*👺👺👺எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு_பதிவு👺👺👺*
*#மழை_காலங்களில்_மின்விபத்துகளைதடுக்கும்_வழிமுறைகள்*
மழை காலங்களில் மின்விபத்துகளை தடுக்க பொதுமக்கள் கீழ்கண்ட பாதுகாப்பு அறிவுரைகளை பின்பற்றுமாறு நெல்லை மண்டல தலைமை பொறியாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
மழை காலங்களில் மின்விபத்துகளை தடுக்க பொதுமக்கள் கீழ்கண்ட பாதுகாப்பு அறிவுரைகளை பின்பற்றுமாறு நெல்லை மண்டல தலைமை பொறியாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
* காற்று மற்றும் மழைக்காலங்களில் மின்கம்பங்கள், மின்மாற்றிகள், மின்பகிர்வு பெட்டிகள் மற்றும் ஸ்டே கம்பிகள் அருகே செல்லக்கூடாது.
* மின்கம்பிகள் அறுந்து விழுந்தால் அதன் அருகில் செல்வதோ அதனை தொட முயற்சிப்பதோ கூடாது. அதுகுறித்து அருகிலுள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிப்பதோடு மின்வாரிய அலுவலர்கள் வரும் வரை வேறு யாரேனும் அந்த மின்கம்பிகளை தொடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* இடி, மின்னலின்போது வெட்ட வெளியிலோ, மரங்களின் அடியிலோ, மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகள் அடியிலோ தஞ்சம் புகாதீர்கள். காங்கிரீட் கூரையிலான கட்டிடங்களில் தஞ்சமடையுங்கள். பாதுகாப்பான கட்டிடங்கள் இல்லாத பட்சத்தில் தாழ்வான பகுதியில் தஞ்சமடையுங்கள்.
* இடி, மின்னலின்போது டி.வி., மிக்ஸி, கிரைண்டர், கணினி, கைபேசி, தொலைபேசியை பயன்படுத்தக்கூடாது. திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் இருக்கக்கூடாது.
* மின்மாற்றிகள், மின்பகிர்வு பெட்டிகள் மற்றும் மின்கம்பங்கள் அருகே தண்ணீர் தேங்கியிருக்கும்போது அதன் அருகே செல்லக்கூடாது. அதுகுறித்து அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
* மழையின்போது வீடுகளில் உள்ள சுவர்களில் தண்ணீர் கசிவு இருக்குமாயின் அந்த பகுதியில் மின்கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அந்த பகுதியில் மின்சாரம் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.
* மேல்நிலை மின்கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு மின்சார வாரிய அலுவலர்களை அணுக வேண்டும். பச்சை மரங்கள் மின்சாரத்தை கடத்தும் தன்மை உடையதால் மின்கம்பிகளுக்கு அருகில் உள்ள மரங்களை வெட்டும்போது மரக்கிளைகளை மின்கம்பியில் பட்டு மரம் வெட்டும் நபருக்கு மின்விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
* மின்கம்பத்திற்கு போடப்பட்டுள்ள ஸ்டே வயர்களில் ஆடு, மாடுகளை கட்டுவதோ, மின்கம்பிகளுக்கு அடியில் கால்நடைகளை கிடை அமர்த்துவதோ, மின்கம்பங்களை பந்தல்களாக பயன்படுத்தப்படுவதோ, மின்கம்பங்கள், ஸ்டே வயர்கள், மற்றும் சர்வீஸ் பைப்புகளில் கொடிகள் கட்டி துணிகளை காயப்போடுவதோ கூடாது.
* வீடுகள், மின்கம்பங்கள், மற்றும் மின்மாற்றிகளில் ஏற்படும் மின்பழுதுகளை பொதுமக்கள் தாமாக சரிசெய்ய முயற்சிக்க கூடாது. மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.
* மின் நுகர்வோர் இருப்பிடத்தில் ஏற்படும் மின்விபத்துகளை தவிர்க்க அனைத்து கட்டிடங்களிலும் மின்கசிவு தடுப்பான் கருவியை மின் இணைப்பிற்கான சர்வீஸ் மெயின் அருகில் பொருத்த வேண்டும். மின்கசிவு தடுப்பான் கருவியானது பழுதான மின்சாதனங்களை இயக்கும் போது ஏற்படும் மின் கசிவினை கண்டறிந்து மின் வினியோகத்தை உடனடியாக நிறுத்தி மின் விபத்துகளை தவிர்த்திட ஏதுவாக இருக்கும்.
* மின்சார கம்பிகளுக்கு அடியில் கட்டிடங்கள் கட்டுவதை அறவே தவிர்க்க வேண்டும். மின்கம்பிகளுக்கு பக்கவாட்டில் கட்டிடங்கள் கட்டும்போது போதுமான பாதுகாப்பு இடைவெளி உள்ளதா? என மின்வாரிய அலுவலரை தொடர்பு கொண்டு தெளிவடைந்த பின்னரே கட்டுமான பணியை தொடங்க வேண்டும். மேலும் மின்கம்பிகளுக்கு அருகில் கட்டிடங்கள் கட்டும்போது சென்ட்ரிங் கம்பிகள் மற்றும் பலகைகளை கையாளும்போது அதிக கவனம் தேவை.
* வீடுகள் மற்றும் கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மோட்டார்களுக்கு தரமான ஒட்டு இல்லாத ஒயர்களை பயன்படுத்த வேண்டும்.
* வீடுகளில் பயன்பாட்டில் உள்ள குளிர்சாதன பெட்டி, கிரைண்டர் மற்றும் மின்மோட்டார்களுக்கு நில இணைப்புடன் கூடிய மூன்று பின் உள்ள பிளக்குகளை பயன்படுத்துவதோடு ஐ.எஸ்.ஐ. முத்திரை பொறிக்கப்பட்ட தரமான மின்சார ஒயர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும் மின்சார பிளக்குகளை பொருத்துவதற்கு முன்னரும், எடுப்பதற்கு முன்னரும் சுவிட்ச் ஆப் செய்ய வேண்டும்.
* குறுகலான தெருக்களிலும், வளைவுகளிலும் அமைந்துள்ள வீடுகளுக்கு மின்இணைப்பு ஒயர்களை கொண்டு செல்ல இருப்பு சப்போர்ட் பைப் அமைக்கும் பட்சத்தில் அதனை சுற்றி சுமார் 8 அடி உயரத்திற்கு தரமான பி.வி.சி. பைப்புகளை காப்பாக அமைக்க வேண்டும்.
* கனரக வாகனங்களை மின் கம்பிகளுக்கு அடியில் நிறுத்தி பொருட்களை ஏற்றவோ அல்லது இறக்கவோ கூடாது.
* கேபிள் டி.வி. வயர்களை மின்கம்பங்களில் கட்டுவதோ, மின்கம்பிகளுக்கு அருகில் கொண்டு செல்லவோ கூடாது. பச்சை மரங்களிலும், இரும்பு கிரில்களிலும் அலங்கார சீரியல் விளக்குகள் கட்டுவதை தவிர்க்க வேண்டும்.
* விவசாய நிலங்களில் மின்சார வேலி அமைப்பது சட்டப்படி குற்றமான செயலாகும். மேலும் மின்சார வேலி அமைப்பதனால் மனிதர்களும், கால்நடைகளும் மின்விபத்தினால் உயிரிழக்க நேரிடும்.
மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் பாதுகாப்பின்றி இருக்கும் பழுதான மின்கம்பங்கள், தாழ்வாக இருக்கும் மின்கம்பிகள் மற்றும் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் மின் பகிர்வு பெட்டிகள் போன்றவற்றை படத்துடன் முழு முகவரியை குறிப்பிட்டு *+918903331912* என்ற வாட்ஸ்-அப் எண்ணிற்கு குறுஞ்செய்தியாக தகவல் தெரிவிக்கலாம்.
*இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.*
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
No comments:
Post a Comment