Sunday 16 January 2011

இறைவனின் மன்னிப்பு வேண்டுமா?

நாம் கேட்கும் துஆக்களில் மிகவும் முக்கியமானது இறைவா! என்னை மன்னித்துவிடு!''
என்பதுதான். இதை சிறியவர் முதல் பெரியவர் வரை;  ஏழை முதல் பணக்காரன்வரை எந்த பாகுபாடுமின்றி அனைவரும் கேட்டாக வேண்டும். முதல் நபி ஆதம் (அலை) முதல் இறுதித் தூதர்
முஹம்மத் (ஸல்) வரை அனைவருமே இவ்வாறு கேட்டவர்கள் தான். ஏனென்றால் நமது உள்ளம்
தீமைகளை தூண்டக்கூடியதாக இருக்கிறது. அதனால் இறைவனின் கோபம் நம்மீது விழுந்துவிடக்
கூடாது. மேலும் இதன் காரணமாக நரகில் போய்விடக்கூடாது என்ற நல்ல எண்ணம்தான்.

ஆதமுடைய மகன் ஒவ்வொருவரும் பகலிலும் இரவிலும் தவறிழைக்கின்றான். பின்னர் என்னிடம்
பாவமன்னிப்பு தேடுகின்றனர். நான் அவனை மன்னிக்கின்றேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபி
(ஸல்) அவர்கள் கூறினார்கள்;
அறிவிப்பவர் : அபூதர் (ரலி), நூல் : அஹ்மத் (20451);

அவசரக்காரனாக படைக்கப்பட்டுள்ள மனிதன், பல நேரங்களில் அவசரப்பட்டு தவறுகளைச்
செய்கிறான். அவனின் தவறுகளை உணர்ந்து படைத்தவனிடம் மன்னிப்புக் கேட்டால் இறைவன்
அவனை மன்னித்துவிடுகிறான். முதல் மனிதராக இவ்வுலகத்தில் படைக்கப்பட்ட நபி ஆதம்
(அலை) அவர்களே இதற்கு உதாரணமாக கூறலாம்.


மனம் திருந்தி மன்னிப்புக்கேள்.
ஆதமே! நீயும், உன் மனைவியும் இந்த சொர்க்கத்தில் குடியிருங்கள்! இருவரும்
விரும்பியவாறு தாராளமாக இதில் உண்ணுங்கள்! இந்த மரத்தை (மட்டும்) நெருங்காதீர்கள்!
(நெருங்கினால்) அநீதி இழைத்தோராவீர்'' என்று நாம் கூறினோம். (அல்குர்ஆன் 2:35).;

அவ்விருவரின் மறைக்கப்பட்ட வெட்கத்தலங்களை வெளிப்படுத்துவதற்காக ஷைத்தான்
அவ்விருவருக்கும் தீய எண்ணத்தை ஏற்படுத்தினான். இருவரும் வானவர்களாக ஆகி
விடுவீர்கள் என்பதற்காகவோ, நிரந்தரமாக இங்கேயே தங்கி விடுவீர்கள் என்பதற்காகவோ தவிர
உங்கள் இறைவன் இம்மரத்தை உங்களுக்குத் தடை செய்யவில்லை'' என்று கூறினான்.
(அல்குர்ஆன் 7:20).

இறைவனின் கட்டளையை மறந்து ஷைத்தானின் தூண்டுதலுக்கு கட்டுப்பட்டு தவறிழைத்த ஆதம்,
ஹவ்வா (அலை) அவர்கள், தம் தவறுகளை உணர்ந்து இறைவனிடம் மன்னிப்பு கேட்டபோது அல்லாஹ்
மன்னித்தான்.

(பாவ மன்னிப்புக்குரிய) சில வார்த்தைகளை இறைவனிடமிருந்து ஆதம் பெற்றுக் கொண்டார்.
எனவே அவரை இறைவன் மன்னித்தான்; அவன் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
(அல்குர்ஆன் 2:37).

எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கு இழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து, அருள்
புரியவில்லையானால் நஷ்டமடைந்தோராவோம்'' என்று அவ்விருவரும் கூறினர்.
(அல்குர்ஆன் 7:23)


அடுத்தவரின் குறைகளை மறை
அடுத்தவர்கள் தவறிழைத்திருந்தால் அவர்களின் குறைகளை அம்பலப்படுத்தாமல் அவரிடம்
நேரடியாக தவறைச் சுட்டிக்காட்டி அவற்றைத் திருத்தி அவரின் குறைகள் வெளியில்
சொல்லாமல் பார்த்துக்கொண்டால் மறுமையில் நமது தவறுகளை அல்லாஹ் கண்டுகொள்ளாமல்
மன்னித்துவிடுவான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்;
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்;
அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். எவர் தன் சகோதரனின்
தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கின்றாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில்
அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கின்றான். எவர் ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகின்றாரோ
அவரை விட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகின்றான். எவர்
ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கின்றாரோ அவரது குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும்
(மன்னித்து) மறைக்கின்றான்”;
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ர), நூல் : புகாரி (2442);



வசதி இல்லாதோரின் கடன்களை தள்ளுபடி செய்யுங்கள்.
வசதியில்லாதவர்களின் கடன்களை கெடுபிடி செய்து வசூல் செய்யாமல் அவர்களின் நிலைகளை
கவனத்தில் கொண்டு கடன்களை தள்ளுபடி செய்தால் மறுமையில் நம் பாவங்களை அல்லாஹ்
மன்னிப்பான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(முன் காலத்தில்) மக்களுக்குக் கடன் கொடுக்கக் கூடிய ஒரு வியாபாரி இருந்தார்.
கடனைத் திருப்பிச் செலுத்தச் சிரமப்படுபவரை அவர் கண்டால், தமது பணியாளர்களிடம்
இவரது கடனைத் தள்ளுபடி செய்யுங்கள்; அல்லாஹ் நமது தவறுகளைத் தள்ளுபடி செய்யக்கூடும்
என்று கூறுவார். அல்லாஹ்வும் அவரது தவறுகளைத் தள்ளுபடி செய்தான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி (2078)



பொது சேவை செய்தல்
பொதுமக்களுக்கு பயன்தரும் நல்லறங்களை செய்பவருக்கு மறுமையில் இறைவனின் மாபெரும்
அருள் கிடைப்பதுடன் அவரின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு சொர்க்கத்திற்கு செல்லும்
வாய்ப்பு கிடைக்கும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் முட்கிளை
ஒன்றைக்கண்டு அதை அப்புறப்படுத்தினார். (அவரது இந்த நற்செயலை) அல்லாஹ் பெருமனதுடன்
ஏற்று, அவருக்கு (அவர் செய்த பாவங்களிருந்து) மன்னிப்பு வழங்கினான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம் (3877)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதர் நடைபாதையில் கிடந்த மரக்கிளையொன்றைக் கடந்து சென்றார். அப்போது அவர்,
அல்லாஹ்வின் மீதாணையாக! முஸ்லிம்களுக்குத் தொல்லை தராமலிருப்பதற்காக இதை நான்
அப்புறப்படுத்துவேன்'' என்று கூறிவிட்டு அதை அப்புறப்படுத்தினார். இதன் காரணமாக,
அவர் சொர்க்கத்தில் அனுமதிக்கப்பட்டார்”.
அறவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் :முஸ்லிம் (5106).


ஹஜ், உம்ரா செய்தல்
இறைகடமைகளில் ஒன்றான ஹஜ், என்ற கடமையை இறைதிருப்தியை
மட்டும் எதிர்பார்த்து நிறைவேற்றினால் தம் பாவங்கள் மன்னிக்கப்படும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தாம்பத்திய உறவு மற்றும் பாவச்செயல்களில் ஈடுபடாமல் ஒருவர் அல்லாஹ்வுக்காகவே ஹஜ்
செய்தால் அவர் அவருடைய தாய் அவரைப் பெற்றெடுத்த நாளில் இருந்ததைப்போன்று
(பாவமறியாப் பாலகராகத்) திரும்புவார்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல்கள் : புகாரி (1521), முஸ்லிம் (2625).

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் உம்ராச் செய்வது, மறு உம்ராவரை (ஏற்படும் சிறு) பாவங்களுக்குப் பரிகாரமாகும்.
(பாவச் செயல் கலவாத) ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்குச் சொர்க்கத்தை தவிர வேறு கூலி
இல்லை.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள் : புகாரி (1773),முஸ்லிம் (2624)


உளூச் செய்தல்.
படைத்தவனை வணங்குவதற்காக நமது அங்கங்களை தூய்மை செய்யும்போதும் நம் பாவங்கள்
மன்னிக்கப்படுகின்றன.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிமான' அல்லது முஃமினான' (இறைநம்பிக்கை கொண்ட) அடியார் அங்கத்தூய்மை (உளூ)
செய்யும்போது முகத்தைக் கழுவினால், கண்களால் பார்த்துச் செய்த பாவங்கள் அனைத்தும்
(முகத்தைக் கழுவிய) நீருடன்' அல்லது நீரின் கடைசித் துளியுடன்' முகத்திலிருந்து
வெளியேறுகின்றன. அவர் கைகளைக் கழுவும்போது கைகளால் செய்திருந்த பாவங்கள்
அனைத்தும் (கைகளைக் கழுவிய) தண்ணீருடன்' அல்லது தண்ணீரின் கடைசித் துளியுடன்'
வெளியேறுகின்றன. அவர் கால்களைக் கழுவும்போது, கால்களால் நடந்து செய்த பாவங்கள்
அனைத்தும் (கால்களைக் கழுவிய) நீரோடு' அல்லது நீரின் கடைசித் துளியோடு'
வெளியேறுகின்றன. இறுதியில், அவர் பாவங்களிருந்து தூய்மை அடைந்தவராக (அந்த
இடத்திருந்து) செல்கிறார்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் :முஸ்லிம் (412).


கடமையான தொழுகை
படைத்தவனின் கட்டளையை ஏற்று ஐவேளை தொழும்போதும் பெரும்பாவங்களில் நாம் ஈடுபடாதவரை
பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஐவேளைத் தொழுகைகள், ஒரு ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆ ஆகியன அவற்றுக்கிடையே ஏற்படும்
பாவங்களுக்குப் பரிகாரங்களாகும். பெரும் பாவங்களில் சிக்காதவரை.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் :முஸ்லிம் (394).



ரமலான் மாதம் நோன்பு
சிறப்புமிகு ரமலானில் இறைவன் கடமையாக்கிய நோன்பை, நன்மையை எதிர்பார்த்து நோன்பு
நோற்றால் நம் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவர் நம்பிக்கை கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில்
நோன்பு நோற்பாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல்கள் : புகாரி (38), முஸ்லிம் (1393)



ரமலானில் இரவில் தொழுதல்.
சிறப்புமிகு ரமலான் மாதத்தில் இரவுத் தொழுகையை இறைதிருப்தியை எதிர்ப்பார்த்து
நிறைவேற்றினால் நம் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவர் நம்பிக்கை கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில்
நின்று வணங்குகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல்கள் : புகாரி (37), முஸ்லிம் (1393)


மனிதன் செய்யும் தவறுகளை மன்னித்தல்
மனிதனாக பிறந்தவன் தவறிழைக்காமல் இருக்கமாட்டான். ஏதாவது ஒரு காரணத்திற்காக
தவறிழைத்துவிட்டான் என்றால் அதை காரணம்காட்டி ஒதுக்கிவிடாமல் அவன் தவறைபுரியவைத்து
அவனை மன்னித்தால் நம் தவறுகளை அல்லாஹ் மன்னிப்பான்.

(ஆயிஷாவின் மீது) அவதூறு கற்பித்தவர்கள் உங்களில் ஒரு குழுவினர் தாம்'' என்று
தொடங்கும் (24:11-20) பத்து வசனங்களை அல்லாஹ் அருளினான். ஆயிஷா (ர) அவர்கள்
கூறினார்கள்: என் குற்றமற்ற நிலையைத் தெவுபடுத்தி அல்லாஹ் இதை அருளினான். (என் தந்தை)
அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ர) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! (என் புதல்வி) ஆயிஷா
குறித்து (அவதூறு) கூறிய பின்பு ஒருபோதும் நான் மிஸ்தஹுக்காக எதையும்
செலவிடமாட்டேன்'' என்று (சத்தியமிட்டுக்) கூறினார்கள். மிஸ்தஹ் பின் உஸாஸா தம்
உறவினர் என்பதால் அவருக்காக அபூபக்ர் (ர) அவர்கள் செலவிட்டு வந்தார்கள். அப்போது
அல்லாஹ், “உங்களில் செல்வம் மற்றும் தயாளகுணம் படைத்தோர் (தங்கள்) உறவினர்களுக்கு
(எதுவும்) கொடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம்'' எனும் (24:22ஆவது)
வசனத்தை அருனான்.
அபூ பக்ர் (ர) அவர்கள், ஆம்; அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க
வேண்டுமென்று நான் விரும்புகிறேன்'' என்று கூறிவிட்டு, மிஸ்தஹ் அவர்களுக்கு
ஏற்கெனவே தாம் செலவிட்டு வந்ததைத் திரும்பவும் தொடரலானார்கள். மேலும், அல்லாஹ்வின்
மீதாணையாக! அவருக்கு(ச் செய்யும் இந்த உதவியை) ஒருபோதும் நான் நிறுத்தமாட்டேன்''
என்றும் கூறினார்கள். (புகாரி 6679);

அபூபக்ர் (ரலி) அவர்களின் மனதை மாற்றிய முழு வசனம் இதுதான் :
உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தோருக்கும் உதவ மாட்டோம்'' என்று செல்வமும்,  தயாளகுணம் உடையோர் சத்தியம் செய்ய வேண்டாம். மன்னித்து அலட்சியம்
செய்யட்டும். அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும்'' என்று விரும்பமாட்டீர்களா?
அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 24:22).

அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும்'' என்று விரும்பமாட்டீர்களா?” என்ற இறைவனின்
கேள்வி;  
மனிதனை மன்னிக்கும்போது இறைவனுடைய மன்னிப்பு தனக்கு உண்டு என்று கருத்தை
அறிந்து அபூபக்ர் (ரலி) அவர்கள், தம் மகள் மீது அவதூறு சொன்ன மிஸ்தஹை மன்னித்து
அவருக்கு உதவிகளை வழங்கிவந்தார்கள்.

எனவே மனிதர்கள் செய்யும் தவறுகளை மன்னித்து இறைவனின் பாவமன்னிப்பை பெறுவோம்.



தொகுப்பு - கே. பாஜிலா ஃபர்வீன், திருத்துறைப்பூண்டி - தீன்குலப்பெண்மணி இதழ் (செப்டம்பர் 2009)

No comments:

Post a Comment