Sunday 27 February 2011

கடவுளாக ரோட்டோர எல்லை கல்:பெயர் தெரியாமலே வழிபாடு

ராமநாதபுரம்:ரோட்டோர எல்லை கல்லை சிலர் கடவுளாக சித்தரித்து விட்டு செல்ல, பலரும் அதை வழிபட்டு வருகின்றனர்.ராமநாதபுரம் மாவட்டம் எட்டிவயல் அருகே மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் எல்லை கல் ஒன்று உள்ளது. சில நாட்களுக்கு முன், அந்த கல் மீது சிலர் மாலை போட்டு, பூஜை நடந்ததற்கான அடையாளங்களுடன் விட்டு சென்றனர். அதை அவ்வழியாக வந்தவர்கள் பார்த்து, வழிபட துவங்கினர்.சில நாட்களில் எல்லை கல் வழிபாடு பிரபலமானது.
வெளியூர் வாசிகள் இதை பொருட்படுத்தவில்லை என்றாலும், அருகில் உள்ள கிராமத்தினர் இவ்வழியாக செல்லும் போது எல்லை கல்லை வழிபடுவதை வழக்கமாக்கினர். நெடுஞ்சாலைத்துறையினர் ஒட்டிய ஒளிரும் ஸ்டிக்கரால், இரவில் கல் ஒளிர்வதை கூட, கடவுளின் அருள் என அப்பகுதியினர் நம்புகின்றனர். சத்திரக்குடியை சேர்ந்த சந்திரசேகர் கூறியதாவது: ஒரு மாதத்தில் தான் இந்த வழிபாட்டு முறை வந்தது. இதை வழிபட்டு சென்றதால், எனக்கு சில காரியத்தில் வெற்றி கிடைத்தது. இதற்கு பெயர் வைத்தால் வழிபட வசதியாக இருக்கும், என்றார்.
பல ஆண்டுகளுக்கு பின், சமீபத்தில் தான் நெடுஞ்சாலையில் உள்ள எல்லை கற்கள் புதுப்பிக்கப்பட்டன. அதற்குள் அதை கடவுளாக்கி வழிபாட்டு முறையையும் கொண்டு வந்ததை அப்பகுதி பகுத்தறிவாளர்கள் ஏற்கவில்லை. "விளையாட்டாக யாரோ செய்த செயல், தற்போது கடவுள் நம்பிக்கையாக மாறிவருவதாக,' சிலர் கூறினர். ""கடவுளாக பாவித்தாலும் இதுவரை அதற்கு பெயர் வைக்காமல் விட்டு வைத்ததே,''ஆறுதல்பட வேண்டிய விசயம்.

நன்றி-தினமலர்

No comments:

Post a Comment