இஸ்லாத்தின் இறையியல் கோட்பாடு
மார்க்சியர்களாகிய நாங்கள் அடிப்படையில் நாத்திகர்களே! ஆனால் முரட்டு நாத்திகர்கள் அல்ல. மாறாகக் கடவுள் நம்பிக்கை மக்கள் நெஞ்சில் எப்படி உருவானது, ஏன் நீடிக்கிறது என்பதைப் புரிந்து கொண்டிருப்பவர்கள், இந்த நோக்கிலிருந்து நான் எழுதியதுதான் ‘கடவுளின் கதை’ எனும் ஐந்து பாகங்களைக் கொண்ட பெரு நூல், அது உலக மதங்களின், மதம்பற்றிய சிந்தனைகளின் வரலாறு.
அதை எழுதுவதற்காக இஸ்லாத்தையும் கற்கத் தொடங்கினேன். என்னை வியப்பூட்டிய விஷயம் உலகின் பெருமதங்களில் இஸ்லாம்தான் ஏகக் கடவுள் வணக்கத்தையும் உருவ வழிபாட்டு மறுப்பையும் உறுதியாகப் பற்றியிருக்கிறது. கிறித்தவம், இஸ்லாம், இந்துமதம், பவுத்தம் என்பவையே மக்கள் மத்தியில் இன்று பரவலாக உள்ள மதங்கள். இந்த நான்கில் இஸ்லாமே அந்த இரு விஷயங்களையும் தனது அடிப்படை இறையியல் கோட்பாடாகக் கொண்டிருக்கின்றது.
கத்தோலிக்கக் கிறித்தவத்தில் கர்த்தர், அவரது குமாரர் இயேசு, பரிசுத்த ஆவி என்று மும்மை வழிபாடு உண்டு. புராடஸ்டண்ட் பிரிவுகள் பலவற்றில் மும்மை வழிபாடு இல்லை என்றாலும் சிலுவை வழிபாடு உண்டு. பவுத்தம் வினோதமானது. கடவுள் மறுப்புப் பேசிய புத்தரையே கடவுளாக்கிக் கொண்டது மட்டுமல்லாது அவரது உருவத்தை வணங்கவும் தொடங்கியது. இந்து மதம் பற்றிச் சொல்ல வேண்டியதே யில்லை. அதில் ஏகப்பட்ட தெய்வங்கள். ஒவ்வொன்றையும் வேறுபடுத்திக் காட்ட அந்த ஆண் பெண் உருவங்களில் சிற்சில மாற்றங்கள்.
இஸ்லாம் ஏகத்துவத்தை அழுத்தமாகப் பேசியது மட்டுமல்லாது அதற்காகவே சிலை வணக்கத்தையும் நிராகரித்தது. இரண்டுக்குமிடையே ஆழ்ந்த தொடர்பு உண்டு. பல கடவுள் வணக்கம் என்றாலே வேறுபடுத்திக்காட்ட பல்வேறு சிலைகள் தேவைப்படும். சிலை வணக்கம் என்று கிளம்பினாலே அது பல சிலைகள் வணக்கத்தில், பல கடவுள் வணக்கத்தில் முடியும் அபாயம் இருந்தது. எனவே இரண்டையும் கறாராக நிராகரித்தது இஸ்லாம். ஏகக்கடவுள் வணக்கமும் உருவ வழிபாட்டு மறுப்பும் ஏற்கனவே இருந்தவை என்றாலும் அவற்றை மக்கள் உறுதியாகப் பற்றியிருக்கவில்லை என்பது தான் அதன் வருத்தமாக இருந்தது.
பைபிளின் பழைய ஏற்பாட்டில் வரும் ஆபிரகாமே அதைச் சொல்லியிருந்தார். நபிகள் நாயகத்திற்கு அருளப்பட்ட குர்ஆன் அதை மிகுந்த இலக்கிய அழகோடு இப்படி வருணிக்கிறது:
‘எனவே, இரவு அவரைச் சூழ்ந்தபோது அவர் ஒரு நட்சத்திரத்தைக் கண்டு இதுதான் என்னுடைய இறைவன் என்று கூறினார். ஆனால் அது மறைந்துவிட்டபோது, மறைந்து போகின்றவற்றை நான் நேசிப்பவனல்லன் என்று உரைத்தார். பின்னர் ஒளிரும் சந்திரனைக் கண்ட அவர் இதுதான் என்னுடைய இறைவன் என்று கூறினார். ஆனால் அதுவும் மறைந்தபோது என்னுடைய இறைவன் எனக்கு வழிகாட்டவில்லையெனில் வழிதவறிய கூட்டத்தாருள் நிச்சயமாக நானும் சேர்ந்திருப்பேன் என்று கூறினார்.
பின்னர் ஒளிரும் சூரியனைக் கண்டபோது இதுதான் என்னுடைய இறைவன்; இது எல்லாவற்றையும் விட மிகப் பெரியது என்று கூறினார். ஆனால் அதுவும் மறைந்து போகவே, என் சமூகத்தவரே! நீங்கள் இறைவனுக்கு இணைவைக்கும் அனைத்தை விட்டும் திண்ணமாக நான் விலகி விட்டேன். வானங்களையும், பூமியையும் படைத்தவனின் பக்கம் ஒருமனத்துடன் என் முகத்தை நான் திருப்பிவிட்டேன்; மேலும், ஒருபோதும் நான் இணைவைப்பவர்களில் உள்ளவனல்லன்’ என்று கூறினார் (திருக்குர்ஆன் 6:76-79)
ஆபிரகாம் இப்படியாக ஆதிகாலந்தொட்டு மனிதர்கள் வணங்கி வந்த சந்திர சூரியர்களை, நட்சத்திரக் கூட்டத்தை வரலாற்றில் மீண்டும் ஒருமுறை வன்மையாக நிராகரித்தார். அவற்றின் கடவுள் அந்தஸ்தைச் சர்வ சாதாரணமாகப் பறித்தார். ஏகக்கடவுளை ‘அல்லாஹ்’ என அழைத்தவர் அவருக்குக் கூட்டாளிகளைச் சேர்க்கக் கூடாது என்றார். எல்லாம் வல்ல கடவுளுக்குக் கூட்டாளி தேவை, குடும்பம் தேவை என்றால் அவர் எப்படி எல்லாம் வல்லவர் ஆவார் என்று கேட்காமல் கேட்டார்.
பல கடவுள் வணக்கத்தையும் உருவ வழிபாட்டையும் ஆங்காங்கே குர்ஆன் மறுத்துக் கொண்டே வந்தாலும் அத்தியாயம் 22 இதற்காகவே ஒதுக்கப்பட்டது போல உள்ளது. இந்த வசனங்களை (17-18) நோக்குங்கள்
‘இறைநம்பிக்கை கொண்டவர்கள், மேலும், யூதர்கள், ஸாபிகள், கிறிஸ்தவர்கள், நெருப்பை வழிபடுகின்றவர்கள் மற்றும் இறைவனுக்கு இணை வைத்தவர்கள் ஆகிய அனைவரிடையேயும் மறுமை நாளில் திண்ணமாக, அல்லாஹ் தீர்ப்பு வழங்குவான்! நிச்சயமாக யாவுமே அல்லாஹ்வின் பார்வையிலுள்ளது. வானங்களில் உள்ளவர்களும், பூமியில் உள்ளவர்களும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், பிராணிகளும் மற்றும் மனிதர்களில் பெரும்பாலோரும் ஏன், அல்லாஹ்வின் வேதனைக்கு இலக்காகிய பலரும் அல்லாஹ்வின் திருமுன் ஸஜ்தா செய்து சிரம்பணிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நீர் காண வில்லையா? ’ (திருக்குர்ஆன் 22 : 17,18)
பல கடவுள் வணக்கத்தை மட்டுமல்ல உருவ வழிபாட்டையும் இங்கே குர்ஆன் திட்டவட்டமாக மறுத்திருக்கிறது. இந்து மதத்தை நினைத்துப் பாருங்கள். அங்கே சகல வஸ்துக்களும் சில மாமனிதர்களும் கடவுள்களாக வணங்கப்படுகிறார்கள். ஒருபுறம் உபநிஷத்துகளில் ஏகக்கடவுள் பற்றிய சிந்தனை வெளிப்பட்டாலும், பிந்திய அதன் தத்துவ நூல்களிலும் ஏக பரமாத்மா சிந்தனை வெளிப்பட்டாலும் நடைமுறையில் என்னவோ பலகடவுள் வழிபாடும் சிலைகள் வணக்கமும்தான் அங்கே கோலோச்சுகிறது.
இத்தகைய மதங்கள் பற்றி குர்ஆன் அறிந்திருந்து அவற்றை நிராகரித்தது, கூடவே உருவமற்ற ஒரே கடவுளை வணங்கச் சொன்னது இது இறையியல் நோக்கில் ஒரு முக்கியமான வளர்நிலை. இந்து மத ஆன்மிகவாதிகள் பலரும்கூட பல கடவுள் வணக்கமும் உருவ வழிபாடும் பாமரர்களுக்காக வடிவமைக்கப்பட்டவையே, ஞானிகளைப் பொறுத்தவரை அவர்கள் ஏகப் பரம்பொருளை மானசீகமாக வணங்குவார்கள் என்று கூறியிருக்கிறார்கள். இஸ்லாமோ அதை சகலருக்குமாக ஆக்கி வைத்துள்ளது. இது ஆன்மிக நோக்கில் அபாரம் அன்றோ!
கறாரான ஏகக் கடவுள் வழிபாடு, சிலை வணக்கத்தைத் தவிர்த்தது என்றால் சிலை வணக்கத் தவிர்ப்பு பூசாரித் தனத்தை தவிர்த்தது. கடவுளுக்கும் மனிதர்களுக்கும் மத்தியில் இடைத்தரகர்கள் தேவையில்லை, மானசீகமான நேரடி வழிபாடு போதும் என்றது இஸ்லாம். தனி, கூட்டுத் தொழுகையே அதன் அஸ்திவாரமான சம்பிரதாயமானது. இதற்கு மசூதி எனும் சிறிதும் பெரிதான கட்டடங்கள் எழுந்தன. அவை வழிபாட்டுத் தலங்களே என்றாலும் அங்கே பிற மதங்களைப் போல வழிபடு சிலையோ சின்னமோ புத்தகமோ ஏதுமில்லை. எனவே பூசாரிக்கோ, அலங்காரத்திற்கோ, பூசைக்கோ ஆர்ப்பாட்டத்திற்கோ வேலையில்லை. ஏகக் கடவுளோடு தொழுகையின் மூலம் ஒன்றுவது எனும் ஞானமார்க்கம் சகலருக்கும் பரிந்துரைக்கப்பட்டது.
பூசாரிகள் இல்லாதது மனிதர்களிடையே மதரீதியாக பேதம் காட்டாத போக்கிற்கு வழிவகுத்தது என்றால், சமூக ரீதியாகப் பேதம் காட்டாத போக்கிற்கும் அடித்தளம் அமைத்தது. ஏழை பணக்காரன் எனும் வர்க்கரீதியான பேதம் உருவாவதை இது தடுக்கவில்லை என்றாலும் சித்தாந்த ரீதியாக மனித சமத்துவத்தை ஒப்புக்கொள்ள வைக்க இது உதவியது. அரேபியாவில் தொடங்கி உலகின் பல பகுதிகளிலும் பரவிய இஸ்லாம் அந்தந்த நாடுகளில் ஏற்கெனவே இருந்த மதங்களின் தாக்கத்திற்கு இயல்பாகவே ஆளானது. அதையும் தாண்டி அது தனது இந்த அடிப்படைக் கூறுகளை எந்த அளவு காப்பாற்றிக் கொண்டது என்பது தனித்த ஆய்வுக்குரியது.
இந்திய அனுபவம் இருக்கிறது இந்துமதத்தின் சாதிய ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்ட அடித்தட்டு மக்கள் இஸ்லாத்தின் மதரீதியான சமத்துவத்தால் பார்க்கப்பட்டார்கள். இலட்சக்கணக்கில். டில்லியை மையமாகக் கொண்டு சுல்தான்கள், முகலாயர்கள் ஆட்சி பல நூறு ஆண்டுகள் தொடர்ந்து நடந்தது அதற்கான மறைமுக ஊக்கமாக இருந்தது என்றாலும் மனமாற்றமே மத மாற்றத்திற்கு மூலகாரணமாக இருந்தது. இதை டில்லி அல்லாது மேற்குக் கோடியில் பஞ்சாபிலும் கிழக்குக் கோடியில் வங்காளத்திலும் பெருமளவிலான மதமாற்றம் நடந்தது உணர்த்தி நிற்கிறது.
அப்படி வந்த மக்கள் தங்களோடு பலகடவுள் வழிபாடு, சிலைவணக்கம், சாமியார்களைப் பூசிப்பது, சாதியம், இத்யாதிகளையும் நெஞ்சில் ஏந்தி வந்தார்கள். அவற்றிலிருந்து அவர்களை விடுவிக்கும் போராட்டம் ஒருபுறம் நடந்தது என்றாலும் மறுபுறம் அவற்றின் மிச்சசொச்சங்கள் இஸ்லாத்தில் தங்கிப்போனதும் நிகழ்ந்தது. வியப்பான விஷயம் என்னவென்றால், இவ்வளவிற்குப் பிறகும் இஸ்லாத்தின் அந்த அடிப்படைக் கூறுகளாகிய ஏகக் கடவுள் வணக்கம், உருவ வழிபாடு மறுப்பு, பூசாரித்தனம் இன்மை என்பவை அனேகமாக இன்னும் அங்கே கட்டிக் காக்கப்படுவது அதன் சித்தாந்த வலிமையை, அதற்கான ஈர்ப்பைக் காட்டுகிறது.
இஸ்லாத்தின் இந்த இறையியல் கோட்பாட்டைப் புரிந்து கொண்டால் முஸ்லிம்கள் ஏன் மனிதர்களைப் பார்த்து வணங்குவது இல்லை. அவர்கள் ஏன் ‘பாரத் மாதாகி ஜே’ என்றோ ‘தாய் மண்ணே வணக்கம்’ என்றோ சொல்லுவதில்லை. தொழுகையின்போது ஆரவார சத்தத்தை விரும்புவதில்லை போன் றவை இந்துக்களுக்கும் புரிந்து போகும் விஷயம். சகமனித மரியாதை பற்றியதோ தேசபக்தி பற்றியதோ அல்ல மாறாக அவர்களது இறையியல் கோட்பாடு பற்றியது.
பிற மதங்கள் பற்றிய புரிதல் இருந்தால் மதமாச்சரியங்கள் எழ வாய்ப்பில்லை. சிக்கல் என்னவென்றால் அந்தப் புரிதல் இல்லாததுதான் அல்லது அந்தப் புரிதல் வந்து விடக் கூடாது என்று சில சுயநல சக்திகள் வேலை பார்ப்பதுதான். அதையும் மீறி நல்ல புரிதலை நோக்கி நாடு நடைபயிலும் என நம்புவோம்.
# பேரா. அருணன்
ஒருங்கிணைப்பாளர் ,
தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை .
No comments:
Post a Comment