Wednesday, 1 May 2024

வாழ்வில் நாம் சிலரை சந்திப்போம். நட்பு கொள்வோம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

வாழ்வில் நாம் சிலரை சந்திப்போம். நட்பு கொள்வோம். அவரது நற்பண்புகளால் ஈர்க்கப்பட்டு ஏன் இவரை இவ்வளவு தாமதமாகி சந்தித்தோம் என்று கவலைப்படுவோம். இன்னும் சிலரை சந்திப்போம் சிறிது காலம் கழித்து ஏன் தான் என் வாழ்வில் இவரை சந்தித்தேனோ என்று கவலைப்படுவோம். முதலாமவராக இருப்பதுதான் ஓர் இறைவிசுவாசிக்கு அழகு. 

உலகில் காசு பணத்தை எப்படியும் எங்கும் தேடிக் கொள்ளலாம். ஆனால் நல்ல ஒரு நட்பு, உறவு கிடைப்பதென்பது விலைமதிப்பற்ற அல்லாஹ்வின் மிகப்பெரும் ஓர் அருள். ஈமான் பலவீனமடையும் போது அல்லாஹ்வை ஞாபகமூட்டக்கூடிய, கவலைகளின் போது ஆறுதலாக, துக்கத்திற்கு மன அமைதியாக, பிரச்சினைகளுக்கு தீர்வாக, ஆன்மீக வறுமைக்கு ஈமானிய சொத்தாக, அறியாமைக்கு சிறந்த ஞானமாக, தீமை செய்யும் போது தடுத்து நிறுத்தி நன்மைக்கு வழிகாட்டும் ஒளியாக, மொத்தத்தில் வாழ்வு இருண்டு போகும் போது தட்டிக் கொடுத்து பாதையை திறந்து கொடுக்கின்ற வழிகாட்டியாக, இறையச்சத்தை உள்ளத்தில் விதைக்கின்ற ஒரு நட்பு கிடைத்தால் ஒரு போதும் அந்த நட்பை இழந்துவிடாதீர்கள். பல கோடிகள் செலவு செய்தாலும் தூய்மையான ஒரு நட்பை ஒரு போதும் உங்களால் வாங்க முடியாது. 

தூய்மையான நட்பை, நல்ல உறவை பொய்களால் , வாக்கு மீறுதலால், ஏமாற்றத்தால் மோசடியால் உடைத்து சின்னாபின்னமாக்கிவிடாதீர்கள். உள்ளத்தை உடைத்து விட்டால் மீண்டும் அதை சரி செய்வது மிகவும் கடினமானது. அல்லாஹ்வால் வழங்கப்பட்ட அருளுக்கு நீங்கள் நன்றி செலுத்தாவிட்டால் கொடுத்து அழகுபார்த்த அதே ரப்புல் ஆலமீன் அதனை பறித்து உங்களை தண்டிப்பான் என்பதை மறந்துவிடாதீர்கள். அப்போது அந்த வலி மிக கொடூரமானதாக இருக்கும். ஆறுதல் சொல்ல அருகில் இருந்த நண்பனை தேடுவீர்கள் அவன் முகவரி தெரியாத இடத்தில் தன் ரப்போடு உரையாடிக்கொண்டிருப்பான். நீங்கள் செய்வதறியாது கதறிக்கொண்டிருப்பீர்கள். 

இருக்கும் போது உணராவிட்டால் இல்லாத போது அதன் பெறுமதியை அறிந்து கொள்வீர்கள். அதை நினைத்து நினைத்து வாழ்நாள் முழுக்க நிம்மதியற்று புலம்பிக் கொண்டிருப்பீர்கள்.

முபாரிஸ் இப்னு தாஜுதீன் ரஷாதி

No comments:

Post a Comment