Tuesday, 15 February 2011

குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சி: கன்னியாஸ்திரி பரபரப்பு குற்றச்சாட்டு


திருச்சி : ""கற்பழிப்பு வழக்கு குற்றப்பத்திரிகையில் உள்ள குற்றவாளிகள் பெயர்களை நீக்க முயற்சிக்கும் மாஜிஸ்திரேட் மீதும், போலீஸ் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் கன்னியாஸ்திரி ப்ளாரன்ஸ் மேரி புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் முதல்வராக இருந்த பாதிரியார் ராஜரத்தினம் மீது அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அடுத்துள்ள தஞ்சாவூரான் சாவடியை சேர்ந்த கன்னியாஸ்திரி ப்ளாரன்ஸ் மேரி (32), கடந்தாண்டு அக்டோபரில், கோட்டை மகளிர் போலீசில் கற்பழிப்பு புகார் அளித்தார். அதன்படி, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

கற்பழிப்பு புகாருக்கு உள்ளான பாதிரியார் ராஜரத்தினம், முதல்வர் பதவியை துறந்து, மதுரை ஐகோர்ட் கிளையில் முன்ஜாமீன் பெற்றார். கோட்டை மகளிர் போலீசார் முன்னிலையில், விசாரணைக்கும் ஆஜரானார். மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தி, கடந்த 29ம் தேதி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். அதில், பாதிரியார் ராஜரத்தினம், சேசு சபை தலைவர் தேவதாஸ், பாதிரியார்கள் ஜோ சேவியர், சேவியர், டாக்டர் சுசித்ரா ஆகியோர், குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தெரிகிறது.

கடந்த 3ம் தேதி, ப்ளாரன்ஸ் மேரி குற்றப்பத்திரிகை நகல் கேட்டு, திருச்சி ஜே.எம்.1 நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவருக்கு நகல் வழங்காமல், அன்றே குற்றப்பத்திரிகையை ஜே.எம்.1 நீதிமன்ற மாஜிஸ்திரேட் ஆப்ரகாம் லிங்கன், கோட்டை போலீசாருக்கு திருப்பி அனுப்பினார். தகவலறிந்த கன்னியாஸ்திரி ப்ளாரன்ஸ் மேரியும், அவரது வக்கீல் இருதயசாமியும், நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்துக்கு வந்தனர். அப்போது, ப்ளாரன்ஸ் மேரி தயாராக கொண்டு வந்திருந்த மனுவை, குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடம் அளித்தார். கற்பழிப்பு வழக்கில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் உள்ள குற்றவாளிகளின் பெயர்களை நீக்கவும், ஆவணங்களை மறைக்கவும் முயற்சி நடக்கிறது. அதற்கு போலீஸ் அதிகாரிகளும், ஜே.எம்.1 நீதிமன்ற மாஜிஸ்திரேட்டும் உடந்தையாக உள்ளனர். குற்றவாளிகள் தப்பிக்க விடாமலும், அவர்களுக்கு உடந்தையாக இருப்பவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என, அப்புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து ப்ளாரன்ஸ் மேரி கூறியதாவது: புகாருக்கு உள்ளாகியுள்ள பாதிரியார்கள், நாங்கள் பணபலம், அரசியல் பலம் மிக்கவர்கள். எங்கள் கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள், உயர் பதவியில் இருக்கின்றனர். எங்களை ஒன்றும் செய்ய முடியாது என ஏற்கனவே மிரட்டினர். தற்போது, குற்றப்பத்திரிகை திரும்ப பெற்றதிலிருந்து, மிரட்டியதை செயல்படுத்த ஆரம்பித்துள்ளனர் என்பது தெளிவாகியுள்ளது. குற்றவாளிகளை காப்பாற்றும் வகையில், குற்றப்பத்திரிகை திரும்ப அனுப்பப்பட்டதில், போலீஸ் கமிஷனரும், ஜே.எம்.1 மாஜிஸ்திரேட் ஆப்ரகாம் லிங்கனும் உடந்தையாக உள்ளனர். பல அரசியல்வாதிகளும் உடந்தையாக இருக்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளேன். நீதி கிடைக்கும் வரை என்னுடைய போராட்டம் தொடரும். இவ்வாறு ப்ளாரன்ஸ் மேரி கூறினார்.

ப்ளாரன்ஸ் மேரியின் வக்கீல் இருதயசாமி கூறியதாவது: கற்பழிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக அனைத்து தரப்பினரும் உள்ளதால், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி., விசாரிக்க வேண்டும் என, வரும் 15ம் தேதி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யவுள்ளோம். பாதிரியார் ராஜரத்தினத்தின் முன்ஜாமீன் மனுவை ரத்து செய்ய கோரிய முறையீட்டு மனுவும், அன்று விசாரணைக்கு வருகிறது. போலீஸ் கமிஷனர் சொல்லியே ஜே.எம்.1 மாஜிஸ்திரேட் ஆப்ரகாம் லிங்கன் குற்றப்பத்திரிகையை திருப்பி அனுப்பியதாக, அவரே என்னிடம் தெரிவித்தார். இவ்வாறு இருதயசாமி கூறினார்.

No comments:

Post a Comment