Wednesday, 11 December 2019

பகவத் கீதை சொல்லிக் கொடுப்பது பாலியல் பலாத்காரமா?

*"பகவத் கீதை சொல்லிக் கொடுப்பது பாலியல் பலாத்காரமா?"*

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்ந்து நடந்துகொண்டு இருப்பதாக செய்திகள் வந்தவாறு இருக்கும் நிலையில், ஆந்திரமாநிலம் கடப்பாவில் 14 வயது சிறுமி கோவிலில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திர மாநிலம் கடப்பாவில் ரட்டிவாரியப்பள்ளி என்ற கிராமத்தில் உள்ள கோவிலில் அர்ச்சகராக வேலைபார்த்துவருபவர் சத்யநாராயணா. இவருக்கு கடப்பாவைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் உள்ள இந்துக்களுக்கு சமஸ்கிருதம், பகவத் கீதை, இராமாயணம் கற்றுக்கொடுக்க இந்து அமைப்பினர் வழங்கும் நிதியை ஊதியமாக வழங்கி வருகின்றனர்.

இந்த ஊதியத்தைக் கொண்டு இவர் கடப்பா மாவட்டத்தில் வீடுகட்டி குடும்பத்தோடு குடியிருந்து வருகிறார். இவர் ரட்டிவாரியப் பள்ளியில் உள்ள கோவிலில் பகவத்கீதை வகுப்பு நடத்தினார். *கடந்த 5 ஆம் தேதி மாலை "பகவத்கீதை" படிக்கவந்த* அனைவரும் சென்றுவிட 14 வயது சிறுமி தனது பெற்றோரின் வருகைக்காக காத்திருந்தார்.

இந்த நிலையில் தனியாக இருந்த சிறுமியிடம் சத்யநாராயணா கைப்பேசியில்
ஆபாசப்படம் காட்டி அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் இது தொடர்பாக யாரிடமும் கூறினால் கடவுளின் சாபம் உன்னையும், உனது குடும்பத்தாரையும் பிடித்துக் கொள்ளும் என்று மிரட்டியுள்ளார். இந்த நிலையில் தனது பெற்றோருடன் வீடுதிரும்பிய சிறுமிக்கு உடல் நிலை மோசமானதைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது, மருத்துவர் சிறுமியிடம் விசாரணை செய்த போது அர்ச்சகர் கோவிலில் வைத்து பாலியல்வன்கொடுமை செய்த விவரம் தெரியவந்தது, இதனை அடுத்து மருத்துவர் கடப்பா காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார்.

மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினர் சிறுமியிடம் விசாரணை செய்தனர். மேலும் குற்றவாளியான அர்ச்சகரைத் தேடி கோவிலுக்குச் சென்றனர்.

இதற்குள் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் காவல்துறை தன்னை தேடுகிறது என்று தெரிந்துகொண்ட அர்ச்சகர் சத்யநாராயாணா தனது குடும்பத்தோடு தலைமறைவானார்.

ரயில் மூலம் நாக்பூருக்கு தப்ப இருந்த அர்ச்சகரை அவரது கைப்பேசி சிக்னலைக் கொண்டு அனனவரம் ரயில் நிலையத்தில் கடப்பா காவல்துறை கைதுசெய்தது. பின்னர் அர்ச்சகரும், அவரது குடும்பத்தினரும் கடப்பா காவல்நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டனர். விசார ணைக்குப் பிறகு அர்ச்சகரைக் கைதுசெய்தனர்.

அவரை பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த கோவிலுக்கு அழைத்துச்சென்று விசாரணை செய்தனர். மேலும் அவர் அப்பகுதியில் உள்ள பல கோவில்களில் அர்ச்சகராகவும், பகவத்கீதை சொல்லித் தருபவராகவும் இருந்துள்ளார். பிற கோவில்களிலும் இது போன்று யாரையேனும் பாலியல் வன்கொடுமை செய்தாரா என்று விசாரித்து வருகின்றனர்.

இந்தியா முழுவதும் பல்வேறு பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து சிறுமிகளுக்கு எதிராக நடைபெற்று பரபரப்பை ஏற்படுத்திவரும் நிலையில் *ஆந்திராவில் கோவிலில் வைத்தே - பகவத்கீதை சொல்லித்தருகிறேன் என்று கூறி சிறுமியை பாலியல்வன்கொடுமை செய்த நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.*

*பகவத் கீதை சொல்லிக் கொடுப்பவர் பாலியல் வன்கொடுமை செய்யலாமோ என்று யாரும் கேட்க முடியுமா?*

பார்ப்பன அர்ச்சகரைக் கேட்டால் அவர் சொல்லக் கூடும்; *பகவான் கிருஷ்ணனே செய்யாத பாலியல் லீலைகளா? அறுபதினாயிரம் கோபிகாஸ்திரிகளிடம் அவர் அடித்த லீலைகள் கொஞ்சமா நஞ்சமா என்று கேட்க மாட்டாரா?*

*காஞ்சிபுரத்தில் மச்சேந்திரன் கோயிலில் தேவநாதன் என்ற குருக்கள் பார்ப்பான் கோயிலிலேயே லீலைகள் செய்து விபச்சார விடுதி ஆக்கிவிடவில்லையா? திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்குள் பத்ரிநாத் என்ற பார்ப்பான் பாலியல் வேட்டை நடத்திடவில்லையா?*

*இந்து மதத்தின் கடவுள்களுக்கு இவை எல்லாம் சர்வ சாதாரணம் - ஒன்றை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். பக்தியால் ஒழுக்கம் வளராது என்பதுதான் அந்த மாபெரும் உண்மை.*

*நன்றி : "விடுதலை" நாளேடு தலையங்கம் 11-12-2019.*

No comments:

Post a Comment