அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும்,
தேசிய மனித உரிமை ஆணையத்திற்குத் தலைவராக சந்திரசூட்?
ஆளும் பாஜக கூட்டணியில் எந்த ஒரு நபரும் ஊழல் வழக்குகளில் சிக்குண்டு எதிர்க்கட்சியினரை போல பழிவாங்கப்படாமல் இருந்ததைக் கண்டுகொள்ளாமல் இருந்தது உச்ச நீதிமன்றத்தின் சாபக்கேடான செயல்.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிகழ்ந்த போது, அந்த அமர்வில் இடம் பெற்றிருந்தவர் தான் சாட்…சாத்… ‘நம்ம’ உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சந்திர சூட்! அந்த அமர்வில் பல நீதிபதிகள் இடம் பெற்றிருந்தாலும் தீர்ப்புரை எழுதியவர் சந்திர சூட் தான்
என்பதனை பின்னர் அவரது வாக்குமூலம் வழியாகக் கூட
அறிய நேர்ந்தது.
பாபர் மசூதியை இடித்த சங்பரிவார இந்துத்துவ மதவெறி கூட்டம், பாபர்மசூதி இருந்த இடத்தில்தான் ராமன் பிறந்தான் என்பதற்கோ, அதை உரிமை கொண்டாடுவதற்கோ ஒரு துரும்பு அளவு கூட ஆதாரத்தை எடுத்துப் போட முடியவில்லை.
இதன் காரணமாக கீழமை நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை பாபர் மசூதி இடிக்கப்பட்டது தவறு என ஏற்கப் பட்டுவிட்டது. அதற்கு முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பாபர் மசூதியில் கள்ளத்தனமாக குழந்தை ராமன்
சிலை நிறுவப்பட்டதும் அம்பலமாகிப் போனது.
‘காவி’-க் கூட்டத்தில் கரைந்த சந்திர சூட்!
இப்படிப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பில் இருந்து ‘திருவாளர்’ சந்திர சூட் அக்டோபர் மாதத்தில் ஓய்வு பெறுவதற்கு சில காலத்திற்கு முன்பு இப்படி ஒரு கருத்தினை வெளியிட்டு இருந்தார்:
“பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு எழுதுகின்ற பொழுது கடவுள் (ராமன்) முன் அமர்ந்து பிரார்த்தனை மேற்கொண்டேன்; பாபர் மசூதி – ராமர் கோவில் வழக்கில் எப்படிப்பட்டத்
தீர்ப்பினை வழங்குவது என்பதற்கு வழிகாட்டுதல் கோரினேன்; கடவுளுடைய வழிகாட்டுதலின் அடிப்படையில் தான் (சங்கி கூட்டத்தால் இடித்துத் தரைமட்ட மாக்கப்பட்ட 500 ஆண்டுகால வரலாற்றுக்குச் சொந்தமான) பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு தீர்ப்புரை வழங்குவதற்கான அருளைப் பெற்றேன்; அதன் அடிப்படையிலேயே ராமர் கோவில் கட்டுவதற்கான அனுமதியை வழங்கி தீர்ப்புரை எழுதினேன்…’
என்ற பாணியில் எள்ளின் முனையளவேனும் வெட்கமின்றி சமூகத்திலே தன்னுடைய கருத்தினை அப்பட்டமாக வெளிப்படுத்தி, தான் ஒரு சங்கிதான் என்பதை நிர்வாணமாகக் காண்பித்துக் கொண்டார் இந்த சந்திர சூட்!
எந்த ஒரு வழக்கிலும் அதனை விசாரணை மேற்கொள்ளும் தனி நீதிபதியோ, அல்லது இருவர், மூவர் அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையிலான நீதிபதிகளடங்கிய அமர்வோ இந்திய அரசியல் சட்டம், தண்டனைச் சட்டம், சிவில், கிரிமினல் உள்ளிட்ட ஏனைய வழக்குகள் தொடர்பான சட்ட பிரிவுகள் இன்ன பிற அனைத்தின் அடிப்படையிலும் இருதரப்பு வழக்கறிஞர்களின் விவாதங்கள், எண்ணற்ற சாட்சியங்கள், கைப்பற்றப்பட்ட பல்வேறு விதமான ஆதாரங்கள், பொருட்கள், ஆவணங்கள்… இதுபோன்ற பல்வேறு அம்சங்களை உட்கிரகித்து, சரி தவறுகளை துலாக் கோல் போட்டு தீர விசாரித்தே தீர்ப்புரை வழங்க வேண்டும் என்பது உலகம் அறிந்த ஒரு நீதி பரிபாலன முறை என்பது அனைவரும் அறிந்த உண்மை! ஆனால் அதற்கு மாறாக ஒரு தலைமை நீதிபதி, இந்த மரபுகளை எல்லாம் கடாசி எறிந்து விட்டு ‘கடவுளிடம் வேண்டினேன் கடவுள் இட்ட உத்தரவின் படி தீர்ப்புரை வழங்கினேன்’ என்று பிதற்றுவாரேயானால்
இவர் ஒரு வழக்கறிஞர் பதவிக்கு கூட தகுதி பெற்றவர் தானா? என்ற கேள்வி அனைவருக்குள்ளும் எழும்புகிறது!
கிராமப் பஞ்சாயத்தை விட மோசமான தீர்ப்புகள்!
சிற்சில ஆதிக்கத் தன்மைகள் இருந்திட்டாலும் கூட, கிராமப் புறங்களில் நடைபெறும் பல்வேறு தகராறுகளில் பஞ்சாயத்துக்கள் நடைபெறும் நடைமுறைகளை இன்றும் கூட கண்டு வருகிறோம். இப்படிப்பட்டக் கிராமப் பஞ்சாயத்து விசாரணைகளில் படிப்பறிவு மிகக் குறைந்த பாமர மக்களின் பிரதிநிதிகள் கூட இருதரப்பு பிரச்சனைகளையும் தீர்க்கமாக விசாரித்தறிந்து,
எந்தப் பக்கம் நியாயம் இருக்கிறது? எந்த பக்கம் தவறு இருக்கிறது? என்பதை உணர்ந்து தீர்ப்பு வழங்கக்கூடிய அநேக உதாரணங்கள் நம் கண் முன் நிரம்பி நிற்கின்றன. ஆனால் சந்திர சூட்டோ இவ்வளவு ‘பெரிய பட்டம் பதவிகளை’ மேலே போர்த்திக் கொண்டு, கிராமப்புறத்து தீர்ப்புகளை விட இழிவான தீர்ப்பை அயோத்தி பாபர் மசூதி-ராமர் கோவில் வழக்கில் வழங்குவதற்கு அவர் எடுத்துக்
கொண்ட வழிமுறை, நீதித்துறைக்கு
இருக்கக்கூடிய குறைந்தபட்ச தகுதிக்கும்கூட மாபெரும் களங்கத்தை ஏற்படுத்தி விட்டுச் சென்று விட்டார்! “வாழ்க வளமுடன்” சந்திர சூட்!
விநாயகர் சதுர்த்தியில்
மோடியும் – சந்திர சூட்டும்!
கடந்த விநாயகர் சதுர்த்தி நாளன்று சந்திர சூட் இல்லத்தில் நடைபெற்ற ‘பூஜை புனஸ்கார’ நிகழ்வில் மோடி கலந்து கொண்டார். அதுமட்டுமின்றி ‘நான் இறை நம்பிக்கை உடையவன்; மத நம்பிக்கை உடையவன்; அந்த அடிப்படையில் எனது இல்லத்தில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி நிகழ்வில் பிரதமர் பங்கேற்றது ஒன்றும் தவறில்லை…’ –
என்பதாக துளியும் வெட்கமின்றி கருத்துத் தெரிவிக்கிறார்.
இப்படி ஒரு மதச் சார்பு, ஒரு கடவுள் சார்பு உள்ள ஒரு மனிதர் பல்வேறு மதங்கள், பல்வேறு கடவுள்கள் ‘உலா வரும்’ இந்நாட்டில், அவை தொடர்பான வழக்குகள் வருகின்ற பொழுது இவரால் எப்படி நடுநிலை நாயகராக இருந்து செயல்பட்டிருக்க முடியும்? எப்படிப்பட்ட தீர்ப்பினை வழங்கி இருக்க முடியும்? என்பதனை நாம் எளிதில் புரிந்து கொள்ள முடியும்!
இது தொடர்பாக வடநாட்டில் இருந்து வெளி வரக்கூடிய கேரவன் (THE CARAVAN) பத்திரிகை கூட இவருடைய நீதித்துறை சார்ந்த ஒட்டுமொத்த பணிக்காலத்தில் இவரது நடவடிக்கைகள், தீர்ப்புகள் உள்ளடக்கிய அனைத்து வண்டவாளங்களையும் பிய்த்தெறிந்துப்
பட்டியலிட்டு அவரது மானத்தை கப்பல் ஏற்றி இருந்தது!
ED, IT, CBI, ECI வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாடு!
பாசிச பாஜகவின் மோடி அரசு எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் ஒரே நோக்கத்தோடு எண்ணற்றோர் மீது – தனது கைத்தடிகளாக உருவாக்கிக் கொண்ட ED, IT, CBI -இவற்றை ஏவி விட்டு – ஊழல் குற்றம்
சுமத்தி பலர் கைது செய்யப்பட்டதும், வருடக்கணக்கில் பிணை மறுத்து சிறைகளில் பூட்டி வதைத்ததும், அதில் மாநில முதல்வர்களாக இருந்த அரவிந்த் கேஜ்ரிவால், ஹேமந்த் சோரன் மட்டுமின்றி செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் அண்ணாமலை போன்றோரின் தூண்டுதலால் அடைபட்டுக் கிடந்ததும் எண்ணற்ற வழக்குகளில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படாமல் இருந்ததை உச்ச நீதிமன்றம் கண்டுகொள்ளாமல் இருந்தது நீதி பரிபாலன முறைக்கு மிகுந்த இழிவான செயலை உருவாக்கிக் கொடுத்தது. அதிலும் சந்திர சூட் காவி பாசிசக் கூட்டத்திற்கு இயைந்து செயலாற்றிய
பங்கு மிகுதியானது.
அதே நேரத்தில் ஆளும் பாஜக கூட்டணியில் எந்த ஒரு நபரும் ஊழல் வழக்குகளில் சிக்குண்டு எதிர்க்கட்சியினரை போல பழிவாங்கப்படாமல் இருந்ததைக் கண்டுகொள்ளாமல் இருந்தது உச்ச நீதிமன்றத்தின் சாபக்கேடான செயல். அது மட்டுமல்ல; எதிர்க்கட்சிகளில் பலர் அமலாக்கத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறையினரால் மாட்டிக் கொண்ட பொழுது, அவர்கள் பாஜகவில் தஞ்சம் புகுந்து தங்களை காப்பாற்றிக் கொண்ட பொழுது அந்த வழக்குகள் அனைத்தும் இழுத்து மூடப்பட்டதை உச்ச நீதிமன்றம் கண்டு கொள்ளவே இல்லை.
அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் அண்மையில் மகராஷ்டிராவில் தேர்வு செய்யப்பட்டு இருக்கக்கூடிய பாஜக கூட்டணி அரசின் துணை முதல்வர். இவர் முடக்கப்பட்ட தனது வங்கிக் கணக்குகள் அனைத்தையும் விடுவித்து ஆணை பெற்றுக் கொண்டார். ஆக ஊழல்வாதிகள், கொலையாளிகள், பயங்கரவாதிகள், கலவர வாதிகள் யாராக இருந்தாலும் பாஜகவில் தஞ்சம் புகுந்து விட்டால் அவர்களது வாஷிங் மெஷின் குற்றவாளிகளை தூய்மைப்படுத்தி விடுகின்றது.
அதற்கு உச்ச நீதிமன்றமும் இன்ன பிற அரசுத் துறை நிறுவனங்களும் முழுமையாக ஒத்துழைத்தன; ஒத்துழைத்து வருகின்றன!
சமூக செயற்பாட்டாளர்கள் – முற்போக்காளர்களுக்கு சிறை!
சமூகக் கொடுமைகளின்பாற் சீற்றம் கொண்ட சமூக செயற்பாட்டாளர்கள், முற்போக்காளர்கள், பகுத்தறிவாளர்கள், இடதுசாரிகள், புரட்சியாளர்கள் அனைவருக்கும் ‘அர்பன் நக்சல்ஸ்’ என்ற முத்திரை குத்தி பிணையே வழங்காமல் வருடக்கணக்கில் சிறையில் பூட்டி சித்திரைவதை செய்வதற்கு மூல காரணமாக இருந்தது இந்த இந்துத்துவ பாசிச பார்ப்பன ஆர் எஸ் எஸ் சங்கி கூட்டம்! நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல் புர்க்கி, கௌரி லங்கேஷ் முதலானோரை
சுட்டுப் பொசுக்கியது
இந்தக் காவி(லி)க் கூட்டம்! இறுதியில் முற்போக்குவாதியும் மாற்றுத்திறனாளியுமான பேராசிரியர் சாய்பாபாவை, அவர் கடுமையான அளவிற்கு நோய்வாய்ப் பட்டிருப்பதை சுட்டிக் காண்பித்து பலமுறை பிணை கேட்டும்
பிணை தர மறுத்து காவிக் கூட்டத்திடம் ‘நற்பெயரை’ ஈட்டிக் கொண்டது நீதித்துறை. இறுதியில் உச்ச நீதிமன்றம் ‘ஏதோ இரக்கப்பட்டு’ சாகும் தருவாயில் அவருக்குப் பிணை கொடுத்தது.
பிணையில் வந்த அவருக்கு
சிறந்த மருத்துவம் அளித்தும் பலனின்றி குறுகிய காலத்திலேயே மரணத்தை அவர் தழுவி கொள்ள வேண்டிய கொடுஞ்செயல் அண்மையில் நடந்தேறியது.
ஆக, நீதிபரிபாலனம் செய்யும் முறையானது, முன் எப்போதையும் விட, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சந்திர சூட் பதவி வகித்த காலத்தில் அப்பட்டமான மனித விரோத தீர்ப்புகளும், சங்கிகளுக்கு மட்டுமே விசுவாசமான நடவடிக்கைகளையும் உருவாக்கிக் கொண்டிருந்தது. இதுதான் சந்திர சூட்டின் நீதித்துறை லட்சணம்!
சந்திர சூட் தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவரா?
சந்திர சூட்டின் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து நாம் ஏற்கனவே அம்பலப்படுத்திய பொழுது, இவர் ஓய்வு பெற்ற பின் பாசிச மோடி அரசு உறுதியாக சிறப்பான ‘அன்பளிப்பு பரிசு’ வழங்கும் என்று ஆணித்தரமாக
கருத்துரைத்திருந்தோம்.
அதன்படி கடந்த 2024 டிசம்பர் 18-ஆம் நாள் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் புதிய தலைவரை நியமிப்பது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட கமிட்டி கூட்டம் நடந்திருக்கிறது. இதில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர் இந்த நிலையில் தேசிய மனித உரிமைகள் ஆணைய (NHRC)
தலைவர் பதவிக்கு ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் பெயர் பரிசீலனை செய்யப்பட மோடி முன்மொழிவு செய்துள்ளார்.
இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. ஆனால் சந்திர சூட்டோ “இந்தத் தகவல் உண்மை அல்ல. நான் தற்போது ஓய்வு வாழ்க்கையை சிறப்பாக அனுபவித்து வருகிறேன்” என்று மடைமாற்றம் செய்து கருத்து வெளியிட்டிருந்தாலும், நடைபெறப் போகும் ஆபத்தினை இந்திய நாட்டு மக்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
நீதித்துறையில் அவரது பல்வேறு நடவடிக்கைகள் இந்துத்துவ மதவெறி சார்பு நிலையில் இருந்தது என்பது மட்டுமன்றி பல்வேறு வழக்குகளில் அவர் நேர்மையான தீர்ப்பு வழங்குவதற்கு முன் வரவில்லை.
உதாரணமாக நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தல்களில் நடந்த மோசடிகள், தில்லுமுல்லுகள் இவற்றைப் பற்றி எல்லாம் நீதித்துறையே தாமாக முன்வந்து வழக்கு எடுத்து நடத்த வேண்டிய சூழலில் பிறரால் வழக்கு பதிவு செய்யப்பட்டாலும், எதிராகவே தீர்ப்பு வழங்கியுள்ளார்; அல்லது கிடப்பில் போட்டு உள்ளார். மொத்தத்தில் பாசிச மோடி அரசுக்கு அனைத்து வகைகளிலும் உதவிகரமாக இருந்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் அண்ணல் அம்பேத்கரை இழிவு படுத்திப் பேசிய அமித்ஷா அன்று குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த பொழுது மேற்கொண்ட பல்வேறு என்கவுண்டர்களுக்கும், கொலைகளுக்கும் மூலகாரணமாக இருந்ததோடு, பல்வேறு மதக்கலவரங்களுக்கும் காரணமாக இருந்த அவர் மீது எண்ணற்ற எஃப் ஐ ஆர் பதியப்பட்டிருந்தும் கூட அனைத்திலிருந்தும் விடுபட்டு, இன்றைக்கு ஒன்றிய உள்துறை அமைச்சராக அமர்வதற்கு உதவிகரமாக இருந்தவர்களில் சந்திர சூட்டும் முக்கிய பங்கு வகித்திருக்கிறார்.
அப்படிப்பட்டவரை “தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக” நியமனம் செய்தால் இந்திய நாட்டு மக்களின் மனித உரிமைகள் அனைத்தும் காலில் போட்டு நசுக்கி எறியப்படும் என்பது மட்டும் திண்ணம்.
எனவே, மதவெறி கொண்ட – சங்கியாகிப்போன முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட்டை தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட விடாமல் தடுத்து நிறுத்திட இந்திய நாட்டு மக்கள் களம் இறங்கி சமர் புரிய வேண்டும்!
–எழில்மாறன்.