அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,
தொகுதி உடன்பாடு
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்த தலைவர் ஜே.எஸ். ரிபாயி அவர்களின் தலைமையில் நானும், பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் மற்றும் பி. அப்துல் சமது ஆகியோரும் மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயம் சென்றோம்.
திமுக தரப்பில் அக்கட்சியின் பொருளாளர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான குழுவினருடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது.
நமது தரப்பில் இரண்டு தொகுதிகள் வேண்டுமென்ற கோரிக்கை வலுவாக முன் வைக்கப்பட்டது. அப்போது நமது கோரிக்கைகளை உள்வாங்கிக்கொண்ட திமுக குழு, முஸ்லிம் லீக்கிற்கு ஒரு தொகுதியும் திமுக சார்பில் இரண்டு முஸ்லிம்களுக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இந்நிலையில் இத்தகைய வாய்ப்புகளை கவனத்தில் கொண்டு மமக இம்முறை ஒரு தொகுதி ஏற்றுக்கொள்ள வேண்டுமென அவர்கள் தரப்பில் வேண்டுகோள் விடுத்தனர். விரிவான பேச்சுவார்த்தைக்கு பிறகு, மீண்டும் திமுக ஆட்சி அமையும்போது எங்களுக்கு ஒரு ராஜ்யசபா கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உறுதியாக எடுத்து வைத்தோம்.
அடுத்து கலைஞருடன் ஒப்பந்தம் போடும்போதும் இக்கோரிக்கையை திரு.ஸ்டாலின் அவர்கள் கலைஞரிடம் நமது இக்கோரிக்கையை எடுத்து கூறினார்.
இறைவன் அருளால் தலைமை கேட்ட அதே தொகுதியான மயிலாடுதுறையை இருதரப்பும் ஏற்றுக்கொண்டது.
அப்போது பேராசிரியர் திரு அன்பழகன் அவர்களும் உடன் இருந்தார்கள். இது தவிர திமுகவின் தேர்தல் அறிக்கையில் சச்சார் கமிட்டி பரிந்துரைகள் தொடர்பாகவும், ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் இட ஒதுக்கீடு தொடர்பான பரிந்துரைகளையும் வலியுறுத்தி விட்டு அவை திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கையையும் எடுத்துரைத்தோம்.
திமுக கூட்டணியில் நிறைய முஸ்லிம்கள் போட்டியிட கூடிய வாய்ப்புகள் உருவாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இக்கூட்டணி மேலும் வலிமை படும் சூழலும் உருவாகி வருகிறது.
எல்லா புகழும் இறைவனுக்கே.