிவிப்புக்கு எந்தவிதமான எதிர்வினையும் புரியாமல் தவிர்த்து வருகிறது. இது குறித்து தமிழக அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
காவல்துறை சிறப்பாக செயல்பட வரலாறு காணாத அளவிற்கு 1,448.74 கோடி ரூபாய் ஒதுக்கீடுச் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் காவல்துறையின் ஒரு பகுதியினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவது வருத்தம் அளிக்கின்றது. கடந்த ஜனவரி 7 அன்று நீலாங்கரை காவல் நிலைய ஆய்வாளர் புஷ்பராஜ் என்பவர் 16வயது சிறுவன் தமீம் அன்சாரியை விசாரணையின் போது துப்பாக்கியால் சுடப்பட்டு அந்த சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். எங்கள் கட்சியீன் சார்பாக நாங்கள் இது குறித்து போராட்டம் நடத்தினோம். இந்த ஆய்வாளர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு கோட்டாச்சியரின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. தமிழக அரசின் சார்பாக இழப்பீடு அளிக்கப்பட்டது. இருப்பினும் இந்த ஆய்வாளர் மீது கொலை முயற்சி வழக்கு 307ம் பிரிவின் கீழ் படிவுச் செய்யப்பட்டு அந்த ஆய்வாளர் கைதுச் செய்யப்பட வேண்டும். இந்த ஆய்வாளர் சிறுவனை காவல்நிலையத்தில் தடுத்து வைத்ததின் மூலம் சிறார் நீதி சட்டம் Juuvenile Justice Act அளித்துள்ள விதிமுறைகளை மீறியுள்ளார். ஒரு சிறுவர் குற்றம் செய்தால் அது பற்றிய விசாரணை சிறுவர் நீதி அமர்வில் (Juuvenile Justice Board) தான் விசாரிக்கப்பட வேண்டும். எனவே சிறுவர்கள் விஷயத்தில் காவல்துறை எவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து அவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
www.tmmk.in 

No comments:

Post a Comment