அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,
RASMIN M.I.Sc (India
சிந்திக்கும் சமுதாயம் !
முதிர்ந்த அறிவு பெற்ற சமுதாயம் !
சிறந்த இறைத்தூதைப் பெற்ற சமுதாயம் !
உலகின் சிறந்த வழிகாட்டியான இஸ்லாத்திற்கு சொந்தம் கொண்டாடும் ஒரே சமுதாயம் ! என்றெல்லாம் பல வகையான பெயர்களையும், பெருமைகளையும் தன்னகத்தே கொண்டவர்கள் தான் முஸ்லீம்கள் என்று உலகம் முழுவதும் பேசப்படுகிறார்கள்.
உண்மையில் மேலே சொன்ன எந்த வர்ணனையும் பொய்யானது அல்ல. இட்டுக் கட்டப்பட்டதும் அல்ல. சுய இலாபத்திற்காக சேர்த்துக் கொள்ளப்பட்டதும் அல்ல. முஸ்லீம்கள் என்றால் மேலே சொன்ன அனைத்து செயல்பாடுகளும் உரிமை கொண்டாட தகுதி பெற்றவர்கள் தான்.
ஆனால் இன்றைய முஸ்லீம்கள் அதற்குத் தகுதியானவர்களா என்று பார்க்கும் போது கேள்விக் குறிதான் நம் கண்முன் நிற்கிறது.
அல்லாஹ்வை வணங்க வேண்டிய சமுதாயம், அவ்லியாக்களை (?) வணங்குகிறது.
நபியைப் பின்பற்ற வேண்டிய சமூகம் நாதாக்களை (?) வழிகாட்டி என்கிறது.
இணை துணை இல்லாமல், தாய், தந்தை இல்லாமல், குழந்தை, வாரிசுகள் யாரும் இல்லாமல் அனைத்து வல்லமையும் பொருந்திய இந்த உலகத்தை படைத்துப் பரிபாளிக்கும் வல்ல அல்லாஹ்வை வணங்க வேண்டியவர்கள் அவ்லியாக்கள், நாதாக்கள் என்று சொல்லிக் கொண்டு கல்லரைகளில் அடங்கப்பட்டிருக்கும் மரணித்த உடல்களை புஜை செய்து தூய ஏகத்துவக் கொள்கையை விட்டும் தடம் புரண்டு கல்லரைக்கு காணிக்கை போடும் கப்ரு வணங்கிகளாக மாறியிருப்பதைப் பார்க்கிறோம்.
மண்ணரை வாழ்வையே நாசப்படுத்தும் இந்தக் கல்லரை வழிபாட்டை விட்டும் உண்மை முஃமின்கள் விலகியவர்களாக, தூய ஏகத்துவத்தின் பக்கம் மாத்திரம் தலை சாய்க்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.
காது கேட்காதவர்களிடம் காவல் தேடுவதா?
நாம் ஒருவரிடம் நமது தேவைகளை முன்வைப்பதாக இருந்தால் அவா் சுய புத்தியுள்ளவராக, நமது தேவையை தெரிந்து கொள்ளக் கூடியவராக, நமக்கு பதில் தரக்கூடியவராக இருக்க வேண்டும். இந்த நிலையில் இல்லாத சுய புத்தியற்ற, காது கேட்காத, எந்த விதமான தொடர்பும் வைக்க முடியாதவரிடத்தில் நமது தேவையை முன்வைப்பதில் ஏதாவது நன்மை கிடைக்க முடியுமா?
உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாக மாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச் செய்கிறான். மண்ணரைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச் செய்பவராக இல்லை.(35 - 22)
மேற்கண்ட வசனம் ஒரு முக்கியமான விஷயத்தை நமக்குத் தெளிவுபடுத்துகிறது. அதாவது உயிருடன் இருப்பவர்களும், இறந்தோரும் சமமாக மாட்டார்கள் என்ற தகவலை ஆரம்பமாக அந்த வசனம் நமக்குத் தருகிறது.
உயிருடன் இருப்பவரிடம் நாம் எதையாவது கேட்டால் அவரால் முடிந்தால் அதனைத் தருவார் இல்லாவிட்டால் தரமுடியாது என்று சொல்லிவிடுவார் ஆனால் இறந்தவருக்கு இந்த இரண்டுமே முடியாத காரியம். நாம் கேட்பதை தரவும் முடியாது. தரமுடியாது என்பதை நம்மிடம் சொல்லவும் முடியாது. அதனால் இறைவன் அதன் தொடர்ச்சியில் மண்ணரைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச் செய்பவராக இல்லை. என்று தெளிவாகக் குறிப்பிடுகிறான்.
மரணித்தவர்களிம் தங்கள் தேவையை முன்வைத்து அவா்களை இறைவனின் சக்தி பொருந்தியவர்களாக எண்ணுபவர்கள் இந்த வசனத்தை உற்று கவணிக்கக் கடமைப் பட்டுள்ளார்கள்.
கல்லரைகளில் உள்ளவர்களிடம் கேட்பதினால் நமது மண்ணரை வாழ்வு நாசமாகிவிடும் என்பதை அவா்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அவர்களுக்கு நடக்கின்ற கால்கள் உள்ளனவா? அல்லது பிடிக்கின்ற கைகள் உள்ளனவா? அல்லது பார்க்கின்ற கண்கள் உள்ளனவா? அல்லது கேட்க்கின்ற காதுகள் உள்ளனவா? (7-195)
கல்லரைகளை வணங்குபவர்கள் அங்கு அடக்கப்பட்டிருப்பவர்களை எப்படியெல்லாம் நினைத்து வணங்குவார்களோ அந்த அனைத்து நம்பிக்கையும் பொய்யானது, தவறானது என்பதை சுட்டிக் காட்டும் விதமாகத் மேற்கண்ட வசனம் அமைந்திருக்கிறது.
யாரை அழைத்தால் அவர் பதில் தருவார் என்று நம்புகிறார்களோ அப்படிப்பட்டவரைப் பற்றி இறைவன் சில கேள்விகளை முன்வைக்கிறான்.
அவ்லியாக்கள் என்று வணங்கப்படுபவர்களுக்கு,
நடக்கும் கால்கள் இருக்கிறதா?
பிடிக்கும் கைகள் இருக்கிறதா?
பார்க்கின்ற கண்கள் இருக்கிறதா?
கேட்கின்ற காதுகள் இருக்கிறதா?
இதுதான் இறைவன் கல்லரை வணங்கிகளையும், சிலை வணங்கிகளையும் பார்த்து கேட்கும் கேள்விகள். இந்தக் கேள்விகளுக்கு யாராலும் பதில் சொல்ல முடியாது என்பது உள்ளங்கையில் நெல்லிக் கணி போல் தெளிவானதாகும்.
அவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவா்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவா்கள் உதவ முடியாது. (7-197)
யாரிடம் தமது கேள்விகளை முன்வைக்கிறார்களோ அவா்களால் அதற்கு பதில் தரமுடியாதென்றும் தங்களுக்குத் ஏதும் தேவை இருந்தால் கூட அவா்களால் உதவிக் கொள்ள முடியாது என்பதையும் இறைவன் சொல்லிக் காட்டுகிறான்.
தனது தேவையைக் கூட நிறைவேற்ற முடியாத கையாலாகவர்களாக இருக்கும் கல்லரைவாசிகளிடம் கையேந்துவதென்பது இறைவனை மறுத்து கல்லரைவாசிகளை கடவுலாக்குவதாகும். இப்படிப்பட்டவர்களின் மண்ணரை வாழ்வு வீனாகிவிடும் என்பதை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இறந்தவர்கள், இறந்தவர்களே !
இறந்தவர்களிடம் யார் கையெந்தி அவா்களை கடவுளர்களாக நினைக்கிறார்ளோ அவா்களைப் பார்த்து இறைவன் சொல்லக் கூடிய வாசகம் மிகவும் தெளிவானதாகவும் மரணத்தின் பின் மரணித்தவர்களுக்கும் உலகுக்கும் தொடர்பில்லை என்பதையும் மிகவும் தெளிவாக விளக்குகிறது.
அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள் அவா்களே படைக்கப்படுகின்றனர்.(16-20)
யாரிடமாவது நாம் நமது தேவையை முன்வைத்தால் அவா்கள் படைக்கக் கூடிய ஆற்றல் பொருந்தியவர்களாக இருக்க வேண்டும் ஆனால் உலகில் அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படும் வேறு எந்த கடவுளுக்கும் (?) அந்தத் தன்மை கிடையாது. அவா்களால் படைக்க முடியாது. ஏன் என்றால் அவா்களே படைக்கப்பட்டுத்தான் இருக்கிறார்கள். படைக்கப்பட்டவர்கள் எப்படி படைக்க முடியும் என்பதைச் சிந்தித்தாலே படைத்தவனின் யதார்த்தமும், இறைவனின் வல்லமையும் நமக்குத் தெரியவரும்.
அவா்கள் இறந்தவர்கள், உயிருடன் இருப்போர் அல்லா் எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள் என்பதை அவா்கள் அறிய மாட்டார்கள். (16-21)
இறந்தவர்கள் இறந்தவர்கள் தான் அவா்கள் உயிரோடு இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டு அவா்களிடம் கையேந்துவது பெரும் வழிகேடு மட்டுமல்லது கல்லறைகளில் யார் அடக்கப்பட்டுள்ளார்களோ அவா்கள் எப்போது மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவார்கள் என்பது அவா்களுக்கே தெரியாததாகும்.
அன்பின் சகோதரர்களே ! ஏகத்துவத்தின் யதார்த்தத்தை புரிந்து மண்ணரை வாழ்வை நாசப்படுத்தும் கல்லரை வணக்கத்தை தவிர்ந்து உண்மைக் கடவுலான ஏக இறைவன் அல்லாஹ்வை மாத்திரம் வணங்கி இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெருவோமாக.