*மனை வாங்கும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான 18 விஷயங்கள்*
சொந்த வீட்டில் வாழ வேண்டும் என்கிற ஆசை இல்லாத மனிதனே இல்லை. அரை கிரவுண்டு இடமாவது வாங்கி ஒரு வீட்டைக் கட்டிவிட வேண்டும் என்பதுதான் இன்றைய நடுத்தர வர்க்கத்தினரின் கனவாக இருக்கிறது. ஆனால், மனை வாங்கும்போது மிக மிகக் கவனமாகச் செயல்பட வேண்டும். மனை வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்களை இங்கே 'செக்-லிஸ்ட்'-ஆகத் தந்திருக்கிறோம்.
1. நீங்கள் வாங்கப்போகும் மனை, யாருடைய பெயருக்கு யாரிடமிருந்து பெறப்பட்டிருக்கிறது என்பதைக் கடந்த 30 வருடங்களுக்கு, அதற்கான மூலப் பத்திரங்களைக் கொண்டு சரிபார்க்க வேண்டும்.
2. சொத்தின் தற்போதைய உரிமையாளர் பெயரில் உள்ள ஒரிஜினல் பத்திரங்களைச் சரிபார்க்க வேண்டும்.
3. சொத்தின் தற்போதைய உரிமையாளர் பெயரில் வழங்கப்பட்டுள்ள சமீபத்திய பட்டா மற்றும் நில அளவை விவரங்கள் ஆகியவற்றைப் பார்ப்பதன் மூலம் வருவாய்த் துறைப் பதிவுகளில் அந்தச் சொத்து யார் யாரிடமிருந்து கைமாறியிருக்கிறது என்பதையும் சரிபார்க்கலாம்.
4. நீங்கள் வாங்கப்போகும் மனையின் தள வரைபட விவரங்களைச் சரிபார்க்கவும்.
5. நீங்கள் வாங்கும் மனையின் பயன்பாட்டுத்தன்மையைப் பார்க்க வேண்டும். அதாவது, மனையானது விவசாய நிலம் அல்லாத குடியிருப்புக்கான மனையாக மாற்றப்பட்டிருக்கிறதா என்பதைச் சரிபார்க்கவும்.
6. வாங்கவிருக்கும் மனையின் பயன்பாட்டுத்தன்மையைத் தெரிவிக்கும் வரைபடங்களைப் பார்க்கவும். உதாரணமாக, மனையின் பயன்பாடானது குடியிருப்புக்கானதாகக் குறிக்கப்பட்டிருந்தால், அதனை வேறெந்த வணிகச் செயல்பாட்டுக்காகவும் பயன்படுத்த முடியாது.
7. வாங்கும் நிலமானது அனுமதி பெறப்பட்டதா, இல்லையா என்பதைப் பார்க்க வேண்டும். லேஅவுட் விவரங்கள் அடங்கிய லேஅவுட் பிளான் ஆவணத்தின் நகலைச் சரிபார்ப்பதன் மூலம், உரிய அரசு நிறுவனங்களிடமிருந்து அனுமதி பெறப்பட்டிருக்கிறதா என்பதைப் பார்க்கலாம். ஆன்லைனில் பார்க்கும் வசதியிருந்தால் அதன் மூலமும் உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதைப் பார்க்கலாம். சி.எம்.டி.ஏ இணைய தளத்தில், 2000-ம் ஆண்டுக்குப்பிறகு அங்கீகரிக்கப் பட்ட லே அவுட்டுகளை உறுதி செய்யமுடியும். மேலும், அப்ரூவல் கொடுத்துள்ள அதிகாரி அதற்கான அதிகாரம் கொண்டவர்தானா என்பதையும் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் கிராமப் பஞ்சாயத்து தலைவருக்கு மனைக்கான லேஅவுட் பிளான் அப்ரூவல் வழங்கும் அதிகாரமில்லை. ஆனால், பல இடங்களில் பஞ்சாயத்து அனுமதி பெறப்பட்ட நிலம் என்று விற்கப்பட்டிருக்கிறது.
8. லேஅவுட் அப்ரூவல் வழங்கும் அதிகாரம் கொண்ட அதிகாரிகள், அப்ரூவல் வழங்கும்போது ஏதேனும் நிபந்தனைகள் விதித்திருந்தால் அதையும் கவனமாகச் சரிபார்க்க வேண்டும். சி.எம்.டி.ஏ, டி.டி.சி.பி அங்கீகாரம் பெற்ற லே அவுட்டுகளில், ஓ.எஸ்.ஆர் பயன்பாட்டுக்காக உள்ளூர் பஞ்சாயத்து சார்பாக சாலைகள் அரசுக்குத் தானமாகக் கொடுக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டிருக்கிறதா என்பதைக் கவனிக்கவும்.
9. மனையானது அதன் நிர்ணயிக்கப்பட்ட நில உச்சவரம்புக்குள் இருக்கிறதா என்பதையும் சரிபார்க்கவும்.
10. வாங்கும் மனையின்மீது உயர் மின்னழுத்தக் கடத்திக் கம்பிகள் எதுவும் செல்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.
11. நீங்கள் வாங்கும் மனையானது நிர்ணயம் செய்யப்பட்ட அளவுகளைவிட அதிகமாக இருந்தால், அந்த இடம் ஏதேனும் பொதுப் பயன்பாடுகளுக்காக ஒதுக்கப்பட்ட இடமா என்பதையும் சரிபார்க்க வேண்டும்.
12. தற்போதைய நில உரிமையாளரின் நம்பகத்தன்மையை, நில வருவாய்த்துறைப் பதிவுகளை ஆன்லைனில் பார்க்கும் வசதி மூலம் சரிபார்க்கலாம்.
13. நில வரியானது தற்போதைய நில உரிமையாளரின் பெயரில் செலுத்த வேண்டிய துறைக்குச் சரியாகச் செலுத்தப்பட்டிருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும். (சென்னையைப் பொறுத்தவரை, 4,800 சதுர அடிக்குக் குறைவான காலி நிலத்துக்கு நில வரி இல்லை)
14. ஒருவேளை தற்போதைய நில உரிமையாளர் நிலத்துக்குச் சொந்தமானவராக யாரையேனும் அறிவித்திருந்தால், அதற்கான ஆவணத்தைச் சரிபார்த்து அது இன்னும் செல்லத்தக்கதாக இருக்கிறதா என்பதைப் பார்க்கவும். மேலும், நிலத்தின் தற்போதைய உரிமையாளர், நிலத்தின் கிரயப்பத்திரப் பதிவுக்குமுன் உயிரோடு இருக்கிறாரா என்பதையும் உறுதிசெய்யவும்.
15. மனையின் ஆவணங்களைச் சரிபார்க்க, மனை எந்தச் சார்பதிவாளர் அலுவலகத்தின் வரம்புக்குள் வருகிறதோ, அந்த அலுவலகத்திலிருந்து மனை தொடர்பான சமீபத்திய சான்றளிக்கப்பட்ட ஆவணங்களைப் பெற்று, ஒரிஜினல் ஆவணங்களுடன் பொருத்தி சரிபார்க்கவும்.
16. மனையை நீங்களாகவே அளந்து ஆவணத்தில்/வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மனை அளவைகள் சரியாக இருக்கின்றனவா என்பதைப் பார்த்துக்கொள்ளவும்.
17. வாங்கவிருக்கும் மனையின் மதிப்பை, குறிப்பிட்ட மாநில அரசுத் துறையின் இணைய தளத்தில் பார்த்து, அந்த மதிப்புக்கேற்ப ஸ்டாம்ப் பேப்பர் வாங்க வேண்டும்.
18. கடந்த 30 வருடங்களுக்கான நில உரிமையைச் சரிபார்க்கவும். அடமானத்திலோ அல்லது நீதிமன்ற வழக்குகளிலோ இல்லை என்பதை உறுதி செய்யவும். வில்லங்கச் சான்றிதழ் வாங்கிப் பார்ப்பது அவசியம். வில்லங்கச் சான்றிதழின் விவரங்களை ஆன்லைனில் ஒருமுறை சரிபார்ப்பதும் அவசியம்.
--
Thanks & Regards