அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும்,
“ராஜ தர்மம்” நிலைநாட்ட யாரிங்கே இருக்கிறார்? -சா.பீட்டர் அல்போன்ஸ்
நமது நிருபர் ஆகஸ்ட் 30, 2024
சோமாலியா, ஏமன், சிரியா, சூடான் போன்ற நாடுகளில் நடக்கும் சில நிகழ்வுகளை தொலைக்காட்சியில் பார்க்கும்போது மிகவும் ஆச்சரி யமாக இருக்கும். உள்நாட்டுப்போர், இனச் சண்டை கள், சகோதர யுத்தங்கள் போன்ற வன்முறை வெறி யாட்டங்களுக்கு பல்லாண்டுகளாக பழகிப்போன அந்த மக்கள் பேரவலத்தையும், பெரும் அழிவுகளை யும் தவிர்க்கமுடியாத அன்றாட நிகழ்வுகளாகவே ஏற்றுக் கொண்டுள்ளார்கள். குண்டுகள் வீசப்பட்டு வீடுகள் ஒரு பகுதியில் பற்றி எரியும்போது அடுத்த பகுதியில் சிறுவர்கள் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருப்பார்கள். சக மனிதர்களின் கண்ணீரும், அழுகையும், மரணங்களும், பேரிழப்புகளும் இப்போ தெல்லாம் அவர்களை அதிகமாக பாதிப்பதில்லை. தங்களது வாழ்க்கைப் பயணத்தில் இப்படிப்பட்ட அசம்பாவிதங்களை அதிகமாக சந்திப்பதால் அவர் களது மனச்சாட்சிகள் மழுங்கி, இதயங்கள் மரத்துப் போனதுதான் உண்மை. இப்போதெல்லாம் நாமும் அப்படிப்பட்ட ஒரு சமூகச் சூழலை நோக்கித்தான் பயணிக்கிறோம் என்ற அச்சம் எனக்கு அடிக்கடி வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
வெறும் செய்தியாக, கடந்து போகலாமா?
கடந்த பத்தாண்டுகளாக மதம், சாதி, இனம் அடிப்படையில் நம் நாட்டில் நடக்கும் தனி மனித தாக்குதல்கள், சில குறிப்பிட்ட இன, மத மக்களை மற்றும் அவர்களது வாழ்வாதாரங்களை அழித்து நிர்மூலம் ஆக்குதல், பெண்களை அவமானப்படுத்தி அவர்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கு தல், ஒரு சமூகத்தைச் சார்ந்த மக்களை துன்புறுத்தி அவர்களது வாழ்விடங்களை விட்டு விரட்டுதல் போன்ற நிகழ்வுகள் நமது சமூகத்தின் பெரும்பகுதியினரால் ஒரு செய்தியாக மட்டுமே பார்க்கப்பட்டு மக்கள் சாதா ரணமாகவே கடந்து போவதைப் பார்க்க முடிகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் நண்பகல் நேரத்தில் ஒரு பெண்ணை வன்முறையாளன் ஒருவன் ஆயுதம் கொண்டு தாக்கி மானபங்கம் செய்யும்போது கூட, கூடுகின்ற கூட்டம் அதனை வீடியோ எடுத்து சமூக வலைத் தளத்தில் பகிர்ந்து லைக்ஸ் பெறவேண்டும் என்று துடிக்கிறதே தவிர வன்முறையாளனை தடுத்து அப்பெண்ணை பாதுகாக்கவேண்டும் என்று கூட்டத்தில் பெரும்பாலோர் முயற்சிப்பதில்லை. ஒரு சக மனிதரின் அபயக்குரல், அவரது மரண ஓலம், அவரது வேதனை மற்றும் கண்ணீர் நம்மிடம் எவ்வித சலனத்தையும் உண்டாக்கவில்லையென்றால் நமது சமூகம் எங்கேயோ அழுகிப் போகத் தொடங்கிவிட்ட தென்பதே காலம் நமக்குத் தரும் எச்சரிக்கை!
அரசாங்கமே வன்முறையாளராக...
வெறுப்பு, துவேஷம் ஆகியவற்றின் அடிப்படை யில் சில வழிதவறிய இளைஞர்களும், சில அசாதாரண நிகழ்வுகளால் ஆவேசமடையும் பொதுமக்களும் உணர்ச்சிவசப்பட்டு இதைப் போன்ற வன்முறை களில் ஈடுபடுவதைக்கூட நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஒரு அரசாங்கமே இதைப் போன்ற வன்முறை வெறியாட்டங்களைத் தொடர்ந்து நிகழ்த்துவதையும், பொது சமூகமும், ஊடகங்களும், நீதிமன்றங்களும் மற்ற ஜனநாயக நிறுவனங்களும் இக்கொடுமைகளைக் கண்டும் காணாமல் கடந்து போவதை என்னவென்று சொல்வது?
கடந்த வாரம் மத்தியப் பிரதேசம் சந்தர்பூர் மாவட்டத்தில் நபிகள் நாயகம் பற்றி தவறாக பேசிய ராம்கிரி மகராஜ் என்ற இந்துமத தலைவர் மீது புகார் அளிக்க கூட்டமாக காவல் நிலையம் சென்ற இஸ்லாமியர்களை காவல் நிலையத்தில் போலீசார் தடுத்து நிறுத்தி உள்ளனர். இதனைத் தொடர்ந்த தள்ளுமுள்ளில் சில போலீசார் தாக்கப்பட்டதாக தெரியவருகிறது. இதன் பேரில் போலீசார் தொடர்ந்த வழக்கில் இஸ்லாமிய சமூகத்தின் முக்கியப் பிரமுக ரான ஹாஜி ஷெஹ்சாத் அலி என்பவர் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்படுகிறார். இவர் அந்த மாவட்ட காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் என்றும் சொல்லப்படுகிறது. உடனடியாக அவரது வீடு புல்டோசர் கொண்டு முழுமையாக இடித்து தரை மட்டமாக்கப்படுகின்றது. இளம் பெண்கள், குழந்தைகள் மற்றும் வயோதிகர்கள் உட்பட அனை வரும் அடுத்த நேர உணவும் உடைகளும் இன்றி தெரு வில் நிற்கின்றனர். சட்டத்திற்கு விரோதமாக குற்றம் செய்தவர்கள் மீது போலீசார் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுப்பதை நாம் குறை சொல்லவில்லை. ஆனால் இதில் எந்தவித தொடர்பும் இல்லாத குடும்ப உறுப்பினர்களை, வீடுகளை விட்டு வெளியேற்றி நடுத்தெருவில் நிறுத்துவது என்ன நியாயம்? இதனை “புல்டோசர் நியாயம்”என்று சொல்கிறது பாஜக.
புல்டோசர் பயங்கரம்
மத்தியப்பிரதேசத்தில் மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களில் இந்த புல்டோசர் நியாயம் அன்றாட நடைமுறையாக மாறிவிட்டது. இந்த நிகழ்வு களின்போது பாஜகவினர் கூட்டமாக கூடி நின்று வீடுகளை இடிக்கும் அதிகாரிகளை உற்சாகப்படுத்து வதும், அவர்களுக்கு மாலைகள், சால்வைகள் அணி வித்துப் பாராட்டுவதும், அவற்றை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டாட்டங்கள் நடத்துவதும் தினசரி நிகழ்வாகிவிட்டன. அரசாங்கமே முன்னின்று நடத்தும் இந்த “அரசு பயங்கரவாதத் தால்” பாதிக்கப்படுகின்ற மக்களில் ஒரு சிலரைத் தவிர அனைவருமே சிறுபான்மை இஸ்லாமியராக இருப்பது தான் இந்த புல்டோசர் நியாயத்தின் முக்கிய அம்சம்.
கொடிய முதல்வர்
2017 செப்டம்பர் மாதத்தில் உபி முதலமைச்சர் ஆதித்யநாத் “பெண்களுக்கும், சமூகத்தின் நலிந்த மக்களுக்கும் எதிராக குற்றம் செய்பவர் களின் சொத்துக்களை புல்டோசர் வைத்து இடித்து நியாயம் வழங்குவேன்” என்று பகிரங்கமாக அறி வித்தார். குற்றங்களுக்கு எதிராக உடனடியாக தான் வழங்கும் இந்த நியாயத் தீர்ப்பு நடவடிக்கைகளில் சட்டம், நீதிமன்றம் என்பதைப் பற்றியெல்லாம் கவலைப் படப் போவதில்லை என்று சூசகமாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பாஜகவினர் ஆதித்யநாத்தை “புல்டோசர் பாபா” என்றழைத்து பாராட்டி மகிழ்ந்த னர். ஆனால் இந்த புல்டோசர் நியாயம் பெரும்பாலும் சிறுபான்மை இஸ்லாமியர்களை நோக்கி ஏவப் பட்டதுதான் தேசத்திற்கு ஏற்பட்ட பெரும் அவலம்.
“குற்றம் செய்தவர்கள் இஸ்லாமியர்களாக இருந்தால் மட்டுமே அவர்களது சொத்துக்கள் இடிக்கப்படும். மற்றவர்களுக்கு அது பொருந்தாது” என்று பிந்த் மாவட்ட ஆட்சியர் பேசியதாக வந்த ஆடியோ பதிவு உச்சநீதிமன்றத்தின் பார்வைக்கே எடுத்துச்செல்லப்பட்டது. JCB கம்பெனியின் தயாரிப்பான புல்டோசர்களை வைத்து பள்ளி வாசல்கள், மதரஸாக்கள், இஸ்லாமியர்களின் வீடுகள் மற்றும் வியாபார நிலையங்களை இடித்து தள்ளுவ தால் பாஜகவினர் இந்த சட்டவிரோத நடவடிக்கை களை “Jihadi Control Board” என்று பெருமையுடன் அழைக்கின்றனர். பாஜக ஆள்கின்ற மாநிலங்களான அசாம், குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிர தேசம் மற்றும் தில்லி யூனியன் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில் இது வரை 128 இஸ்லாமி யர்கள் தொடர்பான சொத்துக்கள் இடித்து தரை மட்டமாக்கப்பட்டதாகவும், அதனால் 617 குடும்பங்கள் தங்களது இருப்பிடங்களை இழந்துள்ளதாகவும். “அம்னெஸ்டி இன்டர்நேஷனல்” நிறுவனம் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.
வீதியில் தவிக்கும் மக்கள்
பெரும்பாலும் இரவு நேரங்களில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு நீதிமன்றங்களை அணுக அவகாசம் கிடைப்பதில்லை. காவல் துறையினர் முதலில் வீடுகளுக்குள் புகுந்து குடியிருப்பவர்களை அடித்து விரட்டி விட்டு பொருட்களை அள்ளி வெளியே போடு வதாகவும் அதன் பின்னர் புல்டோசர் வைத்து இடிப்ப தாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் புகைப்படங்களோடு உச்சநீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்துள்ளனர். கட்டிடங்களை இடிப்பதற்காக அரசு சொல்லி வரும் காரணம் அக்கட்டிடங்கள் சட்டவிரோத மாக கட்டப்பட்டுள்ளன என்பதுதான். ஆனால் இடிக்கப்பட்ட பல கட்டிடங்கள் பல ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டில் இருப்பவை. இடிக்கப்பட்ட இஸ்லாமியரின் கட்டிடங்களை ஒட்டி இருக்கின்ற இந்துக்களின் கட்டிடங்கள் சேதப்படுத்தப்படுவ தில்லை.
கடந்த வாரம் மத்தியப் பிரதேச அரசால் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட ஷெஹ்சாத் அலியின் வீடு ஒரு பெரிய பங்களா எனத் தெரிகிறது. அதனுள் நிறுத்தப்பட்டிருந்த விலை உயர்ந்த கார்களையும் அதிகாரிகள் புல்டோசரால் நொறுக்கியுள்ளனர். வீடு விதி மீறலாக கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதினாலும் கூட வாகனங்களை அடித்து நொறுக்கு வது ஏன் என்ற கேள்விக்கு அரசிடம் பதில் இல்லை. உரிமைகளுக்காகவும், நியாயம் கேட்டும் குரல் கொடுக்க முன்வரும் இஸ்லாமியர்கள் மத்தியில் அச்சத்தையும் பீதியையும் விதைத்து அவர்களை வாய் பேசாத ஜனங்களாக ஆக்குவதுதான் பாஜக அரசு களின் திட்டம் என்கிற எண்ணம் இன்று வட இந்திய இஸ்லாமியர்கள் மத்தியில் பரவலாக நிலவி வருகிறது.
வெறுப்பால் நிறைந்த குரூர மனங்கள்
இந்த அநியாயங்களை மகிழ்ச்சியோடு கொண்டாடுகின்ற வலதுசாரி பாசிச சக்திகள் இச் செயல்களையும் அதனை அரங்கேற்றும் அரசுகளை யும், அரசியல் தலைவர்களையும் “புல்டோசர் ராஜ், புல்டோசர் ஸ்டேட், புல்டோசர் நியாயம், புல்டோசர் பாபா, புல்டோசர் மாமா” என்றழைத்து பெருமைப் பட்டுக்கொள்வது அவர்களது மனம் எவ்வளவு வெறுப்பால் நிறைந்துள்ளது என்பதை காட்டுகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆதித்யநாத் சென்ற இடங்களில் எல்லாம் புல்டோசர்களை நிறுத்தி வைத்து அவைகளால் அவருக்கு பெரிய மாலைகளை அணிவித்து, புல்டோ சர்களால் சிறுபான்மை மக்களது வாழ்விடங்களை இடிப்பது அவருடைய ஆட்சியின் பெரும் சாதனை என விளம்பி அதற்காகவே பாஜகவுக்கு வாக்களியுங் கள் என்று கேட்ட கொடுமையும் உ.பி.யில் நடந்தது.
பிரதமரே ஏற்படுத்திய தலைகுனிவு
இதைவிட கொடுமையாக இந்திய ஜனநாயகமே வெட்கித் தலைகுனியும் அளவுக்கான ஒரு செயலை நமது பிரதமர் மோடியே செய்தார். “புல்டோசர் மூலமாக நீதியை நிலைநாட்டும் கலையை நன்றாக கற்றவர் ஆதித்யநாத்” என்று தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உச்ச குரலில் புகழ்ந்தார். அரசியல் சட்டமும், அரசு விதிகளும், இயற்கை நீதியும்,தனி மனித உரிமைகளும் ஒரு நாளும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு சட்ட விரோத செயலை செய்யும் ஒரு மாநில முதலமைச்சரை நம் தேசத்தின் பிரதமரே அதற்காக பாராட்டுவது நமது வாக்கு சீட்டு அரசியல் எவ்வளவு கேவலமான நிலைக்கு வந்துள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டு. அரசியல் சாசன மீறல் களை தட்டிக்கேட்டு,தனி மனித மாண்புக்கும் உரிமை களுக்கும் உத்தரவாதம் தருவதற்காகவே உரு வாக்கப்பட்ட நமது உச்ச நீதிமன்றம் கண்ணையும், காதையும், வாயையும் மூடிக்கொண்டிருப்பது நமக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு மிகப்பெரும் சோகம்.
வங்கதேசத்தின் நிலை
சிறுபான்மை இஸ்லாமியரின் நிலை இங்கே இவ்வளவு மோசமாக இருக்கும் போது, நம் அண்டை நாடான வங்கதேசத்தில் அங்கேயுள்ள சிறுபான்மை இந்துக்களின் நிலை அதைவிட மோசமாக இருப்பதை அறிந்து நமது நெஞ்சம் பதறுகிறது. உலகமெங்கும் மதம், இனம், சாதி, மொழி ஆகிய கலாச்சார அடை யாளங்களால் “சிறுபான்மையினர்” என்று அடையாளப்படுத்தப்பட்டவர்கள் “பேரினவாதம்” என்ற பெரும்பான்மை தத்துவத்தின் பேரால் நசுக்கப் படுவதை தொடர்ந்து பார்த்து வருகிறோம்.
வங்கதேசத்தில் பல்லாண்டுகளாக வாழ்ந்து வரும் சிறுபான்மை இந்து மக்கள் தங்கள் வாழ்விடங் களில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு இந்திய எல்லை களுக்கு அருகே ஆயிரக்கணக்கில் அநாதரவாக நிற்கின்றனர் என்ற செய்தி நம் இதயத்தைப் பிளக்கிறது. வங்கதேச இந்து, புத்திஸ்ட், கிறிஸ்டியன் கவுன்சிலின் நிர்வாகிகளும், பங்களா தேஷ் பூஜா உட்ஜப்பான் பரிஷத் நிர்வாகிகளும் இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் அவர்களைச் சந்தித்து 250 இடங்களில் சிறுபான்மை மக்கள் பெரு மளவில் பாதிக்கப்பட்டுள்ள விபரங்கள் அடங்கிய கோரிக்கை மனுவை அளித்து பாதுகாப்பு கோரி யுள்ளனர். சிறுபான்மை மக்களது உணர்வுகளை மதித்து அவர்களையும் உடன் அழைத்துக்கொண்டு முகமது யூனுஸ் டாக்காவில் உள்ள தாரகேஸ்வரி இந்து ஆலயத்திற்கு நேரில் சென்று சிறுபான்மை மக்க ளோடு தனது உடனிருப்பை உறுதி செய்துள்ளார்.
கிருஷ்ண ஜெயந்தி அன்று வங்கதேச தேசிய தொலைக்காட்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றிய அந்நாட்டின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், சிறுபான்மை இந்து மக்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்களைத் தெரிவித்து இந்து, கிறித்தவ, புத்த மதங்களைச் சார்ந்தவர்களும் அந்நாட்டின் முழு உரிமையுள்ள குடிமக்கள் என்று அறிவித்து அவர்களையும் அவர் களது உரிமைகளையும் பாதுகாப்பது புதிய அரசின் முதல் கடமை என்று அறிவித்தார். இரண்டு நாடு களிலும் பாதிக்கப்பட்டவர்கள் மதங்களால் வேறு படுத்தப் பட்டிருந்தாலும் அந்தந்த நாடுகளில் “சிறுபான்மையினர்” என அடையாளப்படுத்தப்பட்ட வர்களே! ஆனால் நம் நாட்டில் அரசுகளே முன்னின்று இக்கொடுமைகளை செய்வதுதான் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
வங்கதேசத்தில் வாழும் சிறுபான்மை மத மக்களின் துயரங்களும்,வேதனைகளும், அவர்கள் வாழும் பாதுகாப்பற்ற சூழ்நிலைகளும் நாளையே முடிவடைந்து விடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.ஆனால் மனித நேயத்தோடு, அமரர் வாஜ்பாய் அவர்களது வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால் “ராஜ தர்மத்தோடு” ஆட்சி செய்யவேண்டும் என்று நினைக்கின்ற ஒரு தலைவர் அவர்களுக்கு கிடைத்துள்ளார் என்ற வகையில் சற்று ஆறுதல் அடைகிறேன். அந்த ஆறுதல் நம் நாட்டு சிறுபான்மை மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று யாசிக்கின்றேன்.
சா.பீட்டர் அல்போன்ஸ்
மேனாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்