Friday, 18 August 2023

செங்கோட்டையில் மோடி பறக்கவிட்ட 'வடைகள்' !

செங்கோட்டையில் மோடி பறக்கவிட்ட 'வடைகள்' !


மோடி 'மிகச்சிறந்த' பேச்சாளர். உண்மை போலத் தோன்றும்படி பொய்களை சரளமாக அள்ளிக் கொட்டுவதில் அவருக்கு நிகர் அவர் மட்டுமே. மிக நீண்ட நேரமும் பேசக் கூடியவர். இந்தாண்டு சுதந்திரத் தினத்தன்று அவர் பேசிய பேச்சுகள் அனைத்தும் 'ப்ளா'(Blah) எனப்படும் புளுகு மூட்டைகள் அல்லது வெற்றுத் தம்பட்டங்களே.


தான் ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தியாவில் ஊழலை ஒழித்துவிட்டதாகவும், வாரிசு கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்ட தாகவும் மோடி தனது சுதந்திர தின உரையில் கூறியுள்ளார். முதலாவதாக ஒரு மாநிலத்தை எடுத்துக் கொள்ளலாம், அங்கே வாரிசு அரசியல் எப்படியிருக்கிறது என்று


l மத்தியப் பிரதேசத்தில், 'உடன்கட்டை ஏறுதல், எங்கள் பிறப்புரிமை' என்று முழங்கிக் கொண்டிருந்த விஜயராஜே சிந்தியா, வாஜ்பாய் அமைச்சரவையில் அமைச்சராகப் பணியாற்றியவர். அவருடைய மகள் வசுந்தரா ராஜே சிந்தியா, மத்தியப் பிரதேசத்தின் முதல்வராக இருந்தவர். அவருடைய இன்னொரு மகள் யசோதரா ராஜே சிந்தியா, மத்தியப் பிரதேச அமைச்சரவையில் இருந்தவர். அடுத்ததாக, மகன்வழிப் பேரன் ஜோதிராதித்யா சிந்தியா இப்போது மோடி அமைச்சரவையில் அமைச்சராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அடுத்தது, மகள் வழிப் பேரன் துஷ்யந்த் சிங் தற்போது பாஜகவில் எம்.பி.யாக உள்ளார். ஒரு குடும்பத்தில் இத்தனை பேர் அமைச்சர் பொறுப்பில் இருப்பது ஒன்றும் வாரிசு அரசியல் இல்லை போலும்!.


. l மோடி அமைச்சரவையில் இப்போது இருப்பவர்களில் 15 பேர் வாரிசுகள்தான். உதாரணத்திற்கு, அனுராக் தாக்கூர், இமாச்சலப் பிரதேச முதலமைச்சராக இருந்த துமால் அவர்களின் மகன். இதேபோன்று, ராவ் இந்திரஜித் சிங், ஹரியானா முதல்வராக இருந்த ராவ்பீரேந்திர சிங்கின் மகன். பியூஸ் கோயல், பாஜகவின் முன்னாள் பொருளாளர் வி.பி.கோயலின் மகன்.


l இதுதவிர, 1999 முதல் இன்றுவரை 31பேரின் வாரிசுகள் பாஜகவின் எம்.பி.க்களாக இருந்துள்ள னர். நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் 224 வேட்பாளர்களில் 34 பேர் வாரிசுகள். ஒரே குடும்பத்தில் இரண்டு பேருக்கு போட்டியிட வாய்ப் பளித்தது நான்கு குடும்பங்களுக்கு நிகழ்ந்திருக்கிறது. அந்த 8 பேரும் இந்த வாரிசுகளில் அடங்குவார்கள்.


ஊழலைப் பற்றியும் பிரதமர் மோடி, பேசியிருக்கிறார்:


l ஊழலைப் பற்றி பேசுவதற்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் அற்றவர்கள் பாஜகவினர். ஆனால் அவர்களுக்கு நாடாளுமன்றத்தில் இருக்கக் கூடிய மிருக பலம், ஊடகங்களை கட்டுப்படுத்துகிற அடி யாள்தனம், பணத்தால் அடித்து, யாரையும் விலைக்கு வாங்குகிற நரித்தனம் - இவற்றின் காரணமாக அதை மறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.


l இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு, குஜராத்தில் 12 பாலங்கள் இடிந்து விழுந்திருக்கின்றன. 2016 முதல் 2022 வரை யிலான 6 வருட காலத்தில் 12 பாலங்கள் இடிக்கப்பட்டி ருக்கின்றன; அல்லது அவை பயணம் செய்வதற்கு தகுதியற்றவை என்கிற முறையில் நிர்வாகத்தாலேயே இடிக்கப்பட்டிருக்கின்றன.


l இதைவிட மிகப்பெரிய கொடுமை, ஹரியானாவில் இருக்கக்கூடிய துவாரகா எக்ஸ்பிரஸ் ஹைவே-க்கு ஒரு கிலோ மீட்டர் சாலை அமைப்பதற்கு 18 கோடி ரூபாய் அமைச்சரவையால் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது கிலோ மீட்டருக்கு 250 கோடி ரூபாய் என்ற செலவில் ரோடு போட்டிருக்கிறார்கள். சிமெண்டால், ஜல்லியால் ரோடு போடுவதற்கு, அவர்கள் தங்கத்தை குழைத்து, வைரத்தில் போட்டிருந்தால்கூட இவ்வளவு வந்திருக்குமா என்று தெரியவில்லை. அந்தளவுக்கு யோக்கியர்களாக இருந்திருக்கிறார்கள்.


l பி.எம்.கேர்ஸ் ஃபண்ட் - இதற்கு பிரதமருடைய பெயரை வைப்பாராம். அந்தப் பெயரை வைத்துக் கொண்டு அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவன ஊழி யர்களிடம், ஒன்றிய அரசு ஊழியர்களிடம், ஐஏஎஸ் அதிகாரிகளிடம், பொதுத்துறையின் 'கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (Corporate Social Responsibility) நிதி'யிலிருந்து கோடி கோடியாக பணத்தைப் பெறுவார்களாம். ஆனால் வாங்கிய பிறகு, அந்தப் பணம் தனியார் ஃபண்ட், தனியார் நிதியம் - எனவே நான் இதற்கு கணக்குச் சொல்லவில்லை என்று சொல்வாராம். இப்படி முற்றிலும் ஊழலில் குளித்து அம்மணமாக நிற்கிற பாஜகவிற்கு யோக்கியஸ்தர் பட்டம் கொடுப்பதற்கு, எல்லாவற்றையும் துறந்த நேர்மையற்ற மனிதர்களால்தான் சாத்தியம்.


மிகப்பெரிய அளவிற்கு உலக மதிப்பீட்டு நிறு வனங்களெல்லாம் மோடியைக் கொண்டாடு கின்றனவாம். அவர் ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தியா விற்கு ஆற்றியிருக்கிற பணிகளை மெச்சிப் புகழ்ந்திருக்கின்றனவாம். சுதந்திர தின உரையில் ஒரே தற்புகழ்ச்சி.


l சமீபத்தில்தான் ஐரோப்பிய யூனியன், மணிப்பூரில் மோடி ஒரு பிரதமர் என்கிற முறையில் நியாய மாக, நடுநிலையோடு செயல்படவில்லை. பாரபட்ச மாக நடந்து கொண்டார் என்று அவருக்கு பட்டம் கொடுத்திருக்கிறது. இதற்கிடையில், 2014 ஆம் ஆண்டு பட்டினிக் குறியீட்டில் 55 ஆவது இடத்தில் இருந்த இந்தியா, 2023 இல் 107ஆவது இடத்திற்கு, அதாவது, 52 இடம் கீழே போயிருக்கிறது.


நாங்கள் வந்த போது இந்திய பொருளாதாரம் 10 ஆவது இடத்தில் இருந்தது. அதை 5 ஆவது இடத்திற்கு கொண்டுவந்துவிட்டோம் என்று தனது முதுகில் தானே தட்டிக் கொடுத்துக் கொண்டார் மோடி.


l மோடி உண்மையில், 2014 மே 1இல் உலக வங்கியின் அறிக்கையை சுட்டிக்காட்டி, இந்து பத்திரிகை வெளியிட்டிருக்கிற செய்தியில் - 2005இல் இந்தியா 10 ஆவது பெரிய பொருளாதார மாக இருந்தது; 2011 ஆம் ஆண்டு, அது 3 ஆவது பெரிய பொருளாதாரமாக மாறிவிட்டது என்று சொல்லியிருக்கிறார்கள். இது ஒருபுறமிருக்க, உண்மையில் இந்தியா 2027 ஆம் ஆண்டில் 3 ஆவது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் இந்த மதிப்பீடு களை மேம்போக்காக ஒப்பிட முடியாது.


l இரண்டு பேர் இருக்கிற ஒரு குடும்பத்தில் பத்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார்கள்; 10 பேர் இருக்கிற குடும்பத்தில் 20 ஆயிரம் ரூபாய் சம்பாதித்தால், அந்த 10 பேர் இருக்கிற குடும்பம்தான் அதிகமாக சம்பாதிக் கிறது என்று சொல்வது ஒரு மேம்போக்கான வாதம்.


l எனவேதான் உலகம் முழுவதும், ஒரு நாட்டின் வளர்ச்சியை மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) எப்படி சரியாக பிரதிபலிக்கும் என்பதற்கு, தனி நபர் ஜிடிபி என்பதை ஓர் அளவுகோலாக வைத்திருக் கிறார்கள்.அப்படி பார்த்தால், பொருளாதார வல்லமை படைத்த முதல் 10 நாடுகளில், கடைசியாகத்தான் இந்தியா இருக்கும். 3 ஆவது இடத்திற்கு வந்தாலும் கூட, அது அமெரிக்கப் பொருளாதாரத்தின் ஆறில் ஒரு பகுதியாகவும், அதற்கு அடுத்த நிலையில் உள்ள சீனப் பொருளாதாரத்தின் ஐந்தில் ஒரு பகுதியாக வும் இருக்கப் போகிறது என்பதுதான் நிலைமை. எனவே பொருளாதாரத்தைப் பற்றி மோடி அடிக்கிற தம்பட்டம் எந்த வகையிலும் பொருத்தமற்றது.


வீடு கட்டிக் கொடுத்தேன்; வைத்தியம் பார்த்தேன் என்றெல்லாம் கூட சுதந்திர தின உரையில் பிரமாதமாக அளந்து விட்டிருக்கிறார் பிரதமர். வீடு கட்டுவதற்கு கடந்த கால ஆட்சி யாளர்கள் மொத்தம் ரூ.90 ஆயிரம் கோடி கடன் கொடுத்தார்கள்; நாங்கள் ரூ.4 லட்சம் கோடி கொடுத்திருக்கிறோம் என்று அவர் சொல்லியிருக் கிறார்.


l உண்மையில், இந்நேரம் ஒரு கோடியே 18 லட்சத்து 90 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் என்பது வெறும் 76 லட்சம் மட்டும்தான். இதிலும் கூட, கடைசியாக ஒதுக்கப்பட்ட 2 லட்சத்து 3 ஆயிரம் கோடி ரூபாயில், ஒரு லட்சத்து 36 ஆயிரம் கோடி மட்டுமே செலவழிக்கப் பட்டிருக்கிறது என்பதை சிஏஜி சுட்டிக் காட்டியிருக்கிறது.


l அதேபோல, மருத்துவ திட்டம் குறித்தும் சிஏஜி சொல்லி யிருக்கிறது. பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாக, நாங்கள் ஆகாயத்தை வளைத்து விட்டோம்; இறந்து போனவர்களை எழுப்பிவிட்டோம் என்பது மாதிரியாக அவர் பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் உண்மையில், பொருத்தமற்ற 7.5 லட்சம் பேர் பணம் வாங்கியிருக்கிறார்கள். ஏழு ஆதார் எண் களிலிருந்து 4766 பேருக்கு பணம் அனுப்பியதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. 403 பேர் இறந்து போன பிறகு, அவர்களுக்கு ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் பணம் கொடுத்ததாக கணக்கு எழுதியிருக்கிறார்கள் என சிஏஜி அறிக்கை புட்டுப் புட்டு வைத்துவிட்டது.


43 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையின்மை உச்சத்தில் இருக்கிறது என்பது அறிந்ததே, பிரதமர் மோடி, 8 லிருந்து 10 கோடிப் பேருக்கு நாங்கள் புதிய வேலைவாய்ப்பு களை உருவாக்கி விட்டோம் என்றும் அள்ளி விட்டிருக்கிறார்.


l வேடிக்கை என்னவென்றால், ஒன்றிய அரசு நிறுவனங்களில், இந்த ஆண்டு ஜூன் மாத கணக்கின்படி, அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் 39 லட்சத்து 77 ஆயிரம். நிரப்பப்பட்டிருப்பவை 30 லட்சத்து 13 ஆயிரம். 9 லட்சத்து 64 ஆயிரம் காலிப் பணியிடங்கள் இருக்கின்றன.


l மறுபுறம், ஒன்றிய பொதுத்துறை நிறுவனங்களில் 2013-2014 இல் நிரந்தர தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களையும் சேர்த்து 16 லட்சத்து 90 ஆயிரம் பேர் பணிபுரிந்தனர். இது தற்போது 14 லட்சத்து 54 ஆயிரமாக மாறியிருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், இதில் 2.5 லட்சம் பணியிடங்களை காலி செய்திருக்கிறார்கள். அதிலும், நிரந்தரத் தொழிலாளர்கள் 13 லட்சத்து 51 ஆயிரமாக இருந்ததை, 9 லட்சத்து 22 ஆயிரமாக குறைத்து விட்டு, மீதமுள்ளவற்றை அத்துக் கூலிகளாக மாற்றிவிட்டார்கள்.


l கடந்த 2022-2023 ஆண்டு, இந்தியாவில் 15 முதல் 24 வயது வரை இருக்கிற 25 சதவீதம் பேர் வேலையின்றி இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதியில், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் துவங்குவது 72 சதவீதம் குறைந்திருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. இப்படி ஏராளமான விசயங்கள் உள்ளன.


l 2016-2017இல் இந்தியா முழுவதும் ஒட்டுமொத்தமாக வேலை பார்த்தவர்களின் எண்ணிக்கை 40.7 கோடி. ஆனால் 2020-21 இல் இது 37.8 கோடி. கிட்டத்தட்ட 3 கோடி வேலைவாய்ப்பை இல்லாமல் செய்துவிட்டார். அப்படியென்றால், இவர் சொல்லியிருக்கக் கூடிய 10 கோடி வேலைவாய்ப்பு என்பதை எங்கே உரு வாக்கினார்? கடலுக்கு அடியிலா? அகண்ட பாரதத்திலா?


பெண்கள் பாதுகாப்பில் அவர் பெரிய முன்னுரிமை கொடுத்ததைப் போல பேசி யிருக்கிறார்.


l இந்தியாவின் அடையாளங்களாக இருக்கக் கூடிய மல்யுத்த வீராங்கனைகள் (குழந்தைகள் உட்பட) தாங்கள் பலாத்காரம் செய்யப்பட்ட தாக பாஜக எம்.பி.யான பிரிஜ் பூசண் சரண்சிங் மீது குற்றம் சாட்டியிருக்கிற பின்னணியில், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், பக்கத்தில் வைத்துக் கொண்டு இப்படி பேசுவதற்கு, பிரதமர் மரத்துப் போனவராக இருக்க வேண்டும்.


l இப்போது பாஜகவில் இருக்கக் கூடிய ஏழு எம்.பி.க்கள் மீது மிகக் கடுமையான பாலியல் வன்கொடுமை குற்றச் சாட்டுக்கள் உள்ளன. பாஜகவின் 37 எம்எல்ஏக்கள் மீது பாலியல் வன்கொடுமை செய்ததற்கான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.


l பேட்டி பச்சாவ், பேட்டி பதாவ் (Beti Bachho, Beti Padav) பெண் குழந்தைகளுக்கான திட்டத்தைப் பொறுத்தவரை 2022-23 ஆம் ஆண்டில், அதற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் வெறும் 18 சதவீதம் மட்டுமே செலவிடப்பட்டிருக்கிறது. இதேபோன்று, நிர்பயா நிதி 2022-23 ஆம் ஆண்டில் வெறும் 12.4 சதவீதம் மட்டுமே செலவழிக்கப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் மறந்து, கொஞ்சமும் கூச்சமின்றி இப்படி ஒரு மனிதர் பேசுகிறார் என்றால், அவரை எந்த வகையில் சேர்ப்பது?


நாங்கள் கொரோனாவை மிகவும் சக்தியுடன் எதிர்கொண்டோம் என்றும் கதையளந்துள் ளார் பிரதமர் மோடி.


l உண்மையில் இந்திய அரசாங்கம் சொன்னதைவிட, கொரோனா காலத்து மரணங்கள் மூன்று மடங்கு அதிகமாக இருக்கும் என்று நியூயார்க் டைம்ஸ் இதழ் எழுதியது. அது ஒரு பத்திரிகை; இதை நம்ப வேண்டாம் என்று சிலர் சொல்லக்கூடும். ஆனால் உலக சுகாதார நிறுவனம், 'இந்திய அரசாங்கம் 4.8 லட்சம் பேர் மட்டும் இறந்ததாக கணக்குக் காட்டியிருக்கிறது. உண்மையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 47 லட்சத்திற்கும் அதிகம்' என்று சொல்லியிருக்கிறது. அதாவது கிட்டத்தட்ட 10 மடங்கு. கங்கையில் தூக்கி வீசப்பட்ட உடல்கள் அனாதையாக எறியப்பட்ட உடல்கள் ஆகியவற்றை எல்லாம் கணக்கில் எடுத்தால், இந்த எண்ணிக்கை சரியாக இருக்கும்.


மணிப்பூர் குறித்து, அவர் கூறிய வார்த்தைகள் மிக மோசமானவை. மணிப்பூரில் பல வாரங்களாக வன்முறை நீடித்தது; இப்போது அமைதியாகிவிட்டது என்று சொல்லியிருக்கிறார்.


l அவர் பேசிக் கொண்டிருந்த நாளிலிருந்து சரியாக, ஐந்து நாட்களுக்கு முன்னதாக, ஆகஸ்ட் 6 அன்று தான் 24 மணி நேரத்திற்குள் 6 பேர் கொல்லப் பட்டார்கள் என்ற செய்தி வந்திருக்கிறது. இன்னும் அங்கு அமைதி திரும்பவில்லை. நாடாளுமன்றத்தில் பேசமாட்டார். ஆனால் இந்தியாவே அவர்களுக்கு துணை நிற்கும் என்று மேடையில் ஏறி வாய்ச்சவடால் அடிக்கிறார். இவரது அரசாங்கமோ, இவரது கட்சியின் மாநில அரசாங்கமோ அந்த மக்களுக்கு ஆதரவாக நின்றதா? முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததா? இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட விவகாரம் வெளியில் வந்தபோது, இப்போதுதான் தெரிய வந்தது போன்று பேசினார். ஆனால் தேசிய மகளிர் ஆணையத் தலைவி, "ஜூன் 12 ஆம் தேதியே எங்களுக்கு தகவல் கிடைத்தது. நான் அதை மணிப்பூர் உள்துறைச் செயலாளருக்கும், தலைமைச் செயலாளருக்கும் அனுப்பி விட்டேன். இதுவரை பதில் இல்லை" என்று சொல்கிறார். இதேபோன்று கூடுதலான பல வழக்குகளையும் அனுப்பியதாகச் சொல்கிறார்.


அடுத்ததாக, தன்னுடைய இயலாமை,தான் சந்திக்கிற தோல்விக்கெல்லாம் இஸ்லாமியர் கள்தான் காரணம் என்று சொல்வதை அவர் ஒருபோதும் தவற விடுவதே இல்லை. இப்போது, ஆயிரம் ஆண்டு கால அடிமைத்தனம் என்று முக லாயர்கள் காலத்தையும் சேர்த்தே சொல்லியிருக் கிறார். அதிலிருந்து நாம் விடுபடப் போகிறோம் என்றும் சொல்லியிருக்கிறார். அதனால் இந்தியா வில் சமூக நீதியை நிலை நாட்ட முடியாமல் போய் விட்டது என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.


l இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்ததன் காரணமாக, இங்கு இருக்கக்கூடிய தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கெல்லாம் இடஒதுக்கீடு அளிக்க முடியவில்லை; சலுகைகள் வழங்க முடியவில்லை என்பதை அவர் சொல்லியிருக்கிறார். உண்மையில், அவரது ஒட்டுமொத்த சுதந்திர தினப் பேச்சில் மிக ஆபத்தான பகுதி என்று இதைத்தான் குறிப்பிட வேண்டியிருக்கிறது.


l தன்னுடைய சாதனை என்று அவர் சொல்வது அனைத்தும் பொய்யாக இருக்கிறது. என்ன செய்யப் போகிறோம் என்பது வெறும் தம்பட்ட மாக இருக்கிறது. ஆனால் தன்னுடைய சங் பரிவாரத்திற்கு அவர் ஒரு செய்தியை அனுப்பு கிறார். இஸ்லாமியர்களுக்கு எதிரான போராட்ட த்தை தீவிரப்படுத்துங்கள். அவர்கள் மீது தாக்குதலை நடத்துங்கள். இந்தியா பின்தங்கியிருப்பதற்கு அவர்கள்தான் காரணம். எனவே, அவருடைய பேச்சு வன்மம் நிறைந்ததாக இருக்கிறது என்பதைப் பார்க்க முடிகிறது.


மேலும், நாங்கள் ஐந்தாண்டுகளுக்கு திட்டமிடுவதில்லை; 50 ஆண்டுக்கு, 100 ஆண்டுக்கு என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள், இப்போது ஆயிரம் ஆண்டுகள் என்கின்றனர். அதாவது, இவர்கள் இன்று செய்வதன் பலன் ஆயிரம் ஆண்டுகளுக்கு இருக்குமாம். அதனால் இவரை ஆதரிக்க வேண்டும் என்று பிரதமர் பேசியிருக்கிறார். இந்திய மக்கள் 2024 தேர்தலில், பாஜகவும் அதன் கூட்டாளிகளும் முற்றிலுமாக துடைத்தெறியப்படுவதை உறுதி செய்வதன் மூலமாகவே, நிகழ்கால இந்தியாவை சிறந்த இந்தியாவாக எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துச் செல்ல முடியும். அதை செய்ய வேண்டியது நம்முடைய கடமை.


தொகுப்பு : ஆர்.நித்யா

No comments:

Post a Comment