Thursday, 4 July 2024

புதிய குற்றவியல் சட்டங்களால் பெரும் குழப்பம்!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

புதிய குற்றவியல் சட்டங்களால் பெரும் குழப்பம்!

மாற்றியமைக்கப்பட்ட  பாரதிய நியாய சன்ஹிதா, ,பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா, பாரதிய சக்ஸயா சன்ஹிதா ஆகிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமலுக்கு வரும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

ஆங்கிலேயர் காலத்துச் சட்டங்களை அகற்றி இன்றைய காலச் சூழலுக்கு ஏற்ப புதிய சட்டங்களை உருவாக்குவோம் என்று ஒன்றிய அரசு அறிவித்தது. அதன்படி இந்த 3 சட்டங்களை ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினார்கள்.

சில விடயங்கள் வரவேற்கக்கூடியவை என்றாலும், புதிய சட்டத்தின் 90 சதவீத பிரிவுகள், ஏற்கெனவே இருக்கும் குற்றவியல் நடைமுறைச் சட்டங்களின் இருப்பவையே. 10 சதவீதம் தான் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டங்கள் 140 கோடி மக்களையும் பாதிக்கும்  என்கின்றனர் சட்ட வல்லுநர்கள். நிர்வாக ரீதியாக இந்தச் சட்டங்களை செயல்படுத்துவதில் சிக்கல் இருக்கிறது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

புதிய சட்டங்களின் கீழும், ஏற்கெனவே உள்ள இந்திய தண்டனைச் சட்டங்களின் கீழும் விசாரணை நடைபெறும். இதனால் குழப்பம் ஏற்படும். வழக்குரைஞர்கள் எந்தச் சட்டத்தை எந்த வழக்குக்குக் கையாள வேண்டும் என்ற பெரும் குழப்பம் ஏற்படும்.

காவல் துறை, நீதித்துறைக்கும்  40 விழுக்காடு சுமை அதிகரிக்கும். சட்டம் ஒழுங்கு இதனால் மேம்படுமா? வாய்ப்பு இல்லை. மக்கள் குரல் ஒடுக்கப்படும் என்பது மனித உரிமை ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன் மக்கள் ‘பிரஜை’ என்று அழைக்கப்பட்டனர். பிரஜைகளுக்கு தனி உரிமை கிடையாது, அரசு சொல்வதை கேட்க வேண்டும். 1950 க்குப் பிறகு பிரஜைகள் குடிமக்களாக மாறினர். அரசாங்கத்தை தேர்வு செய்வது குடிமக்கள். 

இந்த சட்டங்களை பொறுத்தவரை, குடிமக்களிடம் இருந்து அதிகாரத்தைப் பறிக்கவும், அரசியல் ரீதியாக தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறது என்பது எதிர்க்கட்சிகளின் சந்தேகம். இந்த சந்தேகத்தைப் போக்காமல் சட்டத்தை உடனே அமல்படுத்துவது ஆபத்தையும் குழப்பத்தையுமே ஏற்படுத்தும்.

ஆங்கிலேயே ஆட்சியில் அடிமைப்பட்டிருந்தோம், தற்போது சுதேசி சட்டம் கொண்டு வருகிறோம் என்கின்றனர். ஆனால் இந்தியில் சட்டங்களின் பெயர்களை வைத்ததின் மூலம் மற்ற மொழி பேசுவோரை அடிமைப்படுத்தும் முயற்சியா? என்ற கேள்வி எழுகிறது.

இந்திய அரசியல் சாசனத்தின் 348 வது பிரிவில், இந்தியாவின் சட்டங்கள் ஆங்கிலத்தில் தான் இருக்க வேண்டும் என்று உள்ளது. சட்டப்பிரிவுகளை ஆங்கிலத்தில் வைத்துவிட்டு, பெயரை மட்டும் இந்தியில் கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன?

இதை எதிர்த்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். ஆங்கிலத்தில் சட்டத்தை எழுதிவிட்டு பெயரை மட்டும் இந்தியில் ஏன் வைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இந்திய தண்டனைச் சட்டத்தில் பிரிவு எண்களை மாற்றியிருக்கிறார்கள். பழைய சட்டம் மற்றும் புதிய சட்டத்தின் பிரிவு எண்கள் வெவ்வேறாக இருக்கிறது. இதனால் நீதிமன்றத்தில் ஏற்படும் குழப்பம் தவிர்க்க முடியாதது.

No comments:

Post a Comment