Friday 23 December 2022

*வாழ்க்கை அனுபவம்*

*வாழ்க்கை அனுபவம்*


ஒரு தோட்டக்காரர் அவருடைய தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது பறவையின் சிறிய கூடு ஒன்றைக் காண்கிறார்..


அதன் அருகில் போய் அந்த கூட்டில் என்ன இருக்கிறது என்று பார்க்க ஆசைப்பட்ட தோட்டக்காரர் அதன் அருகில் சென்று பார்த்த போது அதில் *பறவையின் சில முட்டைகள் இருப்பதைக் கண்டு அந்த கூட்டைப் பத்திரமாக எடுத்து வைத்துவிட்டுச் செல்கிறார்.*


அடுத்த நாள் வந்து பார்க்கிறார்..அந்த *முட்டைகளில் ஒரு சிறிய வெடிப்பு (cracks) ஏற்பட்டிருப்பதைக் காண்கிறார்.* அப்போது இந்த முட்டைகளிலிருந்து குஞ்சுப் பறவைகள் வெளிவரப்போகிறது என்பதை உணர்ந்த தோட்டக்காரர் சந்தோசத்தில் கூட்டை மேலும் கவனமாகப் பார்த்துக் கொண்டார்.


இப்போது தோட்டக்காரருக்குப் பயிர்களைப் பார்ப்பதைக் காட்டிலும் பறவையின் கூட்டையும் முட்டைகளையும் பார்ப்பதற்காகவே தோட்டத்திற்கு வரத் தொடங்கினார்.


மீண்டும் மீண்டும் வருகிறார்.. முட்டைகளைப் பார்க்கிறார். ஒவ்வொரு முறையும் *அந்த முட்டைகளில் ஏற்பட்ட வெடிப்பு கொஞ்சம் கொஞ்சமாய் அதிகமாயிருப்பதை உணர்கிறார்.*


ஒவ்வொரு முறையும் அவர் அவற்றின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்திக் கொண்டே செல்லத் தொடங்கினார்..


வழமை போன்று ஒரு நாள் கூட்டைப் பார்க்கத் தோட்டக்காரர் வந்தபோது முட்டைகள் அசைவதையும் முட்டையினுள்ளே குஞ்சுப் பறவைகளின் இறக்கைகள் விரிய வழியில்லாமல்

முட்டையின் சுவர்களிலே முட்டி மோதுவதையும் கண்டு உடைந்து போனார்..


*பாவம் அந்தப் பறவைக் குஞ்சுகள் கருவிலேயே சிரமப்படுகிறதே என்று உணர்ந்த தோட்டக்காரர் உடனே அந்த முட்டைகளிலிருந்த வெடிப்பை தன் கைகளால் கொஞ்சம் பெரிதாக்கி குஞ்சுகள் வெளிவர* ஏற்றாற்போல் சௌகரியமாக முட்டைகளை வைத்து விட்டு வீடு சென்றார்..


மறு நாள் காலையில் புதிய பறவைகளைக் காண

மிகுந்த ஆசையோடு கூட்டுக்கு அருகில் சென்ற தோட்டக்காரருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.


*முட்டைகளில் ஒரு மாற்றமும் இல்லை...*

சரி நாளை பார்ப்போம் என்று சென்று அடுத்த நாள் வருகிறார்... அன்றும் ஒரு மாற்றமும் இல்லை...


இப்படியோ நாளை நாளை என்று எதிர்பார்ப்புகள் தவணை முறையில் கடந்தன.


*சில நாட்களின் பின்னர் முட்டைகளைச் சூழ எறும்புகள் படை எடுத்தன...* பறவைக் குஞ்சுகள் செத்துப்போய்க் கிடந்தன...


இதைக்கண்ட தோட்டக்காரர் மனசெல்லாம் வலியோடு வாடிப்போனார்..


அப்போது அந்த வழியாக தோட்டக்காரரின் நண்பர் ஒருவர் வந்தார்...


நடந்ததைக் கூறினார்...


"பாவம் உன் அவசரத்தாலும்

*அளவுக்கு மீறிய அன்பாலும் எல்லையற்ற எதிர்பார்ப்பாலும் அந்த பறவைகளை அழித்து விட்டாயே"*

என்று நண்பர் கூறினார்...


"நானா ... "


"நீ தான்..

வேறு யாரு..."


அந்தப் பறவைகள் அந்த முட்டைகளில்

இருந்து வெளிவரும் போது

அதன் இறக்கைகள் மெதுவாக அசையும்,

கால்கள் துடிக்கும்,

முட்டைகளின் சுவர்களில் முட்டி மோதும்..

*இது தானே இயற்கை..*


அதை அப்படியோ விட்டிருந்தால்

இந்நேரம் அழகான பறவைகளாகப் பறந்திருக்கும்...

ஒரு இயல் பிரசவம் நடந்து முடிந்திருக்கும்..

அழித்து விட்டாயே என்று நண்பர் கூறியதும்


தோட்டக்காரர் மீண்டும் உடைந்து போனார்..

சிதறிப்போனார்..


இப்படித்தான் நாமும் *நம் பிள்ளைகளுக்கு சிரமத்தையே காட்டக் கூடாது என்று தாங்கு தாங்கு என்று தாங்குகிறோம்...* வலிக்கவே கூடாது என்று வளர்த்தெடுக்கிறோம்..


உழைப்பின் பெறுமதியை

வியர்வையின் கனதியை

வெற்றியின் தடங்களை

உணரச் செய்யாமலேயே

உருவாக்கி விடுகிறோம்...


நாம் மறந்துவிடக்கூடாது..


கண்டிப்பில்லாத கனிவு

நாளை எங்கேயோ ஓர் இடத்தில்

நம் பிள்ளைகளை

தண்டிக்க வைக்கும்...


*எல்லோரும் பயணிக்கும் பாதையில் நமது பிள்ளைகளையும் பயணிக்கக் கற்றுக்கொடுப்போம்*

பயணத்தைச் சரி செய்யவும் சொல்லிக்கொடுப்போம்


*அவர்களுக்கென்று தனியான ஒரு பாதையை அவர்களாக உருவாக்கட்டும்.*

நாம் தள்ளி நின்று தட்டிக்கொடுப்போம்..


*பிள்ளைக்கு விழவும் தெரிய வேண்டும் அப்போதுதான் எழும்புவது எப்படி என்று தெரிய வரும்..*


உங்கள் சுட்டு விரல்களைப் பிடித்துக்கொண்டே

எத்தனை காலம் தான் இன்னும் அவர்கள் நடை பயில்வது..?


இது ஒரு பறவையின் கதையல்ல..


*நம் பிள்ளைகளின் வாழ்வியல்...


*SMR*



No comments:

Post a Comment