-
நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக வந்த காலத்தில் அரபுலகம் இணை வைத்தல் மற்றும் மூட நம்பிக்கைளில் மூழ்கிக் கிடந்தது. நபிகளார் அந்த மக்களிடம் தூய்மையான இஸ்லாமிய மார்க்கத்தை எடுத்துரைத்து அவர்களிடம் இருந்த இணை வைத்தல் கொள்கைகளையும் மூட நம்பிக்கைகளையும் துடைத்தெறிந்தார்கள். ஆனால் காலம் செல்லச் செல்ல அறியாமைக் காலம் திரும்ப வருவதைப் போல், இணைவைப்புக் கொள்கைகளும் மூடநம்பிக்கைகளும் தலைதூக்க ஆரம்பித்தன.
நபிகளார் காலில் போட்டுப் புதைத்த கொள்கைகளைத் தோண்டி எடுத்து உயிப்பிக்கும் வேலைகளையும், அறியாத மக்களை ஏமாற்றும் வேலைகளையும் சிலர் செய்யத் துவங்கியுள்ளனர்.
ஒவ்வொரு கால கட்டத்திலும் இவ்வாறு செய்பவர்கள் தோன்றுவார்கள். அவர்களின் வாதங்களுக்குச் சரியான பதிலடி கொடுக்கும் போது காணாமல் போய்விடுவார்கள்.
இவ்வாறு தோன்றுபவர்கள் தங்கள் இணை வைப்புக் கொள்கைக்கும் மூட நம்பிக்கைகளுக்கும் பித்அத்களுக்கும் இட்டுக்கட்டப்பட்ட, பலவீனமான செய்திகளை ஆதாரமாகக் காட்டுவதுடன் திருக்குர்ஆன் வசனங்கள் மற்றும் ஆதாரப்பூர்வமான செய்திகளின் உண்மையான கருத்துக்களை புரட்டிப் பொருள் கொண்டு, பொதுமக்களை இணை வைப்புக் கொள்கையில் தள்ளவும் மூட நம்பிக்கையில் மூழ்கவும் வழிவகை செய்கின்றனர். இவர்கள் போன்றவர்களைப் பற்றி அலீ (ரலி) அவர்கள் ஒரு அழகான கருத்தைத் தெரிவித்துள்ளார்கள். அவற்றை இங்கு குறிப்பிடுவது சிறப்பாக இருக்கும்.
அதிகாரம் அல்லாஹ்வுக்கே தவிர (வேறு எவருக்கும்) இல்லை. (அல்குர்ஆன் 6:41, 12:40, 67) என்ற வசனத்தை வைத்துக் கொண்டு சிலர் குர்ஆனில் இல்லாத எந்த ஒன்றையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று வாதிட்டனர். இவர்களின் கருத்தை வழிமொழிபவர்கள் தான் இன்றைய அஹ்லுல் குர்ஆன் அமைப்பைச் சார்ந்தவர்கள். அவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரம் குர்ஆன் வசனமாக இருந்தாலும் கூட அதிலிருந்து புரிய வேண்டிய உண்மையான கருத்துக்களை விட்டு விட்டு, வேறு விதமாகப் புரிந்து பேசியதால் (இது) சத்திய வார்த்தை தான். ஆனால், தவறான நோக்கம் கொள்ளப்படுகிறது.
என்று அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள். ஹரூராவாசி(களான காரிஜிய்யாக்)கள் தோன்றிய போது நான் அலீ (ரலி) அவர்களுடன் (அவர்களது அணியில்) இருந்தேன். ஹரூரிய்யாக்கள் ஆட்சி அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்குமில்லை (லா ஹுக்ம இல்லா லில்லாஹ்) எனும் கோஷத்தைஎழுப்பினர். அலீ (ரலி) அவர்கள், (இது) சத்திய வார்த்தை தான். ஆனால், தவறான நோக்கம் கொள்ளப்படுகிறது என்றார்கள். அறிவிப்பவர்: அபூஉபைத்துல்லாஹ் பின் அபூராஃபிவு, நூல்: முஸ்லிம் (1935)
இதைப் போன்று அசத்தியக் கருத்துக்களுக்கு, திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளைத் தவறான பொருள் கொண்டு ஆதாரமாகக் காட்டுகிறார்கள். இவ்வாறு அவர்கள் காட்டும் ஆதாரத்தின் உண்மை நிலை என்ன என்பதைக் காண்போம்.
இறந்து போனவர்களை என்ன செய்து அடக்கம் செய்ய வேண்டும் என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் நபிவழிகளில் இல்லாத பல புதுமையான செயல்களைச் சில முஸ்லிம் பெயர்தாங்கிகள் செய்து வருகின்றனர். அவற்றில் ஒன்று தான் அஹ்தே நாமா என்று சொல்லப்படுவதும் ஆகும்.
இறந்து விட்டவர் நெற்றியில், நெஞ்சில், கஃபன் துணியில், தலைப்பாகையில்பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்றும் லாயிலாஹ இல்லாஹு வல்லாஹு அக்பர் லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து லாயிலாஹ இல்லாஹு லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹில் அலீயுல் அளீம் என்று எழுதுவதாகும். (இதுவல்லாத வேறு வாசகங்களும் சொல்லப்படுகிறது.) இவ்வாறு எழுதினால் அவருக்கு கப்ரின் வேதனை இருக்காது; முன்கர், நகீரை அவர் பார்க்கக் கூட மாட்டார். அல்லாஹ் அவரது பாவங்களை மன்னிப்பான் என்று நம்புகின்றனர்.
இந்த மூட நம்பிக்கைக்கு வலுவூட்டும் வண்ணம் ஹனஃபி மத்ஹப் நூலான துர்ருல் முக்தாரில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது.
மய்யித்தின் நெற்றியிலும் நெஞ்சிலும் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்று எழுதுமாறு சிலர் வஸியத் செய்தார்கள். அவ்வாறு செய்யப்பட்டது. பின்னர் அவர் கனவில் தோன்றிய போது (இது தொடர்பாக) கேட்கப்பட்டது. கப்ரில் வைத்த போது வேதனை செய்யும் வானவர்கள் வந்தார்கள். அவர்கள்மய்யித்தின் நெற்றியில் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்று எழுதப்பட்டதைக் கண்ட போது வேதனையிலிருந்து இவர் பாதுகாப்புப் பெற்று விட்டார் என்று கூறினார்கள் என்றார். (நூல்: துர்ருல் முக்தார் பாகம்: 2, பாகம்: 267)
மய்யின் நெற்றியில் அல்லது தலைப்பாகையில் அல்லது கஃபன் துணியில் அஹ்தே நாமா எழுதப்பட்டால் அல்லாஹ் மய்யித்தின் (பாவங்களை) மன்னிப்பான் என்றும் கப்ரின் வேதனையிலிருந்து பாதுகாப்பு பெறுவார் என்றும் ஆதரவு வைக்கப்படுகிறது... இப்னு ஹஜர் மக்கி அஷ்ஷாஃபீ அவர்களின் ஃபத்வாவில், கஃபனில் எழுதப்படும் அஹ்தே நாமா என்பதைப் பற்றி வினவிப்பட்ட போது லாயிலாஹ இல்லாஹு வல்லாஹு அக்பர் லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து லாயிலாஹ இல்லாஹு லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹில் அலீயுல் அளீம் (என்பது அதன் வாசகமாகும்) என்று கூறியதாக இடம் பெற்றுள்ளது. (நூல்: ஹாஷியத்து ரத்துல் முக்தார், பாகம்: 2, பக்கம்: 267)
இந்தச் செய்தியைப் படிக்கும் போது, இது எவ்வளவு மோசமான செய்தி என்பதை எவரும் அறிந்து கொள்வார். இறந்தவர் நெற்றியில் சில வாசகங்களை எழுதினால் கப்ரின் வேதனை இல்லாமல் போகும், வேதனையின் மலக்குமார்கள் நெருங்க மாட்டார்கள், அல்லாஹ் பாவங்களை மன்னிப்பான் என்றால் யாரும் எந்த அமல்களையும் செய்யாமல் கடைசியில் இந்த அஹ்தே நாமாவை எழுதி, சொர்க்கத்திற்குப் போய்விடலாம். திருக்குர்ஆன், நபிமொழிகளில் கூறப்பட்ட எல்லாக் கடமைகளும் இந்தக் கருத்தால் கேலிக் கூத்தாக மாறி விடும்.
மேலும் நபிகளார் இவ்வாறு செய்ததாக எதாவது சான்றுகள் இருக்கிறதா? என்று இவர்களிடம் கேட்டால் இவர்களால் நேரடியாக எந்தச் சான்றையும் காட்ட முடிவதில்லை. ஆனால் சில ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் கருத்துக்களைப் புரட்டி ஆதாரம் காட்டுகிறார்கள். அவை சரி தானா? என்பதை பார்ப்போம்.
நெற்றில் அஹ்தே நாமா எழுதுவதற்குச் சான்று உள்ளதா? என்ற கேள்விக்குப் பதிலளிக்காமல் எங்கோ சென்று எதையோ கூறுவதைப் பாருங்கள்.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அவனை நோக்கி ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள்! அவன் பாதையில் அறப்போர் செய்யுங்கள்! வெற்றி பெறுவீர்கள். (5;35)
இந்த வசனத்தில் வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள் என்று கூறப்படுகிறது. எனவே இறக்கும் போது இந்த அஹ்தே நாமா என்ற வஸீலாவுடன் போகிறோம் என்று கூறுகிறார்கள்.
இந்த வசனத்தில் இடம் பெறும் வஸீலா என்பது அஹ்தே நாமாவைத் தான் குறிக்கும் என்பதற்கு எந்தச் சான்றையும் காட்டாமல் மன இச்சையின் அடிப்படையில் இதுவும் வஸீலா தான் என்று கூறுகின்றார்கள். திருக்குர்ஆனை ஆய்வு செய்து பார்த்தால் வஸீலா என்பது நல்லறங்களைத் தான் குறிக்கிறது என்பதை விளங்கலாம்.
நம்பிக்கை கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான். (அல்குர்ஆன் 2:153)
நபி (ஸல்) அவர்கள் இறைவனை நெருங்க நல்லறங்கள் அதிகம் புரிந்தார்களே தவிர மாகன்களையோ அல்லது அஹ்தே நாமவையோ எழுதி வைக்கவில்லை. எனவே இங்கு சொல்லப்படும் வசனம் அஹ்தே நாமாவைக் குறிக்கும் என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை.
ஒருவர் இந்த துஆவை (அஹ்தே நாமாவை) எழுதி மய்யித்தின் நெஞ்சிலும் கஃபன் துணியிலும் வைத்தால் கப்ரின் வேதனை அவரைத் தீண்டாது. அவர் முன்கர், நகீர் என்ற வானவர்களைக் காண மாட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக திர்மிதியில் இடம் பெற்றுள்ளது. (ஃபத்தாவா பிக்ஹிய்யாஅல்குப்ராலி, பாகம் :3, பக்கம் : 92)
இப்னு ஹஜர் மக்கி என்பவர் தமது பத்வாவில் இவ்வாறு ஒரு ஹதீஸ் இருப்பதாகக் கூறியுள்ளார். (இவர் ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானீ அல்ல) ஆனால் திர்மிதியில் இவ்வாறு ஒரு ஹதீஸ் இடம்பெறவே இல்லை.
இப்னு ஹஜர் மக்கீ என்பவரின் கருத்தைப் பிரதிபலிக்கும் சிலர் இந்த ஹதீஸ் அல்ஹகீம் அத்திர்மிதீ அவர்கள் எழுதிய நவாதிருர் ரஸுல் என்ற நூலில் இடம் பெற்றுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் அந்த நூலிலும் நாம் பார்த்த போது இவ்வாறு ஒரு செய்தி இடம் பெறவில்லை.
இந்த ஹதீஸின் கருத்தைப் பார்த்தாலே இது நபிமொழி அல்ல என்று தெளிவாகச் சொல்லி விடலாம்.
இந்தச் செய்தியைப் பற்றி அறிஞர் அல்பானி அவர்கள் கூறும் வார்த்தைகள் சிந்திக்க வேண்டியவையாகும்.
இந்த ஹதீஸை திர்மிதியோ மற்றவர்களோ அறிவிக்கவில்லை. ஏனெனில் வாழ்நாளில் ஒரே ஒரு தடவை கூட ஹதீஸின் வாசனையை முகர்ந்திடாத ஒருவனைத் தவிர வேறு எவரும் கூற முடியாத, வெளிப்படையான அசத்தியமாகவும் இட்டுக்கட்டப்பட்டதாகவும் இருக்கும் இதுபோன்ற ஹதீஸ்களை அறிவிப்பதை அவர்களின் அறிவு ஏற்றுக் கொள்ளாது.
கப்ரின் வேதனைகளை விட்டும் தொடர்ந்து நபி (ஸல்) அவர்கள் ஐவேளைத் தொழுகையில் கேட்டு வந்த பிரார்த்தனையையும், மற்றவர்களைக் கேட்கச் சொன்ன கட்டளையையும் வீணானதாக இந்த அஹ்தே நாமா ஆக்கிவிடும். எந்தக் கஷ்டமும் இல்லாமல் இந்த வார்த்தைகளைக் கொண்டு அழகாக தப்பித்து விடலாம்.
இந்தச் செய்தி இஸ்லாத்தின் அடிப்படைக் கருத்துக்களையே தவிடு பொடியாக்கும் வகையில் அமைந்துள்ளதால் இது போன்ற செய்திகளை நபிகளார் சொல்லி இருக்கவே மாட்டார்கள். எனவே இது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்பதில் எந்த ஐயமும் இல்லை.
மேலும் இந்த அஹ்தே நாமா என்ற சொல் கூட அரபி மொழிச் சொல் அல்ல! பாரிஸி மொழிச் சொல்லாகும். நபிகளார் சொல்லியிருந்தால் அவை அரபி மொழியில் இருந்திருக்கும்.
இதிலிருந்தும் இந்தப் பழக்கம் நபிகளார் காலத்தில் இருந்ததில்லை என்பதையும் விளங்கலாம்.
அறியாமை: 2
நல்லடியார்களின் துணிகளை மய்யித்தின் மீது போர்த்தி அடக்கம் செய்தால் மய்யித்தின் பாவங்கள் மன்னிக்கப்படும். கப்ரின் வேதனை குறைக்கப்படும் என்று கூறி, சில சான்றுகளை எடுத்து வைக்கிறார்கள். அவை இதோ: நபி (ஸல்) அவர்கள் தமது புதல்வி இறந்து விட்ட போது எங்களிடம் வந்து, அவரை இலந்தை இலை கலந்த நீரால் மூன்று அல்லது ஐந்து, தேவையெனக் கருதினால் அதற்கதிகமான தடவைகள் நீராட்டுங்கள்; இறுதியில் கற்பூரத்தைச் சிறிது சேர்த்துக்கொள்ளுங்கள்; நீராட்டி முடித்ததும் எனக்கு அறிவியுங்கள் எனக் கூறினார்கள். நாங்கள் நீராட்டி முடிந்ததும் அவர்களுக்கு அறிவித்தோம். அவர்கள் வந்து தமது கீழாடையைத் தந்து, இதை அவரது உடலில் சுற்றுங்கள் எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: உம்மு அத்திய்யா (ரலி), நூல்: புகாரி 1253
(நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபை இறந்துவிட்டான். அப்போது அவனது (முஸ்லிமான) மகன், நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! உங்கள் சட்டையைத் தாருங்கள்; அவரை அதில் பிரேத உடை (கஃபன்) அணிவிக்க வேண்டும்; மேலும் நீங்கள் அவருக்கு ஜனாஸாத் தொழுது, அவருக்காகப் பாவமன்னிப்பும் கேட்க வேண்டும் என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள் தமது சட்டையை அவருக்குக் கொடுத்து விட்டு, (ஆயத்தமானதும்) எனக்குத் தெரிவியுங்கள்; நான் ஜனாஸாத் தொழுவிப்பேன் என்றார்கள். பிறகு அறிவிக்கப்பட்டதும் நபி (ஸல்) அவர்கள் அவனுக்கு ஜனாஸாத் தொழ நாடியபோது, உமர் (ரலி), நபி (ஸல்) அவர்களை இழுத்து, நயவஞ்சகர்களுக்கு ஜனாஸாத் தொழக் கூடாது என அல்லாஹ் உங்களைத் தடுக்கவில்லையா? எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (ஜனாஸாத் தொழுவது, தொழாமலிருப்பது என) இரண்டில் எதையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை எனக்கு உள்ளது எனக் கூறிவிட்டு, நீர் நயவஞ்சகர்களுக்குப் பாவமன்னிப்புத் தேடினாலும் அல்லது தேடாமலிருந்தாலும் சமமே! நீர்அவர்களுக்காக எழுபது முறை பாவமன்னிப்புத் தேடினாலும் அல்லாஹ் அவர்களை மன்னிக்கப் போவதே இல்லை என்ற (9:80ஆவது) இறைவசனத்தை ஓதிக் காட்டி விட்டு ஜனாஸா தொழுதார்கள். உடனே அவர்களில் யாரேனும் இறந்தால் அவர்களுக்காக ஒருபோதும் (ஜனாஸா) தொழ வேண்டாம் எனும்(9:84ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது. அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 1269
சஹ்ல் (ரலி) அவர்கள் ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் புர்தாலி குஞ்சங் கட்டப்பட்ட சால்வை, ஒன்றைக் கொண்டு வந்தார் என்று கூறிவிட்டு , புர்தா என்றால் என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டபோது (அங்கிருந்தோர்) ஆம்! புர்தா என்பது சால்வை தானே! என்றனர். சஹ்ல் (ரலி) அவர்கள், ஆம் எனக் கூறிவிட்டு, மேலும், அப்பெண்மணி நான் எனது கையாலேயே இதை நெய்திருக்கிறேன். இதனை உங்களுக்கு அணிவிக்கவே நான் கொண்டு வந்தேன் என்றதும் அது தேவையாயிருந்ததால் நபி (ஸல்) அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டார்கள். பிறகு அவர்கள் அதைக்கீழாடையாக அணிந்து கொண்டு எங்களிடம் வந்த போது ஒருவர் இது எவ்வளவு அழகாக இருக்கின்றது! எனக்கு இதை நீங்கள் அணியக் கொடுத்து விடுங்கள் என்று கேட்டார். உடனே அங்கிருந்தோர் நீர் செய்வது முறையன்று; நபி (ஸல்) அவர்களுக்கு அது தேவைப்பட்டதால் அதை அணிந்திருக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் கேட்பவர்களுக்குக் கொடுக்காமலிருக்க மாட்டார்கள்என்று தெரிந்து கொண்டே நீர் அதை அவர்களிடம் கேட்டு விட்டீரே எனக் கூறினார்கள். அதற்கவர், அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதை (சாதாரணமாக) அணிந்து கொள்வதற்காகக் கேட்கவில்லை; அது எனக்கு பிரேதஉடை (கஃபன்) ஆகிவிட வேண்டும் என்றே கேட்டேன் என்றார். பின்பு அது அவருக்குக் கஃபனாகவே ஆகிவிட்டது என்று சஹ்ல் (ரலி) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹாஸிம், நூல்: புகாரி 1277
நல்லடியார்களில் ஆடையை மய்யித்திற்கு அணிவித்தால் வேதனை குறைக்கப்படும், பாவங்கள் மன்னிக்கப்படும் என்பதற்கு ஆதாரமாக மேற்கண்ட செய்திகளைக் காட்டுகின்றனர். இவர்கள் ஆதாரமாகக் காட்டிய எந்தச் செய்தியிலும் நபிகளாரின் ஆடையை அணிவித்தால் கப்ர் வேதனை நீக்கப்படும் என்றோ அல்லது குறைக்கப்படும் என்றோ அல்லது மய்யித்தின் பாவங்கள் மன்னிக்கப்படும் என்றோ கூறப்படவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.
இவ்வாறு தமது ஆடையை மற்றவர்களுக்கு வழங்கினால் அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படும், கப்ர் வேதனை குறைக்கப்படும் என்றிருந்தால் நபிகளார் அவர்களே முன் வந்து தம் ஆடையை அனைத்து நபித்தோழர்களுக்கும் வழங்கியிருந்திருப்பார்கள். அவர்களிடம் ஆடையில்லாவிட்டால் நபித்தோழர்களின் ஆடையை ஒரு நாளைக்கு வாங்கி அதை அணிந்து விட்டாவது கொடுத்திருப்பார்கள். கப்ரில் நன்மைகள் நிகழ்வதற்கு அவர்களின் பிரார்த்தனை தான் உதவும் என்று சொன்னார்களே தவிர தமது ஆடை கப்ர் வேதனையைக் குறைக்கும் என்று கூறவில்லை.
(மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலைக் கூட்டிப் பெருக்குபவராக இருந்த கறுத்த பெண் அல்லது இளைஞர் ஒருவரைக் காணாமல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள். அவர் இறந்துவிட்டார் என மக்கள் தெரிவித்தனர். நீங்கள் எனக்குத் தெரிவித்திருக்கக்கூடாதா? என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் (இறந்த) விஷயத்தை மக்கள் அற்பமாகக் கருதி விட்டனர் போலும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரது மண்ணறையை எனக்குக் காட்டுங்கள் என்று கூறினார்கள். மக்கள் அதைக் காட்டியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு (சென்று) அவருக்காக தொழுகை நடத்தினார்கள். பிறகு இந்த அடக்கத்தலங்கள், அவற்றில் வசிப்போருக்கு இருள் மண்டிக் காணப்படுகின்றன. எனது தொழுகையின் மூலம் அவற்றில் அவர்களுக்கு அல்லாஹ், வெளிச்சத்தை ஏற்படுத்துவான் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் (1742)
கப்ரில் ஒளி ஏற்பட நபிகளாரின் பிரார்த்தனை தான் உதவியுள்ளதே தவிர நபிகளாரின் ஆடைகள் உதவவில்லை என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
நபித்தோழர்கள் நபிகளாரின் ஆடைகளை வாங்கி, அடக்கம் செய்யும் போது சேர்த்து அடக்கம் செய்யவில்லை. நபிகளார் காலத்திற்குப் பிறகு அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) போன்றோர் வாழ்ந்த போது அவர்களோ மற்ற நபித்தோழர்களோ இவ்வாறு செய்ததில்லை.
இதை ஆதாரமாக எடுத்துக் கொள்ளலாம் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும் நல்லடியார்கள் என்று யார் தீர்மானிப்பது? வெளிப்படையை வைத்து ஒருவரை நல்லடியார் என்று நாம் கூறமுடியாது. ஏனெனில் இறையச்சத்தின் மூலமே ஒருவரை நல்லவரா? கெட்டவரா? என்று முடிவு செய்ய முடியும். நபிகளார் காலத்தில் வாழ்ந்த நபித்தோழர்கள் தாங்கள் பார்த்த நண்பரை நல்லடியார் என்று முடிவு செய்ய அவர் நரகவாதி என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்களும் இணை வைப்போரும் (கைபர் போர்க்களத்தில்) சந்தித்துப் போரிட்டுக் கொண்டனர். நபியவர்கள் தம் படையின் பக்கம் சென்று விட மற்றவர்களும் தம் படையின் பக்கம் சென்றுவிட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கன் தோழர்களுக்கிடையே ஒருவர் இருந்தார். அவர் (எதிரிகல்) போரில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி நிற்பவர், படையிலிருந்து விலகிப் போய் தனியே சென்றவர் (அதாவது எதிர்த்து நிற்பவர், பணிந்து செல்பவர் என்று) எவரையும் நபித் தோழர்களுக்கு விட்டு வைக்காமல் அனைவரையும் தம் வாளால் வெட்டியபடி துரத்திச் சென்று (மூர்க்கமாகப் போரிட்டுக்) கொண்டிருந்தார். (அவரது துணிச்சலான போரைக் கண்ட) நபித் தோழர்கள், இந்த மனிதர் போரிட்டதைப் போல் இன்று நம்மில் வேறெவரும் தேவை தீரப் போரிடவில்லை என்று (வியந்து) கூறினார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், அவரோ நரகவாசியாவார் என்று கூறினார்கள். அப்போது கூட்டத்திலிருந்து ஒரு மனிதர், நான் அவருடன் இருக்கிறேன் (அவர் என்ன செய்கிறார் என்று பார்ப்பதற்கு) என்று சொல்லிவிட்டு அந்த மனிதருடன் புறப்பட்டார். அவர் நின்ற போதெல்லாம் இவரும் நின்றார். அவர் விரைந்தால் இவரும் விரைந்தார். (ஒரு கட்டத்தில்) அவர் கடுமையாக காயப்படுத்தப்பட்டார். அதனால் சீக்கிரமாக மரணித்து விட விரும்பி, தன் வான் (கைப்பிடியுள்ள) முனையை பூமியில் ஊன்றி, அதன் கூரான முனையைத் தன் இரு மார்புகளுக்கு இடையே வைத்து, அந்த வான் மீது தன் உடலை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். (இதை உடனிருந்து கண்காணித்துவிட்டு) அந்த மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, தாங்கள் அல்லாஹ்வின் தூதர் தாம் என்பதற்கு நான் சாட்சியம் அக்கிறேன் என்று சொன்னார்.
நபி (ஸல்) அவர்கள், என்ன விஷயம்? என்று கேட்டார்கள். அவர், சற்று முன்பு தாங்கள் ஒருவரைப் பற்றி அவர் நரகவாசி என்று கூறினீர்கள் அல்லவா? அதைக் கண்டு மக்கள் வியப்படைந்தனர். நான் (மக்கடம்), உங்களுக்காக (அவரது நிலைகளை அறிந்து வர) நான் அவருடன் போய் வருகிறேன் என்று கூறிவிட்டு, அவரைத் தேடிப் புறப்பட்டேன். அவர் கடுமையாக காயப்படுத்தப்பட்டார். உடனே, அவர் சீக்கிரமாக மரணமடைய விரும்பி, வான் பிடிமுனையை பூமியில் நட்டு, அதன் கூர்முனையைத் தன் இரு மார்புகளுக்கிடையே வைத்து, அதன் மீது தன்னை அழுத்திக் கொண்டுதற்கொலை செய்து கொண்டார் என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மக்களின் வெளிப் பார்வைக்கு ஒரு மனிதர் சொர்க்கத்திற்குரிய (நற்) செயலைச் செய்து வருவார். ஆனால், அவர் (உண்மையில்) நரகவாசியாக இருப்பார். மக்கன் வெளிப்பார்வைக்கு ஒரு மனிதர் நரகத்திற்குரிய செயலைச் செய்து வருவார். ஆனால், (உண்மையில்) அவர் சொர்க்கவாசியாக இருப்பார் என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி) நூல்கள்: புகாரி (2898), முஸ்லிம் (5156)
இதைப் போன்று மனிதர்களில், நல்லவர்கள் என்று தீர்மானிக்கப்படுவோர் தீயவர்களாகவும், தீயவர்கள் என்று தீர்மானிக்கப்படுவோர் நல்லவர்களாகவும் இருப்பார்கள் என்ற நபிகளாரின் கருத்து, நாம் யாரையும் நல்லடியார்கள் என்று முடிவு செய்ய முடியாது என்பதைக் காட்டுகிறது.
நல்லடியார்கள் என்று மக்கள் நினைக்கும் பலர் நரகவாதியாக இருப்பார்கள் என்று நபிகளார் கூறியுள்ளதால் யாரையும் நாமாக நல்லடியார் என்று முடிவு செய்ய முடியாது. எனவே அடுத்தவரின் ஆடைகளை வாங்கி மய்யித்துடன் வைத்து அடக்கமும் செய்ய முடியாது.
அலீ (ரலி) அவர்களின் தாயார் ஃபாத்திமா அவர்கள் இறந்த போது நபி (ஸல்) அவர்கள் தமது சட்டையைக் கழற்றி அவர்களுக்கு அணிவித்தார்கள். இதற்கு நபிகளார், அவர்களுக்கு சொர்க்கத்தின் ஆடை கிடைக்க வேண்டும் என்பதே காரணமாகும் என்றார்கள். மேலும் கப்ரில் மய்யித்துடன் படுத்தார்கள். இதன் மூலம் கப்ரின் கஷ்டத்திலிருந்து லேசாக்கப்படுவார் என்று கூறினார்கள். (ஆதாரம்: தப்ரானீ)
இந்த ஹதீஸில் நபிகளார் அவர்கள் நேரடியாகவே கப்ர் வேதனை குறைக்கப்படும் என்று கூறுவதால் நல்லடியார்களின் துணிகளை, அவர்கள் தரும் பொருட்களை கப்ரில் வைக்கலாம் என்று வாதிடுகின்றனர்.
முதலில் இந்தச் செய்தியில் கூறப்படும் முழு விபரத்தையும் படித்து விட்டு இதில் இடம் பெறும் கருத்துக்களைப் பற்றி ஆய்வு செய்வோம்.
அலீ (ரலி) அவர்களின் தாயார் ஃபாத்திமா அவர்கள் இறந்த போது நபி (ஸல்) அவர்கள் தமது சட்டையை அவர்களுக்கு அணிவித்தார்கள். மேலும் அவர்களுடைய கப்ரில் படுத்தார்கள். அவர்கள் மீது மண் போடப்பட்டு சமப்படுத்தப்பட்ட போது நபித்தோழர்களில் சிலர், அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் யாருக்கும் செய்யாத ஒன்றை நாங்கள் பார்த்தோமே? என்று கேட்டனர். அவர்களுக்கு சொர்க்கத்தின் ஆடை அணிவிக்கப்பட வேண்டும் என்பதற்காக என் சட்டையை அணிவித்தேன். அவர்களுடன் கப்ரில் படுத்தது ஏனெனில் அவர் கப்ரின் (கடுமையான) அணைப்பிலிருந்து லேசாக்கப்படுவதற்காக என்று
நபிகளார் கூறி விட்டு அபூதாலிப் அவர்களுக்குப் பிறகு அல்லாஹ்வின் படைப்பில் அழகானவர்களாக இவர் இருந்தார் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: தப்ரானீலிஅல்அவ்ஸத், பாகம்: 7. பக்கம்: 87 மஃரிஃபத்துஸ் ஸஹாபாலிலிஅபூநுஐம், பாகம்: 1, பக்கம்: 311
இந்தச் செய்தியில் இடம் பெறும் மூன்றாவது அறிவிப்பாளர் ஸஅதான் பின் அல்வலீத் என்பவர் யாரென அறியப்படாதவர். (மஜ்மவுஸ் ஸவாயித், பாகம்: 9, பக்கம்: 210)
யாரென அறியப்படாதவர் அறிவிக்கும் செய்தி மிகவும் பலவீனமானதாகும். இவ்வகை செய்திகளை ஹதீஸ் கலை வல்லுநர்கள் ஆதாரமாக எடுத்துக் கொள்வதில்லை. எனவே இதை ஆதாரமாகக் கொண்டு வாதிடுவது சரியல்ல.
ஒரு வாதத்திற்கு இதைச் சரியான ஹதீஸ் என்று வைத்துக் கொண்டாலும், இந்தச் செய்தியில் இடம் பெற்றிருக்கும் பல விஷயங்கள் தங்களுக்குப் பாதகமாக இருப்பதால் அதை விட்டு விட்டு ஆதாரம் காட்டுகிறார்கள்.
நபித்தோழர்களில் யாருக்கும் இது போன்று நபிகளார் நடந்ததில்லை என்பதை அவர்கள் விட்டு விட்டார்கள். இந்தச் செய்தி சரியானதாக இருந்தாலும் மற்ற எவருக்கும் இவ்வாறு செய்யாததால் இது அலீ (ரலி) அவர்களின் தாயாருக்கு மட்டும் உரியது என்று கூற வேண்டிய நிலை ஏற்படும். எனவே இதை அவர்கள் கண்டு கொள்ளவில்லை.
கப்ரைக் கட்டியணைத்து, கஷ்டத்தைப் போக்குவதற்காக நபிகளார் செய்தது, கப்ரில் இறங்கி சிறிது நேரம் அந்த மய்யித்துடன் படுத்து எழுந்து வந்தது ஆகியவற்றையும் இவர்கள் கண்டு கொள்ளவில்லை. இந்த ஹதீஸை ஆதாரம் காட்டும் போது, நல்லடியார்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் கப்ர் குழிக்குள் இறங்கி அதனுடன் படுத்து எழுந்து வரவேண்டும். ஆனால் இவ்வாறு யாரும் செய்வதில்லை. செய்யுமாறு சொல்வதும் இல்லை. எனவே இவர்கள் காட்டும் செய்தியை அவர்களே முழுமையாகப் பின்பற்றுவதில்லை.
நபி (ஸல்) அவர்களுடன் தபூக் போரில் கலந்து கொண்டேன். அப்போது அவர்களுக்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து ஊற்றினேன். நபி (ஸல்) அவர்கள், நான் உனக்கு ஆடை அணிவிக்கட்டுமா? என்று கேட்டார்கள். நான், சரி அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினேன். அப்போது அவர்கள் மேனியோடு ஒட்டிப் போடப்பட்ட சட்டையில் ஒன்றை எனக்கு அணிவித்தார்கள்.
மேலும் தம் முடியிலும் நகங்களிலும் சில எடுத்தார்கள். அதை நான் எடுத்துக் கொண்டேன். அவற்றை நான் இந்த இடத்தில் வைத்துள்ளேன். நான் மரணிக்கும் போது என் கஃபன் அல்லாமல் அந்தச் சட்டையை மேனியோடு அணிவித்து விடுங்கள். அந்த முடியையும் நகங்களையும் என் வாயிலும் மூக்கின் உட்பதியிலும் வைத்து விடுங்கள். எதாவது (நன்மை) நடந்தால் நடக்கட்டும்! இல்லை எனில் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும் இரக்கமுள்ளவனாகவும் இருக்கின்றான் என்று முஆவியா (ரலி) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: ஹில்யத்துல் அவ்லியா, பாகம்: 9, பக்கம்: 155)
இந்தச் செய்தியின் அடிப்படையிலும் கப்ரில் வைக்கப்படும் போது நல்லடியார்களின் பொருட்களைச் சேர்த்து வைத்தால் வேதனை குறைக்கப்படும் என்று வாதிடுகின்றனர்.
இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானது அல்ல! இச்செய்தியை இமாம் ஷாஃபீ அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது. அதில் இமாம் ஷாஃபீ அவர்களுக்கு இச்செய்தியை யார் சொன்னார்கள் என்று கூறப்படவில்லை. இவ்வாறு சொல்கிறார்கள் என்றே இமாம் ஷாஃபீ கூறியதாக இடம் பெற்றுள்ளது.
மேலும் முஆவியா (ரலி) அவர்கள் இறந்தது ஹிஜ்ரி 60 ஆகும். இமாம் ஷாஃபீ அவர்கள் பிறந்தது ஹிஜ்ரி 150 ஆகும். முஆவியா (ரலி) அவர்களின் இறப்பிற்கும் இமாம் ஷாஃபீ அவர்களின் பிறப்பிற்கும் சுமார் 90 வருடங்கள் இடைவெளி ஏற்படுகிறது. எனவே இச்செய்தி தொடர்பு அறுந்த பலவீனமான செய்தியாகும். இதையும் ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது.
எனது இந்தச் சட்டையைக் கொண்டு சென்று, என் தந்தையின் முகத்தில் போடுங்கள்! அவர் பார்வையுடையவராக ஆவார். உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் என்னிடம் அழைத்து வாருங்கள்! (எனவும் கூறினார்) (அல்குர்ஆன் 12:93)
இந்த வசனத்தின்படி, நல்லடியார்களின் உடைகளுக்கும் அவர்கள் பயன்படுத்திய பொருட்களுக்கும் சக்தியுண்டு. அதை நாம் பயன்படுத்தி நன்மை பெறலாம் என்று கூறுகிறார்கள்.
கண் தெரியாமல் இருந்த யஃகூப் நபி அவர்களுக்கு, நபி யூசுஃப் (அலை) அவர்கள் தம் சட்டையைக் கொடுத்து, அதை யஃகூப் நபியின் முகத்தில் போடச் சொன்னார்கள். அதைப் போட்டவுடன் அவர்களின் கண் பார்வை திரும்பக் கிடைத்ததாகத் திருக்குர்ஆன் வசனம் கூறுகிறது. இதை வைத்துக் கொண்டு நல்லடியார்கள் அனைவரின் பொருட்கள் மூலம் நன்மைகள் கிடைக்கும் என்று வாதிடுகின்றனர்.
ஒரு விஷயத்தை இவர்கள் இதில் மறந்துள்ளார்கள். யஃகூப் (அலை) அவர்களும் நபி தான். அவர்களும் நல்லடியார் தான். ஆனால் அவர்களால் தம் ஆடையை முகத்தில் போட்டு, கண் பார்வையை வரவழைக்க முடியவில்லை என்பதைச் சிந்திக்க வேண்டும். நபி யூசுஃப் (அலை) அவர்கள் சட்டையைக் கொடுத்து முகத்தில் போடச் சொன்னார்கள் என்றால் அது வஹீயின் மூலம் அல்லாஹ் சொன்ன கட்டளையாகத் தான் இருக்க வேண்டும். நல்லடியார்களின் பொருட்களால் எதுவும் செய்யலாம் என்றிருந்தால் பல வருடங்கள் தம் பெற்றோரைப் பிரிந்து நபி யூசுஃப் (அலை) அவர்கள் இருந்திருக்க வேண்டிய அவசியமில்லை. சிறைச்சாலையில் கஷ்டப்பட வேண்டிய அவசியமும் இல்லை. சில நேரங்களில் இறைத்தூதர்களுக்கு வழங்கப்படும் அற்புதங்களை வைத்துக் கொண்டு எல்லா நல்லடியார்களும் அவ்வாறு செய்வார்கள் என்று முடிவெடுக்க முடியாது.
|