Monday 16 September 2019

பன்மைச் சமூகமும் இஸ்லாமும்*

*✍முஹம்மது இப்ராஹீம் யூஸுஃபி*

*சிறுபான்மையினரின் பாதுகாவலர் ஹஜ்ரத் உமர் ரலி அவர்கள்*

*ஜெருசலம் கை மாற்றப்பட்டது. அதன் அடையாளமாக நகரத்தின் சாவி கலிபா உமர் (ரலி) அவர்களிடம் ஒப்புக் கொடுக்கப்பட்டது. நகரத்தின் பல்வேறு பகுதிகளையும் புதிய மன்னருக்குப் பாதிரியார் சுற்றிக் காட்டினார். விளக்கங்கள் கூறினார். கிருத்தவ தேவாலயங்களுக்குக் கூட்டிச் சென்றார்.*

*பாதிரியாருடன் ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் அங்குள்ள கிருத்துவ தேவாலயங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கும் பொது அசர் தொழுகைக்கான பாங்கு ஒலித்தது. தொழத்தயாரான உமர் (ரலி) அவர்களை தேவாலயத்திலேயே தொழுது கொள்ளும்படி பாதிரியார் வேண்டினார். ஆனால், கலிபா ஹஜரத் உமர் (ரலி) அவர்கள் சொன்னது என்ன தெரியுமா? " இறைவனை நாங்கள் அவனால் படைக்கப்பட்ட எந்த இடத்தில் வேண்டுமானாலும் தொழலாம்; ஆனால் எனது செயல், எதிர்காலத்தில் ஒரு முன்மாதிரியாகி எனது தோழர்கள் உங்கள் தேவாலயத்தில் தொழுவதற்கு திரண்டு வந்துவிடக் கூடுமென்று நான் அஞ்சுகிறேன்" என்று கூறினார். கலிபா தொழுத இடம் என்று முஸ்லிம்கள் நாளைக்கு உரிமை கொண்டாடி அதனால் சிறுபான்மையினராகிய கிருத்துவர்களுக்குப் பாதிப்பு வரக்கூடாது என்று கலிபா உமர் (ரலி) அவர்கள் கவனமாக இருந்து வேறொரு இடத்தில் தனது தொழுகையை நிறைவேற்றினார்கள்.*

*ஜெரூஸல மக்களுடன் உமர் ரலி அவர்கள் செய்துகொண்ட ஒப்பந்தம்*

*ஜெருசலம் நகரத்தை உமர் (ரலி) அவர்கள் பெற்றுக் கொண்டபோது அந்நகரில் அமைதி நிலவியது. அங்கு வாழ்ந்த கிருத்தவர்களுடன் கலிபா அவர்கள் ஒரு ஒப்பந்தத்தையும் செய்து கொண்டார்.அந்த ஒப்பந்தம்*

*"அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப் பெயரால் ....*

*எலியா (ஜெருசலத்தின் மறுபெயர்) நகரத்தின் மக்களுக்கு, நம்பிக்கையாளர்களின் தளபதியும் இறைவனின் சேவகனுமாகிய உமர் அளிக்கும் வாக்குறுதி. நோய்வாய்ப்பட்டவர்கள், நல்ல ஆரோக்கியமாக இருப்பவர்கள் உட்பட அனைவரின் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் தேவாலயங்களுக்கும் சிலுவைகளுக்கும் அவர்கள் மதத்துடன் தொடர்புடைய அனைத்துக்கும் நான் பாதுகாப்பு அளிக்கிறேன். அவர்களது சர்ச்சுகள் வீடுகளாக மாற்றப்படாது. அவைகள் அழிக்கப்படாது. சர்ச்சுகளின் இணைப்புப் பகுதிகளும் அழிக்கபடாது. இந்நகரில் வாழும் குடி மக்களின் சிலுவைகளும் உடமைகளும் அழிக்கபடாது. அவர்களது மத நம்பிக்கையில் எவ்வித முட்டுக்கட்டையும் போடப்படாது . அவர்களில் ஒருவருக்குக் கூட எவ்வித துன்பமும் இழைக்கப்படாது." (பார்வை : கலிபாக்கள் வரலாறு – மஹ்மூத் அஹ்மத் கழன்பர் )*

*உமர் (ரலி) ஆட்சியில் மத சுதந்திரம்*

*கிருத்தவ மற்றும் யூத மக்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் வழிபாட்டு உரிமைகளுக்கும் உத்திரவாதம் அளித்த ஹஜரத் உமர் (ரலி) அவர்கள் அந்த மக்கள் அரசுக்கு வரியை மட்டும் செலுத்த வேண்டுமென்று ஆணையிட்டார்கள். பணக்காரர்கள் மீது ஆண்டுக்கு ஐந்து தீனார்களும் நடுத்தர மக்கள் மீது நான்கு தீனார்களும் அடித்தட்டு மக்கள் மீது மூன்று தீனார்களும் வரியாக விதிக்கப்பட்டது. கிருத்துவ தேவாலயங்களில், முஸ்லிம்களின் பள்ளிகளின் தொழுகைக்கான பாங்கு நேரம் தவிர மற்ற நேரங்களில் தேவாலய மணிஓசை ஒலித்துக் கொள்ளவும் அனுமதியளிக்கப்பட்டது. கிருத்தவர்கள் தங்களின் சிலுவைகளைச் சுமந்து வீதிகளில் ஊர்வலம் வரவும் அனுமதியளிக்கப்பட்டது. முஸ்லிம்கள் அல்லாதவர்களின் சொத்துக்களை எவரும் சூறையாடவோ அத்துமீறி அனுபவிக்கவோ முயலக் கூடாதென கண்டிப்பாக அறிவுறுத்தப்பட்டனர். முஸ்லிம் அல்லாதவர் ஒருவரை ஒரு முஸ்லிம் கொலை செய்துவிட்டாலும் முஸ்லிம் அல்லாதவர்க்கு வழங்கப்பட்டதற்கு ஈடான அதே தண்டனையே முஸ்லிமுக்கும் வழங்கப்பட்டது. ஆடை அணிகலன்களை அந்தந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் தங்களின் பாரம்பரிய முறையில் அவர்களின் சொந்த விருப்பத்தின்படி அணிந்துகொள்ள உரிமை அளிக்கப்பட்டது. இதனால் கலாச்சார அடையாளங்களை வெளிப்படுத்திக் கொள்ள பூரண சுதந்திரம் அளிக்கப்பட்டது.*

*தனது ஆளுமைக்கு உட்பட்ட பகுதிகளில் அனைத்து மத மக்களையும் சரிசமமாக நடத்த வேண்டுமென்று கலிபா உமர் (ரலி) அவர்கள் கட்டளை பிறப்பித்து இருந்தார்கள். தனக்குப் பின் ஆட்சிக்கு வருபவர்களும் இந்த முறைகளைப் பின்பற்ற வேண்டுமென்றும் கூறி இருந்தார்கள்.*

No comments:

Post a Comment