சாதனைப் பெண்மணி
ஹசீனா நிசாத்
கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் கண்ணாடிப்பரம்பு எனும் சிறிய கிராமத்தில் பிறந்த ஹசீனா தனது திறமையாலும், அயராத உழைப்பாலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உச்சம் தொட்ட பெண் தொழில் முனைவோர்களில் ஒருவராக வலம் வருகிறார்.
கண்ணூரில் பி.காம் வரை படித்த ஹசீனா திருமணத்திற்கு பின் கணவர் நிஷாத் ஹுசைனுடன் ஷார்ஜா சென்றவர்.
ஷார்ஜாவில் தனியார் நிறுவனத்தில் கணவர் பணியாற்ற வீட்டு வேலைகளை கவனித்து வந்த ஹசீனாவின் சிந்தனையில் உதித்த திட்டம் இன்று அபார வளர்ச்சி கண்டுள்ளது..
கணவரின் ஒத்துழைப்பில் 12 ஊழியர்களுடன் 2008 ல் ஹசீனா ஆரம்பித்த "World Star Technical Contracting Company" இன்று சுமார் ஏழாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் பிரமாண்ட பன்னாட்டு நிறுவனமாக மாறியுள்ளது..
ஆரம்பத்தில் ஷார்ஜாவில் ஒரு சிறிய அறையில் நிறுவனத்தை துவங்கிய ஹசீனாவுக்கு, தற்போது அபுதாபி துபாயிலும் கிளை அலுவலகம் உள்ளது. "World Star Holdings" எனும் சார்பு நிறுவனமும் ஹசீனா நிர்வகித்து வருகிறார்.
தனது நிறுவனத்தில் வேலை தேடி யார் வந்தாலும் அவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதும், பணியில் ஈடுபாடு மற்றும் அனுபவம் பார்த்து ஆறு மாதத்திற்கு பின் பணி நிரந்தரமாக்கி அவர்களின் உயர்வுக்கு வழிவகை செய்வதும் ஹசீனாவின் சிறப்புக்களில் ஒன்றாகும்.
ஆரம்பத்தில் சிறியளவில் கட்டுமான ஒப்பந்தங்களுடன் துவங்கிய ஹசீனாவின் பயணம் தற்போது அமீரகம் முழுவதும் பிரமாண்டமான நூற்றுக்கணக்கான கட்டிட நிர்மாண பணிகளில் தங்களது திறமையை வெளிப்படுத்தியுள்ளது.
ஐக்கிய அரபு நாட்டின் கனவு திட்டங்களான ஷெய்க் ஸாயித் மசூதி, துபாய் மால், அபுதாபி மால்,எதிஹாத் ரயில், யாஸ் ஐலண்ட் மற்றும் துபாய் எக்ஸ்போ கட்டுமான பணிகளில் இவரது நிறுவனங்களின் பங்களிப்பு கலந்துள்ளது.
ஆரம்பத்தில் 12 ஊழியர்களுடன் துவங்கிய ஹசீனாவின் நிறுவனங்களில் தற்போது 400 அலுவலக பணியாளர்களும், 5000 நிரந்தர பணியாளர்களும்,2000 க்கும் மேற்பட்டவர்கள் ஒப்பந்த அடிப்படையிலும் பணியாற்றி
ஹசீனாவின் வெற்றிப் பயணத்தில் உறுதுணையாக இருக்கின்றனர்.
தனது நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்களுக்கான போக்குவரத்து வசதிகள், தங்குமிட வசதிகள், உணவு வசதிகள் அனைத்தும் தனது நேரடி கண்காணிப்பில் திருப்தியுடன் அளித்து வரும் ஹசீனா கடந்த கொரோனா ஊரடங்கு காலங்களில் கூட சரிவர ஊதியங்கள் வழங்கியதோடு ஆட்குறைப்பு செய்யாமல் அனைவரையும் அரவணைத்த தயாள குணத்துக்கு சொந்தக்காரர்..
கணவர் மற்றும் நான்கு குழந்தைகளின் தாயான ஹசீனா இவ்வளவு நெருக்கடியான பணிச்சூழலிலும் தனது பிள்ளைகளின் படிப்பு மற்றும் தேவைகளை பூர்த்தி செய்ய பிரத்யேக ஊழியர்கள் நியமிக்காமல் தானே நேரம் ஒதுக்கி பார்த்துக் கொள்வதாக பெருமிதம் கொள்பவர்..
2019 ம் ஆண்டு அமீரகத்தின் சிறந்த பெண் தொழில் முனைவோருக்கான விருது பெற்ற ஹசீனாவுக்கு , பத்தாண்டுகளுக்கான கோல்டன் விசா வழங்கி யுஏஇ அரசு கவுரவித்துள்ளது.
தற்போது சவூதி அரேபியாவிலும் சில பணிகளில் கால் பதிந்திருக்கும் தனது நிறுவனம் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 25000 பேருக்காவது வேலை வாய்ப்பு வழங்குவது எனும் உயர்ந்த லட்சியத்துடன் முன்னேற்றப் பாதையில் செல்லும் ஹசீனாவின் எண்ணங்கள் இறையருளால் நிறைவேற வாழ்த்துக்கள்..
Colachel Azheem
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
மகளிரணி வெளியீடு
#உதயதாரகை காலாண்டிதழ்
ஜனவரி-மார்ச் 2022 இதழில்
வெளியான கட்டுரை