Posted: 16 Jan 2011 08:03 AM PST
கலிகாலமப்பா! இது என நம்ம ஊர்களில் பெரியோர்கள் கூறுவது வழக்கம். தீமைகள் பல்கி பெருகிடும்போது, இயற்கைக்கு முரணானவைகளெல்லாம் நடக்கும்பொழுது, தீயசக்திகள் நாட்டை ஆளும்பொழுது இந்த வார்த்தையை பயன்படுத்துவார்கள். 'சத்தியம் கம்ப்யூட்டர்ஸ்' என்ற பெயரிட்டே ஒருவர் நாட்டு மக்களின் பணத்தையெல்லாம் வாரிசுருட்டியதும் தற்போது சிறையில் அவர் ஓய்வெடுப்பதும் நமக்கு தெரிந்த சேதிதான்.
பிரேமானந்தா, நித்யானந்தா கூடவே சங்கரமடத்து ஜெயேந்திரனும் காமக்களியாட்டம் போட்டு உள்ளே போனபொழுது காவிகளிலும் பாவிகள் இருக்கின்றனரா? என மக்கள் வியந்து போயினர். சன் தொலைக்காட்சி நித்யானாந்தாவின் லீலைகளை தொடர்ந்து ஒளிபரப்பிய பொழுது 'கர்மம் கர்மம்' என காரி உமிழ்ந்தவர்களும் உண்டு. 'புத்தம் சரணம் கச்சாமி' என்ற சுலோகத்தை கேட்டிருப்பீர்கள். இப்போதெல்லாம் 'யுத்தம் மரணம் கச்சாமிதான்' சாமியார்களின் வேலையோ என மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பிரக்யாசிங் தாக்கூரும், அஸிமானந்தாவும் குண்டுவெடிப்பு வழக்குகளில் கைதான பொழுது எழுந்த சந்தேகம் இது! இவ்வளவு காலமும் இந்தியாவில் நடக்கும் குண்டுவெடிப்புகளுக்களின் பழி பாவங்களையெல்லாம் சுமந்தது முஸ்லிம் சமுதாயமாகும். முஸ்லிம் சமுதாயத்திற்குள்ளேயும் பாசிசத்தின் வாடையை முகர்ந்துபோன சில புல்லுருவிகளும், அறிஞர்களின் போர்வையில் நாவண்மையை வெளிப்படுத்தும் சகலகலா வல்லுநர்களும் தமது சொந்த சமூக மக்களையே தீவிரவாதிகள் எனக்கூறி தங்களுக்கு ஏற்பட்ட அரிப்பை தீர்த்துக்கொண்டனர். ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் சிறைக்குள்ளே வாடும்பொழுது முஸ்லிம் சமுதாயம் தீவிரவாதம் பயங்கரவாதம் என்ற அதிகார-ஊடக வர்க்கத்தின் சாட்டையடிகளை நெஞ்சில் சுமக்கவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டது. ரிக்ஷாவை இழுத்தும், மூடைகளை சுமந்தும் வாழ்க்கையை ஓட்டியவர்கள் கல்வியறிவை பெற்றவுடன் முஸ்லிம் சமுதாயத்தின் படித்த இளைஞர்களும் தீவிரவாதிகளாக்கப்பட்டனர். வகுப்புவாத வெறியிலும், மேல்தட்டு மேதாவித்தனத்திலும் ஊறிப்போன போலீசும், உளவுத்துறையும், ஊடகங்களும் ஒரே ரீதியிலான பொய்க் கதைகளை பரப்பிவந்தனர். கடந்த காலங்களில் மேல்ஜாதி வர்க்கத்தினருக்கும், மேல்தட்டு தரகு முதலாளிகளுக்கும் அடிமை சேவகம் புரிந்தவர்கள் இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட பொழுது இவர்களுக்கெல்லாம் சமூகத்தில் அந்தஸ்தையும், கண்ணியத்தையும் அளித்தால் நமது நிலை என்னவாகும்? என சிந்தித்த தீய எண்ணங்கொண்ட ஹெட்கோவரும், கோல்வால்கரும் போன்ற மேல்ஜாதி திமிர்பிடித்த மேதாவிகள் ஆர்.எஸ்.எஸ் என்ற பயங்கரவாத இயக்கத்தை உருவாக்கி கலவரங்கள், இனப்படுகொலைகள், குண்டுவெடிப்புகள் வாயிலாக முஸ்லிம் சமூகத்தை பூண்டோடு அழிக்க திட்டம் தீட்டி செயல்படுத்தத் துவங்கினர். கொடூரமாக கொல்லப்படும் முஸ்லிம்கள் மீது எவருக்கும் பரிதாபம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அவர்களையே பலிகடாவாக்கி தீவிரவாத முத்திரைக்குத்தி சிறைக் கொட்டகைகளில் அடைத்தனர். அதிகார வர்க்கத்திலும், ஊடகத்திலும், இன்னும் பிற துறைகளிலும் ஊடுருவிய பாசிச வெறி இதற்கு பெரிதும் துணைபுரிந்தது. முந்தைய காலங்களில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் பாவத்தை முஸ்லிம்கள் மீது சுமத்தினர். பலதார மணம், தலாக் போன்றவையெல்லாம் பெருங்குற்றங்கள் எனக்கூறி சமூக விரோதிகளாக முஸ்லிம்கள் சித்தரிக்கப்பட்டனர். இந்தியாவின் அதிகார மையங்களிலும், வேலைவாய்ப்புகளிலும், கல்வி நிலையங்களிலும் புறக்கணிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு ஒரே ஆறுதலாக மாறியது வளைகுடா நாடுகளே. அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதற்காகவும், பெற்றோரின் கடன் சுமையை அடைப்பதற்காகவும், சகோதரிகளின் திருமணங்களை நடத்துவதற்காகவும் வளைகுடா நாடுகளின் பாலைவன மண்ணில் இரத்தத்தை வியர்வையாக்கி உழைத்து அனுப்பிய காசுகளால் முஸ்லிம் சமுதாயத்தின் ஒரு சிலரின் வாழ்க்கை மேம்படத் துவங்கியது. இதனைக் கண்ணுற்ற பாசிச சக்திகள் சும்மா இருப்பார்களா? உடனே ஹவாலா, வெளிநாட்டில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் என்ற கட்டுக் கதைகளை கிளப்பி விட்டார்கள். தாடி வைப்பதும், ஹிஜாப் அணிவதும் கூட தீவிரவாதமாக சித்தரித்தது இந்தியாவின் உச்சநீதிமன்றம். ஆதாரமில்லாவிட்டாலும் பொதுமனசாட்சி எனக்கூறி முஸ்லிம் அதுவும் கஷ்மீரி முஸ்லிம் என்பதற்காக பாராளுமன்றத் தாக்குதலில் சிக்கவைக்கப்பட்ட அப்ஸல் குருவுக்கு தூக்குத் தண்டனையை உறுதிச்செய்தது அதே உச்சநீதிமன்றத்தின் ஹிந்துத்துவ மனசாட்சிதான். நாடு முழுவதும் குண்டுவெடிப்புகளை நிகழ்த்திவிட்டு அவ்விடங்களில் குர்ஆன் வசனங்கள், அரபு அல்லது உருது மொழியிலான கவிதைகள் என எழுதப்பட்ட காகிதங்களை விட்டெறிந்துவிட்டு பழியை லாவகாமாக முஸ்லிம்கள் மீதே சுமத்திவந்தனர். சொந்த சமுதாய முஸ்லிம்கள் தொழுகைக்கு செல்லும் மஸ்ஜிதுகளிலும் குண்டுவைக்கும் மா பாதகர்கள் என்ற பெரும்பழியும் முஸ்லிம்கள் சுமக்க வேண்டியிருந்தது. முஸ்லிம் சமூகத்தில் நிலவும் கருத்து வேறுபாட்டை பயன்படுத்திக்கொண்டு அஜ்மீரில் குண்டுவைத்தவர்கள் தர்காவை விரும்பாதவர்கள் எனக் கட்டுக்கதையை பரப்பிவிட்டனர். அரவை இயந்திரத்தின் வயர்களும், பேட்டரிகளும் சி.டிக்களும் பெரும் ஆயுதங்கள் என அறிமுகப்படுத்தப்பட்டன. மொபைல் ஃபோனில் அரபு மொழியைப் பார்த்துவிட்டு அல்காயிதா தீவிரவாதிகள் என தொழில்நுட்பம் தெரியாமல் கதையளந்தனர். வீட்டிலிருந்த பெண்களையும் தீவிரவாதிகள் என சித்தரித்தனர். பர்தாவுக்குள் குண்டுவைத்துக் கொண்டு தற்கொலைப் படையாக திரிவதாக பொய்க் கதைகளை பரப்பினர். இதையெல்லாம் இந்தியாவில் பெரும்பாலோர் நம்பவும் செய்தனர். 'அரசன் அன்றே கொல்வான் கடவுள் நின்றுக் கொல்வார்' என்ற பழமொழிக்கேற்ப உண்மை ஒரு நாள் வெளிப்பட்டது. ஹேமந்த் கர்காரே என்ற நடுநிலையான அதிகாரியின் மூலம் ஹிந்துத்துவ பயங்கரவாதத்தின் உண்மை முகம் வெட்ட வெளிச்சமாக்கப்பட்டது. கர்காரேயால் தங்களது திட்டங்கள் தவிடுபொடியாகிவிடும் எனக் கருதிய பாசிச கும்பல் அவருக்கு மிரட்டல் விடுத்தது. கடைசியில் மர்மமான முறையில் கொல்லப்பட்டார் கர்காரே. அவரது கொலைக்கு யார் காரணம் என்பது நமக்கு உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெளிவானதாகும். இடையில் தொய்வடைந்த விசாரணை ராஜஸ்தான் ஏ.டி.எஸ், என்.ஐ.ஏ, சி.பி.ஐ ஆகிய புலனாய்வு ஏஜன்சிகளால் சூடு பிடித்தது. ஏற்கனவே கைதுச் செய்யப்பட்ட காவி உடை தரித்த பிரக்யாசிங் என்ற சுவாமினியுடன் அஸிமானந்தா என்ற ஒரு சுவாமிஜியும் தற்பொழுது மாட்டிக்கொண்டார். சிறைக் கம்பிகளை எண்ணுவதற்கு தகுதியுடைய இவர்களுக்கு சிறைச்சாலைகளில் வசதிகள் செய்துக் கொடுக்கப்பட்டன. கொலை வழக்கில் உள்ளே சென்ற காமக்கோடிக்கு காலைக் கடன்களை நிறைவேற்ற வாழை இலையை தேடி காவல்துறை அலைந்ததை பத்திரிகைகளில் படித்திருக்கிறோம். சுவாமிகள் என்ற பெயரில் மக்களை அண்டிப் பிழைத்து சுகபோக வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு சிறை வாழ்க்கையின் வசதி வாய்ப்புகள் கசக்க ஆரம்பித்தன. இதனால், அதிகாரிகளுடன் தங்களுக்கு வசதி வாய்ப்புகளைக்கோரி மோதலில் ஈடுபட்டனர். ஹைதராபாத் சஞ்சல்குண்டா சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹிந்துத்துவ பயங்கரவாதி அஸிமானந்தாவுக்கு சேவகம் புரிவதற்கு சிறை அதிகாரிகளால் அப்துல் கலீம் என்ற முஸ்லிம் சிறைவாசி நியமிக்கப்பட்டார். சுவாமிஜிக்கு பைப்பிலிருந்து தண்ணீர் பிடித்துக் கொடுத்தல், காவி ஆடைகளை துவைத்துக் கொடுத்தல் என அவருக்கு தேவையான வேலைகளை செய்துக்கொடுக்க அப்துல் கலீமுக்கு எவ்வித தயக்கமும் ஏற்படவில்லை. சாதாரணமாக கைதிகள் அனைவரும் வரிசையில் நின்று உணவைப் பெற்று செல்லும்போது அப்துல் கலீம் அஸிமானந்தாவுக்காக வரிசையில் நின்று உணவைப் பெற்றுக் கொடுத்தார். தான் ஏற்றுக்கொண்ட மார்க்கம் எந்த மதத்தைச் சார்ந்த மனிதர்களுக்கும் சேவை புரிவதை தடுக்கவில்லை என்பதில் நம்பிக்கைக் கொண்ட அப்துல் கலீம் அஸிமானந்தாவுக்கு தொடர்ந்து சேவை புரிந்துவந்தார். இந்திய சமூகம் குண்டுவெடிப்புகளின் உண்மை நிலையை அறிவதற்குரிய வாய்ப்பாக அஸிமானந்தாவையும், அப்துல் கலீமையும் இறைவன் உரையாட வைத்தான். தான் நடத்திய குண்டுவெடிப்புகளில் ஒன்றான மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பின் குற்றத்தை சுமந்துக்கொண்டு சிறைக் கொட்டகையில் அடைக்கப்பட்டவர்களில் ஒருவர்தான் அப்துல் கலீம் என்பதை அஸிமானந்தா புரிந்துக்கொண்டார். இந்தியாவில் பாசிச சக்திகளை உரமூட்டி வளர்ப்பதில் மன மகிழ்ச்சியடையும் இந்தியக் கலாச்சாரத்தின் பாதுகாவலர்களுக்கும் அவர்களுக்கு துதிபாடும் சமுதாய துரோகிகளுக்கும் ஏற்படாத மனமாற்றத்தை இறைவன் அஸிமான்ந்தாவுக்கு அளித்தான் என்றே கூறலாம். இந்திய ஆட்சியாளர்களுக்கோ, அதிகார வர்க்கத்தினருக்கோ, போலீசுக்கோ, ஊடகங்களுக்கோ இத்தகைய மனமாற்றம் ஏற்படும் வாய்ப்பு இல்லை. குண்டுவெடிப்புகளை நடத்தி ஏராளமான அப்பாவி மக்களை கொன்று குவித்ததற்கு காரணம் அஸிமானந்தா என்பதை அறிந்த பிறகும் அப்துல் கலீம் அவரிடம் எவ்வித கோபமும் கொள்ளவில்லை. அவருக்கு தொடர்ந்து சேவை புரிந்தே வந்தார் (இதனை இதுவரை உலகம் காணாத மிகப்பெரிய மத நல்லிணக்கம் எனக்கூறி முஸ்லிம் சமுதாயத்தில் மிதவாதிகள் என்று கூறிக் கொள்ளும் சிலர் புளங்காகிதம் அடையலாம்). ஒன்றரை வருடங்களாக சிறையில் வாடும் அப்துல் கலீமுக்கு வயதான பெற்றோர்களும், இளம் வயது மனைவியும், சிறு குழந்தையும் உண்டு. அப்துல் கலீம் சிறையில் வாடும்பொழுது வெளியே அவருடைய குடும்பம் கவனிப்பாரின்றி தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அப்துல் கலீமைப் போலவே மலேகான் குண்டுவெடிப்பில் கைதுச் செய்யப்பட்ட 32 அப்பாவி முஸ்லிம்களும் பல ஆண்டுகளாக சிறைக் கொட்டகையில் தங்கள் வாழ்க்கையை கழித்துவரும் அவலமும் நீடிக்கத்தான் செய்கிறது. இன்று அப்துல் கலீமைப் போல் 1500க்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் பொய்யாக தங்கள் மீது சுமத்தப்பட்ட தீவிரவாத வழக்குகளின் காரணமாக சிறைச்சாலைகளில் அநியாயமாக அடைக்கப்பட்டுள்ளனர். மொபைல் வியாபாரியான அப்துல் கலீம் 2007 ஆம் ஆண்டு மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச் செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். பின்னர் ஒன்றரை ஆண்டு சிறைவாசத்திற்கு பிறகு வெளியே வந்தபிறகும் மீண்டும் இதேக்குற்றம் சுமத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். சஞ்சல்குடா சிறையிலிருந்த பொழுதுதான் அச்சிறையில் அடைக்கப்பட்ட அஸிமானந்தாவுக்கு சேவை புரிய பணிக்கப்பட்டார் அப்துல் கலீம். 21 வயதான அப்துல் கலீமின் உயர்ந்த நற்குணம் அஸிமானந்தாவின் உள்ளத்தை உருகச் செய்தது என twocircles.net என்ற இணையதள பத்திரிகை கூறுகிறது. தன்னுடன் வாழ்ந்த ஹிந்துத்துவ பயங்கரவாதிகளின் ஒழுக்க வாழ்வுடன் அப்துல் கலீமை ஒப்பீடுச்செய்த அஸிமானந்தாவுக்கு உண்மை புரிய ஆரம்பித்தது. கடந்த 2010 டிசம்பர் 18-ஆம் தேதி அஸிமானந்தா புதுடெல்லி மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்கும் பொழுது அதனை தடுக்கத்தான நீதிபதி முயன்றார். குற்றத்தை ஒப்புக்கொண்டால் மரணத்தண்டனை கிடைக்கும் என்பதையும் அஸிமானந்தாவுக்கு நினைவூட்ட நீதிபதி தயங்கவில்லை. சன்னியாசினி பிரக்யாசிங் தாக்கூர் கடந்த 2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கைதுச் செய்யப்பட்டபோதும் அஸிமானந்தா கடந்த ஆண்டு நவம்பர் 19-ஆம் தேதி ஹரித்துவாரில் தலைமறைவாகயிருந்த பொழுது சி.பி.ஐயால் கைதுச் செய்யப்பட்டார். சுவாமி குற்றத்தை ஒப்புக்கொண்டுவிட்டாரே என்ற கவலையில் ஆழ்ந்துள்ள நீதிமன்றங்களும், போலீசும், ஊடகங்களும் அப்துல் கலீம் போன்ற அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளைக் குறித்து தொடர்ந்து மெளன விரதத்தையே கடைபிடித்து வருகின்றன. அப்துல் கலீமைப் போன்ற அப்பாவிகளும், களங்கமில்லா உள்ளத்திற்கு சொந்தக்காரர்களும், நிரபராதிகளும்தான் இந்திய முஸ்லிம்களில் 95 சதவீதம் பேரும். அப்துல் கலீமைப் போன்ற மார்க்கப் பற்றுடைய, சேவை மனப்பான்மைக் கொண்ட, தேசத்தை மிக அதிகமாக நேசிக்கும், ஒருபோதும் தான் வாழும் தேசத்தை காட்டிக்கொடுக்க முயலாத இந்திய முஸ்லிம்களுக்கு பரிசாக இந்தியாவில் சிறைக் கொட்டகைகளை தயாராக்கி வைத்திருக்கிறோம் என்பதை இனிமேலாவது சிந்திப்பார்களா அரசும் அதிகாரவர்க்கங்களும்? உண்மையான ஐ.எஸ்.ஐ ஏஜண்டுகளும், அவர்களிடமிருந்து பணத்தை பெற்று வரும் சுவாமிஜி, சுவாமியாரினிகளும் சுய விருப்பப்படி ஆட்டம் போடும்பொழுது அப்பாவி முஸ்லிம்களின் தலையில் ஐ.எஸ்.ஐ தொப்பியை அணிவிக்கின்றார்கள் இந்தியாவின் ஆட்சியாளர்களும், அதிகாரவர்க்கத்தினரும். மேற்குவங்காளத்தைச் சார்ந்த நபாகுமார் சர்க்கார் என்ற 59 வயது அஸிமானந்தாவின் 42 பக்கங்களைக் கொண்ட நீண்ட எவ்வித தூண்டுதலும் இல்லாமல் அளிக்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம் இந்தியாவில் ஹிந்துக்களிலும், ஹிந்து புரோகிதர்களின் கூட்டத்திலும் பக்தியின் பெயரால் பயங்கரவாத செயல்களின் பாரம்பரியம் மறைந்திருக்கிறது என்பதை வெளிச்சம்போட்டு காட்டிய பிறகும் இந்தியாவில் ஹிந்துத் தீவிரவாதத்திற்கு எதிரான எதிர்ப்புகளின் சலனங்கள் கூட தென்படாததில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால், தற்பொழுதும் போலீசும், ஊடகங்களும், என்.ஐ.ஏ போன்ற மத்திய புலனாய்வு ஏஜன்சிகளும் இருட்டில்தான் துளாவிக் கொண்டிருக்கின்றார்கள். கேரளாவில் நடந்த சில சம்பவங்களை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். அம்மாநிலத்தில் நடந்த கோழிக்கோடு குண்டுவெடிப்பு, எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குண்டுவெடிப்பு, களமசேரி பஸ் எரிப்பு, வாகமன் முகாம் போன்ற அரைத்த மாவையே திரும்பவும் அரைத்துக்கொண்டு சங்க்பரிவார பயங்கரவாதத்தை மூடிமறைக்க முயற்சிகள் நடக்கின்றன. ஆனால், அம்மாநிலத்தைச் சார்ந்த சுரேஷ் நாயர் என்ற ஹிந்துத்துவா பயங்கரவாதியைக் குறித்து ஊடகங்கள் மெளனம் சாதிக்கின்றன. 115 நபர்களின் உயிரைப் பறித்த வெடிக்குண்டு சம்பவங்கள் வெளிவரும்பொழுது எவரும் மரணிக்காத, எவருக்கும் காயத்தை ஏற்படுத்தாத சம்பவங்களில் ஊகங்களை பரப்பி பொதுமக்களை பீதிவயப்படுத்தும் தந்திரத்தை மேற்கொண்டுள்ளார்கள் அரசு-அதிகார-ஊடகத்துறை பாசிஸ்டுகள். ஒருவேளை, நாளை அஸிமானந்தா அப்ரூவராக மாறி விடுதலையாகலாம். இல்லையெனில், பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பைப்போல் நம்பிக்கையை காரணங்காட்டியோ அல்லது அப்ஸல் குருவைப்போல் ஹிந்து மனசாட்சியை பொது மனசாட்சியாக மாற்றியோ அஸிமானந்தாவை நீதிமன்றமே விடுவிக்கலாம். ஆனால், அப்பொழுதும் அப்துல் கலீம் உள்பட 1500க்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் சிறையில் வாடுவதைத்தான் இந்தியாவின் நீதிபீடங்கள் விரும்புகின்றனவா?
விமர்சகன்
|
முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; நீங்கள் வெற்றியடைவீர்கள்! 3:200
Tuesday, 8 October 2013
கலிகாலமும் அப்துல் கலீமுகளின் அவலமும்
Labels:
இந்தியா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment