அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும்,
"முஸ்லிம் என்ற காரணம்”.. உத்தரகாண்ட் சுரங்க மீட்பு ஹீரோ ஹசன் வீட்டை இடித்த அரசு -ஜவாஹிருல்லா காட்டம் By Noorul Ahamed Jahaber Ali Updated: Saturday, March 2, 2024, 12:24 [IST] சென்னை: உத்தரகாண்ட்டில் 41 சுரங்க தொழிலாளர்களை மீட்ட வாகீல் ஹசனின் வீடு இடிக்கப்பட்டதற்கு மமக தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், "உத்தரகாண்ட் சுரங்கத்தில் நிலச் சரிவு ஏற்பட்ட போது மண்ணுக்குக் கீழ் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணிக்கு தலைமை தாங்கிய கிழக்கு டெல்லியில் உள்ள வாகீல் ஹசனின் வீடு உட்படப் பல முஸ்லிம்களின் வீடுகளை தில்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ) இடித்துள்ளது. இந்த மனிதாபிமானற்ற நடவடிக்கையை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தில், சில்க்யாரா சுரங்கப் பாதையில் இருந்து 41 உயிர்களைக் காப்பாற்றுவதில் ஹசனின் துணிச்சலை பொறுத்துக் கொள்ளாத ஒன்றிய அரசின் கைப்பாவையான தில்லி மேம்பாட்டு ஆணையத்தின் இந்தக் கொடூரமான செயல் முஸ்லிம் என்பதற்காக அரங்கேற்றப்பட்டுள்ள அராஜகமாகும். உத்தரகாண்ட் சுரங்கத்தில் இருந்து 41 தொழிலாளர்களைக் காப்பாற்றத் தைரியமாக களமாடியவர் இன்று பாசிச அரசின் வெறுப்பரசியலின் காரணமாக நசுக்கப்பட்டுள்ளார். இந்தச் செயலுக்கு ஒன்றிய அரசும், தில்லி மேம்பாட்டு ஆணையமும் வெட்கி தலை குனியவேண்டும்.
இது ஒரு சோகமான, இதயமற்ற செயல். வாகீல் ஹசனை, மக்கள் ஒரு ஹீரோவாக பார்த்தனர். அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் பாசிச அரசின் கைப்பாவையான தில்லி மேம்பாட்டு ஆணையம் இந்த அராஜகத்தை அரங்கேற்றியுள்ளது. வசந்த் குஞ்சில், ஒரு தற்காலிக மாற்று வீடு ஏற்படுத்தித் தரப்படும் என தில்லி மேம்பாட்டு ஆணையத்தின் அலுவலர்கள் ஹசனிடம் கூறினர். வாய்மொழியாக அல்லாமல், அதற்கான எழுத்துப்பூர்வ உத்தரவாதத்தை தர வேண்டுமென ஹசன் முறையிட்டார். ஆனால் இந்தக் கோரிக்கையையும் நிறைவேற்றாமல் தில்லி மேம்பாட்டு ஆணையம் நிராகரித்து இருப்பது மனிதாபிமானமற்ற செயல் ஆகும்.
மிக முக்கியமாக, அகற்றுவதற்கு முன்பு குடியிருப்பாளர்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற தில்லி மேம்பாட்டு ஆணையத்தின் விதி, மீறப்பட்டு உள்ளது. இடிக்கப்பட்ட வீட்டின் வெளியே உள்ள நடைபாதையில், வாகீல் ஹஸன் தனது குடும்பத்தினருடன் இரவை கழித்திருப்பது மிக வேதனையான ஒன்றாகும்.
தில்லி மேம்பாட்டு ஆணையத்தின் சமீபத்திய நடவடிக்கைகளால் முஸ்லிம் நெஞ்சங்களில் ஏற்கனவே உள்ள வலிகள் மேன்மேலும் ஆழமடைகிறது.
கடந்த மாதம், குதுப்மினார் அருகே உள்ள அகுன்ஜி பள்ளிவாசலும் இதே கதியை எதிர்கொண்டது, ஜனவரி 30 அன்று இரவு புல்டோசரை கொண்டு, "சட்டவிரோதக் கட்டுமானம்" என்று முத்திரை குத்தப்பட்டு இடிக்கப்பட்டது. 30 நாட்களுக்குள் அதே தில்லி மேம்பாட்டு ஆணையத்தினால் அரங்கேற்றப்படும் இன்னொரு முஸ்லிம் வெறுப்புச் செயல்தான் இது. இத்தகைய புல்டோசர் கொடுங்கோன்மைகள் வெறுப்பு அரசியலின் உச்சமாக உள்ளன. மனவேதனை நிறைந்த இந்த நிகழ்வில், மக்களால் "ஒரு ஹீரோ" வாக புகழப்பட்டஒருவரின் வீடு பாசிசத்தின் கொடூரக் குணத்தால் இன்று இடிபாடுகளாக மாறியது. அதிகாரம், ஒரு மதத்தினரைக் குறிவைத்து, அவர்களுக்கு எதிராக இரக்கமற்று செயல்படுகிறது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம். ஒரு ஹீரோவின் வலிகள் இன்று புறக்கணிக்கப்படுகிறது. இடிக்கப்பட்ட அந்தச் சுவர்கள் போலவே, இந்திய நாட்டின் மதச்சார்பின்மையும் இந்தப் பாசிசச் சக்திகளால் உடைக்கப்படுகின்றது. தில்லி மேம்பாட்டு ஆணையத்தின் செயல்கள் நீதியின் கண்களை மூடுவதாக மட்டுமல்லாமல், ஒருமித்த மதச்சார்பற்ற இந்தியா என்னும் பெரும் சிந்தனையை ஒழிக்கச் செய்கின்ற செயல்களாகவே பார்க்க வேண்டியுள்ளது. இந்த திட்டமிடப்பட்ட அநீதியைக் கடுமையாக மனிதநேய மக்கள் கட்சி எதிர்க்கிறது. வாகீல் ஹசன் போன்ற சமூகச் சிந்தனையுடையவர்களுக்கு அவமரியாதையையும், இடர்களையும் பரிசளிக்கும் இதயமற்ற பாசிச பாஜக ஆட்சியை வரும் தேர்தலில் தோற்கடிக்க மேலும் வலிமையாகப் பணியாற்ற உறுதி எடுப்போம்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
Thanks Tamil one india