மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை:
மத்திய அரசு, மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.621லிருந்து ரூ.671.50ஆக 50 ரூபாய் உயர்த்தியுள்ளது. சமையல் எரிவாயு மானியம் உட்பட அனைத்து மானியத்தையும் முழுவதுமாக ஒழிப்பதுதான் மோடி தலைமையிலான பாஜக அரசின் திட்டமாக உள்ளது. அதற்கான முன்னோட்டமாக இதுபோன்ற நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
பத்து இலட்சம் ரூபாய் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு சமையல் எரிவாயு மானியத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது மத்திய பா.ஜ.க அரசு. பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 37 டாலர் அளவுக்குப் குறைந்துள்ளபோதிலும், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகளைக் குறைக்க முன்வராமல், மேலும் மேலும் விலையை உயர்த்திக் கொண்டே போவதை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
உலக வங்கியும், உலக வர்த்தக நிறுவனத்தின் ஆலோசனைப் படி மானியங்கள் குறைப்பு, பொது விநியோகக் குறைப்பு என அதிரடியாக இரட்டைத் தாக்குதல் களை ஏழை, எளிய மக்கள் மீது மோடி அரசு தொடுத்து வருகிறது.
மேலும், சமையல் எரிவாயு போன்று மண்ணெண்ணெய் மானியத்தையும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் திட்டத்தைச் செயற்படுத்த மோடி அரசு தீவிரமாக இருக்கிறது. இதனால் பொதுப்பங்கீட்டுக் கடைகளில் மண்ணெண்ணெய் பெற்றுவந்த அனைவரும், வெளிச்சந்தையில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
அடித்தட்டு ஏழை, எளிய மக்களைப் பாதிக்கும் வகையில் மண்ணெண்ணெய் மானியத்தை வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் திட்டத்தையும், சமையல் எரிவாயு விலை உயர்வையும் மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லாஹ்
தலைவர், ம.ம.க.