Tuesday 24 September 2013

மதக்கலவரத்தைத் தூண்ட முயலும் பா.ஜ.க வினருக்கு எதிராக முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கக் கோரி திருச்சி வழக்குரைஞர்கள் 200 பேர் ஆட்சியரிடம் மனு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,
24.9.2013
பெறுநர்
மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
திருச்சி மாவட்டம்,
திருச்சி
ஐயா,
பொருள் திருச்சியில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான மதக் கலவரத்தை தூண்டும் முயற்சிகளை முன் கூட்டியே தடுத்து நிறுத்தக் கோரி-
திரு. நரேந்திர மோடி வருகையை ஒட்டி திருச்சி நகரில் பாரதிய ஜனதா கட்சியினர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பொது அமைதிக்கு கேடு விளைவிக்கும் விதத்தில் அமைந்திருக்கின்றன. தங்களுடைய விளம்பர பானர்களை ம.க.இ.க வினரும் முஸ்லிம்களும் கிழித்து சேதப்படுத்தி விட்டதாக கூறி நேற்று காலை திருச்சி காந்தி மார்க்கெட் அருகில் பாரதிய ஜனதா கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது பொய்க்குற்றச்சாட்டு என்றும், பாரதிய ஜனதா கட்சியினரே தமது பானர்களை கிழித்து விட்டு தங்கள் மீதும், முஸ்லிம் மக்கள் மீதும் பொய்க்குற்றம் சுமத்துவதாக ம.க.இ.க வினர் மறுப்பு அறிக்கை வெளியிட்டிருந்தனர். மறியல் நடத்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் அபாண்டமாக தங்கள் மீது பழி சுமத்தப்படுவதாகவும் தாங்கள் மிரட்டப்படுவதாகவும் கூறுகின்றனர்.
இவ்வாறு பொய்க்குற்றம் சாட்டுவதும், வதந்திகளைப் பரப்பி பதட்டத்தையும் கலவரத்தையும் உருவாக்குவதும் பாரதிய ஜனதா கட்சியினருக்கு புதிதல்ல. சமீபத்தில் திண்டுக்கல் பா.ஜ.க நிர்வாகி வீட்டின் மீது முஸ்லிம்கள் வெடிகுண்டு வீசியதாக குற்றம் சாட்டினர். காவல் துறையின் விசாரணைக்குப் பின்னர் அவர்களே வெடி குண்டை வீசி, பழியை முஸ்லிம்கள் மீது போட்டது தெரிய வந்தது. அதே போன்று கோவையில் அனுமன் சேனா என்ற அமைப்பின் நிர்வாகியை முஸ்லிம்கள் கடத்தி விட்டதாக செய்தி பரப்பினர். அவரை யாரும் கடத்தவில்லை என்பதும், அவரே கன்னியாகுமரிக்கு சென்று விட்டு, கடத்தல் என்று நாடகமாடியிருக்கிறார் என்பதும் காவல் துறையின் விசாரணைக்குப் பின் தெரியவந்தது.
ரியல் எஸ்டேட், கந்து வட்டி, பெண்கள் தொடர்பான தனிப்பட்ட விவகாரங்களின் காரணமாக சில இந்து முன்னணியினர் மற்றும் பாரதிய ஜனதாவினர் சமீபத்தில் கொல்லப்பட்டதை, முஸ்லிம்  தீவிரவாதிகளின் தாக்குதல் என்றும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகவும் பாஜக நிர்வாகிகள் தமிழக அரசை குற்றம் சாட்டினர். இத்தாக்குதல்களுக்கும் முஸ்லிம் தீவிரவாதிகளுக்கும் தொடர்பில்லை என்றும் இவை தனிப்பட்ட விவகாரங்கள் என்றும் தமிழக டிஜிபி இவற்றை மறுத்திருந்தார்.
பொய்யான வீடியோக்களை பரப்பி அதன் அடிப்படையில் உத்தரப்பிரதேசத்தில் பாஜக வினர் தூண்டிய கலவரம் பல உயிர்களைக் காவு கொண்டு பல்லாயிரம் முஸ்லிம் மக்களை அகதிகளாக்கியிருக்கிறது. மோசடி வீடியோக்களை காட்டி கலவரத்தை தூண்டிய குற்றத்துக்காக பாரதிய ஜனதா எம்.எல்.ஏக்கள் அங்கு கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
தற்போது மோடியின் வருகையை ஒட்டி திருச்சியில் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு கலவரத்தை தூண்டி அதன் மூலம் கூட்டம் சேர்க்கவும், இந்து ஓட்டுக்களை அறுவடை செய்து அரசியல் ஆதாயம் அடையவும் பாஜக முயல்கிறது. இசுலாமிய மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் ஒலிபெருக்கியை அலற விட்டுக் கொண்டு வேனில் செல்வது, பெண்களை நோக்கி வக்கிரமான முறையில் சைகைகள் செய்வது போன்ற நடவடிக்கையில் பாஜக வினர் ஈடுபடுவதாகவும், தங்களை அச்சுறுத்துவதாகவும் முஸ்லிம் மக்கள் கூறுகின்றனர். இந்திய அரசியல் சட்டம் கூறும் மதச்சார்பின்மைக் கொள்கையில் நம்பிக்கையற்றவர்களான பாரதிய ஜனதா கட்சியினரின் இத்தகைய முயற்சிகளை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை தாங்கள் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
திருச்சி மாநகர் மற்றும் புறநகரில் சிறுபான்மை மக்கள் வசிக்கும் பகுதிகளில் பாஜகவினர் பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி மறுப்பதன் மூலம், சிறுபான்மை மக்களின் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்த வேண்டும். மேலும் திருச்சியில் தேநீர்க்கடைகளில் நிற்கும் முஸ்லிம்களைப் புகைப்படம் எடுப்பது, வீடுகளுக்கு வரும் உறவினர்கள் பற்றி தகவல் தர வேண்டும் என்று முஸ்லிம் மக்களை நிர்ப்பந்திப்பது என்பன போன்ற சட்டவிரோதமான, மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் காவல் துறையினர் ஈடுபடுவதையும் நிறுத்த வேண்டும்.
26 செப்டம்பர் அன்று நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் சிறுபான்மை மக்களை இழிவு படுத்தும் வகையில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ யாரும் பேசக்கூடாது என்பதற்கும், மதக்கலவரத்தை தூண்டும் விதத்தில் முழக்கங்களை எழுப்பக்கூடாது என்பதற்குமான உத்திரவாதத்தை மாநிலத் தலைவர் பொன். இராதாகிருஷ்ணன் எழுத்து பூர்வமாக வழங்க வேண்டும்.
பாஜக வின் மாநிலத்தலைவர் பொன் இராதாகிருஷ்ணன், துணைத்தலைவர் எச். ராஜா, திருச்சி மாவட்ட பாஜக நிர்வாகிகள் ஆகியோரிடம், கு.வி.ந.ச பிரிவு 110 (e) மற்றும் (g) இன் கீழ் நன்னடத்தைப் பத்திரங்களை திருச்சி மாவட்ட நிர்வாகம் எழுதிப் பெற வேண்டும் என்று கோருகிறோம்.
மேற்கூறிய நடவடிக்கைகளின் மூலம் சிறுபான்மை மக்களின் அச்சத்தைப் போக்குவதுடன், திருச்சி நகரில் மதக்கலவரத்தை தூண்டுவதற்கான முயற்சிகளையும் முன் கூட்டியே தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கீழே கையொப்பமிட்டுள்ள வழக்குரைஞர்களாகிய நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.
ஒப்பம் வழக்கறிஞர்கள்
இந்த மனுவை திருச்சி நீதிமன்றங்களைச் சேர்ந்த 200 வழக்கறிஞர்கள் கையொப்பமிட்டு மாவட்ட ஆட்சியரிடம் அளித்திருக்கிறார்கள்.

நன்றி ----- வினவு

No comments:

Post a Comment