Monday, 9 September 2019

குறை தேடி, புறம் பேசி, கோள் சொல்லித் திரிவோர்

குறை தேடி, புறம் பேசி, கோள் சொல்லித் திரிவோர் இறந்த சகோதரனின் மாமிசத்தை உண்பது போன்ற உச்சக் கட்ட வெறுப்புக்குரிய செயலில் ஈடு பட்டுள்ளார்கள் என்று ஸுரத்துல் ஹுஜ்ராத்தில் எல்லாம் வல்ல அல்லாஹ் கூறுகின்றான்.

ஒரு சகோதரனுக்கு அல்லது சகோதரியிற்கு முன்னால் பேசமுடியாத ஒன்றை பின்னால் பேசுவது புறமாகும், உள்ளதை பேசினாலும் கூட, இல்லாததை பேசினால் அது அபாண்டம் ஆகும் என்பது றஸுலுல்லாஹ் (ஸல்) சொல்லித் தந்த விளக்கமாகும்.

புறம் என்றால் என்னவென நபி(ஸல்)அவர்கள் விவரிக்கின்றார்கள்:

புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா? என நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர் என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் 'புறம்' என்றார்கள். நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் (அவதூறு கூறுகிறாய்) என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)

புறம் பேசுபவர்கள் மறுமை நாளில் கடுமையான வேதனை செய்யப்படுவார்கள். தமது கரங்களினாலே அவர்கள் வேதனை செய்யப்படுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மிஃராஜின் போது நான் ஒரு கூட்டத்தைக் கடந்து சென்றேன். அக்கூட்டத்தினருக்கு இரும்பினாலான நகங்கள் இருந்தன. அவர்கள் அதன் மூலம் அவர்கள் தங்கள் முகங்களையும் நெஞ்சங்களையும் காயப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது ஜிப்ரீலே, அவர்கள் யார் என்று கேட்டேன். இவர்கள் மனிதர்களின் மாமிசத்தைச் சாப்பிட்டவர்கள் (புறம் பேசியவர்கள்). மனிதர்களின் கண்ணியத்தில் கை வைத்தவர்கள் என்று விளக்கமளித்தார்கள். (அறிவிப்பாளர் அனஸ் (ரலி) ஆதாரம் : அஹ்மது)

நபி (ஸல்) அவர்கள் இரு கப்ருகளைக் கடந்து செல்கிறார்கள். அப்போது இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை. இவ்விருவரில் ஒருவர் தான் சிறுநீர் கழிக்கும் போது மறைப்பதில்லை. மற்றொருவர் கோள் சொல்லித் திரிபவராக இருந்தார் எனக் கூறி விட்டு, ஒரு பசுமையான பேரித்த மட்டையைக் கொண்டு வரச் சொல்லி, அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு கப்ரின் மீதும் ஒரு துண்டை நட்டினார்கள். அதுபற்றி நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் ஏன் இவ்வாறு செய்கின்றீர்கள் என்று கேட்கப்பட்ட போது, அந்த இரு மட்டைத்துண்டுகளும் காயாமல் இருக்கும் பொழுதெல்லாம், அந்த இருவரின் வேதனை குறைக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம் : புகாரி, முஸ்லிம்.)

ஒரு கூட்டத்தார் பிறிதொரு கூட்டத்தாரை ஆண்கள் ஆயினும் பெண்கள் ஆயினும் பரிகாசம் செய்யாதீர்கள், அவர்கள் அல்லாஹ்வின் பார்வையில் உயர்ந்தவர்களாக இருக்கலாம்.

ஒருவரை ஒருவர் பட்டப் பெயர்கள் கூறி இழிவுபடுத்தாதீர்கள். உள்ளங்களை காயப் படுத்தாதீர்கள். தனது நாவினால் நடத்தயினாலும் அடுத்தவரை காயப் படுத்தாது அபயமாளிப்பவனே உண்மையான முஸ்லீம் என இறை தூதர் (ஸல்) கூறியுளார்கள்.

மனிதனை அதிகமாக நரகில் கொண்டு போய் குப்புற வீழ்த்துவது அவனது நாவாகும் என்பதனால் நாவடக்கம் குறித்து இஸ்லாம் அதிகம் வலியுறுத்துகின்றது, காதுக்கு எட்டியதெல்லாம் ஆராய்ந்து பார்க்காமல் எத்திவைப்பது பொய் சொல்வதற்கு போதுமானதாகும் என்று எமக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

யாராவது ஒரு செய்தியைக் கொண்டுவந்தால் அதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்து பாருங்கள், இல்லாவிட்டால் அறியாமையால் ஒரு தரப்பிற்கு அநீதி இழைத்து விடுவீர்கள், என்று அல் குரான் கட்டளையிடுகின்றது.

No comments:

Post a Comment