அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும்,
உ.பி.யில் பக்ரீத் பண்டிகைக்காக பசுவை பலி கொடுத்ததாக கிளம்பிய வதந்தியால் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து அறிக்கை அளிக்குமாறு அம்மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லிக்கு மிக அருகில் இருக்கும், உ.பி.யின் கவுதம புத்தர் மாவட்டத்தின் தாத்ரியில் உள்ள கிராமம் பிசோதா. இங்கு 58 வயதான இக்லாக் என்பவர் வீட்டில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பசு பலி கொடுக்கப்பட்டதாக கடந்த திங்கள்கிழமை இரவு வதந்தி கிளம்பியது.
இதைதொடர்ந்து பிசோதா மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் இக்லாக் வீட்டில் திடீர் என புகுந்து அவரையும் அவரது குடும்பத்தினரையும் கடுமையாகத் தாக்கினர். இதில் இக்லாக் அதே இடத்தில் உயிரிழந்தார். அவரது தாய் அஸ்கரி (70), மனைவி இக்ராமன் (52), இளைய மகன் தானிஷ் (21), மகள் ஷாஹிஸ்தா(16) ஆகியோர் காயம் அடைந்தனர். இதில் தானிஷ் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரப்பிரதேச அரசுக்கு உத்தரவிட்டுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் மாநிலத்தில் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment