Friday, 11 December 2020

ஒரே நாடு ஒரே தேர்தல்

ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற தலைப்பில் நேற்று தினத்தந்தி தலையங்கம் எழுதியது. 

அதே தலைப்பில், இன்று தினமலர் சிந்தனைக் களம் பகுதியில் அரைப்பக்கக் கட்டுரை வெளியிட்டு இருக்கின்றது.

எனவே, நாக்பூர் ஆர்எஸ்எஸ் தலைமை அகம் எழுதிக் கொடுத்ததை, 
இவர்கள் இருவரும் வெளியிட்டு இருக்கின்றார்கள் என்ற உண்மை புலப்படுகின்றது. 

அண்மைக்காலமாக, இந்திய நாடுகளின் ஒன்றிய முதன்மை அமைச்சர் நரேந்திரர், இந்தக் கருத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார். 
அதை ஆதரித்து, அடிமை ஊடகங்கள் முழங்குகின்றன. 

இந்திய ஒன்றிய நாடாளுமன்றத்திற்கு 
ஒரே நேரத்தில்தான் தேர்தல் நடத்தப்படுகின்றது. 
அதுபோல, மாநிலங்களுக்கும் சேர்த்து நடத்த வேண்டும் என்கிறார்கள். 

முதலில் அப்படித்தானே நடந்தது? 
அந்த நிலை மாறியது எப்படி? 

எதிர்க்கட்சி மாநில அரசுகள் அமைவதை 
காங்கிரஸ் கட்சியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

உலகத்திலேயே முதன்முறையாக, 
இந்தியாவின் கேரள மாநிலத்தில் 1959 ஆம் ஆண்டு, கம்யூனிஸ்டுகள் தேர்தலில் வெற்றி பெற்று, 
சங்கரன் தலைமையில் ஆட்சி அமைத்தார்கள். 

அந்த அண்டு, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் இந்திரா காந்தி.
 தன்னுடைய தலைமையில் காங்கிரஸ் கட்சி தோற்று விட்டதே என்று பொருமினார் 
கேரளாவில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. 
தந்தை நேருவுக்குக் கடுமையான அழுத்தம் கொடுத்து, சங்கரன் ஆட்சியைக் கலைத்தார்கள். 

அதே இந்திரா காந்தி, முதன்மை அமைச்சர் ஆனபோது, எந்த மாநிலத்திலும் எதிர்க்கட்சி ஆட்சி நடக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். 

1975 ஆம் ஆண்டு, இந்தியாவின் 25 மாநிலங்களில், தமிழ்நாட்டில் திமுக ஆட்சி தவிர, ஏனைய அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சிதான். 

அந்த அரசுகளுக்கு ஓராண்டு ஆட்சி நீட்டிப்புகொடுத்து, தான் ஒரு தான்தோன்றி என்பதை உறுதி செய்தார் இந்திரா. 

1976 ஆம் ஆண்டு, தி.மு.க. ஆட்சியைக் கலைத்து விட்டார். 

அதன்பிறகு வந்த மொரார்ஜி தேசாய், 
காங்கிரஸ் அரசுகள் கூடுதலாக ஓராண்டு பொறுப்பு வகிப்பதாகக் கூறி, பத்து மாநில அரசுகளைக் கலைத்தார்.

அது சரியான நடவடிக்கை. 

இரண்டரை ஆண்டுகளில் ஜனதா ஆட்சி கவிழ்ந்தது. 

1980 தேர்தலில் இந்திரா வென்றார். 
ஆட்சிக்கு வந்த உடனேயே எந்தக் காரணமும் சொல்லாமல், பத்து மாநிலங்களில் இருந்த ஜனதா கட்சி அரசுகளைக் கலைத்து விட்டார். 
தமிழ்நாட்டில் அண்ணா தி.மு.க. ஆட்சியைக் கலைத்தார். 

தொடர்ந்து அரசு அமைப்புச் சட்டத்தைக் 
கொன்று குழிதோண்டிப் புதைத்தார். 

எனவேதான், மாநிலங்களில் பல்வேறு காலகட்டங்களில் தேர்தல் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. 

மற்றொரு கேடு, 
ஆளுநர் பொறுப்பு  வகிக்கின்ற ஆட்டுத்தாடிகள். 

அமெரிக்க மாநிலங்களில், ஆட்டுத்தாடிகள் கிடையாது. அங்கே, மாநில அரசை, ஒன்றிய அரசு கலைக்க முடியாது. 

எந்தக் காரணத்தைக் கொண்டும், மாநில அரசுகளைக் கலைக்க முடியாது என்ற உறுதி கிடைத்தால், மாநிலங்களும், எதிர்க்கட்சிகளும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பதை ஏற்றுக் கொள்ளக்கூடும். 

ஆனால், அதுபோன்ற உறுதியை, 
இந்தியாவில் கொடுக்க முடியாது. 
கொடுக்க மாட்டார்கள். 
மாநில அரசுகளைக் கலைக்கின்ற கத்தியைத் தங்கள் கைகளில் வைத்துக்கொள்ளத்தான் விரும்புவார்கள். 

கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்று 
நரேந்திரர் முனைந்தால், 
அவரது விருப்பம் ஒருபோதும் நிறைவேறாது.

அருணகிரி
--
Thanks & Regards

No comments:

Post a Comment