அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும்,
தேசத்தந்தை மஹாத்மா காந்தியைக் கொன்ற கோட்சேவின் வாரிசுகள், உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைப்பெற்ற இம்ரானாவின் சம்பவத்தை மையமாக வைத்து மீண்டும் ஒரு பழைய பல்லவியைப் பாட ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கீறல் விழுந்த ரெக்கார்டை மறுபடி Play பண்ண ஆரம்பித்திருக்கிறது தேச விரோத சங்பரிவார் அமைப்பு. எத்தனையோ முறை பதில் கொடுக்கப்பட்ட ஒரு விஷயமாக இருந்தாலும் கூட, மக்களின் மறதியைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் போக்கு மிகுந்து காணப்படும் இக்காலத்தில் அவ்வப்போது நாமும் அதுபற்றிய விளக்கத்தை சிந்திக்கும் பொது ஜனத்துக்கு சமர்ப்பிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
இவர்கள், அவ்வப்போது வரிந்து கட்டிக்கொண்டு முஸ்லிம்களை மையமாக வைத்து பொது சிவில் சட்டம் வேண்டும், பொது சிவில் சட்டம் வேண்டும் என்று வீர!முழக்கம் இடுவதைக் கேட்கும்போது உண்மையிலேயே இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் தனது அனைத்து விவகாரங்களுக்கும் தனக்கென தனி சட்டம் வைத்துக்கொண்டு தனியாக அரசாங்கம் நடத்துவதைப் போல் ஒரு மாயையை ஏற்படுத்தும். ஆனால், உண்மை நிலையோ வேறு.
இந்த நாட்டில் மதச்சார்பற்ற ஓர் அரசின் கீழ் சிறுபான்மையினராக வாழ்ந்து வரும் முஸ்லிம்களுக்கு திருமணம், தலாக், பாகப்பிரிவினை போன்ற சில விவகாரங்களுக்கு மட்டும் இந்திய நீதிமன்றங்கள் முஸ்லிம் தனியார் சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பளித்து வருகிறது. இதேபோல் இந்து, கிறிஸ்தவ, சீக்கிய, ஜைன, புத்த சமயத்தினருக்கும் அவர்களுக்கென்று தனியார் சட்டங்கள் அமலில் இருந்து வருகிறது. ஆனால்,குற்றவியல் நடைமுறைக்கு மட்டும் அனைத்து தரப்பினருக்கும் பொதுவான I.P.C. ( INDIAN PENAL CODE ) எனும் சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பளிக்கப்பட்டு வருகிறது.
இந்த தனியார் சட்டம் என்பது இந்தியாவுக்குப் புதிதல்ல. மொகலாய மன்னர்கள் என்று இந்தியாவில் தன் கால்களை ஊன்றினார்களோ, அன்றிலிருந்தே அவரவர்கள் சார்ந்திருந்த மதங்களுக்குரிய சட்டங்களின் அடிப்படையில் தீர்ப்பளிக்கப்பட்டு வந்தார்கள்.
அதன்பின், கி.பி. 1862-ல்தான் I.P.C. ( INDIAN PENAL CODE ) என்ற புதிய சட்ட முறையைக் கொண்டு வந்தார்கள். இதுவும் கூட இங்கிலாந்தின் சட்ட முறையினை அடிப்படையாகக் கொண்டே வரையறுக்கப்பட்டது. பின்னர், 1937-ல் முஸ்லிம் தனியார் சட்டம் ( MUSLIM PERSONAL LAW – Shariath Application Act – 1937 ) அமலுக்கு வந்தது. பின்னர், அதனைத் தொடர்ந்து 1939-ல் முஸ்லிம் திருமணச் சட்டம் ( MUSLIM MARRIAGES ACT – 1939 ) ஷரீஅத் சட்டத்தின் அடிப்படையில் இயற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தது.
இந்த நிலை இன்று வரை நீடித்து வருகிறது என்றாலும்கூட, இன்றைய இந்தியாவில் இந்த முஸ்லிம் தனியார் சட்டம் மிகப்பெரும் துவேஷத்துக்கு ஆளாகி வருகிறது. பெரும்பான்மையினரின் மதத்தின் மீது வெறியூட்டி இஸ்லாத்திற்கெதிராக மாபெரும் சூழ்ச்சிகளையும் சதித்திட்டங்களையும் தீட்டிவரும் சங்பரிவார்களின் அரசியல் ரூபமான பி.ஜே.பி- யின் தலை?வர்கள், முஸ்லிம்களுக்குள் பிரச்சினை ஏற்படும்போதெல்லாம் அதனைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பொது சிவில் சட்டம் வேண்டும் என்று கூப்பாடு போட்டு வருகிறார்கள்.
சங்பரிவார்கள் கூறுகிறார்கள்: “இந்திய முஸ்லிம்கள் குற்றவியல் நடைமுறைகளில் எவ்வாறு I.P.C. ( INDIAN PENAL CODE ) என்ற பொதுவான சட்டத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறார்களோ, அவ்வாறே அனைத்து விஷயங்களிலும் ஷரீஅத்தைக் கைவிட்டு விட்டு பொது சிவில் சட்டத்தை ஏற்றுக் கொள்ளலாமே” என்று. இவர்களின் இந்தப் புலம்பலுக்கு ஒரு இஸ்லாமிய அறிஞரின் கூற்றையே பதிலாக வைக்கிறேன். “ஓர் அறையில் காற்றோட்டத்திற்காக வைக்கப்பட்டிருக்கும் இரு ஜன்னல்களில் ஒன்று மூடியிருப்பதைக் கண்டு அதுபோல் மற்றொன்றையும் மூடிவிடலாம் என்று எண்ணுவது பேதமை அல்லவா?.
சிவில் சட்டங்களுக்கும், கிரிமினல் சட்டங்களுக்குமிடையில் மிகப்பெரும் வேறுபாடு உண்டு. கிரிமினல் விஷயங்கள் நேரடியாக நீதிமன்றங்களால் தீர்க்கப்படக்கூடிய ஒன்று. ஆனால், சிவில் விஷயங்கள் அப்படியல்ல. சிவில் விஷயங்களை நீதிமன்றத்துக்கு வெளியில் மக்கள் மன்றத்திலும் தீர்த்துக்கொள்ள முடியும். உதாரணமாக, ஒருவன் மற்றொருவனைக் கொலை செய்து விடுகிறானென்றால் அவனுடைய பிரச்சினையை எவ்விதத்திலும் நீதிமன்றத்துக்கு வெளியில் தீர்த்துக்கொள்ள முடியாது. அதை அரசாங்கம் அனுமதிக்கவும் செய்யாது.
ஆனால், திருமணம், தலாக், பாகப்பிரிவினை போன்ற சிவில் விவகாரங்களில் சம்பந்தப்பட்டவர்கள் விரும்பினால் அதை நீதிமன்றத்துக்கு வெளியிலும் தீர்த்துக்கொள்ள முடியும். இதை அரசாங்கம் கட்டுப்படுத்த முடியாது. மேலும், இது போன்ற சிவில் விவகாரங்கள் முழுக்க முழுக்க முஸ்லிம்களின் உள் விவகாரங்கள். முஸ்லிம்களுக்கிடையே தீர்ப்பளிக்கப்படும் எந்த விஷயமும் மற்றவர்களை, மாற்றுமதத்தினரை எவ்விதத்திலும் பாதிப்பதில்லை.
இந்நிலையில், திருமணம், தலாக், பாகப்பிரிவினை போன்ற விவகாரங்களில் பொது சிவில் சட்டம் கோருவோரின் நோக்கம் அப்பழுக்கற்ற இஸ்லாமிய விரோத மனப்பான்மையே என்பதில் ஊசிமுனையளவும் சந்தேகமில்லை. முதலில் ஒரு விஷயத்தை ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது என்று முடிவு செய்வதாகயிருந்தால், அதற்கான சரியான காரணம் ஒன்று இருக்க வேண்டும். இவர்கள் பொது சிவில் சட்ட விஷயத்தில் எந்த ஒரு வலுவான காரணத்தையும் இதுவரை வைக்க முடியவில்லை. இவர்களால் சுட்டிக்காட்ட முடிந்ததெல்லாம் ஒரு ஷாபானு வழக்கு மட்டுமே. அதுவும்கூட அரசியல் காரணங்களால் சந்திக்கு வந்த ஒரு விஷயம் என்பதை ஊடகங்களுடன் தொடர்புடையவர்கள் நன்றாக அறிவார்கள். அதுமட்டுமல்லாமல், முஸ்லிம்களுக்குள்ளே நடக்கும் எந்த விவகாரத்திலும் அந்த சமுதாயம் மற்றவர்களைத் துணைக்கு அழைப்பதில்லை. அதற்குத் தேவையும் இருக்கவில்லை. ஆனால், அழையா விருந்தாளிகளாக முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்குள் நீலிக்கண்ணீர் வடித்துக்கொண்டு நுழையும் சங்பரிவார்கள் உடனே கையில் எடுக்கும் விஷயம் பொது சிவில் சட்டம் வேண்டும் என்பதுதான்.
இவர்களின் இந்த மனப்பான்மையைச் சற்று சிந்தித்துப்பார்த்தால், அடுத்த வீட்டுக்காரன் மீது ஆளுமை செலுத்தத் துடிக்கும் அதிகாரப் போக்குதான் இங்கு வெளிப்படுகிறது. எனது அடுத்த வீட்டுக்காரர் ஐயங்கார் என்று தெரிந்தும் அவரை, நான் சாப்பிடுவதைப் போல் மீனையும் இறைச்சியையும் சாப்பிடு என்றோ அல்லது நாமிருவரும் பொதுவாக இன்றிலிருந்து முட்டை சாப்பிடுவோம் என்றோ கூறுவது அடுத்த வீட்டுக்காரரை நமக்கு எதிராகத் தூண்டுமே தவிர இணக்கமாக வாழ்வதற்குரிய வழி அதுவாக இருக்க முடியாது. எப்படி ஒரு வீட்டில் மாறுபட்ட குணாதிசயங்களைக் கொண்ட சகோதர, சகோதரிகளோடு அவர்களது மனப்பான்மையை அறிந்து நடந்து கொண்டு குடும்ப ஒற்றுமையைக் காக்கிறோமோ, அதுபோல் பன்முகக் கலாச்சாரம் கொண்ட ஒரு நாட்டில் வாழும் நாம், ஒருவர் மற்றவரது கலாச்சாரத்தை மதித்து நடந்து கொள்ளும்போதுதான் இந்நாட்டில் சமூக ஒற்றுமையைக் காக்க முடியும். சமூக ஒற்றுமை ஒரு நாட்டில் மேலோங்கும்போதுதான் அந்நாடு ஒட்டுமொத்த வளர்ச்சியை நோக்கிச் செல்ல முடியும்.
மேலும், பால்ய விவாகம், உடன்கட்டை ஏறுதல் போன்ற சமூக விரோத நடவடிக்கைகளுக்கு அரசியல் சாசனத்தில் அவற்றைத் தடுத்து சட்டமியற்றப்பட்டும் கூட மறைமுகமாக வக்காலத்து வாங்கும் சங்பரிவார்கள் பொது சிவில் சட்ட விஷயத்தில் மட்டும் தங்களை அரசியல் சாசன பாதுகாவலர்களாக காட்டிக் கொள்ள முனைந்து நிற்கிறார்கள். அதிலும் அவர்கள் தோல்வியையே சந்திப்பார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
பொது சிவில் சட்ட விஷயத்தில் தங்களை அரசியல் சாசன பாதுகாவலர்களாக அறிமுகப்படுத்திக் கொள்வதற்கு அரசியல் சாசன வரிகளையே ஆதாரம் காட்டுகிறார்கள். அம்பேத்கர் உருவாக்கிய இந்திய அரசியல் சாசன பிரிவு 44-ல் உள்ள வழிகாட்டிக் கொள்கையில் கூறப்படும் “நாட்டிலுள்ள எல்லாக் குடிமக்களுக்கும் பொதுவான ஒரு சிவில் சட்டம் உருவாக்கிட முயல வேண்டும்” என்ற வரிகளையே சுட்டிக் காட்டுகின்றார்கள். இது ஒரு வழிகாட்டிக் கொள்கைதானே தவிர அரசியல் சாசன சட்டம் அல்ல.
இம்மாதிரியான வழிகாட்டிக் கொள்கைகளையெல்லாம் சட்டமாக்கிட ஆவல் கொண்டிருந்தால் முதலில் மதுவிலக்கு சம்மந்தமான அரசியல் சாசன வழிகாட்டிக் கொள்கையை சட்டமாக்கிட முனைந்திருக்க வேண்டும். மது என்பது அனைத்து சாராரும், அனைத்து மதத்தவரும் எதிர்க்கக்கூடிய, சமூக நலனில் அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் அழித்தொழிக்க விரும்பும் ஒரு விஷயம். ஆனால் நடப்பதென்ன? இன்று பல மாநில அரசுகளே மதுக்கடைகளை திறந்து வைத்து மாபெரும் ஒழுக்க சீர்கேட்டிற்கு அடித்தளம் அமைத்துக் கொண்டிருக்கிறது. அவற்றையெல்லாம் புறந்தள்ளி விட்டு முழுக்க முழுக்க முஸ்லிம்களின் உள்விவகாரமான ஷரீஅத்தை மாற்றி பொது சிவில் சட்டம் கொண்டு வரவேண்டுமென்று கூப்பாடு போடுவது எவ்வளவு பெரிய விஷமத்தனம் என்பதை நாட்டு மக்கள் அனைவருமே நன்றாக உணர்ந்திட வேண்டும்.
மேலும், இந்த சங்பரிவார்களின் கூக்குரல் இந்திய அரசியல் சாசனத்திற்கே முற்றிலும் விரோதமானது என்பதைக்கூட வசதியாக மறந்து விட்டது இந்த கும்பல். இந்திய அரசியல் சாசனம் பிரிவு 25-ல், “எல்லாக் குடிமக்களும் மனசாட்சி சுதந்திரத்திற்குச் சமமான உரிமை பெற்றவர்கள். தனக்கு விருப்பமான மதத்தில் நம்பிக்கை கொண்டு, அதனை ஏற்றுக்கொண்டு அமல் செய்யவும், அதனைப் பிரச்சாரம் செய்யவும் எல்லாக் குடிமக்களுக்கும் உரிமை உண்டு.” எனக் கூறுகிறது. இதன்படி, எந்த ஒரு மதத்தினர் மீதும் யாரும் அவரவர்களுடைய மதச்சட்டங்களையோ, நடைமுறைகளையோ கைவிடும்படி எந்தவிதத்திலும் நிர்ப்பந்திக்க முடியாது. அப்படித் திணிக்கும் பட்சத்தில் அது இந்தியாவில் சிறுபான்மையினர்கள் தன் உரிமைகளை நிலைநாட்டிக்கொள்வதற்கான உரிமைப்புரட்சி வெடிக்கக் காரணமாகிவிடும். இந்த உண்மையை சங்பரிவார்களின் தலைமையே ஒருமுறை ஒப்புக்கொண்டதுதான் சிறப்பு.
MOTHER LAND என்ற பத்திரிக்கையில் 21/08/1972 அன்று வெளியான ஒரு செய்தியில், “ஆர்.எஸ்.எஸ் தலைவரான குரு கோல்வால்கர், 1972 ஆகஸ்ட் 20-ல் தீனதயாள் உபாத்யாயா ஆராய்ச்சிக்கழகத்தைத் துவக்கி வைத்துப் பேசியபோது,’பாரதத்தில் தேசிய ஒற்றுமையை உருவாக்கப் பொது சிவில் சட்டம்தான் கருவியாகும் என்று சொல்வது தவறு; இயற்கைக்கு விரோதமானது; விபரீத விளைவுகள் உண்டாக்கக் கூடியது.’ என்று அறிவுறுத்தி இருக்கிறார்” என்று தெரிவிக்கிறது. ஆனால், தன் தலைமையின் கருத்தையே புறக்கணித்து விட்டு இன்று பொது சிவில் சட்டம் வேண்டும் என்று ஓலமிடுகிறது சங்பரிவார் கும்பல்.
இந்நாட்டின் சிறுபான்மையினர்கள் எவ்விதத்திலும் தங்கள் மத சுதந்திரத்தை இழந்து விடக்கூடாது என்பதைக் கருத்திற்கொண்டே, அரசியல் சாசனத்தை வகுத்தளித்த சிந்தனையாளர்கள் சாசனத்தின் 25-வது பிரிவை ஏற்படுத்தி வைத்தார்கள். பொது சிவில் சட்டத்தைப் பாராளுமன்றம் அங்கீகரிக்க முயன்றால் அது பாராளுமன்றத்தில் பெரும்பான்மையாக உள்ள இந்துக்களின் விருப்பத்திற்கேற்ப, அவர்களின் கலாச்சாரத்தை ஒட்டிய சட்டமாகவே அமையும். அவ்வாறாகும் பட்சத்தில் அதை பொது சிவில் சட்டம் (COMMON CIVIL CODE) என்று சொல்வதைவிட ஹிந்து சிவில் சட்டம் (HINDU CIVIL CODE) என்று அழைப்பதே பொருத்தமாயிருக்கும்.
பொது சிவில் சட்டம் என்ற வார்த்தை பாமர மக்களைக் கவர வசதியான பெயராக அமைந்து விட்டது. ஆனாலும் அவர்களது எண்ணம் ஈடேறப்போவதில்லை என்பதை மட்டும் இப்போதைக்கு சொல்லி வைப்போம்.