Sunday, 16 January 2011

உயிர் பிரியும் நேரத்திலும் உன்னத தாஃவா!

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

'
அப்போது[உமர் ]அவர்கள் இறக்கும் நிலையை அடைந்துவிட்டார்கள் என்று மக்கள் அறிந்து கொண்டனர். அவர்களின் அருகே நாங்கள் சென்றோம். மக்கள் வந்து உமர்(ரலி) அவர்களைப் புகழ்ந்து பேசத் தொடங்கினார்கள். ஓர் (அன்சாரி) இளைஞரும் வந்தார். அவர், இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே!" அல்லாஹ்வின் தூதருடனான (உங்களுடைய) தோழமை, இஸ்லாத்தில் (உங்களுக்கிருக்கும்) நீங்களே அறிந்துள்ள சிறப்பு, பிறகு நீங்கள் (ஆட்சித்தலைவராகப் பதவியேற்று (குடி மக்களிடையே) நீதியாக நடந்து கொண்டது, பிறகு (இப்போது) உயிர்த் தியாகம் (செய்ய விருப்பது) ஆகியவற்றின் மூலம் அல்லாஹ் உங்களுக்கு வழங்கியுள்ள நற்செய்தி கொண்டு நீங்கள், மகிழ்ச்சி அடையுங்கள்" என்று கூறினார். (இதைக் கேட்ட) உமர்(ரலி) 'இவையெல்லாம் எனக்கு (சாதகமாக இல்லாவிட்டாலும் பாதகமாக இல்லாமலிருந்தாலே போதும். எனவே, இவை எனக்கு) சாதகமாகவும் வேண்டாம்; பாதகமாகவும் வேண்டாம். சரிக்குச் சமமாக இருப்பதையே விரும்புகிறேன்" என்று கூறினார்கள். அந்த இளைஞர் திரும்பிச் சென்றபோது அவரின் கீழங்கி பூமியைத் தொட்டுக் கொண்டிருந்தது. (இதைக் கண்ட) உமர்(ரலி), 'அந்த இளைஞரை என்னிடம் திரும்ப அழைத்து வாருங்கள்" என்று கூறினார்கள். (அவர் திரும்பி வந்த போது), 'என்னுடைய சகோதரரின் மகனே! உன்னுடைய ஆடையை (பூமியில் படாமல்) உயர்த்திக் கட்டு! இது உன் ஆடையை நீண்ட நாள் நீடிக்கச் செய்யும்; உன்னுடைய இறைவனுக்கு அஞ்சி நடப்பதுமாகும்" என்று கூறினார்கள்.
[
ஹதீஸ் சுருக்கம் புஹாரி எண் 3700 ]
அன்பானவர்களே! நன்மையை ஏவுவதும் தீமையை தடுப்பதும் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமை என்பதை நம்மில் பெரும்பாலோர் விளங்கி வைத்துள்ளோம். ஆனால் அதை எங்கு செய்வோம் என்றால் மேடை அமைக்கப்பட்டு மைக்குகள் வைக்கப்பட்டால்தான் செய்வோம் என்ற நிலை உள்ளது. அதிலும் நாப்பது பேர் உட்காரும் தெருமுனை கூட்டமா அதுக்கு வரமாட்டேன். நாலாயிரம் பேர் கூடும் பொதுக்கூட்டமா அதுக்கு நான் வருகிறேன் என்று கண்டிஷன் போடும் 'நட்சத்திர' பேச்சாளர்கள் ஒருபுறம். அல்லாஹ்வை நம்பாத அரசியல்வாதி அமர்ந்துள்ள மேடையில் ஏறினாலும் ஏறுவோமே தவிர, அடுத்த சக தவ்ஹீத் இயக்கத்தவர் மேடை ஏறமாட்டோம். அவர்களை எங்கள் மேடையில் ஏற்றவும் மாட்டோம் என்றெல்லாம் தாஃவா செய்வதற்கு எண்ணற்ற கண்டிஷன்கள். ஆனால் ஒரு முஸ்லிம் எந்த இடமாக இருந்தாலும் அந்த இடத்தில் ஒரு நன்மையை ஏவமுடியும் என்றால் அதை செய்யவேண்டும். ஒரு தீமையை தடுக்கமுடியும் என்றால் அது எந்த இடமாக இருந்தாலும் தடுக்கவேண்டும். நாம் வீட்டில் இருந்தாலும், அலுவலகத்தில் இருந்தாலும், பயணத்தில் இருந்தாலும், பாதையில் நடந்தாலும், சுப நிகழ்ச்சி நடக்கும் இடமாகினும், துக்க நிகழ்வு நடந்துவிட்ட இடமாகினும் அங்கெல்லாம் நன்மையை ஏவும் தீமையை தடுக்கும் வாய்ப்புகள் சாதாரணமாக கிடைக்கும். ஆனால் நாம் அதை பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை. மேடைகளில் பேசும்போதும், புத்தகங்களில் எழுதும்போதும், பிரசுரங்கள் வெளியிடுபோதும், இணையங்களில் உலவும்போதும்தான் நம்முடைய தாஃவாக்கள் பெரும்பாலும் இருக்கின்றன. ஆனால் உத்தமர் உமர்[ரலி] அவர்கள் கத்தியால் குத்தப்பட்டு உதிரம் ஊற்றாக வெளியேறி உயிர் பிரியும் கட்டத்தை நெருங்கிய நிலையிலும், ஒருவரிடத்தில் இறைத்தூதரின் சுன்னாவிற்கு மாற்றமான செயலை கண்டவுடன், அந்த நபரிடம் அழகிய முறையில் எடுத்து சொல்லி தனது கடமையை செய்கிறர்கள் என்றால் அதுதான் சஹாபாக்கள். எந்த இடமாகினும், எந்த ஒரு நொடியாகினும் அதில் எவ்வாறெல்லாம் இந்த சத்திய இஸ்லாத்தை நிலைநாட்டலாம் அதன் மூலம் நன்மையை பெறலாம் என்பதே அந்த உத்தம சஹாபாக்களின் லட்சியமாக இருந்துள்ளதை மேற்கண்ட சம்பவம் உணர்த்துகிறது. நாமும் இயன்றவரை சஹாபாக்களின் வழியில் ஒவ்வொரு வினாடியையும் தாஃவாவின் மூலம் நன்மையாக்க முயற்சிப்போமாக!

No comments:

Post a Comment