Sunday, 6 April 2014

5 எஸ் என்னும் அருமையான திட்டம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

வாழ்வியல் :

  உலகப் போருக்குப் பின் உருக்குலைந்து போன நாடு ஜப்பான். இன்று உலக நாடுகள் வியப்புடன் அதிசயமாய்ப்பார்க்கும் அளவுக்கு அபாரமான வெற்றி பெற்றுள்ள நாடும் அது தான். தரக்குழுக்கள் முதலான பல்வேறு நடவடிக்கைகள் அந்த நாட்டை அந்த அளவுக்கு உயர்த்தியுள்ளன. அவற்றுள் ஒரு திட்டம்தான் 5எஸ்.
  Seiri, seiton, seioso, seyketsu, shitsuke எனும் ஐந்து ஜப்பான் சொற்களை ஆங்கிலத்தில் sort, set in order, shine, standardise, sustain என்றும் தமிழில் ‘5ப’ என்றும் சொல்லலாம்.
1. பயனற்றவற்றை நீக்குதல்
2. பாங்காய் அமைத்தல்
3. பளிச்சென வைத்தல்
4. பக்குவமான சூழ்நிலை
5. பயிற்சியும் தன்னொழுக்கமும்



1. பயனற்றவற்றை நீக்குதல்
  நாம் பணியாற்றும் இடமோ வீடோ அந்த இடத்தில் தேவையான பொருள்களுடன் தேவையற்ற பொருள்களும் கலந்துகிடக்கும்போது நாம் ஏதாவது ஒரு பொருளைத் தேடி எடுக்க முயன்றால் கால தாமதம் ஆகும். அவசர நேரமாய் இருந்தால் டென்ஷன் ஆகிவிடுவோம். தேவையற்ற, பயனற்ற பொருள்களை நீக்கிவிடுவது முதல் தேவையாகும். தேவையற்ற பொருள்களை நீக்கிவிட்டாலே நமது டென்ஷன் பாதியளவு குறைந்துவிடும்.

2. பாங்காய் அமைத்தல்
  பயனற்றப் பொருள்களை நீக்கிவிட்டோம். தேவையான பொருள்கள் மட்டுமே இருக்கின்றன என்றாலும் அவற்றைச் சீராக, ஓர் ஒழுங்குமுறையுடன் பார்த்தால் உடனே தெரியுமளவிற்குச் சரியாக வரிசைப்படுத்தி அடுக்கி வைக்கவேண்டும். அவ்வாறு அடுக்கி வைத்து விடும்போது அவற்றில் ஏதாவது ஒரு பொருள் இல்லாவிட்டாலோ காணாமல் போய் விட்டாலோ உடனடியாக நமது கவனத்துக்கு வந்துவிடும்.

3. பளிச்சென வைத்தல்
  பொருள்களைத் தூய்மைப்படுத்தி பளிச்சென வைத்துக் கொள்ளுதல். வார நாள்களில் ஒரு நாளை ஒரு பகுதி என ஒதுக்கி வைத்துக்கொண்டு அந்தந்தப் பகுதியிலுள்ள பொருள்களைத் தூய்மைப்படுத்தி சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், வரவேற்பு அறை, முன்னறை மட்டுமின்றி, அடுப்பங்கரையையும் குளியலறை, கழிவறையையும் கூட தூய்மையாக வைத்துக்கொள்ளல்.

4. பக்குவமான சூழ்நிலை
  ஒரு செயலை அல்லது பணியை இந்த முறையில்தான் செய்வோம் என்று நிலைப்படுத்திக் கொள்ளுதல். ஒவ்வொரு முறையும் அவ்வாறே செய்வோம் என்று நிர்ணயித்துக் கொள்ளுதல். செயல்முறை சரியானால் உற்பத்தியாகும் பொருளும் சரியாகத்தானே இருக்கும்.
  இந்த இடத்தில் ஒரு சுவையான தகவலைப் பகிர்ந்துகொள்ளுதல் மிகவும் பொருத்தமாக இருக்கும். தொழில்ரீதியான கட்டடக்கலைப் பொறியாளர் ஒருவர் தற்செயலாகப் பிரியாணி செய்யத் தொடங்கினார். அந்தச் சுவை நன்றாக இருக்கிறதே என நண்பர்கள், உறவினர்கள் பாராட்ட அதைத் துணைத்தொழிலாகவே ஆக்கிவிட்டார். அவரிடம் எப்போது வாங்கினாலும் சுவையில் மாற்றமே தெரிவதில்லை என்பது வியப்பான உண்மையாகும்.
  என்னதான் தொழில்முறை சமையல்காரராக இருந்தாலும் ஒருநாள் சற்று உப்பு கூடுதலாகிவிடும். ஒரு நாள் சற்று காரம் அதிகமாகிவிடும் என்பது நாம் அறிந்ததே. பெரிய அளவில் செய்யும்போது இவ்வாறு ஏற்படுவது இயற்கையானதே என்று நாமும் சமாதானம் சொல்லிக் கொள்வது உண்டு.
  ஆனால் இந்த நண்பரின் பிரியாணியில் எப்போதும் சுவை மாறாததன் தொழில் இரகசியம் இதுதான். ஒரு கிலோவுக்கு இவ்வளவு உப்பு, இவ்வளவு பூண்டு, இவ்வளவு இஞ்சி என்றால் அவை ஒவ்வொன்றையும் மின்தராசு கொண்டு துல்லியமாக அதே அளவு போட்டுச் சமைப்பதால் 5 கிலோ என்றாலும் 500 கிலோ என்றாலும் சுவையில் மாற்றமே ஏற்படுவதில்லை என்பது அனுபவ ரீதியான உண்மை.
  அடுத்து நாம் பி’ யை விட்டுவிட்டு 5வது ‘ப’ வுக்கு வருவோம்.


5. பயிற்சியும் தன்னொழுக்கமும்
  சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
  சொல்லிய வண்ணம் செய்தல்
  என்றார் வள்ளுவர். ஒரு வேலையை ஒரு நேரத்தில் செய்வது நடக்கும். ஆனால் அதைத் தொடர்ந்து கடைப்பிடிப்பது எளிதல்ல. ஒரு வேலையை அல்லது செயலைத் தக்கவைத்துக் கொள்ளுதல் நமக்கு அவ்வளவு பழக்கமான வேலையல்ல. எனவே அவ்வாறு தொடர்ந்து கடைப்பிடிப்பதற்காகப் பயிற்சி அளிக்கப்படவேண்டும். நாமும் சுயமாகவே தன்னொழுக்கத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதையே 5வது ப உணர்த்துகிறது.

  5எஸ் கொள்கையைப் பணியிடத்தில் பின்பற்றினால் உற்பத்தித்திறன் உயரும். தரம் பாதுகாக்கப்படும் எனப் பல நன்மைகள் உண்டு. இதே கொள்கையை வீடுகளில் கடைப்பிடித்தால் வீடு ஒரு முன்மாதிரியான இல்லமாகத் திகழும். ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் இடம்; அந்தந்தப் பொருளும் அதனதன் இடத்தில் என்று முறையாகப் பின்பற்றும் வீடுகள் இன்றும் உண்டு.

  சில சமையல் அறைகளில் மசாலா சாமான்களுக்கு ஒரே மாதிரியான டப்பாக்களை வைத்திருப்பார்கள். வெளியே கடுகு, மிளகு, சீரகம், சோம்பு என்று எழுதி ஒட்டி வைத்திருப்பார்கள். இவ்வாறு இருக்கும் வீடுகளில் புதிதாய் வந்த மருமகள்கூட முதல் நாளிலேயே ‘மாமி, மிளகாய் எங்கே இருக்கிறது’ என்று கேட்காமலேயே சமையல் செய்துவிட முடியும்.

  5எஸ் எனும் 5ப வைப் பின்பற்றுவோம். வீட்டையும் நாட்டையும் உயர்த்துவோம்.

                   5 ‘ப’ வும் கலிமாவும்

 5எஸ் என்றால் 5ப
1.   பயனற்றவற்றை நீக்குதல் 2. பாங்காய் அமைத்தல், 3. பளிச்சென வைத்தல், 4. பக்குவமான சூழ்நிலை, 5. பயிற்சியும் தன்னொழுக்கமும்.
 கலிமா தய்யிபா – லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ், வணக்கத்திற்குரியவன் இறைவன் ஒருவனைத் தவிர யாருமில்லை, முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் ஆவார் என்பது இஸ்லாத்தின் தலையாய, அடிப்படையான விஷயமாகும்.
  இந்த அடிப்படையான விஷயம் எவ்வாறு 5எஸ் (5ப) வுடன் ஒத்துப்போகிறது என்பதைக் காண்போம். கலிமா ‘லா இலாஹ’ என்று தொடங்குகிறது. ‘இல்லை கடவுள்’ என்பது அதன் பொருள். உலகத்தில் மனிதர்கள் யார் யாரை எல்லாம் அல்லது எந்தப் பொருள்களையெல்லாம் கடவுள் என்று கூறிக் கொள்கிறார்களோ அவற்றை எல்லாம் நீக்குவது – அதாவது முதல் ‘ப’.
  அடுத்ததாக இல்லல்லாஹ் – அல்லாஹ்வைத் தவிர. மனிதர்கள் அனைவரையும் படைத்த, பரிபாலிக்கின்ற, மரணிக்கச் செய்கின்ற, மீண்டும் எழுப்பக்கூடிய ஆற்றல் உள்ள ஒரே இறைவனைத் தவிர என்று பாங்காக எடுத்துக் கூறப்படுகிறது. இது இரண்டாவது ‘ப’ ஆகும்.
  முஹம்மது (ஸல்) அவர்கள் அந்த இறைவனுடைய திருத்தூதர் ஆவார் என்பதைப் பளிச்செனக் கூறுவது 3-வது ப’ ஆகும்.
  மனிதர்கள் அனைவருக்கும் ஓர் அருட்கொடையாக அனுப்பப்பட்டுள்ள அந்த மாமனிதர், மனிதப் புனிதர் இந்த உலகின் அமைதி பெறுவதற்காகவும் மரணத்திற்குப் பின்னுள்ள மறுமை வாழ்வில் வெற்றி பெறுவதற்காகவும் திருக்குர்ஆன் எனும் இறைவேதத்தையும் தமது வாழ்வியல் நடைமுறைகளான நபிவழியையும் நமக்களித்து ஒரு பக்குவமான சூழ்நிலையை ஏற்படுத்தித் தந்துள்ளார்கள் என்பது 4வது ப’ ஆகும்.
  எரி விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும் என்பது போல் மேற்கண்ட விஷயங்களை அறிந்து செயல்படுவதற்குப் பயிற்சியும் (தர்பியா), சுயமாக நம்மை நாமே சீர்திருத்திக் கொண்டு (இஹ்திஸாப்) தன்னொழுக்கத்துடன் செயல்படுதலும் வேண்டும் இதுவே 5வது ப’ ஆகும்.
  எனவே 5எஸ் (5ப) என்பது கலிமா தய்யிபாவோடு எந்த அளவுக்கு ஒத்துப்போகிறது என்பதை இதன் மூலம் அறியலாம்.


                               கருத்துரு : ஹபீபுர் ரஹ்மான், ஜித்தா  

No comments:

Post a Comment