அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,
ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களிடம் (உதவி) கேட்டேன். அவர்கள் எனக்கு வழங்கினார்கள்; மீண்டும் (உதவி) கேட்டேன் வழங்கினார்கள். மீண்டும் கேட்டேன்; வழங்கிவிட்டு, 'ஹகீமே! நிச்சயமாக இச்செல்வம் பசுமையானதும் இனிமையானதுமாகும். இதைப் போதுமென்ற உள்ளத்துடன் எடுத்துக் கொள்கிறவருக்கு இதில் அபிவிருத்தி ஏற்படுத்தப்படும்; இதைப் பேராசையுடன் எடுத்துக் கொள்கிறவருக்கு அதில் அபிவிருத்தி ஏற்படுத்தப்படாது. அவன் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவன் போலாவான். உயர்ந்த கை தாழ்ந்த கையைவிடச் சிறந்தது" எனக் கூறினார்கள்.
நான், இறைத்தூதர் அவர்களே! உங்களைச் சத்தியத்துடன் அனுப்பி வைத்தவன் மீது ஆணையாக! உங்களுக்குப் பின் உலகைப் பிரியும் வரை வேறு யாரிடமும் நான் எதையும் கேட்க மாட்டேன் எனக் கூறினேன்.
அபூபக்ர்(ரலி) (ஆட்சிக் காலத்தில்) ஸகாத் பெறுமாறு ஹகீமை அழைத்தார். அவர் அதை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். பிறகு உமர்(ரலி) (தம் ஆட்சியில்) ஸகாத் பெறுமாறு அவரை அழைத்தார். அவர் எதையும் ஏற்க மறுத்தார். அப்போது உமர்(ரலி), 'முஸ்லிம் சமுதாயமே! தம் உரிமையைப் பெறுமாறு நான் ஹகீமை அழைக்கிறேன். அவரோ அதைப் பெற மறுக்கிறார். இதற்கு நீங்கள் சாட்சி!' எனக் கூறினார். ஹகீம் நபி(ஸல்) அவர்களுக்குப் பின் வேறு யாரிடமும் தாம் மரணிக்கும் வரை எதையும் கேட்கவேயில்லை என ஸயீத் இப்னு அல் முஸய்யப் கூறுகிறார். (புகாரி, முஸ்லிம்)
இந்த ஹதீஸில் ஏராளமான படிப்பினையை நபி (ஸல்) இந்த உம்மத்துக்குக் கற்றுத்தருகிறார்கள்.
போதும் என்ற மனம்:
இந்த உலகத்தில் பலர், போதும் என்ற மனமே இல்லாமல், செல்வத்தை சேகரிப்பதற்காக அதிகமான முயற்சியில் ஈடுபடுவதை நாம் பார்க்கிறோம். பிறரிடம் கேட்டுப்பெறுவதை இஸ்லாம் அனுமதித்து இருந்தாலும், அதிலே சில எல்லைகளை வகுத்துக்கொண்டு, போதும் என்ற மனதுடன் (self contented)செயல்படுபவர்களுக்கு, செல்வத்திலே அபிவிருத்தியை அல்லாஹ் ஏற்படுத்துவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
பேராசை:
ஆதமுடைய மகனுக்கு இரண்டு ஓடைகள் தங்கமிருந்தாலும், மூன்றாவதற்கு ஆசைபடுவான் என்ற மற்றொரு நபிமொழி, மனிதர்கள் பேராசை மிக்கவர்கள் என்பதை படம் பிடித்து காட்டுகிறது. செல்வத்தை சேர்க்க வேண்டும் என்ற பேராசை, மண்ணறையை சந்திக்கும் வரை நீடிக்கிறது என்ற இறை வசனமும் (102:1-3) இதை உறுதி செய்கிறது. செல்வம் அளவுக்கதிகமாக சேரும்போது, இந்த உலக ஆசைகள் ( the more he gets it, the more he is overpowered by lust) மேலோங்கிவிட வாய்ப்புகள் உள்ளது. மேலும் பேராசை கொள்கிறவர்கள் செல்வத்தில் அபிவிருத்தி ஏற்படாது என்பதையும் இந்த ஹதீஸ் உறுதி செய்கிறது.
உயர்ந்த கை தாழ்ந்த கையைவிடச் சிறந்தது:
வாக்கியத்தில் எவ்வளவு அர்த்தங்கள் பொதிந்திருக்கிறது. கொடுக்கும் கை, வாங்கும் கையை விட சிறந்தது என்பதை நபி (ஸல்) அவர்கள் எவ்வளவு அழகாக சொல்கிறார்கள். நம்மில் எத்தனை பேர், நம்முடைய சக்திக்கு உட்பட்டு இயலாதவர்களுக்கு கொடுத்து சந்தோசம் அடையக்கூடியவர்களாக இருக்கிறோம். பிறருக்கு உதவி செய்வதன் மூலம், மனம் சந்தோஷம் அடைவதோடு, இறை உவப்பையும் அடைகிறோம். பிறரிடம் எடுத்து மகிழ்வதைவிட கொடுத்து மகிழ்வோமே.
உறுதியான இறை நம்பிக்கை:
இந்த உலகை விட்டுப்பிரியும் வரை வேறு யாரிடமும் கேட்க மாட்டேன் என்று ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அவர்கள் உறுதியுடன் இருந்தார்கள். இரண்டு கலீபாக்கள் காலத்தில், தங்களுக்குரிய ஜகாத்தை பெற்றுக்கொள்ளுமாறு அழைத்த போதுகூட, உறுதியான இறை நம்பிக்கையின் காரணமாக, அதை வாங்க மறுத்து விட்டதோடு, தான் மரணிக்கும் வரையில் இறைவன் அவர்களை இந்த உலகத்தாரின் தேவையை விட்டும் தூரமாக்கிவிட்டான்.
நம்மிடையே உறுதியான இறை நம்பிக்கை இல்லாத காரணத்தால், சாதாரண தேவைகளுக்குக்கூட படைத்தவனைவிட்டுவிட்டு, படைப்புகளிடம் கேட்கக்கூடியவர்களாக இருக்கிறோம். கடன் வாங்குவது மார்க்கத்தில் அனுமதி உள்ளது என்றாலும், நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகையிலும் கடன் தொல்லையை விட்டும் காப்பாற்றுவாயாக என்று கேட்கக்குடியவர்களாக இருந்துள்ளார்கள். உறுதியான இறை நம்பிக்கை வைத்து, நம்முடைய அனைத்து தேவைகளையும் இறைவனிடம் முறையிடுபவர்களை, இந்த உலகத்தாரின தேவைகளை விட்டும் தூரமாக்கிவிடுவான் என்பதுதான் இந்த ஹதீஸில் இருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடமாகும்.
இறைவன் நம் அனைவரையும் அதுபோன்றதொரு கூட்டத்தில் ஆக்கிவைப்பானாக
Trichy - Yusuf. Dubai