Thursday, 30 July 2020

அன்புத் தம்பி எல்.முருகனுக்கு...

அன்புத் தம்பி எல்.முருகனுக்கு...

ஆம் நீ என் தம்பிதான்

எனக்குப் பிந்திப் பிறந்தவன்
நாம் பிறந்த இடம் வேறாக இருக்கலாம்

நம் அப்பாக்கள் ஒன்றுதான்
நம் அம்மாக்கள் ஒன்றுதான்

என் அப்பா படித்தது மூன்றாம் வகுப்பு
உன் அப்பாவும்  கூடக் குறைய படித்திருக்கலாம்

நம்முடைய தலைமுறைதான்
கல்வியைப் பற்றிக் கொண்ட 
முதல் தலைமுறை.

நம் வீடுகள் தெருக்கள்
இப்போதும் ஊருக்கு முதலில்தான் இருக்கின்றன
அவர்கள் கடைசியில் இருப்பதாக 
நினைத்துக் கொண்டிருக்கிறர்கள்

அந்த நினைப்பு அறமற்றது
அதை மாற்றத்தான் நம் அப்பாக்கள் நம்மை படிக்க வைத்தார்கள்

பறையடிப்பதும் மாட்டுத்தோல் உரிப்பதும்
செருப்பு தைப்பதும் வேண்டாம் என்றுதான்
நான் டீச்சருக்குப் படித்தேன்
நீ வக்கீலுக்குப் படித்தாய்

படித்து முடிப்பதற்குள் 
நாம் எவ்வளவு பாடுபட்டிருப்போம்

எவ்வளவு புறக்கணிப்புகள்
எவ்வளவு அவமானங்கள்
எவ்வளவு வலிகள் கண்டிருப்போம்
எல்லாம் இந்தச் சாதியினால்தான் 
என்பதை நீயும் அறிவாய்தானே?

வகுப்பறையில் நாம் ஒரு மூலையில் ஒதுக்கப்பட்டோம்தானே? 

அந்த இளம் பருவத்தில்
நம்மோடு யாரும் பேசவில்லை
நம்மோடு யாரும் விளையாடவில்லை
நம்மோடு யாரும் உணவருந்தவில்லை
நம்மோடு யாரும் பழகவில்லை
நம்மை யாரும் தொட்டதுகூட இல்லை

நம் இளமைக் காலங்கள்
எவ்வளவு துயர் நிரம்பியவை
நாம் குழந்தைகளாகவே பிறந்தோம்
ஆனால் இந்தச் சமூகம் 
நம்மைத் தலித்துகளாகப் பார்க்கிறது

பிறப்பு சாதியைத் தீர்மானிப்பதுபோல
சாதியும் பிறப்பைத் தீர்மானிக்கிறதுபோல..

நினைவிருக்கிறதா உனக்கு?

சத்துணவு வாங்க
வரிசையில் நிற்கும்போது
பிற மாணவர்கள் 
முன்னால் முன்னால் 
வந்து நிற்பார்கள்
நம்மைப் பின்னுக்குத் தள்ளிக் கொண்டே இருப்பார்கள்.
நிறைய நாள் சோறு கிடைக்காது

இலவசப் புத்தகம் நமக்குக் கொடுக்கும்போதெல்லாம்
பின்னாலிருந்து ஓஸி புக் என்று 
குரல்கள் கேட்கும்
உனக்கும் கேட்டதா அந்தக் குரல்கள்?

பள்ளி ஆண்டு விழாவில் ஒரு நாடகத்திலோ ஒரு நடனத்திலோ நம்மை யாரும் 
சேர்த்துக் கொண்டதே இல்லை
தூர நின்று கண்ணீர் உகுத்திருக்கிறேன் 

பள்ளி இடைவெளியில்
யார் வீட்டிலாவது  தண்ணீர் கேட்கும்போது
பறநாயே என்று விளிப்பார்கள்
உன்னையும் விளித்திருப்பதை மறுதலிக்க மாட்டாய்

சிறு வயதில் ஒருநாள்
பிள்ளைகளோடு சேர்ந்து சிவன் கோவிலுக்குச் சென்றேன்
விளவங்காய் பொறுக்க
அந்த அர்ச்சகர் என்னை
மட்டும் வெளியே நிற்க வைத்துவிட்டார்

அப்போதிலிருந்துதான்
எனக்கு விளவம்பழம் 
பிடிக்காமல் போயிற்று

ஊரில் ஒருநாள் சித்திரைத் திருவிழா
இரவு நடந்த கூத்தில்
ஒருவர் அம்பேத்கர் பாடலைப்பாட
மேடையிலேயே அவருக்கு அடி உதை

அப்பாவிடம் கேட்டேன்
யாரப்பா அது அம்பேத்கர்
அவரைப் பாடினால் ஏன் அடிக்கிறார்கள்
அம்பேத்கர் பற்றியும்
தாத்தா ரெட்டைமைலை சீனிவாசன் பற்றியும்
அப்பா தனக்குத் தெரிந்ததைச் சொன்னார்

புரிந்து கொள்ளும் வயதல்ல எனக்கு
உனக்கும் உன் அப்பா 
நிச்சயம் சொல்லியிருப்பார்

என்றாலும் வளர வளர
வலி கிடைக்க கிடைக்க
புரிய ஆரம்பித்தது எனக்கு

கற்பி ஒன்றுசேர் புரட்சி செய் 
ஆம் கல்வி நமக்கு ஆயுதம்
நான் படித்து ஆசிரியர் ஆனேன்
நீ அண்ணலின் சட்டம் படித்து 
வழக்குரைஞர் ஆனாய்

சாதி ஒரு நஞ்சுக்கொடி
அதில்தான் சமூகம்  தன்னைப்
பிணைத்து வைத்துக் கொண்டிருக்கிறது

நஞ்சுக்கொடி உதிர்ந்தால்தான்
சமூகம் ஆரோக்கியமாக இருக்கும்

சாதியின் வேர் மதம்
மதத்தின் வெளிப்பாடே சாதி
தீட்டு தீண்டாமை தாழ்ந்தவன் எல்லாம் இந்துமதத்தின் வெளிமூச்சே

கற்பு, பெண்ணடிமைத்தனம், ஆணாதிக்கம் எல்லாம் 
இந்துத்துவத்தின் மேல்தோல்
இந்துத்துவத்தை உயர்த்திப் பிடிப்பது பார்ப்பனியம்

கோவிலுக்குள் நம்மை 
நுழைய விட்டிருக்கிறார்களா?
தேர்வடத்தைத் தொட நம்மை விட்டிருக்கிறார்களா?

சேரிக்குள் ஊர்ச்சாமி வந்திருக்கிறதா?
பொதுச் சுடுகாடு இருக்கிறதா?
பொதுக்குளம் இருக்கிறதா?
பொதுச்சாமி இருக்கிறதா?
ஆணவக் கொலை நடக்காமல் இருக்கிறதா?

நீயும் நானும் விடுதலை பெற வேண்டுமென்றால்
சாதி ஒழிய வேண்டும்

சாதி ஒழிப்பே மானுட விடுதலை
சாதி ஒழிய இந்துத்துவம் 
ஒழிய வேண்டும்
இந்துத்துவம் ஒழிய
பார்ப்பனியம் ஒழிய வேண்டும்

நம்முடைய பணி எளிதானதன்று

கற்பிக்க வேண்டும்
ஒன்று சேர்க்க வேண்டும்
புரட்சி செய்ய வேண்டும்

நாம் கற்ற கல்வி தலித் மக்களுக்குமான கல்வியாக விளங்க வேண்டும்
நம்முடைய குரல் தலித்துகளுக்கான  குரலாக ஒலிக்க வேண்டும்.

நான் சுதந்தரத்திற்காகக் 
குரல் கொடுக்கிறேன்
சமத்துவத்திற்காகக் குரல் கொடுக்கிறேன்
சகோதரத்திற்காகக் குரல் கொடுக்கிறேன்

நம் சுதந்தரம் பறிக்கப்படும்போது 
நீ கற்ற சட்டத்தைப் பயன்படுத்து
சமத்துவம் நிலவாதபோது நீதியை நிலைநாட்டு

விடுதலைக்கான என் குரல் நசுக்கப்படும்போது சட்டத்தின்மூலம் என்னைக் காப்பாற்று

சாதி நம்மை தாழ்த்தியது 
கல்வி நம்மை உயர்த்தியது

கல்வி கற்ற நீ ஏன்
இந்துத்துவத்திடம் மண்டியிடுகிறாய்?

நம்மைத் தீட்டு என்று சொன்ன பார்ப்பனியத்திற்கு 
நீ ஏன் கூர் தீட்டுகிறாய்?

நம்மைத் தாழ்ந்த சாதி என்று சொன்ன சனாதனத்திற்கு ஏன்  
காவல் காக்கிறாய்?

நம்மை வன்கொடுமை செய்து 
கொலை செய்யும் கூட்டத்திற்கு ஏன் தலைமை ஏற்கிறாய்?

அம்பேத்கர் சட்டக் கல்லூரியில்
படித்த மாணவன் அல்லவா நீ?

எப்படி நன்றி மறக்கிறாய்?
சட்டத்தைப் படித்தாயா
மனுவைப் படித்தாயா?

நான் இங்கேதான் நிற்கிறேன்
மக்களோடு நிற்கிறேன்
நீலமும் சிவப்பும் கருப்பும் 
என் நிறங்கள்
சாதி ஒழிப்பே மானுட விடுதலை 
மனு ஒழிப்பே மக்கள் விடுதலை

நீதான் வெகுதூரம் சென்று விட்டாய்
காவியைக் கைக்கொண்டு விட்டாய்

வரலாறு உன்னை மன்னிப்பது இருக்கட்டும்

உன் தெரு உன்னை மன்னிக்காது 
உன் அப்பா அம்மா மன்னிக்க மாட்டார்கள்

மனம் திரும்பு
நீ வழி தவறிய ஆடு
உனக்காகக் காத்திருக்கிறோம்.
ஏனெனில் 
நாம் பலியாடுகள் அல்ல
சாதி ஒழிப்பில் 
களமாடுபவர்கள்.

கவிஞர் Sukirtha Rani அக்கா 👌

No comments:

Post a Comment