Saturday, 4 April 2020

மெல்ல திரை விலகுவதாய் தோன்றுகிறது. விஜயபாஸ்கர் ஊடகங்களை சந்தித்தவரைலும் 'டெல்லிமாநாடு' என்ற வார்த்தை வெளிப்படவே இல்லை.

மெல்ல திரை விலகுவதாய் தோன்றுகிறது. விஜயபாஸ்கர் ஊடகங்களை சந்தித்தவரைலும் 'டெல்லிமாநாடு' என்ற வார்த்தை வெளிப்படவே இல்லை. தமிழகத்தின் முதல் உள்ளூர் தொற்றான மதுரை நோயாளியைப் பற்றி அவர் குறிப்பிடும்போது கூட அவருக்கு கிட்னி மற்றும் நுரையீரல் பிரச்சனை இருப்பதாகவும் எனவே கொரோனாதான் என உறுதியாகச் சொல்லவியலாதெனவும் தெரிவித்தார். பின் மறுநாள் காலை அந்த மதுரை நோயாளி மரணச்செய்தி வெளியானது. அப்போதுகூட முஸ்லிம்கள் குறித்து எதிர்மறை சித்திரம் எதுவும் வரையப்பட்டிருக்கவில்லை.

பின் காட்சி மாறி விஜயபாஸ்கர் ஓரங்ட்டப்பட்டு சுகாதாரத்துறை செயலர் ஊடகங்களை சந்திக்கிறார். 'டெல்லி மாநாடு, முஸ்லிம்கள்' என்ற பதம் கொரானாவை விட வேகமாக பரவுகிறது. சொல்லி வைத்தாற்போல திடீரென தமிழகத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரிக்கிறது. கொரோனா தொற்றாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கும் இத்தனை முஸ்லிம்களுக்கும் உண்மையிலேயே முறையான சோதனை நடத்தப்பட்டிருக்கிறதா?

ரத்தமாதிரி மற்றும் பிற பரிசோதனை முடிவுகளும் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா? எனில் சர்வதேச முடிவுகளின் அடிப்படையில் அது ஒத்துப் போகக்கூடியதுதானா? இவர்கள் குடும்பத்தினரின் உடல்நலம் எப்படி இருக்கிறது? அவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறதா? போன்ற கேள்விகளுக்கெல்லாம் விடையேயில்லை. பீலா ராஜேஷ் அறிவிக்கும் எண்களில் அவர் அறுதியிடுவதெல்லாம் "இன்று இத்தனை தொற்றாளர்களைக் கண்டறிந்துள்ளோம். அதில் இத்தனை பேர் டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்தவர்கள்" என்பதைக் கடந்து மாநிலத்திற்கு தேவையான வேறெந்த தொடர்ந்து தகவலுமில்லை.

ஆனால் களத்தில் என்ன நிகழ்வதென்ன? 'தீவிரவாதிகள்' எனும் பதத்தை விட 'நோய் பரப்புபவர்கள் ' எனும் பதம் நன்றாகவே வேலை செய்கிறது. சாலையில் போலிஸ், மருத்துவமனையில் டாக்டர், தெருவினுள் சக மனிதன் என அனைவருமே வாயில் வந்ததையெல்லாம் பேசுகிறார்கள். "துலுக்கன் நமக்கெல்லாம் கொரோனாவ பரப்பி வுட்டுட்டான்" என்பது சமூக உரையாடலாகியிருக்கிறது.

"அந்தளவுக்கெல்லாம் இல்லையென" பலரோ சிலரோ மறுக்கலாம். ஆனால் இருக்கிறதென்பது நிஜம். இன்று பொது சமூகம் கொரோனாவுக்கு பயப்பட சிறுபான்மைச்சமூகமோ பொது சமூகத்திற்கு பயப்பட என கசப்பான சமூக விலகல் துவங்கியிருக்கிறது.

நாசூக்காக புன்னகைத்து விட்டு எவ்வித உரையாடலுமற்று விலகிச் செல்லும் மனிதர்கள் உருவாகியிருக்கிறார்கள். கடந்து செல்வதுதான் எதுவும். எனினும் பெரும்பான்மையினரின் ஆதரவற்று ஒற்றைச்சமூகமாய் எத்தனையைத்தான் கடப்பது.

சரி, இன்றைய நிலையென்ன? முதலில் அத்தியாவசியப் பொருள்கள் யாவும் தடையின்றி கிடைக்குமென்றார்கள். இன்று வரை விலையதிகமெனினும் பெரும்பாலான பொருள்கள் கிடைக்கத்தான் செய்கின்றன. ஆனால் இறைச்சிக்கடைகளை நாளை முதல் தடை செய்திருக்கின்றார்கள். சமூக இடைவெளியற்றுப்போகுமென்று காரணம் சொல்லப்படுகிறது. எனில் மளிகைக் கடைகளிலும், மார்க்கெட்டிலும், இன்னபிற இடங்களிலும் முறையான சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதென இந்த அரசு நம்புகிறதா?

எனில் அசைவ உணவுத் களின் மீதான ஒவ்வாமையை ஒரு அரசே தோற்றுவிப்பது ஏன்? இதற்குமுன் ஆசிஃப் பிரியாணியின் மீது செலுத்தப்பட்ட வன்மம். மேற்கு வங்கத்திலிருந்து வந்த ஆட்டிறைச்சியை 'நாய்க்கறி' என சங்கிகள் பரப்பிய அவதூறு. இன்றுவரையிலும் கோவை HMR உணவகத்தை குறித்து பரப்பப்படும் வன்மம்நிறைந்த அபாண்டங்களிலெல்லாம் இஸ்லாமியப் பொருளாதாரத்தை சிதைக்க வேண்டுமென்ற கீழ்மைச்சிந்தனை இருந்திருக்கவில்லையா?

இப்படியான சூழலில் அத்தியாவசியப் பொருள்களில் ஒன்றான இறைச்சிக்கடைகளை ஒரு அரசே மூட உத்தரவிடுவதன் பின்னணியென்ன?

பெரும்பாலும் மதமாச்சரியங்கள் ஏதுமற்று கலந்து வாழும் இச்சமூக அமைப்பினுள் ஒட்டுமொத்த சிறுபான்மைச் சமூகமே குறிவைத்து அவதூறு செய்யப்படும்போது உடனடியாகத்தலையிட்டு தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு அரசிற்குத்தானே இருக்கிறது? டெல்லி மாநாட்டுச் சென்றவர்களில் "616 பேரின் போன்கள் அணைக்கப்பட்டிருக்கின்றன." என அவர்களை தேடப்படும் குற்றவாளிகளைப்போல அறிவித்த சுகாதாரச் செயலர் அடுத்த நாள் "அனைவரும் தாமாகவே பரிசோதனைக்கு வந்துவிட்டார்கள். அனைவருக்கும் நன்றி" என ஒற்றை வார்த்தையில் கடந்துவிட்டார்.

ஆனால் நேற்று தொடங்கி இனிவரும் காலங்களிலும் அவர் கூறிய வார்த்தையின் விளைவுகளை அனுபவிக்கப்போவது ஒட்டு மொத்த சமூகமும்தான். இனி முதல்வர் தலையிட்டு தெளிவுபடுத்தினாலும் இப்பழிச்சொல் அகலுமா எனத் தெரியவில்லை.

இறுதியாக ஊடகங்களிலும், வாட்ஸ்அப்பிலும் வரும் அவதூறுகளை அப்படியே நம்பி எதிர்வினையாற்றும் பெரும்பான்மையினரிடம் ஒன்று கேட்கிறேன். 'தீவிரவாதிகள்' என்றாலும் நம்புகின்றீர்கள். 'நோய் பரப்புபவர்கள்' என்றாலும் ஒப்புக்கொள்கிறீர்கள்.

உங்களுடனே கலந்து வாழும் ஒரு சமூகத்தைப்பற்றி உங்களுக்கென எந்த ஒரு மதிப்பீடும் இல்லையா? எனில் உங்களிடம் என்னவாகத்தான் இருக்கிறோம் நாங்கள்?

- பதிவு : Farooq Meeran


உங்கள் நன்பனான AS

No comments:

Post a Comment