ஏகஇறைவனின் திருப்பெயரால்...
குர்பானியின் சட்டங்கள்
இஸ்லாத்தின் இரண்டு பெருநாட்களான நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களும் இரண்டு விதமான தர்மங்களை அடிப்படையாக கொண்டவை. நோன்புப் பெருநாள் தினத்தில் சதகத்துல் பித்ர் என்னும் தர்மம் கடமையாக்கப்பட்டு இருப்பது போல் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் உழ்கிய்யா எனும் குர்பானி கடமையாக்கப்பட்டுள்ளது. ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றை இறைவனுக்காக அறுத்துப் பலியிடுவது தான் குர்பானி எனப்படுகிறது. இந்தக் குர்பானியின் சட்டங்களைப் பற்றி பார்ப்போம்.
குர்பானி கொடுக்கும் நாட்கள்
குர்பானி கொடுக்க கடமைப்பட்டவர்கள் பெருநாள் தினத்தில் பெருநாள் தொழுகை முடிந்த பிறகுதான் கொடுக்க வேண்டும். தொழுகைக்கு முன்னால் கொடுத்தால் அது குர்பானியாக ஆகாது என்று நபி (ஸல்) அர்கள் கால நிர்ணயம் செய்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையிலேயே யார் இத்தொழுகையை நிறைவேற்றி விட்டு குர்பானி கொடுக்கிறாரோ அவர் தான் அக்கடமையை நிறைவேற்றியவர் ஆவார். யார் தொழுகைக்கு முன்னால் அறுக்கிறாரோ அவர் அக்கடமையை நிறைவேற்றியவர் ஆகமாட்டார் என குறிப்பிட்டார்கள்.
அறிவிவப்ப்வர் பரா (ரலி) நுல் புகாரி (955,5556)
இந்த ஹதீஸிலிருந்து குர்பானியின் ஆரம்ப நேரம் பெருநாள் தொழுகை நிறைவேற்றியதில் இருந்து தொடங்குகிறது. என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் மட்டுமின்றி ஹஜ்ஜுப் பெருநாளை தொடர்ந்து வரக்கூடிய 11,12,13 ஆகிய நாட்களும் குர்பானி கொடுப்பதற்கு ஏற்ற நாட்களாகும். (பார்க்க அஹ்மத்-16151)
பெருநாள் தினத்தில் கொக்காதவர்கள் அதைத் தொடர்ந்து வரும் 3 நாட்களிலும் இந்தக் குர்பானியை கொடுத்துக் கொள்ளலாம்.
அறுக்கும் முறை
குர்பானி பிராணியை அறுக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் எனக் கூறி அறுத்து இருக்கிறார்கள்.
கால்கள், வயிறு, முகம் ஆகியவை கறுப்பாக அமைந்து உள்ள கொம்புள்ள ஓர் ஆட்டை வாங்குமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளை இட்டார்கள். வாங்கி வரப்பட்டவுடன் ஆயிஷாவே கத்தியை எடுத்து வா என்றார்கள். பின்னர் அதைக் கல்லிலே தீட்டி கூர்மையாக்கு என்றார்கள். நான் அவ்வாறே செய்தேன். கத்தியை எடுத்துக் கொண்டு ஆட்டைப் பிடித்து அதைப் படுக்கையில் கிடத்தி அறுத்தார்கள். அப்போது பிஸ்மில்லாஹ் என்று கூறிவிட்டு இவை இதை முஹம்மதிடம் இருந்தும் முஹம்மதின் குடும்பத்தாரிடம் இருந்தும் முஹம்மதின் சமுதாயத்திடமிருந்தும் ஏற்றுக் கொள்வாயாக எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர் ஆயிஷா (ரலி) நுல் முஸ்லிம் (3637)
முஸ்லிம் நுலில் மற்றொரு அறிவிப்பில் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் பிஸ்மில்லாஹ்வும், தக்பீரும் கூறியதாக புகாரியில் இடம் பெற்றுள்ளது. எனவே அறுப்பவர்கள் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பார் எனக் கூறி அறுக்க வேண்டும். அத்துடன் அறுக்கும் போது கத்தியைக் கூர்மையாக்கிக் கொள்ள வேண்டும்.
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் எவ்வாறு குர்பானி கொடுக்கப்பட்டு வந்தது? என்று அபூஅய்யூப் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் ஒருவர் தமக்கும் தமது குடும்பத்திற்கும் சேர்த்து ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார். தாமும் சாப்பிட்டு மற்றவர்களுக்கும் சாப்பிடக் கொடுப்பார். இன்று மக்கள் பெருமையடிப்பதற்காக நீர் காணக் கூடிய நிலை ஏற்பட்டு விட்டது என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் அதா பின் யஸார், நுல் திர்மிதி 1425, இப்னுமாஜா (3137) முஅத்தா (921)
எனவே ஒருவர் தமக்காகவும் தமது குடும்பத்திற்காகவும் சேர்த்து ஒரு ஆட்டை குர்பானி கொடுத்தால் அவரது கடமை நீங்கிவிடும் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். அதே சமயம் ஒன்றுக்கு மேல் கொடுக்கக்கூடாது என்பதற்கு தடையேதும் இல்லை. நபி (ஸல்) அவர்கள் நுறு ஒட்டகங்களை குர்பானி கொடுத்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் நுறு ஒட்டகங்களை குர்பானி கொடுத்தார்கள். அப்போது அவற்றின் இறைச்சிகைளைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான அவற்றைப் பங்கிட்டேன். பின்பு அவற்றின் சேனங்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் பங்கிட்டேன். பிறகு அவற்றின் தோல்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன்.
அறிவிப்பவர் அலீ (ரலி) நுல் புகாரி (1718)
ஒட்டகம், மாட்டுக்குரிய குர்பானி
மாட்டையோ ஒட்டகத்தையோ குர்பானி கொடுக்க விரும்பினால் 7பேர் சேர்ந்து ஒரு மாட்டையோ அல்லது ஓர் ஓட்டகத்தையோ குர்பானி கொடுக்கலாம். ஒரு மாடு அல்லது ஓர் ஓட்டகம் 7 ஆடுகளுக்குச் சமமாக இஸ்லாத்தில் கருதப்படுகிறது.
நபி (ஸல்) அவர்கள் ஹுதைபிய்யா உடன்படிக்கை ஏற்பட்ட ஆண்டில் 7 பேர் சார்பாக ஓர் ஒட்டகத்தையும் 7 பேர் சார்பாக ஒரு மாட்டையும் குர்பானி கொடுக்கச் செய்தனர்.
அறிவிப்பவர் ஜாபிர் (ரலி) நுல் முஸ்லிம் (2323)
எனவே ஆட்டைத் தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்று கருதாமல் விரும்பினால் 7பேர் சேர்ந்து ஒரு மாட்டை குர்பானி கொடுக்கலாம். ஆட்டை குர்பானி கொடுத்தவர்களுக்குக் கிடைக்கும் நன்மையில் சிறிதும் இவர்களுக்குக் குறையாது என்பதை இந்த ஹதீஸில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம்
விநியோகம் செய்தல்
குர்பானி கொடுக்கப்பட்ட இறைச்சியை 3நாட்களுக்கு மேல் சேமித்து வைக்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் ஆரம்பத்தில் கட்டளையிட்டிருந்தார்கள். ஆரம்ப காலத்தில் முஸ்லிம்களிடம் நிலவிய வறுமை விலகி செழிப்பான நிலை ஏற்பட்ட பொழுது நீங்கள் உண்ணுங்கள் வேண்டுமென அளவு சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் அனுமதி அளித்தார்கள். இது புகாரியில் இடம் பெற்றுள்ளது.
எனவே குர்பானி கொடுப்பவர்கள் ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு தேவையான அளவுக்கு சேமித்து வைத்துக் கொள்ளலாம். பிற ஊர்களுக்கு எடுத்துச் செல்லலாம் என்பதை இந்த ஹதீஸிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.
நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்த ஒட்டகத்தின் இறைச்சியைப் பங்கிட்டுக் கொடுக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தர்கள், அதனுடைய இறைச்சி தோல் ஆகியவற்றை எல்லாம் விநியோகிக்குமாறு உத்தரவிட்டார்கள். ஆட்டை உரித்து அறுத்து பங்கிடக்கூடியவருக்குக் கூலியாக அந்த இறைச்சியையோ தோலையோ கொடுக்கக்கூடாது எனவும் கட்டளை இட்டார்கள்.
அறிவிப்பவர் அலீ நுல் புகாரி. (1717)
இந்த ஹதீஸில் இருந்து அறுப்பவர்களுக்கு உரிப்பவர்களுக்கு தனியாகத் தான் கூலி கொடுக்க வேண்டுமே தவிர குர்பானி எந்த ஒரு பகுதியையும் கூலி என்ற அடிப்படையில் கொடுக்கக் கூடாது என்பதை அறிந்து கொள்ளலாம்.
குர்பானி கொடுக்கக் கூடியவர்கள் யாருக்கும் அதன் இறைச்சியை வழங்காமல் தாமே வைத்துக் கொள்ளலாம் என்று கூறுகின்றனர். இது திருக்குர்ஆனின் க்டளைக்கு முரணானதாகும். அல்ஹஜ் 28வது வசனத்தில் அவற்றை நீங்களும் உண்ணுங்கள் வறிய ஏழைகளுக்கும் வழங்குகள் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
எவ்வளவு உண்ணலாம் எவ்வளவு வழங்கலாம் என்ற வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படாவிட்டாலும் இறைவனுக்கு பயந்து நியாயமான முறையில் நமக்கு தேவையான அளவு மட்டும் நாம் எடுத்துக் கொண்டு எஞ்சியவற்றை ஏழைகளுக்கு வழங்க வேண்டும்.
சில இடங்களில் குர்பானி இறைச்சியை பங்குகளாக வைத்து ஒரு பங்கு தங்களுக்கும் இன்னொரு பங்கு உறவினர்களுக்கும் மற்றொரு பங்கு ஏழைகளுக்கும் கொடுக்கும் வழக்கம் இருந்து வருகிறது. இதற்கு நபி வழயில் எந்த ஆதாரமும் இல்லை.
குர்பானிப் பிராணிகள்
ஆடு, மாடு ஒட்டகம் ஆகியவற்றை குர்பானி கொடுக்க வேண்டும் என்பதை முன்னரே நாம் குறிப்பிட்டுள்ளோம்.
குர்பானிப் பிராணிகளின் தன்மைகள்
நான்கு குறைகள் உள்ளவை குர்பானிக்கு ஏற்றவையவல்ல. வெளிப்படையாகத் தெரியக்கூடிய குருட்டுத் தன்மை. வெளிப்படையாகத் தெரியக்கூடிய நோய், வெளிப்படையாகத் தெரியக்கூடிய ஊனம். கொம்பு முறிந்தது ஆகியவற்றைக் குர்பானி கொடுக்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ்வின் துதரே கொம்பில் ஒரு குறை பல்லில் ஒரு குறை இருப்பதால் அதைக் கொடுக்க நான் விரும்பவில்லை என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உனக்கு எது விருப்பமில்லையோ அதை விட்டுவிடு மற்றவருக்கு அதை ஹராமாக்கி விடாதே என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் பரா (ரலி) நுல் நஸயீ (4293)
இந்த ஹதீஸின் அடிப்படையில் வெளிப்படையாகத் தெரிக் கூடிய பெரிய குறைபாடுகள் இருந்தால் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அற்பமான குறைகள் இருந்தால் அதையும் தவிர்க்க விரும்புவோர் தவிர்க்கலாம். கட்டாயமாகத் தவிர்க்க வேண்டியதில்லை என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
குர்பானிப் பிராணியின் வயது
ஆடு, மாடு ஒட்டகம் ஆகிய முன்று பிராணிகளைத் தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்பதை முன்னர் நாம் அறிந்தோம். குர்பானிக்காகத் தேர்வு செய்யப்படும் பிராணிகள் குறிப்பிட்ட வயதை அடைந்திருக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்துள்ளனர்.
நீங்கள் முஸின்னத் (இரண்டு வயதுடையது) தவிர வேறெதனையும் (குர்பானிக்காக) அறுக்காதீர்கள். உங்களுக்குச் சிரமமாக இருந்தால் தவிர அவ்வாறு சிரமமாக இருந்தால் வெள்ளாட்டில் ஜத்அத் (பல்விழும் பருவத்தில் உள்ள) தை அறுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பபவர் ஜாபிர் (ரலி) நுல் முஸ்லிம் (3631)
குர்பானி கொடுப்பவர் செய்யக்கூடாதவை ஒருவர் குர்பானி கொடுப்பதற்காக முடிவு செய்துவிட்டால் அவர் துல்ஹஜ் மாதத்தின் முதல் பிறை கண்டது முதல் குர்பானி கொடுக்கும் வரை நகம் வெட்டக் கூடாது. முடிகளை நீக்கக் கூடாதுஎன்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர் உம்மு ஸலமா (ரலி) நுல் நஸயீ (4285)
நாமே அறுக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் குர்பானி கொடுத்த போதுதமது கையால் தாமே அறுத்து இருக்கிறார்கள் என்று புகாரி முஸ்லிம் உட்பட பல நுல்களிலும் இடம் பெற்று உள்ளது. எனவே அறுக்கும் முறை தெரிந்தவர்கள் மற்றவர்களை வைத்து அறுக்காமல் தாமே அறுத்துக் கொள்வதே சிறந்ததாகும்.
தொகுப்பு: மௌலவி எம்.எஸ் அப்பாஸ் எம்.ஐ.எஸ்.சி